ஓர் வகையில்
பார்த்தால்
இவ்வுலகும்
மனிதனும் ஒன்றே!
அறிந்து சொல்வேன் இன்றே!
அது எதுவென்று
ஆராய்ந்து பார்ப்பின்
நீர் வகையில்
இரண்டும் ஒன்றே!
அறிந்திடுவீர் நீர் இதை நன்றே!
உலகில்
எழுபது சதவீதமும்
உடலில்
எழுபது சதவீதமும்
நிறைந்திருப்பது
உயிர் நீரே!
நம் உடலில் நீரும்
வற்றிவிட்டால்
உயிரும் காற்றாய் பறந்திடுமே
கடலில் நீரும் வற்றிவிட்டால்
உலக உயிரினங்ள்
சாம்பலாகிப் பறந்திடுமே!
யானை, புலி, சிங்கமெல்லாம்
தாகம் தணிக்க மட்டுமே
நீர் பருகும்
மனிதனெனும் மிருகம் மட்டுமே
தன் தேவைகள்
அனைத்திற்கும் நீர் உறிஞ்சும்!
தாவரம் வாழ
நீர் வேண்டும்
விலங்குகள் வாழ
நீர் வேண்டும்
உயிரினம் வாழ
நீர் வேண்டும்!
உணவைப் படைக்க
நீர் வேண்டும்
உயிரைப் படைக்க
நீர் வேண்டும்
உயிரைச் சுமக்க
நீர் வேண்டும்!
உணவுச் சங்கிலி உயிர்ப்போடிருக்க
உலகில் மறையா நீர் வேண்டும்
நீ, நானின்றி உலகிருக்கும்
நீரின்றி உலகிருக்காது
நம்மைக் காக்க
நீர் இருக்க…
நீரைக் காக்க யார் வருவார்?
நம்மை நாமே
காப்பதுபோல்
நீரை நாமும் காத்திடுவோம்!
நீரில் மிதக்கும் பூமிப்பந்தினை
வெப்பக்காடாய் மாற்றாமல்
பசுமைக்காடாய் மாற்றிடுவோம்!மரங்களை புவியில் வளர்த்து
மண்ணில் நீரை சேமித்திடுவோம்
நீரை மாசு செய்யாமல்
நிதமும் சேகரம் செய்திடுவோம்!
அடுத்து வரும் தலைமுறைகளுக்கு
கானல் நீரைத் தாராமல்
நன்னீரையே பரிசளிப்போம்!
(இன்று உலக தண்ணீர் தினம்)
(நான் கௌரவ விருந்தினராக கலந்த கொண்ட நிகழ்ச்சி குறித்த தொகுப்பு இங்கே..: 'ஆசிரியர் வைபவம்' நிகழ்ச்சியில் அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!)
இளமையில்...
வறுமையில்...
அறியாமையில்...
இயலாமையில்...
"ஏனிப்படி" இருக்கிறோம்?
என்று எண்ணுகின்ற
விளிம்புநிலை மாணவர்களின்
'ஏணிப்படி'யே
அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!
(இன்று உலக கவிதை தினம்... இத்தகைய சிறப்பான தினத்தில்... எனை வளர்த்த, எமைப்போன்றவர்களை வளர்த்துக்கொண்டிருக்கும் அரசுப்பள்ளி ஆசிரிய சமூகத்திற்கு இக்கவிதை சமர்ப்பணம்.
நேற்றைய தினம் (20.03.2016) திருப்பத்தூரில் நடைபெற்ற 'ஆசிரியர் வைபவம்' எனும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். அந்நிகழ்ச்சியின் முடிவில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னிடம் ஆட்டோகிராப் கேட்க, அப்போது எழுதிக் கொடுத்த கவிதை இது... நிகழ்வின் அழைப்பிதழ் இங்கே... http://moganan.blogspot.com/2016/03/blog-post_18.html)
இந்த உலகத்திற்கே
உயிர்களை
உருவாக்கிக் தரும்
உன்னதம்!- தாய்மை!
உலகத்தையே
அழகாக்கும்
திறன் கொண்ட
ரசவாதம்! - மலர்கள்!
தன்னுயிரை
பணயம் வைத்து
என்னுயிரை உருவாக்கிய
புனிதம்! - அம்மா!
அடம்பிடிக்கும்
என்னிடம்
அன்பைப் பொழியும்
அமுதம்! - அக்கா!
காட்டுத்தனமாய்
சுற்றித்திரியும்
இக்களிறை அடக்கும்
அங்குசம்! - காதலி!
என்னுயிரை
உள்வாங்கி
எனையே உயிர்ப்பிக்கும்
உத்தமம்! - மனைவி!
என்னுலகை
பொன்னுலகமாக்கி
எனக்கன்னையாய் மாறும்
வசந்தம் - மகள்!
எனக்கு மட்டுமல்ல
உலகிலுள்ள
எல்லா ஆண்களுக்கும்
இவையே நியதி!
எங்களைப் படைத்த
உன்னத மலர்களே
இன்றுங்களைப் போற்றும்
பொன்னான திகதி!
நீரின்றி உயிரில்லை
நீயின்றி அணுவில்லை
அணுவின்றி எவையுமில்லை
பெண்ணினமே நீ வாழி!
(உலகிலுள்ள அத்தனை மகளிருக்கும் என் இதயம் நிறைந்த இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!)
பொது அறிவு:
உலகின் தற்போதைய பெண் தலைவர்கள்! - மகளிர் தின சிறப்புப் பதிவு!