ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, January 19, 2017

இளந் தமிழ்க் காளைகளே..!


மானமுள்ள தமிழா…
இன மானமுள்ள தமிழா…
மக்களாட்சி என்று சொல்லும்
மந்திகளின் இடையிலே
பொம்மை ஆட்சி நடத்துகின்ற
நாட்டில் இருக்கிறோமடா!
பதவிக்காய் பல்லிளிக்கும் பச்சோந்திகளிடையே
விரவிக் கிடக்கிறோமடா!
பாயும் புலியைப் போலவே
சீறி நீயும் எழுந்திடடா!

ஆட்சியாளன் என்ற பெயரில்
ஆட்டம் போடலாகுமா?
தமிழின மக்களின் மானத்தை
தட்டிப் பறிப்பது நியாயமா?
குடியில் விழுந்து கிடக்கும் இனமென
குறுக்குப்புத்தி மாறுமா!
சட்டம் என்ற பெயரிலே
தமிழனை கட்டம் கட்டலாகுமா?
தமிழினத்தின் காளைகளை
வேரறுக்கலாகுமா?

மத்தியில் ஆட்சி என்று
மந்திகளைப் போல் திட்டம் தீட்டி
எமது பொருளாதாரம் ஒழித்தாய் – பொறுத்தோம்!
அந்நியப் பொருள் நுழைய
அனுமதித்தாய் - பொறுத்தோம்!
தமிழ்நாட்டு மரமான
பனைக்கு தடை விதித்து
பன்னாட்டு குளிர்பானங்களை
அனுமதித்தாய் – பொறுத்தோம்!
இன்னும் எத்தனை எத்தனையோவைகளை
பொறுத்தோம்..!

குட்டக் குட்டக் குனியும் கூட்டம் என்று
ஆட்டம் போட்ட பேடிகளே
முட்ட வரும் காளைகளை வட்டமிட்டு
அடக்கியாளும் சல்லிக்கட்டை
சட்டம் போட்டு தடுக்க நினைத்தால்
விட்டுவிடுவானா – தமிழன் விட்டுவிடுவானா?
மானம் காக்க பிறந்த இனம்
எங்கள் தமிழினமடா!
சங்க காலம் தொட்டே
சிங்க நிடை போட்ட இனமடா!

சல்லிக்கட்டு காளைக்காக
முன் வைத்த காலை
இன்னும் வேகமாக எடுத்து வைக்கும்
இளம் தமிழ்க் காளைகளே
"ஏறுதழுவுதல்
நம் இன வழக்கம்!
விவசாயம்
நம் குலவழக்கம்" என்று முழங்கிடு!
ஆரியர்கள் சூழ்ச்சி கண்டும்
அடங்காத தமிழ்நாடிது!

சேர, சோழ, பாண்டியர்கள்
வீரம் சொறிந்த நாடிது!
உயிரைத் தந்து மானம் காக்கும்
சேயைத் தந்த நாடிது!
இனத்தை அழிக்க நினைப்பவனை
எதிர்த்து போராடு!
இணைந்து நானும் போராடுகிறேன்
தோளுக்குத் தோளோடு!

பண்பாட்டை அழிக்க நினைக்கும்
பன்னாடைகளே தமிழகத்தைப் பாருங்கள்!
பதவி ஆசை பிடித்தலையும் - தமிழகத்தின்
அரசியல் பச்சோந்திகளே பாருங்கள்!
எழுச்சி கொண்ட இந்த இளைஞர் கூட்டம்
ரயிலை எரிக்கவில்லை!
பயணம் செய்யும் பேருந்தை
பாய்ந்து கொளுத்தவில்லை!
அங்கும் இங்கும் சூறையாடி மக்களை
துன்புறுத்தவில்லை!
சாதி, மத கலவரம் போல்
மக்களை வெட்டி சாய்க்கவில்லை!

எழுச்சி இது! எழுச்சி இது! தன்மான எழுச்சி இது!
தானாய் எழுந்த எழுச்சி இது!
சுயம்புவாய் எழுந்த எழுச்சி இது!
வீரம் கலந்த தாய்த் தமிழ் பாலின்
வீரியம் மிக்க எழுச்சி இது!
பிரியாணி பொட்டலத்திற்கும்
இருநூறு ரூபாய்க்கும் கூடிய கூட்டமல்ல இது!
தமிழரின் பண்பாட்டைக் காக்கக் கூடிய
தமிழ் இளங்காளைகளின் கூட்டம் இது!
காளையை அடக்க நினைத்தாய்
ஒராயிரம் ஒரு லட்சமல்ல
ஒரு கோடி காளைகள் எழுந்திருக்கிறது பார்!
தம் தினவெடுத்த தோள்களோடு
களத்தில் போராடிக் கொண்டிருக்கிறது பார்!

எடுத்ததெற்கெல்லாம் அறிக்கை விடும்
அரசியல் ஓநாய்கள் ஒடுங்கிப் போய் விட்டன
எடுத்ததெற்கெல்லாம் ஆமாம் சாமி போடும்
ஈனப் பன்றிகள் இருப்பிடத்தில் ஒளிந்து கொண்டன
இப்படிப்பட்ட அரசியல் கிருமிகளை
ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய எம்மினம்
குடியில் விழுந்ததடா எம் தமிழினம்
என்று வெம்பிக் கிடந்திருந்தேன்!
வெம்பாதே தமிழா… வெஞ்சுடராய் எழுகிறோம்
என்று நம்பிக்கையூட்டிய தமிழ் இளைஞர்களே...

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும்
இந்த போராட்டம்
அமைதியான முறையில் இருக்கட்டும்
எதற்கும் சேதமில்லாது
எவரிடத்தும் பேதமில்லாது
எவனுக்கும் செவி சாய்க்காது
தொடரட்டும் நம் போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்
நம் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்!

இத்தோடு நின்று விடாதே தமிழா
பன்னாட்டு நிறுவன ஆக்கிரமிப்பிற்கு எதிராக
பொம்மை ஆட்சிக்கு எதிராக
பெண் கொடுமைகளுக்கு எதிராக
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக
விவசாயிகள் தற்கொலைக்கு எதிராக
தரங்கெட்ட அரசியலுக்கு எதிராக
இன்னும் பலவற்றுக்கும் எதிராக
நாம் போராட வேண்டுமடா தமிழா!

ஏறு தழுவும் போராட்டம்
வெல்லும் காலம் வந்திடினும்
நீறு பூத்த நெருப்பாய் இருப்பாய் தமிழா
பொம்மை ஆட்சியை தூக்கியெறிந்து
நம்மை நாமே ஆளுகின்ற
நல்ல நாள் வரும் வரை
நீறு பூத்த நெருப்பாய் இருப்பாய் தமிழா!
தமிழர் மானம் காக்கின்ற
தமிழன் நிலை உயர்கின்ற
நல்ல நாள் வரும் வரை
நீறு பூத்த நெருப்பாய் இருப்பாய் தமிழா!