ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, October 12, 2011

உனை வெல்ல..!


உன்னழகை வெல்ல வேண்டி
கவிச் சொல்லெடுத்து வந்தேன்...
நீயோ இமைகளெனும்
வில்லெடுத்தாய்...
நானும் அதற்கிணையாய்
வில்லேந்தி வந்தால்
நீயோ விழிகளெனும்
வேலேந்தி வந்தாய்...
நானும் அதற்கிணையாய்
வேலேந்தி வந்தால்
நீயோ காதலேந்தி வருகிறாய்...
உனை வெல்ல மோதலோடு வந்த நான்
உன் காதலால் தோற்றபடி
உன்னிடம் காதல் கைதியானேன்!




Friday, October 7, 2011

கலியுகத்து அர்ஜுனனோ?



அந்தி மாலை நேரத்தில்...
ஆராவார சாலையில்...
இரு சக்கரத் தேரிலேறி
எங்களது வீதியிலே
நீ வீதி உலா வருகையில்...
உன் விழிகளெனும் வில்லேந்தி
ஓரப்பார்வை எனும் அம்பால்
என் மனதிற்குள் போர்தொடுத்தவனே...
நீதான் என் கலியுகத்து அர்ஜுனனோ?




Saturday, October 1, 2011

வாயில் பூத்த பூ..!


என் மகளுக்கு இன்று
பிறந்தநாள்...
தாயும் சேயும் வெளியே
சென்றிருக்க
என் மகளின் புகைப்படைத்தை
பார்த்துக் கொண்டிருந்தேன்...
என் மகளின் கடைசி பிறந்த
நாளன்று எடுத்த புகைப்படம் அது..!

அழகாய் என் மகள்
சிரித்திருக்க
அவள் தலை மேல்
சூட்டிய மலரும் சிரித்திருந்தது
அதனழகைப் பார்த்து
நானும் சிரிக்கலானேன்...

அந்நேரம் பார்த்து
என்னவளும் என் மகளும்
உள்ளே நுழைய...
என் சிரிப்பை கண்டு
என்னருகே வந்த
என்னில்லாள்
சிரித்த காரணம் வினவினாள்...

சிரித்த காரணம் சொன்னேன்
அதுவே சிலாகிக்கும்
கவிதையாய் ஆனது என்றாள்.

நம் மகள் தலையில் சூடிய பூ
நம் வீட்டு செடியில் பூத்த பூ..!
என் மகளின் புன்னகையோ
அவள் வாயில் பூத்த பூ...
என் மகளோ குழவியாய் இருக்கையில்
உன் வயிற்றில் பூத்த பூ...
அதைக் கண்டே என் இதழில்
புன்னகை பூத்தது என்றேன்!




Monday, September 12, 2011

நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்..!



நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்
நேற்று வரை
தங்கத்தின் விலையை மட்டுமே
கவனித்துக் கொண்டிருந்தவள்
இன்று பெட்ரோல் விலையை
மட்டும் கவனிக்கிறேன்..!
நேற்று வரை 
ஆடை விளம்பரங்களை மட்டுமே
ரசித்துக் கொண்டிருந்தவள்
இன்று இருசக்கர வாகன
விளம்பரங்களை மட்டும் ரசிக்கிறேன்..!
நேற்று வரை...
விமானத்தில் மட்டுமே பயணம்
செய்ய விரும்பியவள்...
இன்று உன் இரு சக்கர வாகனத்தில்
மட்டும் பயணம் செய்ய விரும்புகிறேன்...
என்னுள் ஏன் இத்தனை மாற்றங்கள்..
உன் காந்தக் கரம் பட்ட வாகனம்
என் இரும்பு இதயத்தை ஈர்த்ததாலா..?
இல்லை.. நீ எனக்கே எனக்கென
வாங்கிய இரு சக்கர
இரும்புப் பறவையாலா..?




Friday, September 9, 2011

ஆற்றலுடன் பிறந்தவனே..! - பிறந்தநாள் கவிதை


ஆற்றலுடன் பிறந்தவனே ஆதித்தா...
இன்றோடு நீ பிறந்து ஆண்டு ஆறு..!
ஊர் போற்றலுடன் வாழுகின்ற ஆதித்தா...
பேர் புகழோடு வாழ வேண்டும் ஆண்டு நூறு!

எமக்கு முதல் மகவாய் பிறந்ததினால்
என் வாழ்விற்கு அர்த்தம் தந்'தாய்'..!
உன் அன்பான அன்னையில் வாழ்விற்கு
தென்றல் போல் வசந்தம் தந்'தாய்'..!

உனக்கு துணையாய் அகிலத்தை கொடுத்தோம்
எமக்கு துணையாய் பொறுப்பைக் கொடுத்'தாய்'
உனக்கு உயிரும் உடலும் நாங்கள் தந்தோம்..!
எம்மிருவருக்கும் நீயே தந்தையும் தாயுமானாய்..!

இந்நாள் போல் எந்நாளும் உனக்கு மகிழ்ச்சி பொங்க
உலகின் குன்றாத கல்விச் செல்வம் உன்னோடு தங்க
உன் வளர்ச்சியில் எங்களுக்கு பெருமிதம் பொங்க...
நீ...  பன்நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவே..!




Tuesday, August 16, 2011

கட்டற்ற காதலுக்குள்..!


கட்டற்ற காதலுக்குள்
கட்டுப்பாடுகள்
விதித்துக் கொண்டோம்!
கண்ணியமாய் நடந்து கொள்ள
உணர்வுகளைப்
புதைத்துக்கொண்டோம்..!
உன் உயிரினை
நான் தொடும் போதும்
என் உயிரினை
நீ தொடும் போதும்
எட்ட நின்று
ஏக்கப் பெருமூச்சு கண்டோம்..!
காலம் தாழ்த்தி
சந்தித்தது ஏன் என்று
வினவியபடி...
நீ விதியைக் குறை சொன்னாய்
நான் மதியைக் குறை சொன்னேன்...
காலம் நமைப் பார்த்து சிரித்தது
அது நான் செய்த சதியென்று..!


------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 8 )