ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, June 29, 2011

பொன் கிடைத்தாலும்..!



பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காதென்பார்கள்...
ஊருக்குச் சென்ற என்னவள்
இப்புதனில் அதர வாய் திறந்தாள்...
'வரும் திங்கள்ன்று உனை
சந்திக்க வருகிறேன்' என்றாள்..!
புதன் புத்துணர்ச்சியில் போக
வியாழன் விறுவிறுவென மறைய
முளைக்கும் வெள்ளியோ
முகத்திரைய மூட...
சட்டென்று உதிக்கும்
சனியும் மறைய...
என் உள்ளம் மகிழவே
ஞாயிறு உதிக்கிறான்..!
என்னவள் கிளம்பும் நேரத்தில்
ஞாயிறு மறையும்...
திங்களின் காலையின்
என்றன் திங்கள் மலரும்..!
என் திடீர் சாபமும் நீங்கும்...
இன்றே அந்த திங்கள் நாளாகாதா?
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்
என் தேவியின் தரிசனத்திற்காக..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )




Tuesday, June 28, 2011

உதட்டினில் ஒன்று குவித்து..!


தொலைதூரத்தில் இருந்தாலும்
உன் உணர்வுகளை எல்லாம்
உதட்டினில் ஒன்று குவித்து
அலைபேசி வழியே அனுப்புகிறாய்
அன்பு முத்தமாக..!
அலைகடல் தாண்டி
அதிர்வலைகளின் வழியே
பயணித்து வரும் 
அம்முத்தம்
என் செவியினைத் தீண்டி
உன் அன்பைச் சொல்கிறது
சத்தமாய்... அதுவே எனக்கு சத்துமாய்..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )




Monday, June 27, 2011

வான் மகளாய் நீயிருக்க..!



பூத்தாலும் நட்சத்திரமாய் பூக்கிறாய்..!
சிரித்தாலும் வெண்ணிலவாய் சிரிக்கிறாய்..!
தும்மினாலும் பனித்துளியாய் தும்முகிறாய்..!
பார்த்தாலும் மின்னலாய்ப் பார்க்கிறாய்..!
இறங்கினாலும் என்னுள் இடியென இறங்குகிறாய்..!
விரிந்தாலும் கார்மேகக் கூந்தாலாய் விரிகிறாய்..!
இப்படி வான் மகளாய் நீயிருக்க...
புவிமகனாய் காத்திருக்கிறேன்...
உன் காதலெனும் மழைப்பொழிவிற்கு..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )





Thursday, June 16, 2011

நான் மட்டும் இங்கே..!



வைகாசி முழுநிலவு
வண்ணம் கலையாமலிருக்க...
ஊரு சனம் எல்லாம்
வண்டி கட்டி சென்றது
வைகையாற்றங்கரையில்
நிலாச் சோறு சாப்பிட...
நான் மட்டும் இங்கே
நீயின்றி நீட்டிப் படுத்திருக்கிறேன்
நம் வீட்டில் அமாவாசையாய்..!

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 5 )




Tuesday, June 14, 2011

வெட்கப் புன்னகையில்..!




செங்குருதி பாய்ந்தது போல்
வேலியில் பூத்த செங்காந்தள் மலர்தான்
இதுவரை அழகென்றிருந்தேன்..!
வெட்கத்தில் பூத்த மலர் கூட
இவ்வளவு அழகா என்று
உன் வெட்கப் புன்னகையைக் கண்டதும்
கண்டுகொண்டேன்..!

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 5 )




Thursday, June 9, 2011

சொல் எப்படி என்று..?



என்னோடு பேசும் போது மட்டும்
உன் பூ முகத்தில்
ஆயிரம் புன்னகை பூக்கள்
ஓரே நேரத்தில்
பூக்கின்றனவே அதெப்படி..?

என்னோடு உரையாடும் போது மட்டும்
மண்ணென்றும் கல்லென்றும்
பாராமல் உன்
மென்தண்டுக் கால்கள்
தானாக கோலமிடுகிறதே அதெப்படி..?

என் கண்ணோடு பேசும் போது மட்டும்
உன் கண்களிரண்டும்
கருவண்டை மறைக்கும்
வண்ணத்துப் பூச்சி போல் 
மிக வேகமாக படபடக்கிறதே அதெப்படி..?

என்னோடு பேசும் போது மட்டும்
உன் முகம் மதி மயக்கும்
மாலை நேரத்து
அடிவானச் சூரியனாய்
சிவந்து போகிறதே அதெப்படி..?

எப்படி எப்படி என்று
உன்னிடத்தில் எதைக் கேட்டாலும்
குழந்தைச் சிரிப்பை
பதிலாகத் தருகிறாயே..?
அதையேனும் சொல் எப்படி என்று..?
--------------------------------------------------


(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 4  )





Saturday, June 4, 2011

எம்மிளைய மகவாய்..! - பிறந்தநாள் கவிதை!


செந்தமிழ்த்தாய் வாழுகின்ற
இத் திருநாட்டில்
எம்மிளைய மகவாய்
பிறந்தாயே என்னகிலா..!

உன் பிறப்பால் நான் உவகை
கொண்டது போதாது!
மீறின் அது குல நலமாகிவிடும்..!
அதை யான் வேண்டேன்..!

இப்புவி உவகை கொள்ளும்படி
செய்து விடு பொன்னகிலா..!
அதுதான் உலக நலமாகும்!
உன் தாய் மனம் குதுகலமாகும்..!

எங்களின் புரட்சி மணத்தில் பூத்த
இரண்டாவது பூமலரே...
என் குடும்பமெனும் பூங்காவில்
முகிழ்த்திட்ட வாச மலரே..!

பிறப்பதுமிறப்பதும் ஓர் முறை...
இருக்கும் வரை இன்பத்தை
அனைவர்க்கும் வழங்கிடு...
அகிலத்தை அன்பால் வளைத்திடு..!

துணிச்சலை ஆயுதமாக்கி...
தூய அறிவை துணையாக்கி...
தமிழை அமுதாக்கி...
தடைகளனைத்தையும் உடைத்திடு..!

சமதர்ம உலகின் தலைவன்
நீதான் எனக் காட்ட
சரித்திரத்திதை மாற்றி எழுதிட
துணிந்து எழுந்திடு..!

இங்கே முத்தமிழும் மூன்று
முக்கனியும் மூன்று
உன் அகவையும் மூன்று
என் மகிழ்சிக்கு இதுவே சான்று! 

உலகிலுள்ள எல்லா நலங்களும்
வளங்களும் உன்னடி சேர
இந்த மூன்றாமாண்டில்
முத்துக் கவி பாடுகிறேன்..!

என் இளஞ்சேயே உன் வடிவில்
எந்தையைக் காணுகிறேன்
இன்று போல் என்றும் வாழ
உந்தை புதுக்கவி பாடுகிறேன்..!

வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!
இவ்வகிலம் இருக்கும் வரை
என்னகிலா நீ வாழ்கவே..!

(எனது இளைய மகனுக்கு மூன்றாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )




Thursday, June 2, 2011

அகதிகளாய் நாம்..!


நம் கண்களிரண்டும்
ஒன்றாக கலந்த நாளிலிருந்து
உன்னிடத்தில் நானும்...
என்னிடத்தில் நீயுமாய்
வாழ்ந்து வருகிறோம்..!

என்ன சாப்பிட்டாய்...
ஏது செய்கிறாய்...
என்று இங்கிருந்து நான் வினவ
அங்கிருந்து நீ வினவியபடி...
நம் விசாரிப்புகளை நீட்டிக்கிறோம்..!

அருகருகே உள்ள வீடுகளில்
குடியிருந்தாலும்...
நம் பெற்றோர்கள் இட்ட
சண்டைகளினால்
அகதிகளாய் நாம்..!

(கிராமத்து காதலர்களுக்காக எழுதிய கவிதை இது..!)
----------------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 3)


(நானெழுதிய கானா பாடலை படிக்க : மலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..!)