ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, March 22, 2018

வான் மழை தந்த தண்ணீரே! - சிறுவர் பாடல்!வான் மழை தந்த தண்ணீரே!
வராமல் போனால் கண்ணீரே!
ஊனைக் காப்பது தண்ணீரே
உடலில் ஓடுது செந்நீரே!

உயிரைத் தருவது தண்ணீரே!
உடலில் எழுபது சதம் நீரே!
பயிரைக் காப்பது தண்ணீரே!
பசியைப் போக்குது உன் நீரே!

குடிக்கத் தேவை தண்ணீரே!
குறுநாவில் ஊறுது உமிழ்நீரே!
குளிக்கத் தேவை தண்ணீரே!
கிராமத்திலிருக்கு குளம் நீரே!

சுனையில் பிறக்கும் தண்ணீரே
அருவியாய் விழுவது உன் நீரே!
ஆறாய் ஓடும் தண்ணீரே!
கடலில் கலப்பது உன் நீரே!

குடிநீரை தினமும் சேமிப்பீரே
உயிர் நீர் என்று உணர்வீரே!
நீரின்றி அமையா உலகென்ற
வள்ளுவன் சொல்லைக் காப்பீரே!

Wednesday, March 21, 2018

எங்கும் இல்லை! - உலக கவிதை தின சிறப்புக் கவிதை!


உலகில் அன்னையைப் போலொரு
அணைக்கும் கவிதை எங்கும் இல்லை!
எளிதில் தந்தையைப் போலொரு
வணங்கும் கவிதை எங்கும் இல்லை!

அழுகையில் அக்காவினைப் போலொரு
துடைக்கும் கவிதை எங்கும் இல்லை!
விழுகையில் அண்ணனைப் போலொரு
தாங்கும் கவிதை எங்கும் இல்லை!

அறிவினில் ஆசிரியனைப் போலொரு
வாள்தரும் கவிதை எங்கும் இல்லை!
உறவினில் நண்பனைப் போலொரு
தோள்தரும் கவிதை எங்கும் இல்லை!

அழகில் காதலியைப் போலொரு
மயக்கும் கவிதை எங்கும் இல்லை!
பொழுதில் மனைவியைப் போலொரு
முயக்கும் கவிதை எங்கும் இல்லை!

கொஞ்சும் மழலையைப் போலொரு
சுவைதரு கவிதை எங்கும் இல்லை!
கொஞ்சும் தமிழினைப் போலொரு
மொழிதரு கவிதை எங்கும் இல்லை!

விஞ்சும் உறவுகளைப் போலொரு
வில்லங்கக் கவிதை எங்கும் இல்லை!
அஞ்சும் மரணத்தைப் போலொரு
ஆழ்துயில் கவிதை எங்கும் இல்லை!

(உலக கவிதைகள் தினத்திற்காக இன்று காலை அவசர அவரசமாகக் கிறுக்கியது)
Wednesday, December 27, 2017

அறம் செய்ய விரும்புவோம் புத்தகம் இப்போது விற்பனையில்...


அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு...

நான் அண்மையில் ‘அறம் செய்ய விரும்புவோம்’ - நாடக வடிவில் ஆத்திசூடி கதைகள் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறேன்.

இப்புத்தகத்தை பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ட்ரன் வெளியிட்டிருக்கிறது.

சிறார்கள், பள்ளி மாணவர்களுக்கு ஆத்திசூடியை, தற்கால உதாரணங்களோடு, நாடகமாக எழுதி இருக்கிறேன். அதாவது, அறம் செய விரும்பு முதல் அஃகஞ் சுருக்கேல் வரை 13 செய்யுள்களுக்கு 13 காட்சிகளை நாடகமாக எழுதி இருக்கிறேன்.

வகுப்பறைகளில், வீடுகளில், பொது விழாக்களில் என நாடகமாக இதை நடித்துக்காட்டலாம். இதன் மூலம் குழந்தைகளின் தனித்தன்மை, நடிப்புத் திறமையும் வெளிப்படும். அமேசானின் கிண்டிலிலும் படிக்கக் கிடைக்கிறது.


மொத்தம் 64 பக்கங்கள். விலை ரூ. 50.

ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்: https://thamizhbooks.com/aram-seiyya-virumbuvom.html

சென்னையில் உள்ள பாரதி புத்தகாலயத்திலும் வாங்கிக்கொள்ளலாம்.

அடுத்ததாக, சிறுவர்களுக்கான பாடல்களை எழுதி இருக்கிறேன். இது ‘ஓடி வா.. ஓடி வா... சின்னக்குட்டி’ என்ற தலைப்பில் வெளிவர இருக்கிறது.


Thursday, September 21, 2017

அறம் செய்ய விரும்புவோம்! - நாடக வடிவில் ஆத்திசூடி கதைகள்!

வணக்கம் வலைப்பூ நண்பர்களே...

ஆத்திசூடியை நாடக வடிவில் கதையாக எழுதி இருக்கிறேன். இதை புத்தகமாக வெளியிடுகிறது பாரதி புத்தகாலயம். விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது இப்புத்தகம்... உங்களின் அன்பும் ஆதரவும் இப்புத்தகத்திற்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

பள்ளி செல்லும் சிறுவர்களுக்காகவும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் குடும்பங்களின் குழந்தைகளுக்காகவும் இந்த நாடக நூல் பயன்படும்....


Thursday, August 10, 2017

சங்கிலிப் பறிப்பு

’ஹெல்மெட் அணிந்த
கொள்ளையர்கள்
சாலையில் சென்ற
பெண்களிடம்
சங்கிலிப் பறிப்பு’ செய்தியை
பெட்டிக்கடையில்

பல்லிளித்துக் கொண்டிருந்த
வால் போஸ்டரில்
பார்த்துவிட்டு
பைக்கில்
வந்துகொண்டிருக்கையில்
போக்குவரத்துக்
காவல் துறை
வழிமறித்துக் கேட்டது!
“நீங்கள் ஏன்
ஹெல்மெட் போடவில்லை?”
Saturday, July 29, 2017

பிறருக்காக வாழ்! - செல்பி கவிதை


முகநூலில்
முகமறியா நண்பர்களுக்கு
முகம் காட்ட வேண்டும்
என்பதற்காகவும்...
வாட்ஸ் அப்பில்
மணிக்கொரு முறை
புரொபைலை
மாற்ற வேண்டும்
என்பதற்காகவும்
தினந்தோறும்
உயிர்ப்பிக்கப்படுகின்றன
திடீர் செல்பிக்கள்!
வாழ்க இதிலேனும்
'பிறருக்காக வாழ்'கின்ற
தத்துவம்!