ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, November 30, 2010

என் இதய சிம்மாசனத்தில்...

நட்சத்திரக் கூட்டத்தின்
நடுவே வட்ட நிலா
கொலு வீற்றிருப்பதைப் போல
என் இதய சிம்மாசனத்தில்
நீதான் அன்பே கொலு வீற்றிருக்கிறாய்..!

நீ கொலு வீற்றிருப்பதை
உன் உள்மனதிடம் மட்டுமல்ல
உன் உறவுக் கூட்டத்திடம்
போய்ச் சொல்...
உனக்கான இளவல் இங்கே
காத்துக் கொண்டிருக்கிறான் என்று..!



Friday, November 26, 2010

மும்பைக்கு வாய்த்த பொல்லாத ஓர் இரவு..! - மும்பை தாக்குதல் இரண்டாமாண்டு நினைவுக் கவியாஞ்சலி





பொல்லாத ஓர் இரவில்
பொல்லாங்கு செய்பவர்கள்
பல்லாக்கு தூக்கிகள் போல்
பதுங்கிய படி வந்திட்டார்…
பாகிஸ்தானிலிருந்து
பயங்கர ஆயுதங்களுடன்
மும்பையில் நுழைந்திட்டார்

அவர்களெண்ணத்தில்
அவல எண்ணங்கள் உதித்திருக்க
அதுவரை உதித்திருந்த
கதிரவனோ…
பயங்கர இரவைக் காணச்
சகியாமால்…
சட்டென்று மறைந்து போனான்…

சட சடவென்று
துப்பாக்கியால் சுட்டபடி
தீயவர்கள்
திகில் கொடுக்க…
மும்பை மாநகரம்
திடுக்கிட்டு விழித்தது…
திகிலில் உறைந்தது…

விட்டில் பூச்சிகளிடம்
வீரத்தைக் காட்டிய
ஈனப்பிறவிகள்…
ரயில் நிலையத்தில்
ரணகளத்தை காட்டிவிட்டு
நட்சத்திர விடுதிக்குள்
நரிகளைப் போல் நுழைந்தன…
கண்ணில் பட்டோரை
சடுதியில் கொன்றன…

உலகத்தின் பார்வை அனைத்தும்
இங்கு குவிந்திருக்க…
வெண்ணிலவும் இந்நிகழ்வை
வேதனையோடு பார்த்திருக்க
வெறியாட்டம் போட்ட
ஈனப் பன்றிகள்…
குதியாட்டம் போட்டன…

அப்பன்றிகளை வேட்டையாட
வேங்கைக் கூட்டமொன்று
புயலெனக் கிளம்பிற்று…
உயிரை துச்சமெனக் கருதி
கடமையை உயிரெனக் கருதி
பிற உயிர்களின் நலன்களைக் கருதி
அவ்வேங்கைகள் பாய்ந்து வந்தன…

ஊழல்வாதிகள் செய்த வினை
ஊடகங்கள் செய்த வினை
அத்தீயவர்களுக்கு
திட்டமாக…
வேங்கையின் தாக்குதல்கள்
விபரீதமாயிற்று…
வீரம் காட்டிய வேங்கைகள்
வீரமரணம் எய்தின…

இறுதியில்…
இன்னுயிர்களை ஈந்து
ஈனப்பன்றிகளை
அழித்தன…
இந்தியர் அனைவரும்
அமைதிப் பெருமூச்செய்தினர்…

உயிரினை இழந்தோர் பலர்...
அங்கே உறவுகளை
இழந்தோர் பலர்…
இறந்தவர்
பல மதத்தினராயினும்
அவர்களைக் காத்தது
இந்தியரன்றோ…

ஒற்றுமை காட்டிடும்
இத்தேசத்தில்
பிற நாட்டு
தே… மகன்களுக்கு
ஒற்று வேலை செய்தலாகுமோ…
நம் தேசத்தை
கூறு போட நினைப்பது தகுமோ…

இதற்குப் பின்னேனும்
விழிக்க வேண்டாமோ நாம்…
வீணர்களை விரட்ட
வேண்டாமோ நாம்…
இத்துன்ப நிகழ்வு நிகழ்ந்து
இன்றோடு ஆண்டிரண்டு...

அழுது கரைந்தாலும்
உருண்டு புரண்டாலும்
உயிர்கள் மீளாது…
நம் உள்ளங்களோ கண்ணீர்
உகுக்காமலிருக்காது…
உயிர் நீத்த உள்ளங்களுக்கும்
மானம் காத்த மாவீரர்களுக்கும்
கண்ணீர் கவியாஞ்சலி செலுத்துகிறேன்
காணிக்கையாக்குகிறேன்…

போனவரை போகட்டும்
இனியொமொரு
தாக்குதலை…
இம் மண்ணில் நடத்த
விடமாட்டோம்…
மீறி நடக்க வைக்க முயல்பவர்களை
நசுக்கியெறிவோம்…

எச்சமர் வரினும்
அவனியில் அஞ்சாமாட்டோம்
அசகாய சூரனென்றாலும்
அடியோடு
அழித்தெடுப்போம்…

இது…
நம்நாடு…
நம்தேசம்...
நம் மக்கள்…
நாமனைவரும் இந்தியர்கள்…
என்ற எண்ணம் காப்போம்...
என்றும் இந்தியனாய் இருப்போம்...

(இன்றோடு இத்தயரச்சம்பவம் நிகழ்ந்து இரண்டாண்டுகள் நிறைவடைகிறது... இச்சமரில் இன்னுயிரை நீத்த எம் மக்களுக்கும், என் வீரமறவ ராணுவ வீரர்களுக்கும் கண்ணீரோடு என் கவியாஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்... முதலாமாண்டு எழுதிய கவிதையை இங்கே சிறு மாற்றத்துடன் மீள்பதிவிலிட்டிருக்கிறேன்...)



மும்பை தாக்குதல் - இரண்டாமாண்டு நினைவு மரபுக்கவிதாஞ்சலி

 

தொம்பையி னாறிய தீயவர் திமிரோடு
மும்பையில் துட்டக் கால் வைத்தனர் – மேலும்
தும்பைப் பூ போன்ற உயிர்களை வதைத்தனர்
வம்பையும் விலைக்கு வாங்கினர்.

வேதனைக் குரல்கள் நாற்புறம் ஓலிக்க
கோதனைக் காக்கிளம் பியதரி மாப்படை
சோதனைத் தீர்க்க தம்மின்னுயிரை ஈந்து
சாதனை படைத்தவ்வெஞ் சமர்.

ஆயிற்றத் துன்பம் நிகழ்ந் தாண் டிரண்டு
போயிற்றோ நம்மனக் கவலைகள் - மாவீரர்களே..?
தீயிட்டழிக்கும் கொடும் தீவிரவாதி களையவ்
வாயிலினில் வைத்தே வதைத்திடும்.

                                                             
                                                                    - மோகனன்

(மும்பைத் தாக்குதல் நடைபெற்று...இன்றுடன் இரண்டாமாண்டு நிறைவு ஆகிறது... அவ்வெஞ்சமிரில் இன்னுயிரை ஈந்து பிற உயிர்களைக் காத்த மாவீரர்களுக்கு உங்களனைவரின் சார்பிலும் இந்த மரபுக்கவிதையினை கண்ணீர் அஞ்சலியுடன் சமர்ப்பிக்கிறேன்... இனியும் இதுபோன்ற துன்பியல்கள் இந்தியாவில் நடைபெறக்கூடாது என்ற நற்சிந்தனைகளுடன் உங்களிடம் இதைப் படையலிடுகிறேன்...)




Wednesday, November 24, 2010

உன் கெண்டை விழிகளை..!

உன் கெண்டை விழிக் கண்ணாலே
எனை சுண்டி இழுத்தது
போதும் பெண்ணே..!
சற்றேனும் உன் கெண்டை
விழிகளை தூங்கச் சொல்...
உனைப் பார்த்ததிலிருந்து
என் விழிகள் இமைக்க
மறுக்கிறது..!
இதயமும் இயங்க மறுக்கிறது..!



Monday, November 22, 2010

காத்துக் கொண்டிருக்கிறேன்..!

அன்பே..!
நீ இருக்கும் ஊர்...
எனக்கு கோவிலானது..!
நீ இருக்கும் திசை...
எனக்கு சூரியன் உதிக்கும்
திசையானது..!
நீ வரும் பேருந்து...
எனக்கு திருவிழா தேரானது..!
கடவுளின் தரிசனத்திற்கு
காத்திருக்கும் பக்தனைப் போல்
உன் தரிசனத்திற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறேன்..!
சீக்கிரம் வந்து எனக்கு
காதல் அருள் பாலிப்பாயா..?



Friday, November 19, 2010

உன்னழகில் சுகப்'பட்டு..!'

யார் நெய்த பட்டடி அது...
உன் கைப்பட்டு...
உன்னுடல் பட்டு...
உன் இடை பட்டு...
உன் கால் பட்டு...
தன் அழகை தொலைத்துவிட்டு
உன்னழகில் சுகப்பட்டு
என் மனதை சுழற்றிய பட்டுதான்
இன்று நீ காட்டியிருந்த
காஞ்சிப் பட்டு..!

நெய்தவனுக்கு
கை வலித்ததோ இல்லையோ..?
உன் பட்டணிந்த அழகைப் பார்த்து
என் மனது வலித்தது...
நான் அந்த பட்டாக இல்லையே என்று..!

(என்னவளை பட்டுப்புடவையில் முதன் முதலில் தரிசித்தபோது எழுதிய கவிதை இது..!)



Wednesday, November 17, 2010

உன் வரவிற்காக காத்திருப்பது..!

உலகில் என்னால்
பொறுத்துக் கொள்ள முடியாதது
ஒன்று உண்டெனில்
அது காத்திருப்பதுதான்..!
அதைப் போலொரு
கொடுமை வேறில்லையடி..!
ஆனால் உன் வரவிற்காக
நான் காத்திருப்பது மட்டும்
மிகவும் சுகமாக இருக்கிறதே..!
அதெப்படி..?



Friday, November 12, 2010

நட்பிற்கு திருமணம் - புரட்சித் திருமண வாழ்த்துக் கவி..!

என் அன்பில் நிறைந்த நண்பன் ராஜேந்திர பிரசாத்திற்கு இன்று திருமணம்... என்னுடைய பட்டமேற்படிப்பு படிக்கும் காலத்தில், நான் துவண்டு போயிருந்த போதெல்லாம் எனக்கு ஊக்கத்தையும், உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும் அளித்த எனது அன்பு நண்பனுக்கு நவம்பர் 12, 2010 அன்று திருமணம்...

'உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' - குறள்

என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாக இருந்தவன் இந்த ராஜேந்திர பிரசாத்...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த புரட்சித் திருமண வாழ்த்துக் கவி இதோ...

இந்த படத்தை சொடுக்கினால் படம் பெரிதாய் விரியும்... வாழ்த்துக் கவியும் படிக்கக் கிடைக்கும்... கவிதையின் முதல் வரிகளிலுள்ள தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... இல்வாழ்வில் இணையவிருக்கும் இதயங்களின் இயற்பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..? சரியாய் படிக்கத் தெரியவில்லை எனில்... கவியை கீழே கொடுத்திருக்கிறேன் படியுங்கள்...
 

பி
றக்கும் போது நீயறியாய் இவள் உன்னவள் என்று..?
 அவளுமறியாள் நீ அவளுடையவன்தான் என்று...?
விவர்மன் ஓவியத்தை சந்திப்பது போல்  இருவரும்
 பல்கலையில் சந்தித்தீர்! சிலாகித்தீர்! சித்தம் ஒன்றானீர்!
சாதி, மதம் பாராமல் இருமனத்தின் சம்மதத்தை தேடினீர்..!
 இசைந்தது மனது; இனிதே திருமணமும் முடிவானது..!
த்தரணியில் இப்படியொரு புரட்சி மணம் பாரீரென
  புவி முழக்கம் செய்த என் அன்புத் தோழமைகளே..!

சோலையில் இணை பிரியாமல் வாழ்ந்திடும் அன்றில்
 பறவைகள் போல் இல்வாழ்வில் வாழ்ந்திட வேண்டும்..!
பிறப்பெனில் இன்பமுண்டு, துன்பமுண்டு என்றுணர்ந்து
 ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்திட வேண்டும்..!
யார் பார்த்தாலும் உங்களைப் போலொரு உத்தமத்
 தம்பதிகளில்லை என ஊர், உலகம் போற்றிட வேண்டும்..!

என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!


மணமக்கள்: தி. ராஜேந்திர பிரசாத், சோபியா
இணைந்த நாள் : 12.11.2010
இணைந்த இடம்: திருமயிலை காபாலீஸ்வரர் கோயில்


வாழ்த்தும் அன்பு நண்பர்கள்


அ. பிரேம் சந்திரன்
மோ. கணேசன்
வ. நவநீத கிருஷ்ணன்
நீ. விஜயகுமார்
ச. சுரேஷ் குமார்

(இது போல என் வேறு சில நண்பர்களுக்கு நான் எழுதிய கவிதைகளை வாசிக்க வேண்டுமா..? கீழே உள்ள இணைப்புகளை உயிர்ப்பிக்கவும்...)




Tuesday, November 9, 2010

உன்னுடன் மட்டும்...

பிற பெண்களுடன் பேசும்போது
கிடைக்காத இன்பம்...
உன்னுடன் பேசும் போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
பிற பெண்களின் அழகை ரசிக்கும் போது
கிடைக்காத இன்பம்...
உன்னழகை ரசிக்கும்போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
பிற பெண்களின் நடையழகைப்
பார்க்கும் போது
கிடைக்காத இன்பம்...
உன் நடையழகைப்
பார்க்கும் போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
இவைகளெல்லாம்
உன்னுடன் இருக்கும் போது மட்டும்
கிடைக்கிறதே... அது எப்படி..?
இவைகளெல்லாம் என் வாழ்நாள்
முழுக்க கிடைப்பது எப்போ(த)டி..?




Thursday, November 4, 2010

உனை சந்திக்கும் ஒவ்வொரு நாளும்..!

நெருப்பில் பூக்கும்
மத்தாப்பூ...
படபடவென வெடிக்கும்
பட்டாசு என
இங்கோ ஆண்டிற்கு
ஒரு முறைதான் தீபாவளி..!
எனக்கோ உனை
சந்திக்கும் ஒவ்வொரு நாளும்
தித்திக்கும் தீபாவளிதான்...
உன் மத்தாப்பூ சிரிப்பும்...
படபடவென பேசும்
உன் கண்ணிமைகளும்
இவனுக்கு அனு தினமும்
தீபாவளியைக் காட்டுகின்றன தேவி..!

(என் அன்பிற்கினிய வாசகர்களுக்கு என் சார்பிலும் என்னவளின் சார்பிலும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!)



Monday, November 1, 2010

மேகங்களின் மின்னல் பூக்களோ..!

மழைத்துளியின்
சாரல் பூக்கள்...
மழலையின்
சிரிப்பைக் காட்டுகிறது..!
மேகங்களின்
மின்னல் பூக்களோ
உன் சிரிப்பைக் காட்டுகிறது..!
சாரல் பூக்களை ரசித்தால்
என் துக்கத்திற்கு ஆபத்து
என்பதைக் கண்டேன்..!
மின்னலை ரசித்தால்
அது என் கண்ணுக்கு
ஆபத்து என்பதை
உனைக் கண்டதும்(தான்)
கண்டு கொண்டேன்..!