நம்பிக்கை அற்று இருப்பவனுக்கு
நம்பிக்கை கொடுப்பதும்
நம்பி 'கை' கொடுப்பதும் நட்பே..!
பசியால் கிடந்து துடிப்பவனுக்கு
அன்னை போல் அமுது கொடுப்பதும்
அன்பைக் கொடுப்பதும் நட்பே..!
தனக்கு சரி சமமான இடத்தை
சபையில் கொடுப்பதும்
சரித்திரத்தில் கொடுப்பதும் நட்பே..!
இக்கட்டான சூழலில் மதி தடுமாறும் போது
மதி மந்திரியாய் செயல்படுவதும்
மந்திராலோசனை சொல்வதும் நட்பே..!
உடன் பிறந்த உறவுகள் கைவிட்டாலும்
உரியவள் கை விட்டாலும்
என்றும் கைதாங்கி நிற்பதென் நட்பே..!
நம் வாழ்வில் திடீரென்று நடக்கின்ற
இன்பத்தில் இணைந்திருப்பதும்
துயரத்தில் துணை நிற்பதும் தூய நட்பே..!
பிரதிபலன் எதிர்பார்க்கும் உறவுகளில்
எதையும் எதிர்பார்க்காமலும்
எதையும் விட்டுத் தரும் உறவே நட்பு..!
சுயநலம் மிக்க உறவுகள் இடையே
நட்பின் நலம் கருதுவதும்
நலிந்தால் நல் உழைப்பைத் தருவதும் நட்பே..!
தம் பெற்றோர் மற்றும் உறவினரிடையே
நமை விட்டுக் கொடுக்காமலிருப்பதும்
நம் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருப்பதும் நட்பே..!
காதல், அன்பு, பாசம் ஆகிய மூன்றெழுத்து
மந்திரங்களின் மொத்த உருவமாக இருப்பதும்
மனத்துயர்களை நீக்குவதும் நட்பே..!
உயிரெடுக்கும் எமனே வரினும் அவனை எதிர் கொள்ள
என்னோடு தன்னிரு தோள் தட்டி நிற்பதும்
நான் துவளுகையில் தோள் தாங்கி நிற்பதும் நட்பே..!
(இன்னும் எத்தனையோ எந்நட்பில் இருக்கின்றன. இக்கவிதைப் படையலை என் அன்புக்குரிய நண்பர்கள் அனைவருக்கும், உலகத்திலுள்ள அத்தனை நண்பர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.
நட்பு மட்டும் என் வாழ்வில் இல்லையென்றால், என்றோ நான் வீழ்ந்திருப்பேன்... நான் வளர வேண்டும் என்று துடிக்கின்ற நட்புகளால்தான், நான் இங்கே துடிப்புடன் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.
இந்த 300-வது பதிவு வரை எனக்கு ஆதரவு தரும் என்னன்பு வாசக நண்பர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!
என்றென்றும் அன்புடன்
உங்கள் மோகனன்)
------------------------------------