ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, October 30, 2013

உண்டியல்


நீ என்னை சந்தித்துவிட்டு
செல்லும் ஒவ்வொரு முறையும்
உன் நினைவுச் சேகரங்களை
என் மனமெனும் உண்டியலுக்குள்
சேர்த்து வைக்கிறேன்...
என்றேனும் ஒருநாள்
அந்த உண்டியலை
திறந்து பார்க்க மாட்டாயா
என்ற நப்பாசையில்..!

(உண்டியல் என்ற பெயரில் கவிதை எழுத வேண்டும் என்று ஒரு வாசகரின் வேண்டுகோள். அதில் காதலைக் கொண்டுவரமுடியுமா என்று சவால் விட்டார். முயற்சித்துப் பார்ப்போமே என்று கிறுக்கியதுதான் இது...

இதுபோன்ற சிக்கலான தலைப்பினை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்... அதில் என்ன கருப்பொருள் வரவேண்டும் என்ற சவாலுக்கு நான் தயார்... நீங்கள்..?)




Tuesday, October 29, 2013

சிலந்தி வலை..!


தன்னுயிர் தழைக்க
தன்னுடலை உருக்கி
உமிழ்நீரைப் பெருக்கி
இல்லத்தைக் கட்டும்
சிலந்தியின் வலையைப் போல
உன்னுடலை வருத்தி
உன்னன்பைப் பெருக்கி
உனக்காக வாழாமல்
எனக்காக எல்லாவற்றையும் செய்து
எப்போதும் உன்னையே
நினைக்க வைத்திருக்கும்
உன்னுடைய அன்பு கூட
ஒருவித சிலந்தி வலைதானடி..!




Wednesday, October 23, 2013

குளிர் தென்றல்!


நடுங்கும் பகல்
பொழியும் மழை
சோம்பல் மேகங்கள்
ஆம்பல் சூரியன்
நடுக்கத்தில் பறவைகள்
ஒடுக்கத்தில் அணிற்பிள்ளைகள்
தங்களுக்குள் தலை புதைக்கும்
நாய்க்குட்டிகள்
கதகதப்பைத் தேடும்
பூனைக்குட்டிகள்
மழையில் முகம் கழுவும்
சாலையோர பூஞ்செடிகள்
தார்ச்சாலையில்
நெளியும் வானவில்கள்
நடைபாதை ஓரத்தில் திடீரென
முளைக்கும் கண்டத் திட்டுகள்
மழை நீரில் கப்பலாகும்
இலைச் சருகுகள்!
என இந்த மாரிக்காலத்தில்
எல்லாவற்றையும்
ரசித்துக் கொண்டிருக்கும் போது
திடீரென்று மோதும்
குளிர் தென்றல் காற்றில்
எனை நான் மறப்பது போல்
உன் வாசம் வீசும்போதும்
என்னை நான் மறந்து போகிறேன் அன்பே!




Monday, October 21, 2013

நீ ஒரு கொலைகாரி..!


என் உள்ளத்தை
கொள்ளையடித்த
கொள்ளைக்காரி என்றுதான்
உன்னை நினைத்திருந்தேன்!
என் உறக்கத்தை
கொலை செய்தபோதுதான்
நீ ஒரு கொலைகாரி
என்பதை கண்டுகொண்டேன்!
என்னை கொள்ளையடித்தது
மட்டுமின்றி
எனக்காக கொலையும்
செய்த காரணத்தால்
என் இதயச் சிறையில்
உனக்கு ஆயுள் தண்டனை
விதிக்கிறேனடி!




Friday, October 18, 2013

இரவினைத் தூங்க வைத்து!


இரவினைத் தூங்க வைத்து
இமைகளை விழிக்க வைத்தாய்!
கனவினைத் தூங்க வைத்து
கண்களை திறக்க வைத்தாய்!
நிலவினை தூங்க வைத்து
உன் நிலா முகம் காண வைத்தாய்!
நட்சத்திரங்களை தூங்க வைத்து
நமட்டுச் சிரிப்பை சிதற வைத்தாய்!
கருமேகங்களை தூங்க வைத்து
கவிதையை கிறுக்க வைத்தாய்!
என் துன்பத்தை தூங்க வைத்து
இன்பத்தை நுகர வைத்தாய்!
இத்தனையும் தூங்க வைத்தவளே
எப்போது எனை உன்
இதயத்தில் தூங்க வைப்பாய்?




Tuesday, October 15, 2013

உன் விரல் தொட்டு...



என் மடிக்கணினிக்கு
உன் விரல் தொட்டு
உயிர் கொடுத்தாய் என்பதற்காக
இன்றுவரை
அதன் இயக்கத்தை
நிறுத்தாமலேயே இருக்கிறேன்!




Saturday, October 12, 2013

அழகிற்கே இலக்கணம்!


பேச்சு மொழிக்கு இலக்கணம்
கற்றுத் தேர்ந்த நான்
உன் மௌன மொழிக்கு
இலக்கணம் தெரியாமல் திண்டாடுகிறேன்!
கம்பீர நடை பயின்று
தேர்ந்த நான்
உன் தளிர் நடையில்
தடுமாறுகிறேன்!
முல்லைக் கொடியின் அசைவில்
முறுவல் பூக்கும் நான்
உன் கொடி இடை அசைவில்
மூர்ச்சையாகிப் போகிறேன்!
கருநாகமே வந்தாலும்
அதை மயக்கும் திறன் கொண்ட நான்
உன் கருநாகக் கூந்தலில்
மயங்கிப் போகிறேன்!
சிட்டுக்குருவிகளின்
சிருங்காரப் பேச்சில் சிலாகித்த நான்
உன் சிக்கனப் பேச்சில்
சித்தம் சிதறிப் போகிறேன்!
கூடல் நகரில் பிறந்து
மாநகரையே மயக்கும்
சங்கத் தமிழே..!
சங்கீதத் தமிழே..!
உனைக் கண்ட பின்புதான்
அழகிற்கே இலக்கணம்
எதுவென்பதை அறிந்து கொண்டேன்!
அதன்படி ரசிக்கவும் கற்றுக் கொண்டேன்!