ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, April 28, 2010

நிலா வீட்டில்..!


‘நீயும் நானும் சேர்ந்து வாழ
ஏற்றதொரு இடம்'
வேண்டுமென்றாய்..!
நம் காதலைப்போல்
அங்கெப்போதும்
பிரகாசம் வேண்டுமென்றாய்..!
இருக்கிறது அப்படி ஓர் இடம்..!
அது இந்திர லோகமல்ல
சந்திர லோகம் என்றேன்..!
'அமாவாசை வருமடா..?
அப்போது என் செய்வாய்
என் அன்பே' என்றாய்..!
அடி அசட்டுப் பெண்ணே...
நிலவிற்கு ஏது…
வளர் பிறை..? தேய் பிறை..?
அது என்றும் முழு நிலவுதான்..!
பூமியிலிருப்பவர்களுக்கு மட்டுமே
அது அமாவாசையாகத் தெரியும்
நாம்தான் நீலா வீட்டில்
வசிக்கப் போகிறோமே…
அதற்கேது அமாவாசை..?
Tuesday, April 27, 2010

சந்தித்துக் கொள்ளும் போது..?


உன்னை சந்திக்கும் போது
நிறைய பேச வேண்டும்
என்ற நினைப்போடு
உனை சந்திக்க வருவேன்..!
நானும் உன்னுடன்
நிறைய பேசவேண்டுமடா
என்றபடி நீயும் வருவாய்..!
நாமிருவரும்
சந்தித்துக் கொள்ளும் போது
நாம்மால் வாய் திறந்து
பேச முடிவதில்லை..!
உனை உன் வெட்கம்
பேச விடாமல் செய்து விட…
எனை உன்னழகு
பேச விடாமல் செய்து விட்டதடி…
நான் என்ன செய்வேன்..!Friday, April 23, 2010

நட்பிற்காக வித்தியாசமான திருமண வாழ்த்துக் கவி..!

என் அன்பில் நிறைந்த நண்பன் விஜயகுமாருக்கு வருகின்ற ஏப்ரல் 25 அன்று, குலசேகர பட்டினத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த திருமண வாழ்த்துக் கவி இதோ... என்னோடு சேர்ந்து நீங்களும் மனதார வாழ்த்துங்களேன்..!இந்த படத்தை சொடுக்கினால் படம் பெரிதாய் விரியும்... வாழ்த்துக் கவியும் படிக்கக் கிடைக்கும்... கவிதையின் முதல் வரிகளிலுள்ள தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... இல்வாழ்வில் இணையவிருக்கும் இதயங்களின் இயற்பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..? சரியாய் படிக்கத் தெரியவில்லை எனில்... கவியை கீழே கொடுத்திருக்கிறேன் படியுங்கள்...

விடிவெள்ளி உன் வாழ்வில் உதிக்கிறது பார் நண்பா..!
விண்மகளும் உன் துணையாய் சேர்வதன் பால்..!
கத்தினை எதிர்க்கின்ற புது சக்தி கிடைக்கும்..!
நலம்தனை வென்று தரும் புது யுக்தி கிடைக்கும்..!
வருக்குமஞ்சாமால்…  யவற்றுக்குமஞ்சாமால்…
இன்பமாய்த் துவக்கு உன் இல்வாழ்க்கையை..!
குலம் காக்க ஓர் பெண் மகவை ஈன்றெடுத்து…
குதுகலமாய் உன் இல் வாழ்வை நீ நடத்து..!
மாசற்ற நண்பர் குழாம் ஒன்று கூடி – என்றென்றும்
நலம் வாழ வாழ்த்துகிறோம் நீவிர் வாழி..!
ர்ரென்றாலும் இருப்பதற்கில்லை எம் தோழா…
இன்பமுடன் இல்வாழ்வினைத் துவக்கிடுங்கள்..!

சூத்திரங்கள் பல அடங்கியதுதான் இல் வாழ்க்கை..!
உங்களுக்குள் எந்நாளுமன்பு நிலைக்குமென்றால்…
ர்க்காது உம் இல்வாழ்வில் என்றும் தொல்லை..!
விட்டுக் கொடுத்து வாழ்வீர்களெனில் இன்பமே எல்லை..!
யாழிசையும்  குழலிசையும் ஒன்றிணைந்து வாழ்வது போல்
இந்நாளில் இணைகின்ற மணமக்களே வாழ்க பால்லாண்டு..!


மணமக்கள்: நீ. விஜய குமார் , மு. சூர்யா
இணையும் நாள் : 25.04.2010
இணையும் இடம்: குலசேகர பட்டினம்


வாழ்த்தும் அன்பு நண்பர்கள்

அ. பிரேம் சந்திரன்
மோ. கணேசன்
வ. நவநீத கிருஷ்ணன்
ச. சுரேஷ் குமார்

(இது போல என் வேறு சில நணபர்களுக்கு நான் எழுதிய கவிதைகளை வாசிக்க வேண்டுமா..? கீழே உள்ள இணைப்புகளை உயிர்ப்பிக்கவும்...)
Thursday, April 22, 2010

தொலைத்த பின்னும் நிம்மதி..!


யாரேனும் தனக்குரிய
பொருளைத் தொலைத்து விட்டால்
நிம்மதியாய் உறங்குவார்களா..?
ஆனால் நான் உறங்குகிறேன்..!
என் மனதை தொலைத்து
விட்ட பின்பும்
நிம்மதியாய் உறங்குகிறேன்..!
ஏனெனில்…
என் மனதை
உன்னிடம்தான்  - அதுவும்
உரியவளிடம்தான்
தொலைத்திருக்கிறேன்
எனும் மன நிம்மதியோடு..!
Tuesday, April 20, 2010

என்னோடு நீ செய்த பயணம்..!


நேற்றைய பொழுது
என்னோடு நீ செய்த பயணம்...
என்னுள் இன்பத்தை
மட்டுமன்று பெண்ணே..!
என் இதயத்துள்
இனிப்பையும் ஊட்டியது..!
நீ என்னோடு
பேசிக் களித்த நிமிடங்களும்...
சீண்டி விளையாடிய தருணங்களும்...
செல்லமாய் அடித்த நிகழ்வுகளும்...
என்னோடு கைகோர்த்து
நடந்த நடையழகும்...
என் கையில் கல்வெட்டாய்
உன் காதலை பதிவுசெய்த
எழுத்தழகும்...
எனை முழுவதுமாய்
ஆட் கொண்டு விட்டன..!
அன்பிற்கினியவளே...
மீண்டுமொரு அதே
நாளிற்காக ஏங்குகிறேன்..!
தேங்குகிறேன்...!
உன்னிடம் மன்றாடுகிறேன்..!
வா என்னோடு...
மீண்டுமொரு வசந்தகால பயணத்திற்கு..!Friday, April 16, 2010

யுகங்களை நொறுக்கத் தெரிந்த எனக்கு..?


யுகங்களை நொடிகளாக்கும் மாயமும்
நொடிகளை யுகங்களாக்கும் மாயமும்
தெரிந்த மாயவித்தைக்காரியடி நீ..!
நீ என்னருகே இருக்கும் போது
யுகங்களை நொறுக்கத் தெரிந்த எனக்கு..?
நீ என்னருகே இல்லாத நாட்களில்...
ஒரு நொடியைக் கூட
என்னால் நொறுக்க முடியவில்லையடி..!Wednesday, April 14, 2010

தமிழ் மேல் தீராக் காதல்..! - தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவிதை..!


ஆமென்று சொன்னாலும் போமென்று சொன்னாலும் - தமிழ்ப்
பொல்லாக் காதல் போமோ..? பொல்லாக் காதல் போமோ..?
சர்ரென்று விட்டாலும் விர்ரென்று விட்டாலும் – உன்
அம்பிற்கு  இணையாகுமோ? தமிழ் அம்பிற்கு  இணையாகுமோ?
பசியென்று வந்தாலும்… புசித்து விட்டு வந்தாலும் – உனை
உண்ணாமலிருக்கத் தோணுமோ..? உண்ணாமலிருக்கத் தோணுமோ..?

முகில் நிறை முக்கூடல் நகரான… அகில் நிறை தமிழ்க்கூடல் நகரான
மா மதுரை எனை அழைக்குதோ..? கோ மதுரை எனை அழைக்குதோ..?
ஒரேயொரு பார்வை போதுமே… ஓரேயொருமுறை தரிசனம் போதுமே…
என நான் எண்ணுவது சரியாமோ..? நான் எண்ணுவது சரியாமோ..?
சாஸ்திரங்களற்றவன் நான்… ஆஸ்திகளற்றவன் நானென்று தெரிந்தும்
கனிவாய் அன்பு வைத்ததேனோ..? என்மேல்  அன்பு வைத்ததேனோ..?

கதவடைத்த வீடிற்குள் காற்றானாய்… மதகடைத்த அணைக்குள் நீரானாய்
கதவினை திறப்பது யாராமோ..? தமிழணையினை திறப்பது யாராமோ..?
சங்கம் வளர்த்த தமிழென்றாலும்... சிங்கம் நிகர்த்த தமிழென்றாலும்...
மதுரைத் தமிழுடன் இணையாமோ..? மூதுரைத் தமிழுடன் இணையாமோ..?
பேகன் வளர்த்த முத்தமிழன்றி... மோகனனும் வளர்க்கின்றான்…
பேதை அதில் மூழ்கிப் போகாமோ..? கோதையவள் மூழ்கிப் போகாமோ..?
தீம்பாவை நெஞ்சினிலே வாழும்… பூம்பாவை நெஞ்சினிலே வீழும்…
அத்திருநாளும் விரைந்து வாராதோ..? அத்தமிழன்புக்கு இரையாகாதோ..?(தமிழின் பால் பேரன்பு கொண்ட உங்களனைவருக்கும்... இச்சிறியவனின் உள்ளம் கனிந்த...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

தமிழின் பால் அன்பு கொண்டு... அவளுக்காக நான் வடித்த தமிழ்க் காதல் கவிதை... பிழையிருப்பின் பொறுத்தருள்வீர்..!)
Tuesday, April 13, 2010

உன் மீன் விழிகளை..! - குறுங்கவிதைகள்


என்னை மட்டுமல்ல
என் நினைவுகளையும் சேர்த்து
வசியம் செய்திருக்கிறாய்
என்பதை…
நீ என்னருகே
இல்லாத போதுதான்
உணர்ந்து கொண்டேன்..!

                    *** + ***

பெண்ணே…
உன் மீன் விழிகளை
மூடிக் கொள்..!
மீனவன் வலையுடன்
வந்து கொண்டிருக்கிறான்..!

                    *** + ***
அழகின் சிகரம் நீ…
அறிவின் சிகரம் நீ…
பெண்மையின் சிகரம் நீ…
பேரழகின் சிகரம் நீ…
பொறுமையின் சிகரம் நீ…
பொய்மையின் சிகரம்..?
வேறு யார்… நான்தான்..!

                    *** + ***

நடமாடும் நூலகத்தைக்
கண்டேன்
நடமாடும் வங்கியைக்
கண்டேன்
நடமாடும் கவிதையைக்
கண்டேன் என்றால்
அது நீதான் அன்பே..!

                    *** + ***

வீணை இசைக்காமலேயே
நாதம் எழுகிறதடி
உன் குதுகலப் பேச்சில்..!


                    *** + ***
Monday, April 12, 2010

செல்லக் கோபமா..? செல்லாக் கோபமா..?


நான் என்ன பொய் சொன்னாலும்
அதை அப்படியே
நம்பிவிடுகிறாயே அது ஏன்..?
உனக்கு அழகில்லை என்றேன்...
உனக்கு அறிவில்லை என்றேன்...
கோபக்காரி நீ என்றேன்...
அத்தனைப் பொய்களையும்
அமைதியாய்க் கேட்டுவிட்டு
'ஆமாம்.. நான் அப்படித்தான்...
ஆளை விடு என்கிறாயே..' அது ஏன்..?
உன் நினைவின்றி என்னால் வாழ இயலாது...
உன் குரலின்றி என்னால் பேச இயலாது...
உன் பார்வையின்றி என்னால் பார்க்க முடியாது
என்றெல்லாம் தெரிந்தும்
இப்படிச் செய்கிறாயே அது ஏன்..?
இவைகளெல்லாம் செல்லக் கோபமா..?
இல்லை செல்லாக் கோபமா..?Saturday, April 10, 2010

மந்தகாசப் புன்னகை..! - 150வது கவிதைப் பதிவு..!


வெள்ளி நிலவு
அழகாய்
வானத்தில் வீற்றிருக்க…
அதன் அழகை
மறைக்க நினைத்த
தென்னங்கீற்று…
தன் கீற்றுக் கரங்களை
விரித்தபடி
நிலவை மறைத்தது..!
அக்கீற்றினூடே
தெரிந்த அந்நிலவு
முன்பை விட
மிக அழகாக சுடர் விட்டு
பிரகாசித்தது மட்டுமின்றி...
மனதை மயககும்படியானதொரு
மந்தகாசப் புன்னகையொன்றையும்
உதிர்த்தது..!
அது போலத்தான்
உன் நிலவு முகத்தை
உன் கற்றை முடி மறைப்பதும்...
அதனூடே நீ மந்தகாசப்
புன்னகை புரிவதும்..!

(இது என்னுடைய 150-வது பதிவு ஆகும்... எனைப் படைத்த என் பெற்றோர்களுக்கும்... என் கவித்திறனை வளர்த்து விட்ட என் தாய்த்தமிழுக்கும்... இக்கவிதைகளின் ஊற்றான என்னவளுக்கும்... ஆதரவுக் கரம் நீட்டி வரும்... எனது அன்பு வாசகர்களாகிய உங்களுக்கும்.. எனது மனமார்ந்த நன்றிகள்...

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்

மோகனன்)Friday, April 9, 2010

மறுபடி பிறக்க வேண்டுமென்று..!


இன்னொரு ஜென்மம் எனபதில்
நம்பிக்கை இல்லாதவன் நான்..!
இந்த ஜென்மத்தில்
உன் அன்பில் மூழ்கி
அகமகிழ்ந்து போகையில்...
உனக்கென இன்னொரு
ஜென்மம் நான் மறுபடி
பிறப்பேனென்று...
பிறக்க வேண்டுமென்று...
நம்பிக்கை கொள்கிறேனடி..!Thursday, April 8, 2010

சாதாரண குடிமகனுக்கு..!


சாதாரண குடிமகனுக்கு
பயப்படாத அரசுப் பேருந்து..?
சரக்கடித்த குடிமகனுக்கு
அப்படி பயப்படுகிறது..!
அய்யா நீ ஏறாதே என்று ..!
பின்னே... அரசு வழங்கும்
மதுவை அருந்தும்
குடிமகன் என்றால் சும்மாவா..?Wednesday, April 7, 2010

பேசவே முடியவில்லையடா..!


உன்னிடம் என்னால்
பேசவே முடியவில்லையடா..!
எப்படிப் பேசினாலும்
உன் பேச்சால்
எனை மடக்கி விடுகிறாய்..!
என பொய்க் கோபம் காட்டும்
என் பொன் மணியே...
என்னதான் நானுனை
பேச்சினில் மடக்கினாலும்...
எனை உன் ஓரேயொரு
ஓற்றைப் பார்வை மடக்கி விடுகிறதே..!
அதற்கு முன்பு என் பேச்சொன்றும்
பிரமாதமில்லையடி..!Tuesday, April 6, 2010

பத்துத் திங்கள் எனைச் சுமந்து..!

திருமதி. வள்ளி மோகன்ராஜி. திரு. வீ. மோகன் ராஜி

மோகனத்தின் முதல் விந்தையே
உம்முயிரிள் ஓருயிரை
எனக்கீந்த எம்மன்புத் தந்தையே...
நின் திருத்தாழடி சரணம்..!

வள்ளி மணவாளரின்
வண்டமிழ்ச் சதியே...
பத்துத் திங்கள் பாங்காய்
எனைச் சுமந்து
பத்திரமாய் பெற்றெடுத்தாயே..!
உன் திருவடி சரணம்..!

உறவற்ற இவ்வுலகில்
உருக்கொடுத்து...
உயிர்க்கொடுத்து...
நல்லுடலையும் கொடுத்தாயே..!
நின் மலரடி சரணம்..!

அன்னைக் கிணையாக
அன்பு காட்டி...
அறிவைப் புகன்று...
உம் மகன்ற மார்பில்
எனைச் சுமந்த எந்தையே...
தங்களின் எழிலடி சரணம்..!

உங்களைப் போலொரு
உத்தமத் தம்பதிகளின் ஒரு
மகவாய் பிறந்ததென் பாக்கியம்...
எனை ஆளாக்க நீங்கள்
பட்ட துன்பங்கள் அனைத்தும்
என் கண்ணில் நீர்க்குளம்..!

எம்மைப் படைத்த
என் பிரம்மாக்களே...
என்றுமுங்கள் மகவாய்ப்
பிறக்கும்படியான
வரமொன்றை அருளுங்கள்..!
எனைப் பிறப்புவித்த இந்நாளில்
மட்டுமன்றி...
எந்நாளுமெனைக் காத்தருளுங்கள்..!

ஆண்டுகள் இருபத்தியொன்பதானாலும்
என்றுமுங்கள் நனி மகவே நான்..!
இதே நாளில் உங்களின்
பொன் மடியில்
நான் முதன் முதலாய்
துஞ்சியதைப் போல்...
இன்றும் துஞ்ச வேண்டுமென்ற
எண்ணமென் மனதில்
தோன்றுகிறது எந்தைகளே..!

பணி நிமித்தம் காரணமாய்
தங்களைப் பிரிந்து வாழ்ந்தாலும்
என்றுமுங்கள் ஆசிகளுடனே
நடை பயின்றுக் கொண்டிருக்கிறேன்
என் வாழ்க்கையில்..!
எந்தைகளே எனை வாழ்த்தியருளுங்கள்..!
Monday, April 5, 2010

இதழ்கள் என்றாலே..!


இதழ்கள் என்றாலே
எனக்கு என்றுமே
புத்துணர்ச்சிதான்..!
எழுத்துக்களைப் படிக்கத் தரும்
இதழ்களானாலும் சரி..!
அந்த எழுத்துக்களைப்
படித்துத் தரும்
உன் இதழ்களானாலும் சரி..!Thursday, April 1, 2010

உன் முகம் காணாத..?


உன் முகம் காணாத
ஒவ்வொரு நாளும்
எனக்கு அமாவாசை போலத்தான்..!
உன் குரல் கேட்காத
ஒவ்வொரு நாளும்
எனக்கு நிசப்த நாள் போலத்தான்..!
உன் குறும்புச் சிரிப்பைக்
காணாத ஒவ்வொரு நாளும்
எனக்கு குறைபட்ட நாள் போலத்தான்..!
போதும் பெண்ணே
என்னை வதைத்தது…
சீக்கிரம் காட்டேன் உன் பூ முகத்தை..!