ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday, April 30, 2011

உலகத்தை இயங்க வைக்கும்..! - மே தின சிறப்புக் கவிதை


உடலினை இயந்திரமாக்கி...
உழைப்பினை உரமாக்கி...
உலகத்தை இயங்க வைக்கும்
உன்னத தோழனே...
உன்னுடைய நாளில்
உனை நான் வணங்குகிறேன்..!

உழைக்கும் வர்க்கம்
ஆட்டுமந்தைகளைப் போல்
இருப்பதால்தான்
‘மே’யில்  வருகிறது
உழைப்பாளர் தினம்
என்றான் ஒரு கவிஞன்..!

உண்மை அதுவல்ல தோழா...
உழைப்பதில்
நீ ஒப்பற்ற மழை
‘மே’கம் போன்றவன் என்பதால்தான்
‘மே’ மாதத்தில் இத்தினம்
கொண்டாடப்படுகிறது..!

உலக வரைபடத்தை
உன் வியர்வைக் கோடுகளால்
உடலெங்கும் வரைந்த தோழனே...
உன் உழைப்பால்தான் உலகமே
அன்று வரைபடமானது...
வளமான பூமியானது..!

உழைத்துக் களைத்தறியா
விவசாயத் தோழனே...
உன்னுழைப்பால் உலகமே
பசியாறுகிறது...
உன்னுழைப்பால் உலகமே
ஆடை அணிகிறது...

நீ மட்டும் உழைப்பாளியல்ல தோழா
உன் குருதியில் இருக்கும்
ஒவ்வொரு வெள்ளை அணுவும் உழைப்பாளியே..!
அவ்வணு உனக்காக உழைக்க...
நீயோ உலகிற்காக உழைக்கிறாய்..!
நீ உழைக்காம்ல் போனால்
உலகமே துன்பத்தில் உழன்றுவிடும்...
உறைந்து போய் நின்று விடும்...

உன்னுழைப்பிற்கு பெயரளவில்
மரியாதை தருவதை விட
பொருளாதார அளவில் என்று
மரியாதை தரப்படுகிறதோ
அன்றுதான் உன் வர்க்கம் உயர்வடையும்..!
என்று உன் வர்க்கம் உயர்வடைகிறதோ
அன்றுதான் உலகில் சமத்துவம் மலரும்..!

(உலகில் ஏதேனும் ஒரு வகையில் உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளிகளுக்கும் அடியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்... பணிவான மே தின வாழ்த்துக்களும் உரித்ததாகட்டும்..!


என்றென்றும் அன்புடன்


உங்கள்
மோகனன்)




Thursday, April 28, 2011

எம்மீழத்தமிழன் அங்கே தலை தூக்க..! - ஈழத் தமிழ்க் கவிதை!


பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள
ஆஸ்திரேலியாவில் ஓர் இந்தியன்
தாக்கப்பட்டான் என்றதும்
துடிதுடித்து எழுந்த இந்திய அரசு
கைக்கெட்டும் தூரத்தில் உள்ள ஈழத்தில்
எம்மீழத்தமிழன் கொல்லப்பட்டதற்கு
துடித்து எழாமல் தூங்கிப் போனது ஏன்..?

லிபியாவில் கலவரம் என்றதும்
லிகிதம் எழுதாமல்
வானூர்தி அனுப்பிய இந்திய அரசு
எம்மீழத்தமிழன் பிரச்சினையில்
மாற்றி மாற்றி லிகிதம் அனுப்பியது ஏன்?
எகிப்து எரிகிறது என்றதும்
இங்கிருந்து சீறும் ஏவுகணையாய்
செயல்பட்ட இந்திய அரசு
எம் தமிழீழம் பற்றி எரிந்த போது
எதுவும் செய்யாதிருந்தது ஏன்?

இந்திய விடுதலைக்காக
நேதாஜியும், பகத் சிங்கும் செய்தது
விடுதலைப் போராட்டம் என்றால்
எம்மீழத்தமிழன் செய்தது
எந்தப் போராட்டத்தினைச் சாரும்..?
எம்மீழப் புலிகள் செய்தது
விடுதலைப் போராட்டம் இல்லையா?

தமிழன் என்பவன் இந்தியனில்லையா?
தமிழினம் என்பது இந்திய இனமில்லையா?
ஏ இந்திய அரசே...
தொப்புள் கொடி உறவென்று
உனை மனதில் நினைத்த பாவத்திற்கு
எம்மீழத்தமிழன் அங்கே
மண்ணோடு மண்ணாகிப் போனதுதான் மிச்சம்..!

இந்திய அரசே...
அம்மக்கள் எம்மக்களே என்று
அன்று நீ துடித்து எழுந்திருந்தால்
பல்லாயிரக் கணக்கான
ஈழத்தமிழ் மக்கள்
உயிரோடு உலவியிருப்பார்கள்
உற்சாகமாய் சுதந்திரத்தை சுவாசித்திருப்பார்கள்..!

அன்று நீ சாட்டையை சுழற்றியிருந்தால்
சிங்களன் அன்றே சுருண்டிருப்பான்...
இன்று அந்த சாட்டையை
ஐ.நா. சுழற்ற ஆரம்பித்திருக்கிறது...
உதவி செய்ய வேண்டாம் நீ
அதற்கு நீ உபத்திரவம் செய்யாதே...
சிங்களனுக்கு சிகை பல்லக்கு தூக்காதே...
எம்மீழத்தமிழன் அங்கே தலை தூக்க வேண்டும்..!
எம்மீழப் புலிக் கூட்டம் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்..!

(தமிழனாய் பிறந்தமைக்கு தலை நிமிர்ந்து நிற்கவா? இந்தியாவில் பிறந்ததற்கு
தலை குனிந்து நிற்கவா..? - எம்போன்ற உண்மைத் தமிழனின் மனக்குமுறல் என்று அடங்குமெனில் எம்மீழத் தமிழனின் வாழ்வு, அங்கே சுதந்திரமாய் தலை தூக்கும் போதுதான்..! தலை தூக்கும் வரை ஓயமாட்டேன்... யாரையும் ஓய விட மாட்டேன்..!


அடங்கா கோபத்துடன்

உங்கள்

மோகனன்)




Wednesday, April 27, 2011

பெரிதினும் பெரிது கேள் ஐ.நா.வே..! - ஈழத் தமிழ்க் கவிதை!



சிங்கள ராணுவத்தினரால்
அப்பாவித் தமிழர்கள்
நாற்பதாயிரம் பேர்
உருத்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள்
என்று அதிகாரப் பூர்வமாய்
ஐ.நா. தனது நாவினை
தற்போதுதான் திறந்திருக்கிறது..!

அன்று கொன்றழிக்கப்பட்ட
கொடும் சரித்திரம் இன்றுதான்
அதிகார பூர்வமாய்
உலகத்தின் பார்வைக்கு வந்திருக்கிறது...
போர்க்குற்றம் புரிந்தான் சிங்களன்
என்று உலகமே தற்போது
சிலுப்பிக் கொண்டிருக்கிறது..!

அன்றே எம்மீழத்தமிழன்
இங்கொடுஞ்செயல்களுக்கான
ஆதரங்களைக் காட்டினான்...
அப்பாவிகளை காக்கும்படி
அண்டை நாடுள்பட
அனைத்து நாடுகளிடம் முறையிட்டான்
அம்மக்களைக் காத்திட
அவனாவியை ஈந்தான்..!

வீரத்தின் விளை நிலங்களில்
எம்மீழத் தமிழனின் வீரம்
பரிசோதிக்கப்பட்டது...
அச்சோதனையில்
கொடும் படைக்கஞ்சா புலிகள் என்று
எம்புலிகள் வீரச் சமர் புரிந்தனர்
வீரமாய் மரணத்தை தழுவினர்..!

அங்கே வீழ்ந்தது ஒவ்வொன்றும்
ஈழத்தமிழனின் சிதையல்ல...
ஈழத்தமிழ் விடுதலையின் விதை...
வீரப் புலிகளின் விடுதலைக் கதை...
தன் தமிழினம் காக்க...
தன் தமிழ்க்குலம் காக்க...
தன் தமிழ் மக்களைக் காக்க...
மரணத்தைத் தழுவிய வீர மறவர்களின் கதை...

பெரிதினும் பெரிது கேள் ஐ.நா.வே..!
எம்மீழத்தமிழ் மக்களின் உயிர்த்தியாகத்திற்கு
உற்ற பலன் கிடைக்க வேண்டும்..!
போர்க்குற்றம் புரிந்த புல்லர்களுக்கு
சரியான புத்தி புகட்டிட வேண்டும்..!
புலிகளின் தன்னலமற்ற தியாகத்திற்கு
ஈழத்தமிழ் மண் கிடைத்திட வேண்டும்..!
எம் தமிழ் மக்கள் அங்கே சுதந்திரமாய்
வாழ வழிவகை செய்திடல் வேண்டும்..!
இதை அத்தனையும் பெரிதாய்க் கேள் ஐ.நா.வே..!
இவைகளத்தனையும் என்று கிடைக்குதோ
அன்றுதான் எம் புலிகளின் ஆன்மா
அமைதி பெறும்... தியாகம் சுடர் விடும்..!




Saturday, April 23, 2011

கோடை மழையின் சாரல் மழை..!


கொளுத்தும் வெயிலில்
கோடை மழையின்
சாரல் மழை
சரம் சரமாக வழிய...
அம்மழைச்சரங்கள்
பூமித்தாயின் உடலெங்கும்
முத்த மழை பொழிய
அவளோ புளங்காகித்தில்
மூச்சு விட்டாள்..!
நம் நாசியில் அவள்
மண் மணம் பரவ
நம் அனைவரின் உடலெங்கும்
புத்துணர்ச்சி பரவ...
நம் இதழ் நமையறியாமல்
புன்னகை பூக்கும்..!
கிராமத்து மண் மணத்தில்
கிறுகிறுத்துப் போகாதோர் யார்?
அவ்வாசனையை பாழும்
சென்னையில் எதிர்பார்த்தேன்
கிடைத்த்தென்னவோ
தார் சிமெண்டின் நாற்றமும்
நகரத்து குப்பைகளின் நாற்றமும்தான்..!




Monday, April 18, 2011

என் பெண்ணிலவே..! - பிறந்த நாள் கவிதை!


இப்புவியில் அழகான
வெண்ணிலவின் பிறந்த நாள்
ஒவ்வொரு மாதமும் வரும்..!
ஆனால் சித்திரையில்
பிறக்கும் வெண்ணிலவுக்கோ
ஆண்டுக்கொரு முறைதான்
பிறந்தநாள் வரும்..!
அது போலே
அச்சித்திரையில் பிறந்த
(வி)சித்திர நிலவே..!
காதல் முத்திரையால்
என் நித்திரையை கொள்ளையிடப்
பிறந்த என் பெண்ணிலவே..!
நீ பிறந்த இந்நாளில்
உனைப் பெற்றோர்க்கு
மகிழ்ச்சியோ இல்லையோ..?
எனக்காக நீ பிறந்திருக்கிறாய்
என்பதைக் கண்டு
எல்லையிலா மகிழ்ச்சி கொள்கிறேன்..!
உனைக் கொஞ்சி மகிழ்கிறேன்..!
இனியவளே உனக்கிந்த
யாழ்பித்தனின் பிரியமான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!




Tuesday, April 12, 2011

எல்லோர்க்கும் எல்லாமும்..! - தமிழ்ப்புத்தாண்டு தின சிறப்புக் கவிதை!




சூரியனை அணைக்கத்தான் முடியுமா?
நிலவினை மறைக்கத்தான் முடியுமா?
நட்சத்திரங்களை ஒழிக்கத்தான் முடியுமா?
அதுபோல் தான் தமிழ்ப்பெண்ணே
உன் பிறப்பை மாற்றத்தான் முடியுமா?
சித்திரை மாதத்தில் பிறக்கும் என்
பத்தரை மாற்றுத் தமிழ் தங்கமே...
உன் வரவை யார் தடுப்பார்..?
உலகத்து தமிழர்க்கெல்லாம் 
திருநாளது... பெருநாளது... புதுநாளது...
எதுவெனில் எம்தமிழே 
நீ பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டு நாளதுதான்..!
எல்லோர்க்கும் எல்லாமும் அருள்வாய் தாயே..!
எளியோர்க்கு வலிமைதனை வழங்குவாய் நீயே..!
தரணியிலே தமிழர்களை தழைக்கச் செய் தாயே..!
வறுமைதனை அடியோடு அகற்றிடுவாய் நீயே..!
உன்மடியில் எப்போதும் நான் பிறக்க வரமருள்வாயே..!
என் தாயே... தமிழே... உன் திருத்தாழ் சரணம்..!

(அன்பிற்கினிய வாசக நண்பர்கள் அனைவருக்கும், எனது முன்கூட்டிய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


வாழ்த்தும் அன்பு நெஞ்சம்


உங்கள்
மோகனன்)




Monday, April 11, 2011

நவீன வெள்ளைக்காரன்..! - தேர்தல் சிறப்புக் கவிதை


தன்னை விற்று
பிழைப்பு நடத்தும்
வேசி கூட
ஐந்து நிமிடத்திற்கு மட்டுமே
காசு கொடுத்தவனுக்கு
அடிமையாக இருக்கிறாள்..!
ஒர் ஓட்டுக்காக
உன்னை விற்றால்
ஐந்து ஆண்டுகளுக்கு
நீ அடிமையாகப் போவது
மட்டுமின்றி...
அன்னை பாரதத்தையும்
ஊழல்வாதிகளிடம்
அடிமையாக்கி விடுவாய்..!
அரசியல் கொள்ளைக்காரர்களின்
ஓட்டுக்காக விலை போனால்
தாய்நாட்டினை அடிமைப் படுத்தும்
நவீன வெள்ளைக்காரனாகிவிடுவாய்..!
உன்னை விற்காமல்
உண்மையாய் ஓட்டளி...
ஒழுங்கான ஆட்சிக்கு
ஒழுக்கமாய் வாய்ப்பளி..!

(இதையும் படிங்க: அரசியல்வாதியின் வேண்டுதல்..!)

(வாக்களிப்பது நமது உரிமை மட்டுமின்றி ஜனநாயகக் கடமை... ஓட்டிற்காக உங்களை விற்காமல், கம்பீரமாக செல்லுங்கள்...கண்ணியமாய் வாக்களியுங்கள்..!)




Saturday, April 9, 2011

அண்ணா ஹசாரேவிற்கு..! - சிறப்புக் கவிதை



அண்ணலின் வழி நின்று
அரசினை எதிர்த்து
அஹிம்சையின் வழி நின்று
அரசினை அசைத்த
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

அடிதடி செய்யாமல்
ஆர்ப்பாட்டம் செய்யாமல்
பேருந்தைக் கொளுத்தாமல்
பெட்டிக் கடைகளை நொறுக்காமல்
ரயில்களை நிறுத்தாமல்
அமைதியின் வழி நின்று வென்ற
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

தாங்கள் ஊரறிந்த
சினிமா பிரபலம் இல்லை
தாங்கள் உலகறிந்த
விளையாட்டு வீரரும் இல்லை...
காந்தியவாதியாய் இருந்தும்
பிரபலமாகவில்லை...
121 கோடி மக்களுக்காக
உங்கள் ஒருவரை
வருத்திக்கொண்டதால்
எங்களின் மனதில் பிரபலமான
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

தலைகுனிந்து நின்ற இந்தியனை
அவன் தரணியே ஆண்டவன் என்றாலும்
தலைநிமிர்ந்து கேள்வி கேட்கும்
தகவலறியும் உரிமைச் சட்டம்தனை
தாய்நாட்டில் நடைபயில வைத்த
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

பலகோடி உயிர்கள் ஊழலின்றி வாழ
தன்னுடலை வருத்திக் கொண்டு
தன்னாவியைக் கரைத்துக் கொண்டு
உலகத்துப் பார்வையை
உண்மையின் வசம் திருப்பிய 
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

ஊழல் இங்கே இருக்கும் வரை
ஏற்றத் தாழ்வுகள் நிலைத்திருக்கும்
ஏழைகள் வாழ்வு பழித்திருக்குமென அறிந்து
ஊழலை இங்கே ஒழித்தெடுக்க
எவருக்கும் திரணியில்லையென அறிந்து
எழுபத்திமூன்று வயதினிலும்
இளைஞனைப் போல செயல்பட்டு
அஹிம்சையால் வென்ற
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

ஏழைகள் சிரிப்பதுமில்லை...
ஆதலால் இங்கே
ஏழையின் சிரிப்பினில்
எவனையும் காணமுடிவதுமில்லை...
தங்களின் சிரிப்பினில்
வெற்றியின் மமதையில்லை...
121 கோடி இந்தியக் குழந்தைகளின்
சிரிப்பாகவே காணுகிறேன் ஐயா..!
உன் வழியைப் பின்பற்றி
என் இளைய சமுதாயம் வளரும்
இந்தியா ஒரு நாள் மாறும்..!

ஊழலுக்கெதிரான ஒரு சிறு தீப்பொறி
இன்றொரு தீபமாய் மாறியது
உங்களால்தான்..!
நாளை அது தீப்பந்தமாவதும்
தீச்சுடும் எரிமலையாவதும்
உங்களால்தான் ஐயா...
அண்ணலின் இளவலே நீர் வாழி..! 
நின் தேசப்பற்று வாழி..!
இவர் வழி நடந்திட இந்தியாவே வா நீ..!

(அண்ணலின் இளவலுக்கு கிடைத்த இவ்வெற்றி, சத்தியத்திற்கும் அஹிம்சைக்கும் கிடைத்த வெற்றி...!)





Friday, April 8, 2011

அங்கே ஓர் ஆன்மா..! - அண்ணா ஹசாரேவுக்காக..!



நியாயவிலைக் கடைகளில்
நிற்பதை விட
ஸ்டேடியத்தின் வாசலில்
அடங்காக் கூட்டம்
ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் வாங்க..!

அடிதடியில் ஆரம்பித்து
அரைவட்ட சுவரைத் தள்ளியது...
போலிஸ் தடியடியை
வாங்கிய பின்னரும்
வரிசையில் நின்று
டிக்கெட்டை வாங்கிப் போனது
இந்திய சமுதாயம்..!

ஐபிஎல் போட்டிகள்
ஆரம்பித்து விட்டால் போதும்
சாதி, மொழி, இனம் கடந்து
ஆதரவுக் கரங்கள் பெருகும்
ஆசைகள் கண்களில் விரியும்...
இந்திய ஒற்றுமைகள் அனைத்தும்
ஒவ்வொரு இந்தியனின்
கன்னத்தில் கொடியாய் விரியும்...
உற்சாக வசனங்கள் கைகளில் மின்னும்..!

ஒவ்வொரு அடிக்கும்
உற்சாக குரல்கள் விண்ணை முட்டும்!
திரை உலக கனவான்களும்
தங்கள் பணப்பங்குக்கு
தத்தமது அணிகளை
உற்சாகப் படுத்தும் சாக்கில்
ஊரைச் சேர்ப்பார்கள்..!

ஊழலின் ஊற்றுக் கண்ணை
அழித்தெடுக்க
அங்கே ஓர் ஆன்மா
தன் உயிரை
காற்றில் கரைத்துக் கொண்டிருக்க...
அரசாங்கம் கை கட்டி வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்க...
அவருக்கு ஆதரவுக் கரம் நீட்ட ஆளில்லை
அவர் வழியில் போராட
இங்கே எவனுக்கும் திரணியில்லை..!

ஊழலுக்கெதிராக நாம் திரளுவதா?
சே... சே... நமக்கு வேற
வேலை வெட்டி இல்லையா என்ன?
ஐபிஎல் போட்டி இருக்கு...
தலைவரோட சினிமா படமிருக்கு...
இரவு விடுதி நடனமிருக்கு...
தாகம் தீர்க்க டாஸ்மாக்கிருக்கு...
ஏய்த்துப் பிழைக்க தேர்தலிருக்கு...
இதென்ன உண்ணாவிரதப் பேச்சு...
போ.. போ... போ..!

அட என்னே ஒரு ஒற்றுமை...
என்னே ஒரு பண்பாடு...
வாழ்க பாரத மக்கள்...
வளர்க பாரத சமுதாயம்..!
போங்கடாங்க...
நீங்களும் உங்க நாட்டுப் பற்றும்..!

(அண்ணா ஹசாரேவின் போராட்டம் வெற்றி பெற தோள் கொடுப்போம் வாரீர்..!)




Thursday, April 7, 2011

உன் இதழ்க்கொடியில்..!



கொடியின் இடையில் மலர்கள்
பூக்கும் போதுதான்
மனதில் மகிழ்ச்சி நிறையும்...
அவைகள் உதிரும் போது
என்மனதில் துன்பம் துண்டை விரிக்கும்..!
இதற்கு மாறாக
உன் இதழ்க்கொடியில்
புன்னகை பூ பூத்தாலும் சரி...
உதிர்ந்தாலும் சரி...
என் மனதில் மகிழ்ச்சி நிறையும்..!

(முதன் முதலாக நான் நடித்த டாகுமெண்டரி படம்..! - பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க)




Wednesday, April 6, 2011

போரட்டம் மிகுந்த உலகத்தில்..!


அன்னையின் கருவினில்
ஆலம் வித்தாகி
பூமியின் மடியினில்
ஆலமரமாகி
நின்று நிழல் தர போராடுகின்றேன்..!

அன்னையின் வயிற்றினில்
அடர்ந்த இருட்டினில்
கண்மூடி வாழப் பழகியதால்
அகிலத்து இருட்டினில்
கண் திறந்து வாழப் போராடுகின்றேன்..!

அன்னையின் மடியினில்
தவழ்ந்த போது
வறுமையும் என்னை வளர்த்தது...
என்னுடன் அதுவும் வளர்ந்ததால்
வறுமையைப் போக்க போராடுகின்றேன்..!

அன்னையின் வளர்ப்பினில்
அன்பைக் கண்டு
தந்தையின் வளர்ப்பினில்
அகிலத்தைக் கண்டு
அறிவனாய் வாழ போராடுகின்றேன்

போரட்டம் மிகுந்த உலகத்தில்
போராட நீயும் வா என்று
என் தாயும் என்னை
பிறப்புவித்தாள்..!
அவளிச்சைப்படியே பிறந்தேனின்று..!

எங்கும் எதிலும் வென்று விட
போட்டி, பொறாமைகளை தகர்த்து விட
எனைப் பெற்ற எந்தன் பெற்றோர்களே
எனக்கு எல்லா வரங்களையும் அளித்தருளும்
உம் பாதங்களில் எனக்கும் இடமருளும்..!




Tuesday, April 5, 2011

உன்னைப் பாதுகாக்கும்..!



நீ அழகிய முத்து
போன்று இருப்பதால்தான்
பெண்ணே…
உன்னைப் பாதுகாக்கும்
சிப்பியாக
நானிருக்க வேண்டுமென்று
ஆசைப்படுகிறேன்..!




Saturday, April 2, 2011

இவர் ரன்னெடுக்கும் மிஷினு! - உலக கோப்பை கிரிக்கெட் சிறப்பு கவிதை


இவர் ரன்னெடுக்கும் மிஷினு
நான் சச்சினோட கஸினு
உலகக் கோப்பை வெல்வதுதான்
இந்தியாவோட விஷனு..!

நூறு சதம் இவர் கைக்குள்ள
இவர் சாதனைக்கு எல்லை இல்ல
தனிமனித வாழ்க்கையில
தரணி போற்றும் தங்கபுள்ள..!

இவர் பிராட் மேனின் செல்லபிள்ள
கிரிக்கெட்டுக்கு தலைப் புள்ள
இவர் பேட்டெடுத்து ஆடவந்தா
எல்லா அணியும் கிலிக்குள்ள..!

இவர் பேட்டில் இருக்கு பவரு
அடிக்கும் ஷாட்டு டிரைவ் கவரு
இந்தியா ஆடும் ஆட்டத்திலெல்லாம்
ஆட்ட நாயகன் இவரு..!

சச்சின் ஆட்டம் இன்னிக்கி
சலோ இந்தியா மும்பைக்கி
இலங்கை அணிக்கு டிமிக்கி
உலக கோப்பை நம்பள்க்கி..!

(சச்சினின் தீவிர ரசிகன் என்பதாலும், கிரிக்கெட்டின் ரசிகன் என்பதாலும், இந்த பன் மொழிக் கலப்பு கவிதையை எழுதியிருக்கேன். வாசகர்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்... 


வெற்றிக் கோப்பை நமக்கே.. அதை வென்று தருவது சச்சினே)




Friday, April 1, 2011

கொஞ்சும் மொழியை..!



கொஞ்சும் மொழியை
எங்கே பேசக் கற்றுக்
கொண்டாய் பெண்ணே..!
உன் மொழியைக் கேட்ட பின்பு
என் மொழியை மட்டுமல்ல
எனக்கு வேறு எந்த மொழியையும்
கேட்கவே பிடிக்கவில்லை..!