ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, December 31, 2010

பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

குட்டிவயசு மோகனன்

செயலில் நல்லதைச் செய்திட

எதிலும் புதியதைப் புகுத்திட
நல் வளமும் நாட்டில் செழித்திட
என் சொல்வளம் எங்கும் பலித்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

தீயனவனவற்றைத் 
'தீ'யிட
பொல்லாதவைகளை அகற்றிட
பொறாமைதனை பொசுக்கிட
தீவிரவாதத்தை அழித்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

ஊழல் லஞ்சம் மறைந்திட

உண்மை நேர்மை ஓங்கிட
சாதிய அரசியல் மாய்ந்திட
சத்திய அரசியல் மலர்ந்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

உழவுத் தொழில்கள் பெருகிட

உழைக்கும் வர்க்கம் உயர்ந்திட
ஏற்றத் தாழ்வுகள் நீங்கிட
எங்கும் சமத்துவம் பரவிட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

புவியில் மாசு குறைந்திட

எங்கும் நல்மழை பெய்திட
சுயநலம் சுருங்கிப் போய்விட
பொதுநலம் பிறந்து வளர்ந்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

உலகில் அமைதி நிலவிட

உங்கள் திறமைகள் வெளிப்பட
உங்களின் நட்பு பெருகிட
உலகில் காதல் உயர்ந்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!


                              - மோகனன். 31.12.2010


(எனது அன்பிற்கினிய இணைய வாசகர்களுக்கு, இந்த மோகனனின் இனிப்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2011


வாழ்க வளமுடன்)Wednesday, December 29, 2010

கண்ணிமை மூட மறந்தால்..?

கண்ணிமை மூட மறந்தால்
உறக்கம் கண்ணைத் தழுவாது..!
மேகங்கள் கூட மறந்தால்
மழையும் இங்கே பொழியாது..!
தென்றல் உலவ மறந்தால்
உயிர்கள் சுவாசிக்க முடியாது..!
கதிரவன் உதிக்க மறந்தால்
பூமியில் வெளிச்சம் பரவாது..!
கன்னியவள் எனை மறந்தால்
என் மேனியில் உயிரும் வாழாது..?Thursday, December 23, 2010

விரல் தீண்டி இருந்தால்..!


மார்கழி மாதத்தில்...
அதிகாலைப் பனியில்...
என்னில் மட்டும் விடியல்...
என்னவனின் வருகையால்..!

அவன் விழி தீண்டி
என் விழி இமைக்க மறக்க...
அவன் நிழல் தீண்டி
என் இதழ் சிரிக்க மறக்க...
அவன் விரல் தீண்டி இருந்தால்
என் இதயம் துடிக்க மறந்திருக்குமோ..?                                              
Tuesday, December 21, 2010

உன் விரல் தீண்டலில்..!

உன் விரல் தீண்டலால்
உயிரற்று எழுத்துக்கள் கூட
என் கண் முன்னே
உயிர்பெற்று நிற்கிறது...
என் அலை பேசியில்
நீ அனுப்பிய குறுந்தகவலாக..!Monday, December 20, 2010

நான் நினைத்ததும்..!

ஒருவரின் எண்ணங்களால்
மற்றொருவரை
மகிழ்ச்சிப் படுத்த முடியும்
என்பதை
முதன் முதலில்
சாதித்துக் காட்டியது
காதல்..!
அக்காதல் தற்போது
நம்மிருவரின் எண்ணங்களையும்
ஆக்கிரமித்திருப்பது போல்
தோன்றுகிறது..!
ஏனெனில்…
நான் நினைத்ததும்
என் முன்னே வந்து நின்று
எனைத் திக்கு முக்காட வைக்கிறாயே..!Friday, December 17, 2010

யார் பெண்ணே நீ..?


கார்மேகத்தினைப் போலிருக்கும்
உனது கருங்கூந்தல்...
அதில் மூன்றாம் பிறை நிலவு
போலிருக்கும்
உன்னுடைய அழகு நெற்றி…
அதன்கீழே
கரிய நிறம் கொண்ட
வானவில்லைப் போலிருக்கும்
உனது அழகு புருவங்கள்…
வெட்டித் தெறிக்கும் மின்னலைப்
போலிருக்கும் உன்னிரு மின் விழிகள்..
பூத்துச் சிரிக்கும்
நட்சத்திரங்களைப் போலிருக்கும்
உனது புன்சிரிப்பு…
மாலை நேரத்து செங்கதிரோனை
அளவாக வெட்டியெடுத்தது
போலிருக்கும் உனது செவ்விதழ்...
வெண்மேகப் பட்டாடை போலிருக்கும்
உனது பட்டாடை...
எதைச் சொல்ல... எதை விட...
இத்தனையும் உன்னொருத்திக்கே
ஒரு சேரப் பொருந்துகிறதே
யார் பெண்ணே நீ..?

அணு அணுவாய் உனை
ரசித்தபிறகுதானடி தெரிகிறது
என் மன வானத்தின்
காதல் தேவதை நீயென்று..!
(அதை வார்த்தைகளில் வடிக்கும்
கவிஞன் நானென்று..!)
Monday, December 13, 2010

உடனே பேசு...?


பெண்ணே...
உன் மௌனத்தால்
இங்கு கரைவது
வினாடிகள் மட்டுமல்ல...
என் உயிர்நாடியும்தான்...
உடனே பேசு...?!


(அலைபேசியில் உரையாடும் போது எனக்கும் என்னவளுக்குமிடையே,  சண்டை வந்து விட... என்னவளிடமிருந்து பலத்த மௌனம்... பேசு பெண்ணே என்றால் பேசவில்லை... அப்போது தோன்றிய கவிதைதான் இது...)Saturday, December 11, 2010

கவியாயுதமேந்தியது யார்..?நம்மில் சாதிகளில்லை என்றவன் யார்..?

மூடத்தனங்களை ஒழிக்கச் சொன்னது யார்..?
சாத்திரங்கள் பொய்யென்றவன் யார்..?
பெண்ணியத்தை போற்றச் சொன்னது யார்..?

நம் தமிழினத்தை தட்டியெழுப்பியது யார்..?
வீரிய எழுத்தால் வீரத்தை ஊட்டியது யார்..?
பாமரனையும் பாய்ந்தெழச் செய்தது யார்..?
வெள்ளையனை விரட்ட கவியாயுதமேந்தியது யார்..?

யார்..? யார்..? அவன்தான் மகாகவி பாரதியார்?
தன் பாட்டுத் திறத்தாலே ‘எங்களை அடிமையாக்க
வெள்ளையனே நீ யாரெ’ன்று வினவியவன்..!
விடுதலைக்காக பேனாவையே ஆயுதமாக்கியவன்..!

பாரதி யார்? என்று பரங்கியனை கேட்க செய்தவனே...
மங்கிப் போயிருந்தபோது மதியென முளைத்தவனே...
பலமிழந்து கிடந்த போது பரிதி போல் முளைத்தவனே...
துவண்டு கிடந்த போது தோள் கொடுத்தவனே...

எங்களின் சுந்தரத் தமிழனே... தேன் தமிழ்க் கவிஞனே...
என் போன்ற ஏழைகளுக்கு ஏந்தலாய் இருந்தவனே...
நீ பிறந்த இந்நாளினை தேசியக் கவி நாளாக
கொண்டாடுகிறேன்... பண்பாடுகிறேன்.. வாழ்க நீ எம்மான்..!

(இன்று தேசியக் கவி பாரதியாரின் 129 வது பிறந்த நாள் விழா... அந்த மாபெரும் கவிஞனுக்கு... இந்த சிறுவன் கிறுக்கிய பிறந்த நாள் கவிதை...)


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் வித்து
இனிய தமிழ்க் கவிதைகளின் தனிப்பெரும் சொத்து
இந்திய விடுதலை வேள்வியை மூட்டிய முத்து
ஆதலால் அவன் மேல் கொண்டேன் பித்து..!
            
                                                                            - மோகனன்
பாரதி குறித்து நானெழுதிய பிற கவிதைகளைப் படிக்க வேண்டுமா..?
அக்கினிக் குஞ்சொன்று பிறந்தது பார் ..! (பிறந்த நாள் கவிதை)

மகாகவி பாரதிக்கு மரபுக் கவிதாஞ்சலி (நினைவு நாள் மரபுக்கவிதை)

Wednesday, December 1, 2010

புதிய திருக்குறளில் எயிட்ஸ் விழிப்புணர்வு...

தியை விடுத்து பரத்தையிடம் சித்தமாயின்
பத்திடுமே பாழும் ஏப்பு

ஐந்து நிமிட சுகத்திற்கலைந்தால் ஏப்பான

விந்தேயுனை வீழ்த்தி விடும்

கலவிக்கும் கற்புண்டு காணீர் தவறின்

விலையாகும் உமது உயிர்

உயிரான உறவோடி ராமல் வெளிசெல்லின்

உயிர்க்கொல்லி உடலில் சேரும்

உறையுள்ள தென்று முறையற்று நடப்பின்

குறைகொள் குழவி பிறக்கும்

தெளியாத குருதியை தேகத்தில் ஏற்றினால்

எளிதில் வருமாம் ஏப்பு

உமதில் லாளை ஏய்த்தால் காத்திருக்கிறது

எமனின் வாகனம் ஏப்பு

உனைநம் பியுள்ளோரை ஏமாற்றினால் வீணே

வினையாகும் உமது குலம்

பெற்றோரீந்த உடலை ஏப்புக் கிரையாக்கின்

கற்றோனாயினும் இழி கழுதையே

குலம்காக்க உனை ஈன்றால் - உடல்திமிரால்

மலத்தினும் கீழானாய் மனிதா

------------------------------------------------------------------------
ஃ எதுக்கும் அறிஞ்சொற்பொருள் கொடுத்திடறேன்

தி = மனைவி, பரத்தை= விலைமாதர் , விலைமாதன் , ஏப்பு = எயிட்ஸ், உறை = காண்டம், குறைகொள் = எயிட்ஸ் நோய் பாதிப்பு, குழவி = குழந்தை, தெளியாத குருதி = பரிசோதனை செய்யப்படாத ரத்தம், இல்லாள் = மனைவி, வினையாகும் = அழிந்து விடும்.

(நமக்கு அய்யன் திருவள்ளுவர் அளவுக்கெல்லாம் தமிழ் தெரியாதுங்க... எதோ எனக்கு தோணிணத குறள் வடிவத்துல எழுதியிருக்கேன்... குறையிருந்தால் சுட்டுங்க... ஒழுக்கமா வாழ உறுதியெடுப்போம்... ஏப்பு என்கிற எயிட்ஸை ஒழிப்போம்...

என்றென்றும் அன்புடன்

மோகனன்
)

இது குறித்து நானெழுதிய பிற கவிதைகளைப் படிக்க வேண்டுமா..?
உலக எயிட்ஸ் தினம் - விழிப்புணர்வுக் கவிதைகள்