ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, January 29, 2016

முடியாது..!



"என்னால் முடியாது...
எதுவுமே முடியாது...
தொலைதூரத்தில்
இருக்கும் உன்னிடம்
அலைபேசியில்
ஆர்ப்பரிக்கும் அலையைப்போல்
பேசமுடிகின்ற என்னால்…
நேரில் சந்தித்தால்
ஒரு நொடிகூட
தைரியமாய் பேச முடியாது..!"
என அடிக்கடி சொல்லிக் ‘கொல்கிறாய்’
'வாய் பேச முடியாவிட்டாலென்ன?
உன்னிரு கண்கள் போதுமே
பேசுவதற்கு…' - என்றேன்
"அதுவும் முடியாது…
வெட்கத்தால்
கண்களை தாழ்த்திக் கொள்வேன்…
மொத்தத்தில்
உன்னை நேரில் பார்த்தால்
என்னால் எதுவுமே முடியாது…"
என்று சொன்னவளே…
குங்குமப்பூவைப் போல்
வெட்கப்பட மட்டும் உன்னால்
எப்படி முடிந்ததாம்..!


('முடியாது' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுத முடியுமா என்று என்னிடம் சவால் விட்டதற்காக எழுதப்பட்ட காதல் கவிதை இது... அட நீங்களும் கூட சவலான தலைப்பைத் தரலாம். கருப்பொருளும் உங்கள் விருப்பம் போல... 

மயிலிறகோடு நான் தயார்... நீங்கள்..? )




Thursday, January 28, 2016

உம்ம்ம்…!



என் தமிழ் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் பேச்சு பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் மொழி நடை பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் குறும்புகள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் சீண்டல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் கிறுக்கல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் கொஞ்சல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என்னை பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
இப்படி எல்லாவற்றிற்கும்
“உம்ம்ம்” சொன்ன கள்ளியே
என் காதலுக்கு மட்டும்
கள்ளத்தனமாய்
“ஊஹும்…” சொல்வதேன்..!




Wednesday, January 27, 2016

எதுவுமே வேண்டாம்..!



என்னிடமிருந்து
அன்பு வேண்டாம்...
அரவணைப்பு வேண்டாம்...
துன்பம் வேண்டாம்...
துயரம் வேண்டாம்...
அழுகை வேண்டாம்...
பொய்மை வேண்டாம்...
பேதம் வேண்டாம்...
ஆதிக்கம் வேண்டாம்...
இவை எதுவுமே
எனக்கு வேண்டாமென்று
சொல்கிறாயே...
அன்பொன்றிருந்தால்
அரவணைப்பு வந்துவிடும்!
இவையிரண்டும்
வந்துவிட்டால்
மற்றவை எல்லாம்
உன்னிடம் வாராமல் போய்விடுமே...
அப்புறம் எப்படி
அதனை வேண்டாமென்று
சொல்வாய்..?




Thursday, January 14, 2016

தைப் பொங்கல்..!




வான்மழை பொய்க்காமல்
நீர்நிலை வற்றாமல்
வயல் வெளி சிறுக்காமல்
பயிர் வகைகள் கருக்காமல்
உழவன் நிலை தாழாமல்
தமிழன் மானம் வீழாமல்
இந்த ஆண்டிலேனும்
காக்கட்டும் இந்த தைப் பொங்கல்..!

பூங்கரும்பு பந்தலிட
தேன்கரும்பு பொங்கலிட
வானுயர்ந்த சூரியனும்
நிலமுயர்த்தும் விலங்குகளும்
ஏர் பிடிக்கும் தமிழினமும்
செழித்துத் தழைத்திட
செம்மையாய் வரட்டும்
இந்த தைப்பொங்கல்..!

(என் அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்)




Wednesday, January 13, 2016

மூன்றாம் பிறைகள்..!


பௌர்ணமி நிலவால்
மூன்றாம் பிறைகள்
அனைத்தும்
மின்னும் நட்சத்திரங்களாகும்
விந்தைதனை
இப்பூவுலகில் காண்கிறேன்! -
உன்றன் வகுப்பறையில்..!




Wednesday, January 6, 2016

எது ஊடக அறம்?



வீடு, மனை விற்பனைக்கு
என்று முதல் பக்கத்தில்
வண்ணமயமான
விளம்பரத்தை வெளியிட்டு விட்டு
ஏரி, குளங்கள் ஆக்ரமித்து
வீடுகள் கட்டப்பட்டன
என்ற செய்தியை
கடைகோடி மூலையில்
வெளியிட்டு
தங்கள் ஊடக அறத்தை
நிரூபித்துக் கொள்கின்றன
பத்திரிகைகள்...

**************

நீர் நிலையை
அழித்தெடுத்து
ஏரிக்குள் வீடு கட்டி
விவசாயிகளின்
வயிற்றில் அடித்தான்
ஒருவன்...
பேராழியாய்ப்
பெருக்கெடுத்து
அவன் வயிற்றில்
அடித்தது பெருமழை...


***************