ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, December 7, 2016

தலைநிமிர்ந்த எனது பேனா!

 
உங்கள் ஆட்சியில்
ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள்
நாட்டை சுரண்டிய அமைச்சுகள்
டாஸ்மாக் விற்பனைகள்
என பல்வேறு
விஷயங்களுக்காக
உங்களுக்கு எதிராய்
தலைநிமிர்ந்து
எழுதிய எனது பேனா
நீங்கள் இம்மண்ணிலிருந்து
மறைந்து போன போது
தலைகுனிந்து
கண்ணீர் விட்டதை
பகிரங்கமாய் ஒப்புக்கொள்கிறேன்!
நீங்கள் கட்டிக்காத்த தமிழகம்
இனி என்னாகுமோ
என்ற கவலையில்
என் பேனா
விழிப்போடு இருக்கிறது!
வல்லூறுகளும்
பிணம் தின்னி கழுகுகளும்
என் தமிழ்நாட்டை
கூறுபோட்டிடுமோ
என்ற கவலையில்
என் பேனாவை
முன்னை விட முனைப்போடு
கூர்தீட்டிக் கொள்கிறேன்!
சத்தியத்தின் பக்கத்தில்
சத்தியமாய்
நீங்கள் இருப்பீர்
என்ற நம்பிக்கையில்..!
Tuesday, December 6, 2016

இரும்புத் தாரகையே! - ஜெயலலிதாவிற்கு கவிதாஞ்சலி
சிந்தனை, செயல், வேகம் என அனைத்திலும்
பெண் சிங்கமென செயல்பட்ட மனமே எழுவாயோ?

வந்தனை பாடும் கூட்டத்தை எல்லாம் பந்தாடி
நிந்தனை கூட்டத்தை துரத்தியடித்த மனமே எழுவாயோ?

உன் குரல் கேட்டு ஒடுங்கிய சிறு நரிகளெல்லாம்
இன்று கூடி நின்று வேடிக்கை பார்க்கிறதே எழுவாயோ?

காவிரி, பெண் குழந்தை பாதுகாப்பு, இட ஒதுக்கீடு
என நீ செய்த நன்மைகள் ஒன்றல்ல இரண்டல்ல எனினும்

தமிழகம் நீ இருந்த போதே தள்ளாடிற்று – நீயின்றி
எப்படித் தள்ளாடுமோ என கவலையுறுறேன் குடிமகனாய்!

உன் மேல் எனக்கு ஆயிரம் வருத்தமிருப்பினும் - பெண்
இனத்தின் வழிகாட்டி என்பதில் பெருமை கொள்கிறேன்!

நிலவு முகம் கொண்ட உனைச் சுற்றி இருள் சூழுதே!
உலரும் வங்கக்கரை மண்ணுளுன் பொன்னுடல் மறையுதே!

துரோகங்களைத் தாங்கி துயரங்களைத் தாங்கி
தமிழகத்தினை வழிநடத்திய இரும்புத் தாரகையே

உண்மையில் நீ வானத்துத் தாரகையாகி விட்டாய் - உன்
துதி பாடி, கறை படிந்த கரங்கள் இனி இருளட்டும்

நீ கொண்டு வந்த நல்ல திட்டங்கள் உன் பேர் சொல்லட்டும்!
உன்னால் புனர்வாழ்வு பெற்ற ஏழைகள் உன் புகழ் பாடட்டும்!

தமிழகத்தின் தனிப்பெரும் இரும்பு பெண்மணியே
தாயே நின் ஆன்மா இயற்கையோடு இணையட்டும்!
Tuesday, November 29, 2016

உங்களைத் தின்பதற்கு..?


மழை பொய்த்ததால்
எங்கு பார்த்தாலும்
பெரும் வறட்சி!
நகரத்தில் மூச்சுவிடாமல்
இயங்கிக் கொண்டிருக்கின்றன
குளிரூட்டிகள்!
கிராமத்தில் நீரின்றி
வாய்பிளந்து கிடக்கிறது
நெடிய வயல்வெளி!
கடும் பயணத்தில்
கண் சிமிட்டி மறைகிறது
கானல் நீர்!
வெறிச்சோடிக் கிடக்கின்றன
வெள்ளாமை செய்த
பெருவயல்கள்!
பயிர்கள் தலை கருக
விவசாயிகள் தற்கொலைகளால்
விவசாயம் தூக்கிலேறுகிறது!
பண முதலைகளின்
வராக்கடன்களை
வாஞ்சையாய் நீக்கிய வங்கிகள்
பஞ்சத்திற்கு கடன்வாங்கி
நிலம் உழுதவனை
பழி தீர்த்துக் கொள்கின்றன!

சுற்றுச் சூழலை சீரழிக்கும்
தொழிற்சாலைகளுக்கு
ரத்தினக் கம்பளம் விரிக்கும் ஓநாய்களே!
ரியல் எஸ்டேட் முதலைகளின்
பின்னால் வாலாட்டித்
திரியும் வங்கிகளே..!
விவசாயத்தை மறந்து
தொழிற் புரட்சியில் வீழும்
கனவான்களே..?
சீனாவின் பிளாஸ்டிக் அரிசியை
நீங்கள் தின்னும் காலம்
வெகு விரைவில் இல்லை!
கறுப்பு பணத்தை மீட்கும் அக்கறையை
கண்ணீல் நீரோடும்
கழுத்தில் சுருக்குக் கயிறோடு இருக்கும்
விவசாயிகள் மீதும் காட்டுங்கள்!
எதிர்காலத்தில்
நீங்கள் தின்பதற்கு
அரிசி இருக்கிறதோ இல்லையோ
உங்களைத் தின்பதற்கு
இந்த மண் கூட இருக்காது
சிமெண்ட் தரைகளாகத்தான் இருக்கும்!
Monday, November 28, 2016

புரட்சி தீபம் பிதெல் காஸ்த்ரோ - கவிதாஞ்சலி!


சர்வாதிகாரத்திற்கு சாட்டையடி இந்த பிதெல்
சாகும் வரையிலும் சாமுராயாய் வாழ்ந்த பிதெல்
மக்களதிகாரத்தின் மனசாட்சியாய் நின்ற பிதெல்
மானுட குலமே தாய்நாடு என்ற பிதெல்
புரட்சி வெடிப்பில் பீரங்கி என் பிதெல்
பூகம்பமே ஆயினும் தாங்கிடும் பிதெல்
சுதேசிய பொருளாதாரத்தின் சூத்திரதாரி பிதெல்
சுதந்திரமாய் கியூபாவை சுவாசிக்வைத்த பிதெல்
கியூப மக்களின் இதயத்துடிப்பு பிதெல்
கிடைத்தவற்றை அனைவருக்கும் பங்கிட்ட பிதெல்
கம்யூனிஸத்தின் ஆலமரம் பிதெல்
கடைக்கோடி குடிமகனுக்கும் கல்வி கற்பித்த பிதெல்
மக்களை மக்களாய் வழிநடத்திய பிதெல்
மனிதநேயத்தோடு மருத்துவத்தை பறைசாற்றிய பிதெல்
சுயம்புவாய் எழுந்து நின்ற பிதெல்
சுயமரியாதைச் சூரியன் இந்த பிதெல்
முதலாளித்துவ நரிகளின் சிம்மசொப்பனம் பிதெல்
முறைகேடாய் பணம் சேர்க்காத பிதல்
புரட்சிக்கே நாயகனான சே கெவாராவின் தோழமை பிதெல்
புரட்சி தீபமாய் வாழ்ந்து வந்த பிதெல்
வரலாற்றை மாற்றிக் காட்டிய பிதெல்
வரலாறாய் மாறிவிட்ட பிதெல்
நீ மண்ணை விட்டு மறைந்தாலும் பிதெல்
மனிதகுலம் வாழும் வரை வாழ்ந்திருப்பீர் பிதெல்!


(மாபெரும் புரட்சியாளரும், கியூபாவின் பிதாமகரும், எனது பேரண்மை மிகு சே கெவாரா*வின் இணையருமான பிதெல் காஸ்த்ரோ*வுக்கும் எந்த எளியவனின் கவியாஞ்சலி… புரட்சி தீபம் ஒன்று அணைந்துவிட்டது

ஸ்பானிய மொழி உச்சரிப்பில் இதுவே சரியானதாகும். இப்படித்தான் இம்மாவீரர்களின் பெயர் அவர்கள் நாட்டில் உச்சரிக்கப்பட்டு வருகிறது
)
Friday, September 9, 2016

விடிவெள்ளியாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை!


உலக உருண்டையை
வயிற்றுக்குள் வைத்திருக்கும்
பிரபஞ்சத்தைப் போல…
எனது உலகத்தையே
வயிற்றுக்குள் வைத்திருந்தாள்
உன் அன்னை!
திங்கள் நிகர் உன் அன்னை
திங்களாய் உனை சுமந்து
விடிவெள்ளியாய் உனை பெற்றெடுத்தாள்!
இன்னும் நினைவிலிருக்கிறது
அந்த வெள்ளிக்கிழமை
நீ கொடுத்த முதல் மழலைக் குரலால்!
அடங்காத காளை, கோவக்காரன், முரடன்,
திமிர் பிடித்தவன் என பட்டம் பெற்ற எனக்கு
அப்பா எனும் பட்டம் கொடுத்த மழலை!
கன்னியாய் இருந்தவளுக்கு
அம்மா எனும் ஒப்பற்ற பதவி கொடுத்த
எங்களின் முதல் இளவரசன்!
இருண்டு கிடந்த எம் வாழ்வில்
சூரியனாய் உதித்ததால்
ஆதித்தனென்று பெயர் சூட்டினோம்!
கல்வி, கேள்வி, கலைகளில்
சிறந்து விளங்கிய ஆதித்த கரிகாலனைப்போல
ஆதவனாய் வரவே அப்பெயர் தீட்டினோம்!
என்றும் எங்கள் ஆதவனே
மோகனன் வீட்டு இளவரசனே
தாய்க்குத் தலை மகனே!
இன்றோடு நீ பிறந்து
ஆயிற்று ஆண்டுகள் பதினொன்று
வாழ்க ஆண்டுகள் பலநூறு!
எல்லா கலைகளும் கைவரப் பெற
தந்தையை விஞ்சும் தனையனாக மலர

இயற்கையோடு இணைந்து வாழ்த்துகிறேன் மகனே!

(இன்று 11-வது பிறந்தநாள் காணும் எனது முதல் மகன் ஆதித்தனுக்காய் இந்த கவிதை..!)
Monday, August 8, 2016

குப்பை வண்டி!

ஊரைச் சுத்தப்படுத்துகிறேன்
எனும் போர்வையில்
தெருக்களை சுத்தப்படுத்தும்
மாநகராட்சி குப்பை வண்டி
குப்பைத்தொட்டியில் இருந்து
குப்பைககளை மொத்தமாய்
அள்ளிக் கொண்டு
தெரு முழுக்க இறைத்துக் கொண்டு
போவது போல
இன்றைய அரசியல் கட்சிகள்
தமிழ்நாட்டை
குப்பையாக்கிக் கொண்டிருக்கின்றன!

(இன்று காலை அலுவலகம் வரும் சாலையில் சென்னை மாநாகராட்சியின் குப்பை வண்டி செய்த வேலையை சாலையில் பார்த்த போது... தோன்றியது... )
Saturday, August 6, 2016

பச்சை உயிரி!


உலக உயிர்கள்
எல்லாம்
சுவாசிக்க வேண்டும்
என்பதற்காக
தன் உடலெங்கும்
சுவாசப் பையினை
சுமந்து கொண்டிருக்கும்
பச்சை உயிரி
'மரம்..!'

(இன்றும், வழக்கம் போல சிலம்பாட்டப் பயிற்சியில் இருக்கும் போது, பிரசாந்த் எனும் 16 வயது பையன் என்னிடம்  கவிதை சொல்லக் கேட்ட தலைப்பு 'மரம்'

இரண்டு நிமிட யோசிப்பில், சிலம்பத்தை சுழற்றியபடியே அவனிடம் சொன்ன கவிதை இது...)
Friday, August 5, 2016

ரசாயனக் காதலால்..!


இரும்பிற்கும்
ஈரப்பதக் காற்றிற்கும்
ஏற்பட்ட
ரசாயனக் காதலால்
பிறந்த குழந்தை
'துரு'

**************************

(இன்று காலை சிலம்பப் பயிற்சியின் போது, என்னுடன் பயிற்சி செய்யும் 16 வயது பையன் ஒருவன்... அண்ணா நீங்க கவிதை எல்லாம் சொல்லுவீங்களாமே... எனக்கு ஒரு கவிதை சொல்லுங்கண்ணா என்று கேட்க... எதைப்பத்தி கவிதை சொல்லணும் என்று கேட்டேன். பக்கத்தில் இருந்த இரும்புப் பெட்டியில் துரு பிடித்திருந்ததைப் பார்த்ததும்... 'துரு' பத்தி கவிதை சொல்லுங்கண்ணா என்றான்.

அடுத்த ஒரு நிமிடத்தில் கவிதை சொன்னேன்... அண்ணா.. சூப்பருங்கண்ணா... என் ஸ்கூல்ல கவிதைப் போட்டின்னா உங்ககிட்டதான் வருவேன்.. எழுதிக் கொடுங்கண்ணா என்றான். 


அவனிடம் சொன்னது அப்படியே மேலே....)
Wednesday, July 27, 2016

மீண்டும் எழுந்து'வா..!’ - அப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை


இந்தியாவின்
கடைக்கோடியில்
பிறந்திருந்தாலும் எங்களை
தலைக்கோடியிலிருந்து
ஆண்ட எங்களின்
எளிமைத் தலை'வா…'
குறளுக்கு
இலக்கணமாய்
இருந்து
குமரித்தமிழ்
பரப்பிய
உண்மைத் தலை'வா…'
அணுவின் அசைவுகளை
நுணுக்கமாய் ஆராயும்
அமெரிக்காவின் கண்ணில்
மண்ணைத் தூவி
பொக்ரானில் அணுவைப் பிளந்த
விஞ்ஞானத் தலை'வா…'
மாணவர்கள் இதயத்தில்
சிம்மாசனமிட்ட
கறுப்புத் தமிழா…
உனை இந்நாளில்
இழந்து தவிக்கின்றோம்
நீ மீண்டும் எழுந்து'வா…'
தமிழ் உலகமே
அழுகின்றதே தலை'வா…'
மீண்டும்'வா…'
கண்ணீரில் கரைகின்றோம்
அன்புக் கரம் கொண்டு
துடைத்திட எழுந்து'வா…'
தலை…. வா…… தலை'வா..!'
****************************

Tuesday, July 12, 2016

ஒப்பற்ற ஒளிவிளக்கு! - காமராஜருக்கு பிறந்தநாள் வாழ்த்து!கல்வி ஒளியற்று
இருண்டு கிடந்த
தமிழகத்தை
கல்வி ஒளியால்
வெளிச்சமேற்றிய
ஒப்பற்ற ஒளிவிளக்கு
காமாட்சி எனும் விளக்கு
காமராசர் எனும்
தமிழ் விளக்கு!

**************************

பனையோலையில்
'தொட்டணைத்தூறும்
மணற்கேணி'
என்றார் திருவள்ளுவர்
ஏழைகளின்
மன ஒலையில்
கற்றணைத்தூறும்
கல்வி அறிவு
என்று எழுதாமல்
அரசுப்பள்ளிகளின் மூலம்
எழுத வைத்து
கல்விச் செம்மல்
எங்கள் காமராசர்
ஏழைகளுக்கு
கல்விக்கண் திறந்த
காமராசர்!

**************************

எனைப்போன்ற
கல்வி வாசம் அறியா
குழந்தைகளுக்கு
கடையேழு வள்ளல்களை
அறிமுகப்படுத்தியது
யாரென்று கேட்டால்
இலக்கியமில்லை
புத்தகமில்லை
ஆசிரியரில்லை
கல்வி தந்த வள்ளல்
காமராசர் என்பேன்!

**************************

(எங்களின் கல்வி வள்ளல் காமராசரின் பிறந்தநாள் வரும் ஜூலை 15 அன்று வருகிறது. அதற்காக இந்த குட்டிக்கவிதைகள் சமர்ப்பணம்... கடலை கடுகில் அடக்கமுடியாது... அவரின் புகழை எதனாலும் அடக்க முடியாது...)
Monday, June 27, 2016

பத்துமாசம் நான் சுமந்து..! - தாலாட்டு பாடல்
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ...
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ...

பத்துமாசம் நான் சுமந்து
பெண்ணிலவ பெத்தெடுத்தேன்!
பத்தியந்தான் பல இருந்து
பால் நிலவ பெத்தெடுத்தேன்!

குட்டி நிலா தங்கையாக
சுட்டியாகப் பிறந்த பெண்ணே
குலம் விளங்க வளர வேணும்
கண் மூடி தூங்கு கண்ணே
நல்லா நீயும் படிக்க வேணும்
விழி மூடி தூங்கு கண்ணே
நாடு போற்ற வாழ வேணும்
நன்றாக தூங்கு கண்ணே
நன்றாக தூங்கு கண்ணே!

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)

சிப்பிக்குள்ள முத்து போல
என் வடிவில் இருக்கும் முத்தே
சிங்கார வித்து போல
எம்மடியில் கிடக்கும் முத்தே
மயக்கும் நிலவு போல
அக்காகிட்ட சிரிச்ச முத்தே
சின்ன அரும்பு போல
அப்பாகிட்ட சிரிச்ச முத்தே
யாரடிச்சி நீ அழற
அம்மா ஒனக்கு நானிருக்கேன்
அழாம தூங்க வேணும்
அம்மா ஒனக்கு தொணையிருக்கேன்
என் எண்ணம் குளிரும்படி
அன்னம் போல தூங்கு கண்ணே
நீ அன்னம் போல தூங்கு கண்ணே

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)

வெள்ளி போல வந்தவளே
வெம்பி நீயும் ஏன் அழற
நீ தூங்க வேணுமுன்னு
தேக்குத் தொட்டில் வாங்கி வந்தேன்
மான் போல நடக்கணும்னு
மணிகொலுசு வாங்கித் வந்தேன்
நீ பசியாற வேணுமுன்னு
பால் வெள்ளித் தட்டு வாங்கித் தந்தேன்
எல்லாமே உனக்கிருக்கு
எதுக்கம்மா நீ அழற
அம்மா உனக்கு தொணையிருக்கேன்
அழாம தூங்கு கண்ணே
அழாம தூங்கு கண்ணே

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)

பனி நிலவு ஆனவளே
பதறி நீயும் ஏன் அழற
அண்ணன் உன்ன கொஞ்சிடுவான்
அமுதே நீ கண்ணுறங்கு
அக்கா உன்ன கொஞ்சிடுவா
அழகே நீ கண்ணுறங்கு
பாட்டி உன்ன கொஞ்சிடுவா
பனியே நீ கண்ணுறங்கு
தாத்தா உன்ன கொஞ்சிடுவார்
தாயே நீ கண்ணுறங்கு
அப்பா உன்ன கொஞ்சிடுவார்
அறிவே நீ கண்ணுறங்கு
அம்மா உன்ன கொஞ்சிடுவேன்
அம்புலியே கண்ணுறங்கு
அம்புலியே கண்ணுறங்கு
என் அம்புலியே கண்ணுறங்கு

ஆராரோ
ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)

(
எனக்கும் தாலாட்டு பாடல் ஒன்றை எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை... இன்றுதான் அது நிறைவேறியது. மகள்களைப் பெற்ற அத்தனை அன்னையருக்கும் இந்த தாலாட்டு சமர்ப்பணம்...)