ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, March 25, 2013

மூச்சுவிடாமல் முத்தமிடுகிறாயே..?


வனத்தில் விரவும்
பூந்தென்றல் போலே
வானத்தில் விரவும்
வெண்கதிர்களால் எனை
விடாமல் முத்தமிடுகிறாயே
சற்று மூச்சு விட்டுத்தான்
முத்தமிடேன்
என்று சூரியனிடம்
கொஞ்சினாள் நிலா மதி

வெப்ப நிறை
மூச்சுக்காற்றையும்
வெளிச்ச நிறை
முத்தக்காற்றையும்
விட்டுவிட்டால்
உயிர் நீத்து விடுவேன் அன்பே...
எனை விடுத்து
நீ விலகினால்
இருளைச் சுமப்பாய் அன்பே
என்றான் சூரியன்..!

உன் முத்தமும் வேண்டும்
உன் மூச்சுக்காற்றும் வேண்டும்
மூச்சு முட்ட நீ கொடுக்கும்
முத்தத்தால்
நான் மூர்ச்சையானால் பரவாயில்லை
நீ மூர்ச்சையாகி
விடக்கூடாது அன்பே...
நீ மூர்ச்சையாகி விட்டால்
என் வாழ்வே மூர்ச்சையாகி விடும்
என்றாள் நிலாமதி..!

பூமியை நீ சுற்றிக் கொண்டிருந்தாலும்
உன் மையல் எல்லாம்
என்மேல் என்பதால்தானே
தையல் உன்மேல்
கண்ணாக இருக்கிறேன்
உன்றன் கண்ணாக இருக்கிறேன்
மூர்ச்சையானாலும்
பரவாயில்லை
உனை முத்தமிடாமல் இருக்க மாட்டேன்
என்றான் சூரியன்..!

(எத்தனை நாட்களுக்குதான் மானிடக் காதலைப்பற்றியே எழுதுவது... பிரபஞ்சத்தின் காதலர்களான சூரியனையும் நிலவையும் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது... அதன் விளைவே இக்கிறுக்கல்...)




Friday, March 22, 2013

ஒரு துளி அமுது..! - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை



ஒரு துளி அமுது
தேனீக்களுக்கு முக்கியம்
இரு துளி மருந்து
போலியோ ஒழிப்பிற்கு முக்கியம்
மூன்று துளி உயிரணு
உயிர்ப் பெருக்கத்திற்கு முக்கியம்
நான்கு துளி பன்னீர்
விழா வரவேற்பிற்கு முக்கியம்
ஐந்து துளி கண்ணீர்
தூய அன்பிற்கு முக்கியம்
ஆறு துளி விடம்
பாம்பின் பாதுகாப்பிற்கு முக்கியம்
இப்படி இயற்கையோடு
இயைந்து போன துளிகளின்
ஆதியும் அந்தமும் நீரே...
உலகில் வாழும் மனிதனிலும்
மனிதன் வாழும் உலகினிலும்
உள்ளடங்கியிருப்பது எழுபத சதம் நீரே
ஒவ்வொரு துளியும் நமக்கினி உயிர் நீரே...
உலகிலுள்ளோர் இதை உணர்வீரே...
உயிர் நீரை சேமித்திடுவீரே...
வரும் தலைமுறைக்கு 'நீர் வழி' காட்டிடுவீரே..!

*************

இன்று உலக தண்ணீர் தினம்.. அதற்காக எழுதிய கவிதை... கீழே சில குறுங்கவிதைகளைக் கொடுத்திருக்கிறேன்... அதுவும் 'தண்ணீர்' என்பதால்...

*************

குடிநீரை வீணாக்காதீர்
'டாஸ்மாக்' கடையில்
அரசின் வாசகம்..!

*************

குடிமக்களுக்காக குடிநீரை
காய்ச்சித் தராத அரசு
குடிமகன்களுக்காக
லிட்டர் கணக்கில் காய்ச்சித் தருகிறது
டாஸ்மாக்கில்..!

*************

குடிநீரில் சாக்கடை நீர்
கலந்து விற்றாலும்
கண்டு கொள்ளா
அரசு அதிகாரிகள்
டாஸ்மாக் சரக்கில்
நீர் கலந்து விற்றால்
கதகளி ஆடிடுவார்
கை விலங்கை பூட்டிடுவார்
இதுவல்லவோ
'குடிமக்கள்' ஆட்சி..!

*************

இதையும் படிங்க...:  உயிர் தாகத்திற்கு..!




Wednesday, March 20, 2013

குருவிகளைக் காணோம்?



அதிகாலை வேளையில்
சிட்டுக்குருவியின் சிருங்காரக் குரல்கள்
எழுப்பிய காலம் போய்
இன்று செல்போன் குரல்கள்
நமை எழுப்புகின்றன..!
நகரம் நரகமாகிப் போய்விட்டதே
என்று கிராமத்தை
நோக்கிப் பறந்தால் - அங்கும்
அலைபேசி கோபுரங்கள்
அகோரப்பசியுடன்
கூறு போடக் காத்திருக்கின்றன
வானம்பாடியாய்த் திரிந்து
கானம் பாடிய
குருவிகளைக் காணோம்..?

தன் குலம் வாழ
குருவிகளைக் கொன்று
லேகியம் தின்றதொரு கூட்டம்
செயற்கை உரங்களையிட்டு
குருவிகளின் உணவுச்சங்கிலியை
அறுத்ததொரு கூட்டம்
உலகெங்கும் அளவளாவதற்கு
அலைக் கதிர்களைக் கொண்டு
குருவிகளை மலடாக்கியதொரு கூட்டம்
ஓங்கியுயர் மரங்களை அழித்து
குருவிகளின் வீடுகளை
உருத்தெரியாமல் அழித்ததொரு கூட்டம்
எதிர்காலச் சந்ததிக்கு
இனியில்லை இப்படியொரு
குருவிக் கூட்டம்!

(இன்று உலக சிட்டுக் குருவி தினம்... என் கவிதை கேட்டுக்கொண்டதற்காகவும் சிட்டுக்குருவியின் தீவிர ரசிகன் என்பதாலும் இக்கவிதையை எழுதியிருக்கிறேன்)




Monday, March 11, 2013

ஆழக்குழி தோண்டி..!? - முரண்பாட்டுக் கவிதை



அம்மா அப்பா
பொண்டு பொடிசு என
குடும்பமே ஒன்றிணைந்து
ஆழக்குழி தோண்டி
இரும்புக்கம்பிகளை இருத்தி வைத்து
வெயிலென்றும்
மழையென்றும் பாராமல்
அடுக்கடுக்காய்
செங்கல் சுமந்து
பெட்டி பெட்டியாய்
மணல் சுமந்து
மூட்டை மூட்டையாய்
சிமெண்ட் சுமந்து
வியர்வையாய்
நீராய்க் கரைத்து எழுப்பிய வீட்டை
கட்டி முடித்தவுடன்
விட்டு விட்டு
தன் குடிசைக்குச் சென்றது
கட்டடத் தொழிலாளியின் குடும்பம்!




Friday, March 8, 2013

காதலியின் வருகை..!


வைகறையில்
கதிரவன்தானே எழுவான்...
என் வைகறையில்
அனுதினமும்
முழு நிலவு எழுகிறதே
அதெப்படி..?

(இனிய மகளிர் தினவாழ்த்துகள்...)




Monday, March 4, 2013

பாலியல் வன்முறையை?



தில்லி பாலியல்
சம்பவத்திற்கு பிறகுதான்
மக்களிடையே
மாநில அரசுகளிடையே
எத்தனை விழிப்புணர்வுகள்...
குற்றவாளிகளுக்கு
எத்தனை காவடி தூக்கல்கள்...
பெண்களின் மேல்தான்
எத்தனை வன்மொழிச் சாடல்கள்...
தினமும் அரங்கேறும்
வன்புணர்வுக் கொடூரங்கள்...

தலைநகரில்
தலைவிரித்தாடும்
வன்புணர் கொடூரங்கள்
பாரதத்தாயின்
மாண்பெனும் மார்பினை
அறுத்தெறிகின்றன....
தாய்மையைப் போற்றும் நாட்டில்
பெண்களின் பாதுகாப்பு
தலைதெறிக்கின்றன

கொள்ளையை மன்னிக்கலாம்
படுபாதகக் கொலையை?
வன்முறையை மன்னிக்கலாம்
பாலியல் வன்முறையை?
திருடர்களை மன்னிக்கலாம்
வன்புணர் கொடூரர்களை?
இவைகளையெல்லாம்
மன்னிக்கலாகுமா?
கொன்றொழிக்காமல் விட்டால்
அது தகுமா..?

காதலிக்க மறுத்தால்
ஆசிட் வீசு
காமத்திற்கிணைய மறுத்தால்
கொன்று வீசு
சிறுமியென்றும் பாராதே
பாட்டியென்றும் பாராதே
தேவையெனில் வன்புணர்வில்
எடுத்துக் கொள்...
எடுத்துக் கொண்ட பின் 'கொல்'
எனத் திரியும்
ஈனப்பிறவிகளுக்கு
இந்நாட்டில் இடம் கொடுக்கலாமா?
இல்லை மூன்று வேளை
உணவளித்து
சிறையிலிடலாமா?

மனித உரிமை அமைப்புகள்
இதற்கெல்லாம்
மவுனம் சாதிப்பதேன்..?
இவ்வுலகிலிருந்தே அழிக்கப்படவேண்டிய
ஈனப்பிறவிகளுக்கு
குரல் கொடுப்பதேன்...
அவர்'களை' எல்லாம்
களை எடுக்க வேண்டாமா?
மனிதாபிமானமற்ற
ஈனப்பன்றிகள் மீது
ஈட்டியைப் பாய்ச்ச வேண்டாமா?

நமைப் பெற்றவள் ஒரு பெண்
நமை பேணிக் காப்பவள் ஒரு பெண்
நம்மோடு துணையாய்
கடைசி வரை வருபவள் ஒரு பெண்
என பேதம் தெரியாத
நாய்களுக்கு எதற்கு சட்டப் பாதுகாப்பு
பெண்களைப் பாதுகாக்காமல்
பேடிகளைப் பாதுகாக்க
எதற்கு காவல் அமைப்பு...

குற்றம் நீருபிக்கப்பட்டால்
அவன் நாடாள்பவனே ஆயினும்
அப்பேடியை உடனே தூக்கு
மக்கள் மத்தியில் மாட்டிடு 'தூக்கு'
ஆசிட் வீசினால்
அந்நாய்களை ஆசிட் ஆலையில்
தூக்கி வீசு...
கண்ணுக்கு கண் வாங்கு
இல்லையேல் ஆட்சியை விட்டு நீங்கு

பெண்ணியம் வாழ்ந்திட வேண்டுமெனில்
ஆணினம் மாறிட வேண்டும்
பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில்
கடும் சட்டங்கள் தோன்றிட வேண்டும்
இவைகள் இன்னும்
நம் புத்தியில் ஏறா விட்டால்
மீண்டும் மீண்டும்
முளைத்திடும்
தில்லியில் பாலியல் பலாத்காரம்...
சூரியநெல்லி விவகாரம்
ஆசிட் வீச்சில் உயிர் போகும்...

(நாளிதழ்களைத் திறந்தால், நாடெங்கும் நிகழும் வன்புணர்ச்சிகள், ஆசிட் வீச்சு கொலைகள், பெண்ணியத்திற்கெதிரான கொடுமைகள் ... என என் மனதை அரித்துக் கொண்டே இருந்தன. இதனை வாசகர் ரமேஷ் அவர்களும் கோடிட்டுக் காட்டிக் கொண்டே இருந்தார்...

இக்கவிதை பலகொடூரங்களால் காற்றில் கரைந்து போன பெண்ணிய தீபங்களுக்கு சமர்ப்பணம்)