ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ...
பத்துமாசம் நான் சுமந்து
பெண்ணிலவ பெத்தெடுத்தேன்!
பத்தியந்தான் பல இருந்து
பால் நிலவ பெத்தெடுத்தேன்!
குட்டி நிலா தங்கையாக
சுட்டியாகப் பிறந்த பெண்ணே…
குலம் விளங்க வளர வேணும்
கண் மூடி தூங்கு கண்ணே…
நல்லா நீயும் படிக்க வேணும்
விழி மூடி தூங்கு கண்ணே
நாடு போற்ற வாழ வேணும்
நன்றாக தூங்கு கண்ணே
நன்றாக தூங்கு கண்ணே!
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)
சிப்பிக்குள்ள முத்து போல
என் வடிவில் இருக்கும் முத்தே
சிங்கார வித்து போல
எம்மடியில் கிடக்கும் முத்தே
மயக்கும் நிலவு போல
அக்காகிட்ட சிரிச்ச முத்தே
சின்ன அரும்பு போல
அப்பாகிட்ட சிரிச்ச முத்தே…
யாரடிச்சி நீ அழற
அம்மா ஒனக்கு நானிருக்கேன்
அழாம தூங்க வேணும்
அம்மா ஒனக்கு தொணையிருக்கேன்
என் எண்ணம் குளிரும்படி
அன்னம் போல தூங்கு கண்ணே…
நீ அன்னம் போல தூங்கு கண்ணே…
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)
வெள்ளி போல வந்தவளே
வெம்பி நீயும் ஏன் அழற
நீ தூங்க வேணுமுன்னு
தேக்குத் தொட்டில் வாங்கி வந்தேன்
மான் போல நடக்கணும்னு
மணிகொலுசு வாங்கித் வந்தேன்
நீ பசியாற வேணுமுன்னு
பால் வெள்ளித் தட்டு வாங்கித் தந்தேன்
எல்லாமே உனக்கிருக்கு
எதுக்கம்மா நீ அழற
அம்மா உனக்கு தொணையிருக்கேன்
அழாம தூங்கு கண்ணே…
அழாம தூங்கு கண்ணே…
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)
பனி நிலவு ஆனவளே
பதறி நீயும் ஏன் அழற
அண்ணன் உன்ன கொஞ்சிடுவான்
அமுதே நீ கண்ணுறங்கு
அக்கா உன்ன கொஞ்சிடுவா
அழகே நீ கண்ணுறங்கு
பாட்டி உன்ன கொஞ்சிடுவா
பனியே நீ கண்ணுறங்கு…
தாத்தா உன்ன கொஞ்சிடுவார்
தாயே நீ கண்ணுறங்கு
அப்பா உன்ன கொஞ்சிடுவார்
அறிவே நீ கண்ணுறங்கு
அம்மா உன்ன கொஞ்சிடுவேன்
அம்புலியே கண்ணுறங்கு…
அம்புலியே கண்ணுறங்கு…
என் அம்புலியே கண்ணுறங்கு…
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)
(எனக்கும் தாலாட்டு பாடல் ஒன்றை எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை... இன்றுதான் அது நிறைவேறியது. மகள்களைப் பெற்ற அத்தனை அன்னையருக்கும் இந்த தாலாட்டு சமர்ப்பணம்...)
தூங்கிட்டேன்
ReplyDeleteமகிழ்கிறேன்...
ReplyDelete