தில்லி பாலியல்
சம்பவத்திற்கு பிறகுதான்
மக்களிடையே
மாநில அரசுகளிடையே
எத்தனை விழிப்புணர்வுகள்...
குற்றவாளிகளுக்கு
எத்தனை காவடி தூக்கல்கள்...
பெண்களின் மேல்தான்
எத்தனை வன்மொழிச் சாடல்கள்...
தினமும் அரங்கேறும்
வன்புணர்வுக் கொடூரங்கள்...
தலைநகரில்
தலைவிரித்தாடும்
வன்புணர் கொடூரங்கள்
பாரதத்தாயின்
மாண்பெனும் மார்பினை
அறுத்தெறிகின்றன....
தாய்மையைப் போற்றும் நாட்டில்
பெண்களின் பாதுகாப்பு
தலைதெறிக்கின்றன
கொள்ளையை மன்னிக்கலாம்
படுபாதகக் கொலையை?
வன்முறையை மன்னிக்கலாம்
பாலியல் வன்முறையை?
திருடர்களை மன்னிக்கலாம்
வன்புணர் கொடூரர்களை?
இவைகளையெல்லாம்
மன்னிக்கலாகுமா?
கொன்றொழிக்காமல் விட்டால்
அது தகுமா..?
காதலிக்க மறுத்தால்
ஆசிட் வீசு
காமத்திற்கிணைய மறுத்தால்
கொன்று வீசு
சிறுமியென்றும் பாராதே
பாட்டியென்றும் பாராதே
தேவையெனில் வன்புணர்வில்
எடுத்துக் கொள்...
எடுத்துக் கொண்ட பின் 'கொல்'
எனத் திரியும்
ஈனப்பிறவிகளுக்கு
இந்நாட்டில் இடம் கொடுக்கலாமா?
இல்லை மூன்று வேளை
உணவளித்து
சிறையிலிடலாமா?
மனித உரிமை அமைப்புகள்
இதற்கெல்லாம்
மவுனம் சாதிப்பதேன்..?
இவ்வுலகிலிருந்தே அழிக்கப்படவேண்டிய
ஈனப்பிறவிகளுக்கு
குரல் கொடுப்பதேன்...
அவர்'களை' எல்லாம்
களை எடுக்க வேண்டாமா?
மனிதாபிமானமற்ற
ஈனப்பன்றிகள் மீது
ஈட்டியைப் பாய்ச்ச வேண்டாமா?
நமைப் பெற்றவள் ஒரு பெண்
நமை பேணிக் காப்பவள் ஒரு பெண்
நம்மோடு துணையாய்
கடைசி வரை வருபவள் ஒரு பெண்
என பேதம் தெரியாத
நாய்களுக்கு எதற்கு சட்டப் பாதுகாப்பு
பெண்களைப் பாதுகாக்காமல்
பேடிகளைப் பாதுகாக்க
எதற்கு காவல் அமைப்பு...
குற்றம் நீருபிக்கப்பட்டால்
அவன் நாடாள்பவனே ஆயினும்
அப்பேடியை உடனே தூக்கு
மக்கள் மத்தியில் மாட்டிடு 'தூக்கு'
ஆசிட் வீசினால்
அந்நாய்களை ஆசிட் ஆலையில்
தூக்கி வீசு...
கண்ணுக்கு கண் வாங்கு
இல்லையேல் ஆட்சியை விட்டு நீங்கு
பெண்ணியம் வாழ்ந்திட வேண்டுமெனில்
ஆணினம் மாறிட வேண்டும்
பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில்
கடும் சட்டங்கள் தோன்றிட வேண்டும்
இவைகள் இன்னும்
நம் புத்தியில் ஏறா விட்டால்
மீண்டும் மீண்டும்
முளைத்திடும்
தில்லியில் பாலியல் பலாத்காரம்...
சூரியநெல்லி விவகாரம்
ஆசிட் வீச்சில் உயிர் போகும்...
(நாளிதழ்களைத் திறந்தால், நாடெங்கும் நிகழும் வன்புணர்ச்சிகள், ஆசிட் வீச்சு கொலைகள், பெண்ணியத்திற்கெதிரான கொடுமைகள் ... என என் மனதை அரித்துக் கொண்டே இருந்தன. இதனை வாசகர் ரமேஷ் அவர்களும் கோடிட்டுக் காட்டிக் கொண்டே இருந்தார்...
இக்கவிதை பலகொடூரங்களால் காற்றில் கரைந்து போன பெண்ணிய தீபங்களுக்கு சமர்ப்பணம்)