Saturday, February 9, 2013

எங்களின் செல்பேசி..! - 350 வது கவிதைப் பதிவு



கடந்த இரு நாட்களாய்
என் மெல்லியாளைக்
காணவில்லை...
எங்கு சென்றாள்...
என்ன ஆனாள் என 
இருதலைக் கொள்ளி எறும்பாய்
ஏங்கித் தவித்தேன்...
அமாவைசை நிலவாய்
தேங்கித் தவித்தேன்...

வாழிடத்தைப் பொருத்த வரை
நான் ஒரு தேசம்
அவள் ஒரு தேசமென்றாலும்
எங்களின்
சுவாசம் என்றும்
ஒன்றாய்த்தானிருந்தது...
செல்பேசி வழியே
நேசம் என்றும்
நன்றாய்த்தானிருந்தது...

நாங்கள் போகுமிடம்
தூரமோ அருகாமையோ
சொல்லாமல் போனதில்லை
இருவரும்... 
சொன்ன சொல்லை
மீறியதில்லை
இருவரும்...

எங்களின் செல்பேசி இரண்டும்
இருவரின்
உதட்டுச் சொற்களை உயிர்ப்பித்து
செவி வழியே
உடல் செல்களுக்கு உயிர் கொடுக்கும்...
கண் வழியே
மகிழ்ச்சிக் கடல் ஊற்றெடுக்கும்...
நேர கால தேசாபிமானங்களை
எங்களின் செல்பேசி
தோற்கடிக்கும்...
எங்களின் உணர்ச்சிகளுக்கு
உயிர் கொடுக்கும்...
எங்கள் காதலுக்கு உரமிட்டு
பயிர் வளர்க்கும்...

அவள் அழைக்கும் போது
மட்டும் என் செல்பேசி
சிலாகித்து சிணுங்கல் போடும்...
'சீக்கிரம் எனை எடுத்து
அணை'யென முனகல் போடும்...

தொட்டணைத்து எடுத்தால்
தேவதையின் குரல்
தேனாய் என் செவியினைத் தீண்டும்...
என் பிறவிப் பயனைத் தூண்டும்...

இப்படி அனுதினமும்
இன்பம் தந்தவளிடமிருந்து
இருநாளாய் 
அழைப்பில்லை...
இணைய வழி ஏதுமில்லை
அவள் அழைப்பின்றி
என் செல்பேசி செத்துக் கிடந்தது
உணர்ச்சியற்று உறைந்து கிடந்தது

அவளின்றி
என் செய்வேன்?
ஏது செய்வேன்?
எங்கே சென்றாள்?
ஏது செய்கிறாள்?
காணாமல் போனாளோ..?
காற்றாய்க் கரைந்தாளோ..?
என்னுடைய கேள்வி கணைகள்
எனையே பதம் பார்த்தன...

காற்றாய் மாறும்
சக்தி கிடைக்குமா?
சிட்டாய்ப் பறக்கும்
யுக்தி கிடைக்குமா?
அவளை நேரே பார்க்கும்
முக்தி கிடைக்குமா?
என  பலவிதப்  போராட்டங்கள்
என் மனதில்...
சொல்லாமல் போய் விட்ட அவளுக்கு
எவ்வளவு மன 'தில்?'

அவளின்றி இங்கே
நான் கடத்திய
ஒவ்வொரு கணமும்
ஒரு யுகத்தின் கனமானது...
மனத்தின் ஒவ்வொரு பாகமும்
ரணமானது...
மௌனங்கள் அனைத்தும்
என்னிடம்
காட்டுக் கூச்சல் போட்டது...

அவள் அழைத்து பேசட்டும்
செவிட்டில் அறைகிறேன்...
குழைந்து பேசட்டும்
குமட்டில் அறைகிறேன்...
மறுத்து பேசட்டும்
மண்டையில் அறைகிறேன்...
என்று கொந்தளிப்பில் இருந்தேன்
இரு நாட்களுக்குப் பிறகு
அழைத்தாள்...
செவி மடுத்தேன்...
செவி வழியே
அவள் அன்பின் தேன் வழிய
வழக்கம் போல்
அவளன்பில் கரைந்தேன்...
மொழிந்தேன்..!
காதல் மொழி 'தேன்..!'

--------------@----------------

(2009 ஆகஸ்டில் துவங்கிய இந்த வலைப்பூவில் 300- ஆவது கவிதை எழுதும் போது 2011 -ஆம் ஆண்டு நடப்பிலிருந்தது. இது எனது 350-வது கவிதைப் பதிவு.  இந்த 50 கவிதைகளை எழுத கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளா என்றால். அது காரணமில்லை. 

பணிச்சூழலும் பொருளாதாரச் சூழலும் இடம் தராமல் போனதால் ஏற்பட்ட தொய்வு இது. இனி இந்த தொய்வு இருக்காது என நம்புகிறேன். இந்த 350-வது கவிதையை எனை நேசித்துக் கொண்டிருக்கும் எனது கவிதைக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த 350-வது பதிவு வரை எனக்கு ஆதரவு தரும் என்னன்பு வாசக நண்பர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!

என்றென்றும் அன்புடன்
உங்கள் 
மோகனன்)

6 comments:

  1. கவிதையைப் படித்ததும் கண்கள் குமிழின.சொல்ல வார்த்தைகள் அற்று வாயடைத்து நிற்கிறேன்.உங்களின் மேலான உணர்வுகளுக்கு, உங்களுக்குள்ளானவள் என்றும் துணை நிற்பாள் என நம்புகிறேன்.உங்களின் காதல் வெல்லவும் நீங்கள் விரைவில் சந்திக்கவும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  2. என் சகியை சந்திக்க வாழ்த்தியமைக்கு அகமகிழ்கிறேன்...

    தங்களின் வாக்கு பலித்தால் அதை விட பாக்கியம் வேறெதுமில்லை

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்..அருமை..

    ReplyDelete
  4. தங்களின் வருகைக்கு எனது நன்றிகள் ஆதிரா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. Ehtu varai 10 times padichiten, unarvu poorvama irukku, very nice, ungalin siththam niraiveruma thozhaa.......?

    ReplyDelete
  6. ரசித்தமைக்கு நன்றி நட்டு...

    அவளோடு சேர்ந்து வாழத்தான் ஆசைப்படுகிறேன்...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...