Thursday, June 4, 2015

எங்கள் உலகின் வானவில்லாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை



காய்ந்து கிடக்கும் பூமிக்கு
வளத்தைத்தரும் வான மகள்
மழை தரும்போது
முறுவலிக்கும் வானவில்லின்
நிறங்களுமிங்கே ஏழு!

நாம் வாழும் பூமியை
கடலைத் தவிர்த்து
நிலப்பரப்பின் அடிப்படையில்
பிரிக்கப்பட்ட கண்டங்களின்
எண்ணிக்கையுமது ஏழு!

பூமியில் இயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
மனிதன் செயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
இங்கே ஏழு!

காலச் சக்கரத்தின் வேகத்தை
கட்டுக்குள் கொண்டுவர
காலத்தை கணக்காய்
வகைப்படுத்திய போது
வாரத்தின் நாட்களுமிங்கே ஏழு!

உலகின் மூத்த மொழியாம்

முத்தமிழின் முத்தான இலக்கியங்கள்
வகைப்படுத்திய
பிள்ளைப் பருவங்களின்

எண்ணிக்கையது ஏழு!

மழலையாய் இருந்த போது
நீ அழுகையில்
உனை அமைதிப்படுத்த
உன் அன்னை பாடிய தாலாட்டிசையின்
சுரங்களின் எண்ணிக்கையும் ஏழு!

எங்கள் உலகின் வானவில்லாய்
பெருமழையாய், பேரிசையாய்
அதிசயமாய், அழகிய இளவலாய்
இந்நாளில் பிறந்தாயே என் அகிலா…
இன்றோடு உன் அகவை ஏழு!


(இன்று எனது இளைய மகன் க. அகிலனின் ஏழாவது பிறந்தநாள். உன் அன்னை மட்டுமல்ல அகிலமே பெருமைப்படும்படி எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும். நிச்சயம் நீ சாதிக்கப் பிறந்தவன்.அன்பு, மதி, செல்வம் அனைத்தையும் நீ ஆண்டு, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க மகனே..!)

4 comments:

  1. தங்களின் இளைய மகன் அகிலனின் ஏழாவது பிறந்த நாளான இன்று, அவர் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  2. வணக்கம்
    தங்களின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நடனசபாபதி அவர்களே

    தங்களின் வாழ்த்து எனது இளைய இளவலை உயர்த்தும்...

    ReplyDelete
  4. தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரூபன்

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...