உடலினை இயந்திரமாக்கி...
உழைப்பினை உரமாக்கி...
உலகத்தை இயங்க வைக்கும்
உன்னத தோழனே...
உன்னுடைய நாளில்
உனை நான் வணங்குகிறேன்..!
உழைக்கும் வர்க்கம்
ஆட்டுமந்தைகளைப் போல்
இருப்பதால்தான்
‘மே’யில் வருகிறது
உழைப்பாளர் தினம்
என்றான் ஒரு கவிஞன்..!
உண்மை அதுவல்ல தோழா...
உழைப்பதில்
நீ ஒப்பற்ற மழை
‘மே’கம் போன்றவன் என்பதால்தான்
‘மே’ மாதத்தில் இத்தினம்
கொண்டாடப்படுகிறது..!
உலக வரைபடத்தை
உன் வியர்வைக் கோடுகளால்
உடலெங்கும் வரைந்த தோழனே...
உன் உழைப்பால்தான் உலகமே
அன்று வரைபடமானது...
வளமான பூமியானது..!
உழைத்துக் களைத்தறியா
விவசாயத் தோழனே...
உன்னுழைப்பால் உலகமே
பசியாறுகிறது...
உன்னுழைப்பால் உலகமே
ஆடை அணிகிறது...
நீ மட்டும் உழைப்பாளியல்ல தோழா
உன் குருதியில் இருக்கும்
ஒவ்வொரு வெள்ளை அணுவும் உழைப்பாளியே..!
அவ்வணு உனக்காக உழைக்க...
நீயோ உலகிற்காக உழைக்கிறாய்..!
நீ உழைக்காம்ல் போனால்
உலகமே துன்பத்தில் உழன்றுவிடும்...
உறைந்து போய் நின்று விடும்...
உன்னுழைப்பிற்கு பெயரளவில்
மரியாதை தருவதை விட
பொருளாதார அளவில் என்று
மரியாதை தரப்படுகிறதோ
அன்றுதான் உன் வர்க்கம் உயர்வடையும்..!
என்று உன் வர்க்கம் உயர்வடைகிறதோ
அன்றுதான் உலகில் சமத்துவம் மலரும்..!
(உலகில் ஏதேனும் ஒரு வகையில் உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளிகளுக்கும் அடியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்... பணிவான மே தின வாழ்த்துக்களும் உரித்ததாகட்டும்..!
என்றென்றும் அன்புடன்
உங்கள்
மோகனன்)