ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, July 30, 2010

அந்தச் சூரியன் கூட..!

மாலை வேளையில்
உன்னழகைக் கண்டதால்தானோ
என்னவோ..!
அந்தச் சூரியன் கூட
வெட்கத்தால் சிவந்து
மேகத்தினுள் மறைந்து விட்டான்..!Thursday, July 29, 2010

நீ காணும் கனவில்..!

மேகங்களை மெத்தையாக்கி...
நட்சத்திரங்களை தலையணையாக்கி...
அந்த வெண்ணிலவை
உன் அறை விளக்காக்கி...
என்னன்புக் கவி மலரே
உனைத் தூங்க வைப்பேன்..!
அப்போது..?
நீ காணும் கனவில்
உன்னோடு நான் கலந்திருப்பேன்..!Wednesday, July 28, 2010

நான் மறைந்து போனாலும்..! - 200வது கவிதைப் பதிவுஎன் கண் வழியே உனை நுழைத்து…
என் மனதினிலே உனை நினைத்து…
என் கவிதையிலே வடித்து வைத்தேன்..!
இப்புவியிலிருந்து நான் மறைந்து
போனாலும்
அன்பே...
உன் மேல் நான் கொண்ட காதல்…
என் கவி உள்ள வரை
இப்புவியில் நிலைத்திருக்கும்

என்பதை மறவாதே அன்பே..!
நானாவது உனை மறந்து போவதாவது..?    
நாவிருக்கிறது என்பதற்காக
நறுக்குத் தெரிக்கும் வார்த்தைகளை
வீசியெறியாதே பெண்ணே...
வீழ்ந்து விடுவேன் நிரந்தரமாக..! 

(இது என்னுடைய 200-வது கவிதைப் பதிவு ஆகும்... இந்நேரத்தில் எனைப் படைத்த என் பெற்றோர்களுக்கும்... என் கவித்திறனை வளர்த்து விட்ட என் தாய்த்தமிழுக்கும்... இக்கவிதைகளின் ஊற்றான என்னவளுக்கும்... ஆதரவுக் கரம் நீட்டி வரும்... எனது அன்பு வாசகர்களாகிய உங்களுக்கும்.. எனது மனமார்ந்த நன்றிகள்...

தொடரட்டும் உங்கள் ஆதரவு..!

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்


மோகனன்)
Tuesday, July 27, 2010

மூடும் கதவுகளுக்குள்..!

இருபுறமும் நகர்ந்து
மூடும் கதவுகளுக்குள்
காதலா என்ன..?
அவைகளும் நம்மைப் போலவே
உதட்டோடு உதடு
சேர்த்து உறவாடுகின்றனவே..!  Monday, July 26, 2010

உன்னால் கரையாத..!

நிலாப் பெண்ணும் உறங்குவதாகத்
தெரியவில்லை..!
இரவுப் பொழுதும் கரைவதாகத்
தெரியவில்லை..!
விளக்குகளும் அணைவதாகத்
தெரியவில்லை..!
கண்களும் இமை மூடுவதாகத்
தெரியவில்லை..!
ஆயினும் என் அன்பே...
உன்னால் கரையாத இந்த இரவு கூட...
உன்னைப் போலவே
இன்பத்தைத் தருகிறதடி..!Friday, July 23, 2010

மலருக்கே தெரியாமல்..!

மலருக்கே தெரியாமல்
மகரந்தத்திலுள்ள
தேனைக் கவரும் தேனீ போல…
எனக்கே தெரியாமல்
என் மனதைக்
கவர்ந்த தேனீ நீ..!
என் காதல் ராஜ்ஜியத்தின்
ராணித் தேனீ நீ..!Thursday, July 22, 2010

இரட்டைப் பிறவிகளா..?

உன் கொலுசும்...
புன்னகையும்...
இரட்டைப் பிறவிகளா
அன்பே..?
இரண்டும்
கலகலவென்று
சிரிக்கின்றனவே..!Wednesday, July 21, 2010

நீ ஒரு நடமாடும்..!

கருவைரக் கண்கள்…
கோமேதகக் கன்னங்கள்…
செம்பவழ உதடுகள்…
வெண் முத்துப் பற்கள்…
மரகதச் சிரிப்புகள்...
என நீ ஒரு நடமாடும்
நவரத்தின பெண்
'நகை'க் கூடம்..!
அதில் என் கவிதைகள்
நாட்டியமாடும்..!Tuesday, July 20, 2010

நீ தீட்டிய மையினால்...

அஞ்சன மை தீட்டிய
அழகு தேவதையே…
நீ தீட்டிய மையினால்
உன் கண் மயங்கியதோ..?
இல்லையோ..?
நான் மயங்கி விட்டேன்..!Monday, July 19, 2010

நம் இருவரும் சேர்ந்து..!

நான் என்பது இனி
நானில்லை…
நீ என்பது இனி
நீயில்லை…
நான் என்பது இனி
நீயானாய்…
நீ என்பது இனி
நானானேன்..!
நம் இருவரும் சேர்ந்து
நாம் ஆனோம்..!
இனியேனும் புரிந்து கொள்
நாமிருவரும்
தனித் தனி ஆளில்லை என்று..!Friday, July 16, 2010

கோவில்களின் நகரமாம்..! - கண்ணீர்க் கவியாஞ்சலி

கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்..?
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது..!

அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...

கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்


ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?

அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?

உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?

பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?


அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்

அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?

உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இருமாப்பா...?

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...


உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?

'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...


'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…

அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...

சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...

(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து ஆறாமாண்டு நினைவு நாள் (16.07.2010) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர் அஞ்சலி...)
Thursday, July 15, 2010

கல்விக் கண் திறந்ததினால்..! - பிறந்தநாள் கவிதை


கல்விக் கண் திறந்ததினால்
எங்கள் கல்வித் தந்தை ஆனீர்..!
எளிமை வாழ்க்கை வாழ்ந்ததினால்
ஏழைகளின் ஏந்தலானீர்..!
அரசியலில் நேர்மைதனை காத்ததினால்
அரசியலுக்கே ஆசானானீர்..!
பல தொழிற்சாலைகள் திறந்ததினால்
நாட்டின் தொழிற்தந்தை ஆனீர்..!
நீரணைகள் கட்டியதால் தாகம்
தீர்த்த தீர்க்கதரிசியானீர்..!

பஞ்சமர்களும் பணிந்து கிடக்கவிருந்த
குலக்கல்வி திட்டத்தினை அழித்தீர்..!
பாமரக் குழந்தைகளும் கல்வி பயில
பல கல்வி சாலைகள் படைத்தீர்..!
மதிய உணவுத் திட்டம் படைத்து
மகத்தான வெற்றி பெற்றீர்..!
கடைக்கோடி ஏழையும் பயனுற
ஏற்ற பல திட்டமமைத்தீர்..!

உம் போன்ற ஓர் ஒப்பற்ற தலைவனை
இத்தமிழ்நாடு மட்டுமல்ல
எந்நாடும் கண்டதில்லை ஐயா..!
அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினை
யாரும் வாழ்ந்ததில்லை ஐயா..!
நீ பிறந்த இந்நாட்டில்
நானும் பிறந்திருக்கிறேன் என
நினைத்து பேருவகை கொள்கிறேன்..!
நீ பிறந்த இந்நாளில்
உன்னடி தொட்டு உன் வழி
நடக்கின்றேன் ஐயா..!Wednesday, July 14, 2010

மீண்டும் மீண்டும்..!

உன் அழகிய புன்னகை கூட
எனை அடியோடு
வெட்டி வீழ்த்துகிறது..!
அப்படி நான் ஆயிரம் முறை
அடியோடு வீழந்தாலும்...
அந்த வசீகரப் புன்னகைக்காகவே
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்..!Tuesday, July 13, 2010

உனைக் காணும் ஆர்வத்தில்..!

பூங்காவனத்தில்
நீ எனக்காக காத்திருந்து
தவிப்பது
பிடித்திருக்கிறது..!
அதற்காகவேனும்
சற்றுத் தாமதமாக
வர முயற்சிப்பேன்..!
ஆனால் உனைக் காணும்
ஆர்வத்தில்
வெகு சீக்கிரமாகவே
வந்து விடுகிறேன்..!
இதுதான் காதல் மயக்கமோ..?Thursday, July 8, 2010

என் இதய வீட்டிலும்..!

நீ வசிக்கும் வீட்டில்
மரப்பூக்கள் மட்டுமல்ல
மகிழ்ச்சிப் பூக்களும்
பூத்துச் சிரிக்கின்றன..!
அப்படியே
என் இதய வீட்டிலும்
வந்து வசித்து விடு அன்பே..!
அங்கே காதல் பூ
பூக்கட்டும்..!   Wednesday, July 7, 2010

உன் நெஞ்சணையில்..!

பஞ்சணையில் படுத்தால்
தூக்கம் வரவில்லை என்று
உன் நெஞ்சணையில் படுத்தேன்…
அது மலர்ப்படுக்கையில்
படுத்தது போலிருந்தது..!
அப்போதும் எனக்கு
தூக்கம் வரவில்லை பெண்ணே..?
எங்கே என்னுடல் பட்டு
உன்னுடைய மலர்ப் படுக்கை
வாடி விடுமோ என்ற பயத்தால்..?Tuesday, July 6, 2010

என்றும் அழியாத..!

மேகக் கூட்டம் போன்றதுதான்
உறவும்… உடலும்..!
மின்னலைப் போன்றதுதான்
அழகும்… இளமையும்..!
மழையைப் போன்றதுதான்
மனசும்… மகிழ்ச்சியும்..!
ஆனால் என்றும் அழியாத
கதிரவனைப் போன்றதுதான்…
என் கவியும்… என் காதலும்..!Monday, July 5, 2010

உன் வெட்கத்தில்..!

வெண்மேகத்தில்
மறைந்து மறைந்து
விளையாடும்
வெண்ணிலவைப் போல...
உன் வெட்கத்தில்
மறைந்து மறைந்து
விளையாடுகிறது...
உன் அழகான புன் சிரிப்பு ..!Friday, July 2, 2010

எனை என்ன செய்தாய்..?

எனை என்ன செய்தாய் பெண்ணே..?
ஒவ்வொருவருக்கும்
நாட்கள் செல்லச் செல்ல
வயது ஏறுமென்பார்கள்...
ஆனால் எனக்கோ
உன்னை சந்தித்ததிலிருந்து
வயது இறங்கிக் கொண்டே
போகிறதே..!Thursday, July 1, 2010

காத்திருக்கும் விழிகளில்..!

உனக்காக
காத்திருக்கும் விழிகளில் கூட
காதல் நிரம்பித்
தளும்பி வழிகிறதடி...
நீ இன்னும் வரவில்லை 
என்பதால்...
கண்ணீராய்..!

(என்னவள் என்னை விட்டுப் பிரிந்திருக்கும் போது, நானெழுதிய கவிதை இது... பிறிதொரு நாள் என்னவள் மிகவும் ரசித்த கவிதையும் இது...)