ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, July 19, 2013

நீ மகளாகப் பிறந்திருக்கிறாய்! - பிறந்தநாள் கவிதை


உன் அன்னைக்கு
நீ மகளாகப் பிறந்திருக்கிறாய்
என்பதை விட
என் அன்னையே
என் மகளாகப்
பிறந்திருக்கிறாள் என்பதே
உண்மை என
உணர வைத்த தாயே

எங்கள் உயிர் மகள் நீயே!

நீ பிறந்த இந்நாளில்
இதயம் முழுதும்
இன்பம் பொங்குதடா!
அப்பா என நீ
எனை அழைக்கும் போது
என் ஆயுள் கூடுதடா!
என் மகளே... எங்கள் உயிரே...
நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!

உன் அன்னையைப் போல்
கற்பூர மூளையடா உனக்கு
எனையும் குழந்தையாக்கும்
குதூகலக் குறும்படா உனக்கு
மயில் தோகையைப் போல்
படரும் கூந்தலடா உனக்கு
புள்ளி மானைப் போல்
துள்ளும் நடையடா உனக்கு
மலரும் தாமரையைப் போல்
மனம் நிறையும் சிரிப்படா உனக்கு
உனை மகளாய் பெற்றதில்
மகிழ்ச்சி உனக்கல்லடா எனக்கு!
Thursday, July 18, 2013

வாலிபக் கவிஞரே வாலி! - இரங்கல் கவிதை


வாலிபக் கவிஞரே வாலி
வாழ்வாங்கு வாழ்ந்தவரே வாலி - நீ
தமிழ்க் கவியில்
நுண்மாண் நுழைபுழம் மிக்க ஆழி!
காதல் பாடல்களில்
எம் மனதைத் தாலாட்டும் தூளி!
சோகப் பாடல்களில்
மனதை கவிழ்த்துப் போடும் சோழி!
தத்துவத்தில்
எம் மனதை ஆழ உழும் மேழி!
வீரத்தில்
எமை தட்டி எழுப்பும் சேவற்கோழி!
காவியத்தில்
எமைக் கவர்ந்த அறி வாளி!
நீ மறைந்தாலும்
உம் வரிகள் இவ்வுலகில் வாழி வாழி!
Friday, July 5, 2013

எது உண்மையான அன்பு? - இளவரசன் மரணம்


தர்மபுரி காதல்
இன்று கண்ணீரில்
கரைந்து போனது...
காதலின் அடிப்படையே
அன்புதானே...
அந்த அடிப்படையையே
ஆட்டம் காண வைத்து விட்டதே
இந்த சாதி வெறி!
இது தகுமா..?
பூமி தாங்குமா..?

உலகில் தூயது
என்றால் அது அன்பு
மட்டுமே...
வாழும் அன்பு மட்டுமே
அதற்குப் பிறகே
மற்றவை எல்லாம்..!
இக்காதல்
கண்ணீரில் கரைந்தற்கு
வாழும் அன்பல்ல
பாழும் அன்புதானே காரணம்

இக்காதல்
துன்பியல் சம்பவத்தில்
மற்றவர்களின் அன்பெல்லாம்
அன்புதானா? - என
அன்பு மீதே
சந்தேகம் கொள்ள
வைத்துவிட்டதே?
இது சரிதானா?

மகளின் அன்பு
காதலில் நிறைந்து
கல்யாணத்தில் முடிந்தது
அவள் தந்தையின்
அன்போ
சாதிமேல் திரிந்து
சுய கொலையில் முடிந்தது...

கணவர் இறந்தாரே
என அவரின்
ஆருயிர் மனைவி
உயிர் துறக்கவில்லை
இதுதான் அவர் மேல்
அவர் மனைவி கொண்ட அன்பு?!
தந்தை போனாரே
என மகளும் மரிக்கவில்லை
இதுதான் அவர் மேல்
அவர் மகள் கொண்ட அன்பு?!

காதல் மனைவி
'தன்னுடன் வாழேன்' என்றதற்காக
தன்னுயிர் பிரிந்தான்
இளவரசன்...
இதுதான் காதல் மனைவி
மேல் அவன் கொண்ட அன்பு!
சாதி எனும் இரண்டெழுத்து
அன்பு எனும் சக்தி
வாய்ந்த மூன்றெழுத்தை
வென்று விட்டதே..?
என வெம்புகிறது அன்பு...
இதில் எது உண்மையான அன்பு?!?
செல்லுங்களடா
சாதிவெறி பிடித்த மிருகங்களே..!
Thursday, July 4, 2013

காதலாகிக் கசிந்துருகி..! - இளவரசன் மரணம்


காதலாகிக் கசிந்துருகி
கண்ணீர் மல்கி
கன்னியினைக்
கரம் பிடிக்க முயன்றான்
காளையவன்
இளவரசன்
கன்னியும் அவனைக்
கைப்பிடிக்க
முன் வந்தாள்..!

காதல் மனங்கள்
சதிபதியாய்
இணையத் தடை
வந்தது
சாதி எனும்
எமன் வடிவில்..!
எதுவரினும் இருவரும்
சமர் புரிவோமென
புரட்சித் திருமணத்தினை
தாமாகவே செய்து கொண்டனர்

இருமனம் இணைந்தது
குற்றமெனக் கருதி
சாதி வெறிபிடித்த
ஓநாய்கள் ஓலமிடவே
கன்னியின் தந்தை
தன்னையே
கொலை செய்துகொண்டார்
அப்போது வெடித்தது கலவரம்
எளியோரின் கிராமத்தில்
நீண்டது
வன்முறைக் கரம்
சாதித் தீ மூண்டதால்
அக் கிரமாம்
அக்கிரமக்காரர்களால்
ஆனது தீக்கிரை...

சாதீய ஓநாய்கள்
தொடர் ஊளையிடவே
அங்கு காட்சிகள் மாறின
சாதீயக் கட்சிகள்
அறிக்கையில் ஊறின
மிரட்டும் பாணியில்
ஓலம் ஊதின
கன்னியின் அன்னை
அழுது புலம்ப
அன்னை மடிதேடி
அவளும் கிளம்ப
அவனோ வெட்டி விடப்பட்ட
மொட்டை மரமானான்
தனித்து விடப்பட்ட
பாலை நிலமானான்

மனம் தளரா விக்கிரமாதித்தன் போல்
நீதிகேட்டு போராடினான்
நீதிமன்றத்திற்கு
வந்த கன்னியோ
வாழவிருப்பமில்லை அவனோடு
வாழ்வேன் இனி நான்
அன்னையோடு என்றாள்!
அத்தகைய முடிவு
அன்னை மேலுள்ள பாசமா
சாதி வெறிபிடித்த
நாய்களின் கோபாவேசமா?
அவனால் பிரித்தறியமுடியவில்லை

கரம் பிடித்தவள்
மனம் மாறுவாள்
மண வாழ்க்கை ஏறுவாள்
என நினைத்தவன்
எண்ணத்தில்
மண் விழுந்தது
மனம் துவண்டது
என்ன நினைத்தானோ
ஏது நினைத்தானோ
காலமொன்றே அறியும்
கன்னியின் பேச்சால்
காயம்பட்டவன்
தன்னையே மாய்த்துக் கொண்டான்
தன்னுயிரை நீத்துக் கொண்டான்
என ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன
சில கொலை என கூறுகின்றன
ஒரு காதல் மணம்தான்
இரு உயிர்களின் நீக்கத்திற்கு
காரணமென்று
யாரேனும் சொன்னால்
அவர்களை .....ஆல் அடிக்க வேண்டும்

இவைகள்
தற்கொலை அல்ல
சாதீய எண்ணங் கொண்ட
ஓநாய்கள்
செய்த கொலைகள் அன்றோ?
இத்தரங்கெட்ட நாய்களை
தண்டிப்பவர் யார்?
இச்சாதி வெறிபிடித்த நாய்களை
கொன்றழிப்பவர் யார்?
கேள்விகள் கிளை விட்டு முளைக்கின்றன
பதில் தருவார் யாரோ..?

மகள்தானே மணம் கொண்டாள்
மகிழ்ந்திருப்போம்
என கன்னியின்
தந்தையும் நினைக்கவில்லை
கணவன்தான் போய்விட்டார்
மகளேனும் வாழட்டும்
என அவளன்னையும்
நினைக்கவில்லை
கரம் பிடித்தவனோடு
வாழ்ந்து பின் அன்னையை
சமாதானம் செய்வோம்
என அவளும் நினைக்க வில்லை
எத்தனை துயர் வரினும்
துஞ்சாமல் கைப்பிடிப்போன்
என அவனும் நினைக்கவில்லை
போங்கடாங்க நீங்களும்
உங்க கல்யாணமும்..!

இப்படியே ஒவ்வொருவரும்
செய்து மாண்டால்
நம் நாட்டில்
சாதீயம் இருக்கும்
சமுதாயம் இருக்காது
சாதிவெறி இருக்கும்
சமத்துவம் இருக்காது
ஏற்றத்தாழ்வு இருக்கும்
ஒற்றுமை இருக்காது
போங்கடாங்க நீங்களும்
உங்க கேடுகெட்ட சமுதாயமும்..!

(கவிதை எழுதி கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. இத்தனை நாட்களாக எழுதத் தோன்ற இயலா அளவிற்கு மோசமான சம்பவங்கள் என் வாழ்வில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இன்று என்னை மட்டுமின்றி ஒட்டு மொத்த காதலர்களையே உலுக்கும் செய்தியாக இளவரசன் மரணம் அமைந்து விட்டது. நெஞ்சு பொறுக்கவில்லை... வார்த்தைகாளாக இங்கே கொட்டி விட்டேன். என்று மாறும் இந்த சமுதாயம்.

இளவரசா... பொறுத்திருந்திருக்கலாமே நீ... பொறுத்தவர்தானே பூமி ஆழ்வார்... ஆதலினால் காதல் செய்வீர் என்பதை, ஆதலினால் சாதல் செய்வீர் என்றாக்கி விட்டார்களே... உனது முடிவைக் கேட்டதிலிருந்து கண்ணீர் விம்முகிறது... 

சாதீய பலிக்கு உனது உயிரே கடைசியாக இருக்கட்டும்!

நிற்க மறுக்கும் கண்ணீருடன்

மோகனன்)