Monday, February 28, 2011

எது நிதர்சனம்..?!

ஒரு நாள் என்னிடம்
என்னவள் இதழ் திறந்து...
'பட்டுப் புடவை
வாங்கித் தாயேன்...'
என்றாள்..!
'பட்டுப் போன்ற
மேனி உனக்கிருக்க
பட்டதெற்குப் பெண்ணே'
என்றேன்..!
சட்டென்று
அவள் முகத்தை
வெட்டிக் காட்டி
உன்னிடம் துட்டில்லை
என்பதை மறைக்க
என்னை பட்டென்று
பிட்டொன்றைப் போடுகிறாயா..?
என்று படி வார்த்தையால்
எனை சுட்டுவிட்டுப் போய்விட்டாள்...

காதலிக்கும் போது
என்னுடைய கவித்துவமான
வார்த்தைகள் எல்லாம்
என்னவளுக்கு இனித்தன...
கல்யாணத்திற்குப் பிறகு..?

(எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க கற்பனையில் எழுதப் பட்ட கவிதை... சிலருக்கு இது உண்மை சம்பவமாகவும் இருக்கலாம்..!)

Saturday, February 26, 2011

இனிமையான நோய்..!



ஊன்… உறக்கம்…
உறைவிடம்…
உறவினம்...
என அனைத்தையும்
மறக்கச் செய்து
சதா சர்வ காலமும் உன்னையே
நினைக்கச் செய்யும்
உலகிலேயே மிகவும்
இனிமையான நோய் காதல்..!

Thursday, February 24, 2011

கொட்டும் மழைக்காலம்..!




அதுவோ கொட்டும்
மழைக்காலம்…
அலுவலகம் செல்ல வேண்டி
அவசர அவசரமாய்க்
குளித்து முடித்து துணியைத்
தேடுகிறேன்…
தலை துவட்டக் கூட
துணியில்லையடா...
அத்துனையும்
நேற்று பெய்த மழையில்
நனைந்து விட்டதடா
எனகிறாய்….

'அலுவலகம் போக வேண்டுமடி
இப்போது என்ன செய்ய..?'
என நான் சத்தமிட…

சாந்தமாய் என்னருகே வந்து
உன் நீள் கூந்தலால்
என் தலை துவட்டி
உடல் துடைத்து விடும் போது
உன் கூந்தல் ஸ்பரிசத்தில்
என்னை நான் மறந்து விட …
உன் கூந்தல் வாசத்தில்
கோபமெல்லாம் கரைந்து விட
நம் காதல் அங்கே
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுகிறது அன்பே..!

Tuesday, February 22, 2011

ஒவ்வொரு ஜென்மமும்..!


ஒவ்வொரு ஜென்மமும்
உனக்காகவே
பிறந்து  வாழத் தயார்..!
அத்தனை ஜென்மங்களிலும்
நீயே என் காதல்
மனைவியாகப் பிறப்பாயென்றால்..!

Friday, February 18, 2011

சிங்கத் தமிழனை..! - தமிழக மீனவர்களுக்காக புரட்சிக் கவிதை..!



வங்காள விரிக் கடலில்
சிங்கத் தமிழனை 
சீண்டிக் கொண்டே இருக்கும்
கொழுப்பெடுத்த 
சிங்களப் படையினை
எம் தமிழ் மீனவர்களால் 
சிறை பிடிக்க நிமிட நேரமாகாது...

இங்கிருப்பது கரி பரிப் படை...
அங்கிருப்பது குள்ள நரிப் படை...
இனியும் பொறுக்கோம்...
சிங்களப் படையினை நையப்புடை..!
சட்டென்று அவன் மென்னியை உடை..!
இல்லையேல் இந்தியன்
என்ற சொல்லை செய்திடு தடை..!

மத்தியில் இருக்கும்
'கை'யாலாகாதவர்களுக்கு
மாநிலத்தில் இருக்கும்
'கை'க் கூலிகளே...
'கை' விரித்த கூலிகளே...
மானம் காத்த தமிழனின்
இன்னுயிர் அங்கே வங்கக் கடலில் 
போய்க் கொண்டிருக்க...
கண்டவனுக்கு கடிதம் போட்டு
கண்டனம் போட்டு என்ன பலன்...

சுயநல அரசியல் பகடையாட
பரதவக் குடிமக்களின்
குரல் வளையை அறுக்கலாமா?
குற்றுயுரும் குலையுயிருமாய்
அவர்களை ஆக்கலாமா..?
எகிப்திய பூமியாய்
இந்தியா மாறுவதற்குள்
இதற்கொரு தீர்வு காண்பீர்..!

ஆசையை ஓழிக்கச் சொன்ன
புத்தனின் வழியை
பின்பற்றுவதாகச் சொல்லும்
சிங்களப் பித்தர்களின்
வெறியாட்ட ஆசை ஏன்..?
அவர்களை வெறியாட
வைக்கின்ற ஆசையினை
உண்டாக்கி வைத்தவன் எவன்..?

தன்மானத் தமிழனை
வம்புக்கு இழுக்கிறான்
சிங்களவன்...
வலியவே வந்து வம்பினை
இழைக்கிறான்...
பொறுத்தது போதும் 
என் தமிழினமே...

துட்டர்களின் கொட்டமடங்க
துள்ளியெழு... 
பித்தர்களின் பித்தமடங்க
பீறிட்டு எழு...
நம்மை நாமே காத்துக் கொள்ள
நரம்பதிர எழு..!

வம்புச் சண்டைக்குப் போகாதே
வந்த சண்டையை விடாதே...
அப்படி விட்டால்
நம் தமிழ்த்தாய்
ஊட்டி வளர்த்த வீரம் 
ஊனமாகிவிடும்...
உறைந்து போய்விடும்..!

அன்றங்கே தமிழனின்
தலை நிமிர்ந்திருந்தால்
இன்றிங்கே நம் தமிழனின்
தலை வாங்கப் பட்டிருக்குமா?
கண் கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரமா..?
பொறுக்கோம் இனி ஒரு கணம்..!

உயிருக்கு உயிர்...
உடலுக்கு உடல்...
ஒரு வெறியனையாவது
வீழ்த்திக் காட்டினால்தான்
சிங்கத்தின் கோபம்
சிறு நரிக்குத் தெரிய வரும்...
புலியின் கோபம்
புல்லர்களுக்குத் தெரியவரும்...

தரணியாண்ட தமிழனைக் காக்க
தமிழினமே ஒன்று படு...
தமிழர்களின் தன்மானத்தைக் காக்க
தமிழகமே எழுந்து விடு...
தமிழினத்தின் உயிர்களைக் காக்க
தமிழ் உறவுகளே
கிளர்ந்தெழு... சினந்தெழு..!

இனி ஒரு உயிர் போனாலும்
சிங்களப் படையினில்
பல உயிர் போக வைப்போம்...
உலகப் போர் மூண்டாலும் சரி
அந்த மூடர்களை முடக்கி வைப்போம்...
தமிழனை தலை நிமிர வைப்போம்..!

- அடங்கா கோபத்துடன்

மோகனன் (எ) மோ. கணேசன்

(சோழிங்க நல்லூர் சாலை சந்திப்பில், நாளை (19.02.2011) கணிப்பொறி வல்லுனர்களின் கூட்டமைப்பினரால், தமிழக மீனவர்கள் படுகொலையினை கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. அப்போரட்டத்தில் கலந்து கொள்ள நண்பர் திரு. க. ராமலிங்கம் அழைப்பு விடுத்திருந்தார். அப்போராட்டத்திற்காக எழுதப்பட்ட கவிதை இது..)

எங்கேயடி கற்றுக் கொண்டாய்..? - காதல் தோல்விக் கவிதை..!


குறும்புகள் தெறிக்கும்
குதுகல வார்த்தைகள்...
உனை சிலாகிக்க வைக்கும்
என் சில்மிஷங்கள்...
உன் மனதைத் திருடிய
என் எளிமைத் தனங்கள் என
என்னிடமிருந்து
எல்லாவற்றையும்
கற்றுக் கொண்டாய்..!
எனை ஏமாற்ற எங்கேயடி
கற்றுக் கொண்டாய்..?

நீதான் உலகமென இருந்தேன்..!
நீயோ உன் பெற்றோர் காட்டிய
உலகமே பெரிதென்று
எனை உதறிச் சென்று விட்டாய்..!
இல்லை... இல்லை...
எனைக் கொன்று சென்று விட்டாய்..!
என் வாழ்வில் கிடைத்த
மிகப் பெரிய இன்பமும் நீ...
மிகப் பெரிய துன்பமும் நீ..!

எனை நீ எளிதில் மறந்து விட்டாய்...
உன் மனதிலிருந்து எனை
எளிதில் மறைத்து விட்டாய்...
என்னால் அப்படி முடியவில்லையடி
உன்னுடைய ஒவ்வொரு நினைவுகளும்
என்னுள் மாறா ரணத்தை ஏற்படுத்துகிறது...
இது உனக்கு சாதாரணமாக இருக்கலாமடி
ஆனால் எனக்கோ இது சதா 'ரணம்'

இன்பத்தைப் பரிசளிப்பாய் என்றிருந்தேன்
மா ரணத்தை பரிசளிப்பாய் என
இந்த மதிகெட்டவனுக்கு புரியவில்லை
உன் நினைவுகள் என்னுள்
சாட்டையாய் இறங்குகிறது..!
அடித்த வலி தாங்கிக் கொள்வேன்..!
அடி மனதின் வலியை
எப்படித் தாங்க... எப்படித் தாங்க...?

காதலிக்கத் திரணி கொண்ட கன்னியரே
காளைகளை கரம் பிடிக்க மறுத்து
அவர்களின் சிரமறுப்பதேன்..?
காதலெனும் ஆயுதத்தால்
ஆணினத்தை வேரோடு
வீணழிப்பதேன்..?

பொல்லாதக் காதலால் வந்த  வலியினை
வெளியில் சொல்லவும் முடியவில்லை
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை
வாய்விட்டு அழவும் முடியவில்லை
அழாமல் இருக்கவும் முடியவில்லை...
ஆனால் என் மனம் எப்போதும்
அழுது கொண்டேதான் இருக்கிறது...

சூழ்நிலைக் கைதியாக இருக்கும்
பெண்ணுலகமே...
காதல் என்ற கதாயுதத்தால்
என் போன்ற காளைகளை
காயப்படுத்தாதீர்கள்...
அக்காயம்... மரணத்தின் நீட்சி வரை
நீண்டு கொண்டே இருக்கும்..!
நீண்டு கொண்டே இருக்கும்..!

---------------------------------------------------------------------------------------------------------
(மிக் ஆன்டோ என்ற நண்பருக்காக இக் கவிதையை எழுதினேன்... பல பெண்களால், காதலில் தோற்க்கடிக்கப் படும் ஆண்களின் குரல்களில் இதுவும் ஒரு குரல்...)
---------------------------------------------------------------------------------------------------------


Anonymous mic anto said...




Very supper...

en kathal tholviadainthu vittathu. atharku marunthaga ungal kavithai vendum. pls.........

best wish for ur love. it live more..!
15 February 2011 5:15 PM

Wednesday, February 16, 2011

எனை நீ அசத்துகிறாய்..!


'நீயறியாமல் என்னுள்
ஓரணுவும் அசையாது அன்பே'
என்றேன்..!
'என் அணுவே நீதானடா...
நான் உன்னால்தான் அசைகிறேன்..!'
என்கிறாய்..!
கதை சொல்லி உனை நான்
அசத்தலாம் என நினைத்தால்
கவிதை சொல்லி எனை நீ அசத்துகிறாய்..!
ம்ம்ம்... 'நீ பெண் கவிதை'
இல்லை இல்லை...
'நீ என் கவிதை' என்றால் சும்மாவா..?

Monday, February 14, 2011

கனவோடு விளையாட..! - காதலர் தின சிறப்புக் கவிதை


உயிரோடு உறவாட
ஒரு உறவு வேண்டுமே..?
கனவோடு விளையாட
ஒரு கவிதை போதுமே..?
அக்கவிதை நீயானால்
என் ஆயுள் நீளுமே..!
எனக்கான புது உலகம்
இங்கு புதிதாய் பூக்குமே..!
அவ்வுலகில் காதல்தான்
ஆட்சி அமைக்குமே..!

(இப்பூவுலகில் அன்பை சுமக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த மோகனனின்
இனிய
காதலர் தின வாழ்த்துக்கள்...
)

Saturday, February 5, 2011

அதிகாலைக் கனவில்..!


என் அதிகாலைக்
கனவில் வந்தவளே...
எனைக் காதல்
மழையில் நனைத்தவளே...
உன் இதழில்
கவிதை படித்ததினால்
என் இதழும்
சிவந்து போனதடி..!
நம் இதழின் இணைப்பே
இப்படியெனில்...
நாம் இணைந்து விட்டால்
இன்னும் எப்படியோ..?

Friday, February 4, 2011

உனைக் காண்பதற்கு முன்புவரை..!


காற்றும் நீருமின்றி
என்னால்
உயிர் வாழ இயலாது...
என்பதை உனைக்
காண்பதற்கு முன்புவரை
நினைத்திருந்தேன்...
உனை இன்று
நேரில் கண்ட பிறகு...
இவைகளோடு
உன்னையும் சேர்த்துக்
கொண்டுவிட்டேன்..!

Wednesday, February 2, 2011

இனிக்காமலிருக்குமா..!


வேலையற்று இருந்தவனுக்கு
இனிய வேலை ஒன்று
கொடுத்து விட்டாய்..!
பின்னே...
உன்னையே
சுற்றிச் சுற்றி வரும்
வேலை என்றால்
இனிக்காமலிருக்குமா..!

Tuesday, February 1, 2011

தீண்டலால் உயிர்ப்பிக்கும் வரை..!


நாம் ஒன்றாய்ச்
சேர்ந்திருக்கும்போது
இன்ப வானத்தில்
மிதந்து கிடப்பேன்..!
நீ எனை விட்டுப் பிரிந்து சென்றால்
இப்பூமியில் சுய நினைவின்றிச்
சவமாய்க் கிடப்பேன்..!
நீ மறுபடி வந்து
உன் தீண்டலால்
எனை உயிர்ப்பிக்கும் வரை..!