உன் கார்மேகக் கூந்தலில்
பூச்சூடுவதற்க்காக
நான் வாங்கிய
ரோஜாமலரிடம் சொன்னேன்...
‘மெல்லிய மலரே...
உன்னை விட மென்மையானவளிடம்
உன்னைச் சூடக் கொடுக்கிறேன்...
அவள் கார் மேகக் கூந்தலில்
அழுத்தமாய் உட்காராதே
அவளுக்கு காயம் பட்டுவிடும்...’ என்று...
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது
'அவளைப் பார்த்ததும்
அழகாய் ஒரு புன்னகையை
வீசி விட்டு...
அப் பெண்மையிடம்
என் காதலை மென்மையாய்ச் சொல்...' என்றேன்
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!
'என்னவளின் மனசு போல
உன் நிறமிருக்கிறது
என்று பெருமை கொள்ளாதே..?
என்னவளின் மனது...
வெண்ணிலவை விட
வெண்மையானது...
வெண் பனியை விடத்
தூய்மையானது...' என்றேன்..!
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது..!
'உனக்கு வாசமில்லை
என்று வருந்தாதே...
அவளுக்கு வாசமுண்டு...
அவள் வாசத்தை
நீ சுவாசித்தால்...
நீயும் மணக்கும் மலராவாய்...
மல்லிகைப் பூவாவாய்...
நீ மணந்தால் மட்டும் போதாது
அவள் வாசத்தை வாங்கி
என்னிடம் அனுப்பு
நானும் அதை சுவாசிக்க வேண்டும்...' என்றேன்!
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...
அப்படியே செய்கிறேன்’ என்றது..!
'என்னன்பையும்
என் காதலையும்
அவளிடம் அன்பாய்ச் சொல்...
அவள் நினைவில்தான் வாழுகிறேன்...
நிஜத்தில் அவளின்று வாடுகிறேன்'
என்றும் சொல்லென்றேன்..!
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!
சொல்லி விடுமென்று காத்திருந்தேன்..?
அந்த மலரோ...
உன் கார்மேகக் கூந்தலில்
ஏறிய மயக்கத்தில்
அத்தனையும் மறந்துவிட்டு
அசடு வழிந்தபடி சிரித்தது..!
அதுவும் என்னைப் போலவே..!
(இது என்னுடைய நூறாவது பதிவு என்பதில் எனக்கு பெரு மகிழச்சி, இந்த வலைக் குடிலுக்கு ஆதரவு தந்து வரும் எனது அன்பு இணைய வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்...
இக்கவிதைகளை எனக்குள் ஊற்றெடுக்கச் செய்த தாய்த்தமிழுக்கும், என்னவளுக்கும் அன்பு கலந்த முத்தங்களை பரிசளிக்கிறேன்...
தொடரும் உங்கள் ஆதரவுக்கு என்றும் எனது அன்பு கலந்த நன்றிகள்..!
என்றென்றும் அன்பு'டன்'
உங்கள்
மோகனன்)