அரிசிலாற்றங்கரையில்
அலை மோதி விளையாடிற்றாம்...
உப்பலாற்றங்கரையில்
மழை மோதி விளையாடிற்றாம்...
அதில் வளர்ந்த நாணல்கள்
மகிழ்ச்சியில் ஆடிற்றாம்...
ஆற்றுப் படுகையின்மேல் தாழ்வாகப்
படுத்திருந்த மாமரம் மழை கண்டு
மந்தகாசப் புன்னகைப் புரிந்திற்றாம்..!
மந்திகள் கூட்டம் மாங்கனியுண்ட
மயக்கத்தில் ஆற்றுப்படுகையில்
குதித்து விளையாடிற்றாம்..!
அத்துனையும் இந்நாட்டில் நடந்ததென்றும்
மாதம் மும்மாரி பெய்ததென்றும்
சரித்திர ஏடுகளில் பதிக்கப்பட்டிருந்ததை
சாவகாசமாய்ப் படித்துக் கொண்டிருந்தேன்..!
அப்போது...
சட்டென்று மின்சாரம் இறந்து விட...
என்னுடலெங்கும் வியர்வைத்துளிகள்
உயிர் பெற்றெழ...
காற்று வேண்டி என்னறையின்
சன்னலைத் திறந்தேன்...
சென்னை எப்போதும் தன் பரபரப்பில்
ஆழ்ந்து கொண்டிருக்க...
ஆமையாய் ஆங்காங்கே வாகனங்கள்
ஊர்ந்து கொண்டிருக்க...
வாகனப் புகைகளெங்கும்
வாட்டமாய் வியாபித்திருக்க...
சுவாசிக்க சுத்தமான காற்று எங்கே வரும்...
பெட்ரோலைக் குடித்துக் குடித்து
உயிர்வாழும் இயந்திர ஒட்டகங்கள்
சாலையில் ஓடிக் கொண்டிருக்க...
சாலையெங்கும் வெப்பச்சலனம் விசிறியடிக்க...
சென்னையும் வெப்பக்காற்றில் மூச்சுத் திணற...
இன்று பெய்யும்.. நாளை பெய்யும் என்று
ஏக்கப் பார்வை பார்க்கும் விவசாயியைப் போல்
வானத்தைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும்
சென்னை மாந(க)ரகம்...
அதனோடு சேர்ந்தபடி நானும்...
மழையற்றுப் போனதால் இங்கே
தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாட...
தண்ணீர் லாரியைக் கண்டதும் மக்கள் கூட்டம்
தலைதெறிக்க ஓடி வர...
சென்னை மாநகரமல்ல
சென்னை மா பாலைவனம்...
என்ன ஊரடா இது என்று நினைத்தபடி
வெப்பத்தோடு வெப்பமாக
வெம்பிப் போனேன்...
மின்சாரம் உயிர் பெற்றழ...
சன்னலைச் சாத்தியபடி
மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன்
'அரிசிலாற்றங்கரையில்
அலை மோதி விளையாடிற்றாம்...
உப்பலாற்றங்கரையில்
மழை மோதி விளையாடிற்றாம்...'
------------------------------
('யாருக்கு நன்றி சொல்ல..!' என்ற தலைப்பிட்ட கவிதையை வாசித்த அன்பு நண்பர் அன்பு மதி நிறை செல்வன் பின்னூட்டத்தில் அவரிட்ட கருத்துக்களம் கீழே... அவரின் வயிற்றெரிச்சலைத் தீர்ப்பதற்க்காகவும்... அவரைப் போன்ற சென்னை வாசிகளின் வயிற்றெரிச்சலைத் தீர்ப்பதற்க்காகவும் இந்தக் கவிதை...)
//அய்யா!
ஏன் எங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்பு கின்றீர்கள்? மழையைக் கண்டு பல திங்கள் ஆகிவிட்டதே சென்னையில்... தெரியாத உங்களுக்கு?
சென்னை இப்போது பாலைவனமாக ஆகி வருகிறது..மக்களின் மன நிலை போல. இனி பாலைவனத்தைப் பற்றி கவிதை எழுதுங்கள்.
வாழ்த்துக்களுடன்,
அன்பு மதி நிறை செல்வன்,
20/10/2009.//