ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, June 4, 2014

ஆறுபோல் அறிவைப் பெருக்கி! - பிறந்தநாள் வாழ்த்து!




ஆறு -
இந்த சொல்லுக்கும்
எண்ணிக்கைக்கும்தான்
இப்பூவுலகில்
எத்துனைச் சிறப்பு!
எத்துனை செழிப்பு!

புவிதனில்
மனித நாகரிகத்தை
முதன் முதலில்
வளர்த்து விட்டது
ஆறு!

உலகில் உள்ள
உயிரினங்களில்
மனித இனத்துக்கு
உள்ள அறிவு
ஆறு!

உணவின் சுவைகளில்
ஒன்றல்ல இரண்டல்ல
தமிழன் பகுத்து
வைத்த சுவைகள்
ஆறு!

இப்படி
இன்று நான் ஆறை
ஆராயக் காரணம் உண்டு
என் இளைய மகவே
இன்றோடு உன் அகவை
ஆறு!

ஆறுபோல்
அறிவைப் பெருக்கி
அதன் வேகத்தைப் போல்
பொருளையீட்டி
புவியிலுள்ளோரெல்லாம்
உய்யும்படி வாழ்கவென் அகிலா!


(எனது இளைய மகனுக்கு ஆறாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )




Monday, May 19, 2014

சராசரிக் குடிமகனாய்...


அந்தரத்தில் பறக்கும் அரிசி விலை...
கண்ணாமூச்சி காட்டும் காய்கறி விலை...
ராக்கெட்டாய் சீறும்...
பெட்ரோல் டீசல் விலை...
பாலுக்கு நிகராய் தண்ணீரின் விலை...
அலைமோதும் கூட்டத்தால்
எப்போதும் நிரம்பி வழியும்
நியாய விலைக் கடை...
என இவை அத்தனையும்
சகித்துக் கொண்டு
வறுமைக்கும் வாழ்வுக்கும் இடையே
போராட்டம் நடத்தும்
சராசரிக் குடிமகனாய் இருந்து தொலைப்பதை விட
முற்றிலுமாய் தொலைந்து போவதே
மேலென்று தோன்றுகிறது
குடும்பம் எனும் பந்தம் மட்டும் இல்லையென்றால்....

(அட போங்கடாங்க நீங்களும் உங்க மக்களாட்சியும்....)

***************

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இலவசப் புத்தக வங்கிகள்!





Monday, April 14, 2014

அன்பும் அறனும்..! - திருமண வாழ்த்து கவிதை


அன்பும் அறனும் உடையதுதான் இல்வாழ்க்கை
     என்றுணர்ந்து இன்று நீ இவ்வாழ்வில் இணைகின்றாய்!
ருசிகரமானதா? பசிகரமானதா இந்த இல்வாழ்க்கை
    என்பதை சோதித்து சாதனை படைக்கப் போகின்றாய்!
ணானல் போல் வளைந்து கொடுத்து வாழப் பழகி
    பரணியுடன் நீ உன் தரணியை ஆளப்போகின்றாய்!
ச்சமூகத்தில் இன்று மூதல் நீயும் ஓர் அங்கமாகி
    அனைவருக்கும் நிகரான குடும்பத் தலைவனாகின்றாய்!
சந்ததி தழைக்க வேண்டி சந்தோஷம் பெருக வேண்டி
   இவ்வினிய தமிழ்ப் புத்தாண்டில், தாலி கட்டப் போகின்றாய்!
லட்சலட்சமாய் கொட்டிக் கொடுத்தாலும் கொடுக்க முடியா
   சந்தோஷ நல் வாழ்க்கைதனை இனி நீ வாழப் போகின்றாய்!
ம்மாநிலத்தில் என்றென்றும் மனமொத்த தம்பதிகளாய்
   வாழையடி வாழையாய் வாழ்கவென்று வாழ்த்துகின்றேன்!


பனி படர்ந்த ரோஜாவின் மென்மை குணம் கொண்டு
  பிறந்த குலத்தின் பெருமையைப் போற்றி, வளரும் குலத்தின்
ரத்தினமாய் என்றும் நீ ஜொலிக்க வேண்டும் பெண்மணியே!
  இல்வாழ்வில் விட்டுக் கொடுத்து வாழப்பழகு கண்மணியே..!
ணிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களும்
   எங்களோடிணைந்து வாழ்த்துகிறது நீவீர் வாழ்க வாழ்கவே!

மணமகன்: து. அருணாச்சலம்
மணமகள்: நா. பரணி

மணநாள்: 14.04.2014
மண இடம்: இளவரசி திருமண மண்டபம், சீலப்பந்தல், திருவண்ணாமலை

(இன்று எனது அலுவலக நண்பருக்கு திருமணம். அவருக்காக நானெழுதிய திருமண வாழ்த்துக் கவிதை இது..! கவிதையின் முதல் வரிகளிலுள்ள தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... இல்வாழ்வில் இணையவிருக்கும் இதயங்களின் இயற்பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?

உங்களனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!)




Monday, April 7, 2014

சிறை பிடிக்க முடியுமா?


மூச்சுக்காற்றை
சிறை பிடிக்க முடியுமா
என்று என்னிடம்
சவால் விட்டாள்!
எப்படி முயன்றும்
"என்னால் முடியவில்லை அன்பே"
என்று தோல்வி சிறையில்
அடைபட்டுக் கொண்டேன்!
சிரித்துக் கொண்டே
அவளுடைய மூச்சுக்காற்றை
காற்றடைக்கும் தலையணையில்
சிறை பிடித்தாள்
என் செல்ல மகள்!




Thursday, March 13, 2014

SMS காதல்


என் குறுஞ்செய்தியைப்
பார்த்ததும்
உன் குவலய முகம்
குதுகலமாய்ப்
பூக்கிறது
என்பதாலேயே
அடிக்கடி உனக்கு
குறுஞ்செய்தி அனுப்புகிறேன்...
செய்தி ஏதும்
இல்லை என்றாலும் கூட..!




Tuesday, March 11, 2014

வாய்கூசாமல் அம்மாவென்று..! - அரசியல் கவிதை


எங்கள் அம்மா
புரட்சித்தலைவி அம்மா
தாயுள்ளம் கொண்ட அம்மா
என்றெல்லாம் பிதற்றும்
ரத்தத்தின் ரத்தங்களே
எந்த அம்மாவாவது
தனது மக்கள்
குடித்தழிந்து சாகட்டும்
என்று நினைப்பாளா?
டாஸ்மாக்கின் விற்பனைக்கு
இலக்கு நிர்ணயிப்பாளா..?
அப்படி நினைப்பவளை
வாய்கூசாமல் அம்மாவென்று
அழைக்கும் உங்களை
என்னென்று சொல்வது
எதனால் அடிப்பது?
மக்களுக்கு
போதையை ஊட்டி
புத்தியை மழுங்கடித்து
அதில் கிடைக்கும் வருவாயினை
வைத்து நடத்தும் ஈனப்பிழைப்பை
என்று ஒழிக்கிறாளோ
அப்போதுதான் அவள் உண்மையான அம்மா
அதுவரை அவள் வெறும் சும்மா?

(நன்றி: கார்டூனிஸ்ட் பாலா)