ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, February 25, 2013

முகவரியில்லாதோருக்கு முகவரி! - பாராட்டுக் கவிதை


முகமில்லாமல் போன எத்தனையோ முகங்களுக்கு
            முகம் கொடுத்த சேவையமைப்புகளில் முத்தாய்ப்பாய் நீ!
ல்விச் செல்வம் பெறுவதற்கு பொருட் செல்வமற்ற
             கள்ளமில்லா உள்ளங்களுக்கு 'கற்பகத் தரு'வாய் நீ!
லிகளைக் கூட வலிந்து சென்று ஏற்றுக் கொண்டு
             கற்போர் முகங்களில் மகிழ்ச்சியைத்  தரும் மந்திரமாய் நீ!
ரிதமோ, இசையோ, பொருளோ தராத ஞானத்தைத் 
             தரும் கல்விக்கே முகவரி கொடுத்த முகவரியாய் நீ..!


(வறுமைக் கோட்டிலிருக்கும் திறன்மிகு கிராமப்புற மாணவர்களின் உயர் கல்விக்குத் தேவையான நிதி உதவிகளை கொடையாளர்களிடமிருந்து பெற்று, அவற்றை அம்மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் சேவை அமைப்பிற்காக நானெழுதிய கவிதை இது. முதல் வரிகளில் உள்ள தடித்த முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்தால் அந்த அமைப்பின் பெயர் உங்களுக்கு புலப்படும். புலப்படுகிறதா?

நீங்களும் இந்த அமைப்பிற்கு உதவ விரும்பினால்:  http://www.mugavarifoundation.org

சென்னை, வேளச்சேரியில் உள்ள இந்த சேவை அமைப்பை எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் நடத்தி வரும் திரு. ரமேஷ் அவர்களுக்கும், எதிர்காலத்தில் நட்சத்திரங்களாய் மின்னப்போகும் இந்த அமைப்பின் மாணவர்களுக்கும் இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்)
Saturday, February 9, 2013

எங்களின் செல்பேசி..! - 350 வது கவிதைப் பதிவுகடந்த இரு நாட்களாய்
என் மெல்லியாளைக்
காணவில்லை...
எங்கு சென்றாள்...
என்ன ஆனாள் என 
இருதலைக் கொள்ளி எறும்பாய்
ஏங்கித் தவித்தேன்...
அமாவைசை நிலவாய்
தேங்கித் தவித்தேன்...

வாழிடத்தைப் பொருத்த வரை
நான் ஒரு தேசம்
அவள் ஒரு தேசமென்றாலும்
எங்களின்
சுவாசம் என்றும்
ஒன்றாய்த்தானிருந்தது...
செல்பேசி வழியே
நேசம் என்றும்
நன்றாய்த்தானிருந்தது...

நாங்கள் போகுமிடம்
தூரமோ அருகாமையோ
சொல்லாமல் போனதில்லை
இருவரும்... 
சொன்ன சொல்லை
மீறியதில்லை
இருவரும்...

எங்களின் செல்பேசி இரண்டும்
இருவரின்
உதட்டுச் சொற்களை உயிர்ப்பித்து
செவி வழியே
உடல் செல்களுக்கு உயிர் கொடுக்கும்...
கண் வழியே
மகிழ்ச்சிக் கடல் ஊற்றெடுக்கும்...
நேர கால தேசாபிமானங்களை
எங்களின் செல்பேசி
தோற்கடிக்கும்...
எங்களின் உணர்ச்சிகளுக்கு
உயிர் கொடுக்கும்...
எங்கள் காதலுக்கு உரமிட்டு
பயிர் வளர்க்கும்...

அவள் அழைக்கும் போது
மட்டும் என் செல்பேசி
சிலாகித்து சிணுங்கல் போடும்...
'சீக்கிரம் எனை எடுத்து
அணை'யென முனகல் போடும்...

தொட்டணைத்து எடுத்தால்
தேவதையின் குரல்
தேனாய் என் செவியினைத் தீண்டும்...
என் பிறவிப் பயனைத் தூண்டும்...

இப்படி அனுதினமும்
இன்பம் தந்தவளிடமிருந்து
இருநாளாய் 
அழைப்பில்லை...
இணைய வழி ஏதுமில்லை
அவள் அழைப்பின்றி
என் செல்பேசி செத்துக் கிடந்தது
உணர்ச்சியற்று உறைந்து கிடந்தது

அவளின்றி
என் செய்வேன்?
ஏது செய்வேன்?
எங்கே சென்றாள்?
ஏது செய்கிறாள்?
காணாமல் போனாளோ..?
காற்றாய்க் கரைந்தாளோ..?
என்னுடைய கேள்வி கணைகள்
எனையே பதம் பார்த்தன...

காற்றாய் மாறும்
சக்தி கிடைக்குமா?
சிட்டாய்ப் பறக்கும்
யுக்தி கிடைக்குமா?
அவளை நேரே பார்க்கும்
முக்தி கிடைக்குமா?
என  பலவிதப்  போராட்டங்கள்
என் மனதில்...
சொல்லாமல் போய் விட்ட அவளுக்கு
எவ்வளவு மன 'தில்?'

அவளின்றி இங்கே
நான் கடத்திய
ஒவ்வொரு கணமும்
ஒரு யுகத்தின் கனமானது...
மனத்தின் ஒவ்வொரு பாகமும்
ரணமானது...
மௌனங்கள் அனைத்தும்
என்னிடம்
காட்டுக் கூச்சல் போட்டது...

அவள் அழைத்து பேசட்டும்
செவிட்டில் அறைகிறேன்...
குழைந்து பேசட்டும்
குமட்டில் அறைகிறேன்...
மறுத்து பேசட்டும்
மண்டையில் அறைகிறேன்...
என்று கொந்தளிப்பில் இருந்தேன்
இரு நாட்களுக்குப் பிறகு
அழைத்தாள்...
செவி மடுத்தேன்...
செவி வழியே
அவள் அன்பின் தேன் வழிய
வழக்கம் போல்
அவளன்பில் கரைந்தேன்...
மொழிந்தேன்..!
காதல் மொழி 'தேன்..!'

--------------@----------------

(2009 ஆகஸ்டில் துவங்கிய இந்த வலைப்பூவில் 300- ஆவது கவிதை எழுதும் போது 2011 -ஆம் ஆண்டு நடப்பிலிருந்தது. இது எனது 350-வது கவிதைப் பதிவு.  இந்த 50 கவிதைகளை எழுத கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளா என்றால். அது காரணமில்லை. 

பணிச்சூழலும் பொருளாதாரச் சூழலும் இடம் தராமல் போனதால் ஏற்பட்ட தொய்வு இது. இனி இந்த தொய்வு இருக்காது என நம்புகிறேன். இந்த 350-வது கவிதையை எனை நேசித்துக் கொண்டிருக்கும் எனது கவிதைக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த 350-வது பதிவு வரை எனக்கு ஆதரவு தரும் என்னன்பு வாசக நண்பர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!

என்றென்றும் அன்புடன்
உங்கள் 
மோகனன்)