Thursday, August 26, 2010

உன் நடையினிலே ..!

உன் அழகினிலே
அன்னப் பறவையை
அசரவைத்து...
உன் நடையினிலே
புள்ளி மானை
மிரளவைத்து...
உன் நளினத்திலே
கோலமயிலை
கோபப் படவைத்தபடி
கோதை நீ வருகிறாய்..!
எனைக் கொள்ளையிட வருகிறாய்..!

Monday, August 23, 2010

அணு அணுவாய் உன்னழகில்..!

இரு புருவமும் ஒரு சேர
மேலே தூக்கிக் காட்டி...
என்னவென்று எனை நோக்கி
உன் கண்ணாலே வினவுகிறாய்..?
கன்னி உன்றன் அழகைப்பார்த்து
என் கண்ணிமைகள்
அசையவில்லை...
அனிச்சை செயலை மறந்தபடி
அணு அணுவாய்
உன்னழகில் ஆழ்ந்து போகிறேனே...
அதை நீ அறியாயோ பெண்ணே..?

Friday, August 20, 2010

ஒத்துக் கொள்கிறேன்..!

எப்போதும்
சமூகத்தைப் பற்றியே
சிந்தித்துக் கொண்டிருந்த என்னை...
சதா சர்வ நேரமும்
உனைப் பற்றியே
சிந்திக்க வைத்து விட்டாய்..!
இதனால் என்னை
உன் காதலனாக்கினாயோ
இல்லையோ..?
உனைப் பற்றியே எழுதும்
காதல் கவிஞனாக்கி விட்டாய்..!
ஒத்துக் கொள்கிறேன்
கொள்கைப் பிடிப்போடு இருந்த
என்னைக்கூட
உன் கொள்ளை அழகால்
மாற்ற முடியும் என்பதை..!

Thursday, August 19, 2010

மறந்து போதல்..!

உன் கூந்தல் வாசம்
பிடித்ததால்…
என் சுவாசத்தை நானும்
மறந்து போனேன்..!
உன் இதழில்
கவிதையைப் படித்ததால்...
என் கவிதையை நானும்
மறந்து போனேன்..!
என் உயிராய் நீயும்
ஆனதினால்...
என் உறவுகளை நானும்
மறந்து போனேன்..!

Tuesday, August 17, 2010

நீ என்னிடம் அப்படி..?

உன் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன்
காதினிக்கப் பேசுகிறாய்..!
அவர்களின் கன்னங்களைக் கிள்ளியபடி
கொஞ்சி மகிழ்கிறாய்..!
இவற்றையெல்லாம் பார்க்கும் போது
பொறாமைதான் மிஞ்சுகிறது..!
நீ என்னிடம் அப்படி
கொஞ்சிப் பேச வில்லையே என்று..?

Friday, August 13, 2010

உனைப் பார்த்த வினாடியிலிருந்து..!

நீ யார்..?
என்ன உன் பேர்..?
ஏது உந்தன் ஊர்..?
இவைகளை நான்றியேன்…
ஆனால்…
உனைப் பார்த்த வினாடியிலிருந்து
இனி நீதான் நான்…
உன் பேர்தான் இனி என் பேர்…
உன் ஊர்தான் இனி என் ஊர்..!

Wednesday, August 11, 2010

உன்னிடத்தில் நானும்..!

'நீ எனக்கு வேண்டவே
வேண்டாமென்று...
சொல்லிய பின்பும்
ஏனடா என்னையே
சுற்றிச் சுற்றி
வருகிறாய்' என்றாய்..!
மலர் வேண்டாமென்று
சொன்னால் மட்டும்
வண்டு விட்டு விடுமா என்ன..?
தேனிருக்கும் இடத்தைச்
சுற்றித்தானே
அதுவும் சுற்றி வரும்..!
அது போலத்தான் பெண்ணே
உன்னிடத்தில் நானும்..!

Monday, August 9, 2010

நிலவைப்பிரிந்து என்றும்..!


நான் துவண்டு கிடக்கும் வேளையில்
உன் மலரினும் மெல்லிய
மடியினில் எனைக் கிடத்தி...
என் தலையைக் கோதி தேற்றுவாய்..!
நான் வீழ்ந்து கிடக்கும் வேளையில்
எனை உன் வீணை மார்பில் சாய்த்து...
என் விம்மலைத் தணிப்பாய்..!
நான் கோபித்துக் கிடக்கும் வேளையில்
கொவ்வை இதழ் முத்தம் தந்து...
என் கோபத்தை உடைத்தெறிவாய்..!
இத்தனையும் எனக்குச் செய்யும்
பனி நிறை பவழ மலரவளே..!
என் இன்பத்தில் மட்டுமின்றி...
என் துன்பத்திலும் இருந்தவளே...
இருளில் நான் இருந்தபோது
நிலவாய் வெளிச்சம் தந்தவளே..!
உன்னை நானும் மறப்பேனா..?
உன் நினைவைத் துறந்து இருப்பேனா..?
மறந்தும் உயிரோடிருப்பேனா..?
நிலவைப்பிரிந்து என்றும் நீலவானம் இராது..!
அதுபோலத்தான் பெண்ணே நானும்..!

(ஓர் நாள் என்னவள் என்னிடம் கேட்டாள்.. ''என்ன மறந்துடுவியா..? என்ன விட்டு போயிடுவியா..?'' என்று... அவளுக்கு இக்கவிதை மூலமாக என் பதிலைத் தந்தேன்..!)

Saturday, August 7, 2010

கொலுசுச் சத்தங்களை..!

கொலுசுச் சத்தங்களைக்
கேட்கும் போதெல்லாம் நீதான்
வந்துவிட்டாயோ என
ஆவலோடு திரும்பிப் பார்க்கிறேன்..?
அப்படி திரும்பித் திரும்பிப்
பார்த்ததில் என் கழுத்து
வலிக்கிறதோ இல்லையோ..?
நீ இன்னும் வரவில்லை என்பதால்
என் மனசு வலிக்கிறது..!

Friday, August 6, 2010

உன் மலர் முகத்தை..!

நிலவைக் கண்டு மலரும்
அல்லி மலர் போல...
உன் மலர் முகத்தைக்
கண்டால்தான்...
என் மனசு மலருவேன் என்கிறது..!
என் இதய நிலவே...
அதற்காகவேனும் விரைந்து வா..!

Thursday, August 5, 2010

என்ன கொடுத்தாலும்..!

பத்து மாதம் சுமந்து
பாலூட்டி சீராட்டி வளர்த்த
என் அன்னையின் அன்பையே
மிஞ்சச் செய்த
உன் அன்பிற்கு என்ன
கொடுத்தாலும் ஈடாகா..!
என்னையே கொடுத்தாலும்..!

Wednesday, August 4, 2010

நான் வாழ்வதை விட..!

இந்த உலகத்தில்
நான் வாழ்வதை விட...
உனக்கே
நான் உலகமாய்
வாழ ஆசைப்படுகிறேன்..!
இதற்கு நீ என்ன
சொல்கிறாய் பெண்ணே..!

Tuesday, August 3, 2010

எது எப்படி மாறினாலும்..!

அன்றோ புறா விடு தூது…
மயில் விடு தூது...
மான் விடு தூது...
அன்னம் விடு தூது...
அழகிய லிகித விடு தூது என
இயற்கை வழிகளில் காதலை வளர்த்தனர்…
நீயோ இணைய விடுதூது மூலம்
காதலை வளர்க்கிறாய்..!
எது எப்படி மாறினாலும்
காதல் என்றும் மாறுவதில்லை…
நான் உன் மேல் கொண்டிருக்கும்
மாறா மையலைப் போல..!

Monday, August 2, 2010

கண்டு பிடித்துக் கொடு..!

உன்னுடைய சீண்டல்கள்
என் நினைவுகளில்
நீங்கா இடம் பிடித்து விட்டன..!
உன்னுடைய காதல் பார்வைகள்
என்னுள் தணியாத தாகத்தை
ஏற்படுத்தி விட்டன..!
உன்னுடைய மெய்த் தீண்டல்கள்
என்னுள் மறையாத பரவசத்தை
பரப்பி விட்டன..!
இவைகளால்...
பொம்மையைத்
தொலைத்துவிட்டு நிற்கும்
குழந்தையைப் போல…
இரவில் தூக்கத்தைத்
தொலைத்து விட்டு நிற்கிறேனடி..!
என் தூக்கத்தை எனக்குக்
கண்டு பிடித்துக் கொடு..!