Friday, September 9, 2016

விடிவெள்ளியாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை!


உலக உருண்டையை
வயிற்றுக்குள் வைத்திருக்கும்
பிரபஞ்சத்தைப் போல…
எனது உலகத்தையே
வயிற்றுக்குள் வைத்திருந்தாள்
உன் அன்னை!
திங்கள் நிகர் உன் அன்னை
திங்களாய் உனை சுமந்து
விடிவெள்ளியாய் உனை பெற்றெடுத்தாள்!
இன்னும் நினைவிலிருக்கிறது
அந்த வெள்ளிக்கிழமை
நீ கொடுத்த முதல் மழலைக் குரலால்!
அடங்காத காளை, கோவக்காரன், முரடன்,
திமிர் பிடித்தவன் என பட்டம் பெற்ற எனக்கு
அப்பா எனும் பட்டம் கொடுத்த மழலை!
கன்னியாய் இருந்தவளுக்கு
அம்மா எனும் ஒப்பற்ற பதவி கொடுத்த
எங்களின் முதல் இளவரசன்!
இருண்டு கிடந்த எம் வாழ்வில்
சூரியனாய் உதித்ததால்
ஆதித்தனென்று பெயர் சூட்டினோம்!
கல்வி, கேள்வி, கலைகளில்
சிறந்து விளங்கிய ஆதித்த கரிகாலனைப்போல
ஆதவனாய் வரவே அப்பெயர் தீட்டினோம்!
என்றும் எங்கள் ஆதவனே
மோகனன் வீட்டு இளவரசனே
தாய்க்குத் தலை மகனே!
இன்றோடு நீ பிறந்து
ஆயிற்று ஆண்டுகள் பதினொன்று
வாழ்க ஆண்டுகள் பலநூறு!
எல்லா கலைகளும் கைவரப் பெற
தந்தையை விஞ்சும் தனையனாக மலர

இயற்கையோடு இணைந்து வாழ்த்துகிறேன் மகனே!

(இன்று 11-வது பிறந்தநாள் காணும் எனது முதல் மகன் ஆதித்தனுக்காய் இந்த கவிதை..!)

2 comments:

  1. வீர மகனாக
    வெற்றி நாயகனாக வளரட்டும் நண்பா...
    என் வாழ்த்துக்களையும் சொல்லிவிடு...

    ReplyDelete
  2. மகிழ்ச்சி தோழா...

    அன்நிறே தெரிவித்து விட்டேன் உனது வாழ்த்துகளை...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...