ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, December 31, 2010

பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

குட்டிவயசு மோகனன்

செயலில் நல்லதைச் செய்திட

எதிலும் புதியதைப் புகுத்திட
நல் வளமும் நாட்டில் செழித்திட
என் சொல்வளம் எங்கும் பலித்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

தீயனவனவற்றைத் 
'தீ'யிட
பொல்லாதவைகளை அகற்றிட
பொறாமைதனை பொசுக்கிட
தீவிரவாதத்தை அழித்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

ஊழல் லஞ்சம் மறைந்திட

உண்மை நேர்மை ஓங்கிட
சாதிய அரசியல் மாய்ந்திட
சத்திய அரசியல் மலர்ந்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

உழவுத் தொழில்கள் பெருகிட

உழைக்கும் வர்க்கம் உயர்ந்திட
ஏற்றத் தாழ்வுகள் நீங்கிட
எங்கும் சமத்துவம் பரவிட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

புவியில் மாசு குறைந்திட

எங்கும் நல்மழை பெய்திட
சுயநலம் சுருங்கிப் போய்விட
பொதுநலம் பிறந்து வளர்ந்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!

உலகில் அமைதி நிலவிட

உங்கள் திறமைகள் வெளிப்பட
உங்களின் நட்பு பெருகிட
உலகில் காதல் உயர்ந்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!


                              - மோகனன். 31.12.2010


(எனது அன்பிற்கினிய இணைய வாசகர்களுக்கு, இந்த மோகனனின் இனிப்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2011


வாழ்க வளமுடன்)Wednesday, December 29, 2010

கண்ணிமை மூட மறந்தால்..?

கண்ணிமை மூட மறந்தால்
உறக்கம் கண்ணைத் தழுவாது..!
மேகங்கள் கூட மறந்தால்
மழையும் இங்கே பொழியாது..!
தென்றல் உலவ மறந்தால்
உயிர்கள் சுவாசிக்க முடியாது..!
கதிரவன் உதிக்க மறந்தால்
பூமியில் வெளிச்சம் பரவாது..!
கன்னியவள் எனை மறந்தால்
என் மேனியில் உயிரும் வாழாது..?Thursday, December 23, 2010

விரல் தீண்டி இருந்தால்..!


மார்கழி மாதத்தில்...
அதிகாலைப் பனியில்...
என்னில் மட்டும் விடியல்...
என்னவனின் வருகையால்..!

அவன் விழி தீண்டி
என் விழி இமைக்க மறக்க...
அவன் நிழல் தீண்டி
என் இதழ் சிரிக்க மறக்க...
அவன் விரல் தீண்டி இருந்தால்
என் இதயம் துடிக்க மறந்திருக்குமோ..?                                              
Tuesday, December 21, 2010

உன் விரல் தீண்டலில்..!

உன் விரல் தீண்டலால்
உயிரற்று எழுத்துக்கள் கூட
என் கண் முன்னே
உயிர்பெற்று நிற்கிறது...
என் அலை பேசியில்
நீ அனுப்பிய குறுந்தகவலாக..!Monday, December 20, 2010

நான் நினைத்ததும்..!

ஒருவரின் எண்ணங்களால்
மற்றொருவரை
மகிழ்ச்சிப் படுத்த முடியும்
என்பதை
முதன் முதலில்
சாதித்துக் காட்டியது
காதல்..!
அக்காதல் தற்போது
நம்மிருவரின் எண்ணங்களையும்
ஆக்கிரமித்திருப்பது போல்
தோன்றுகிறது..!
ஏனெனில்…
நான் நினைத்ததும்
என் முன்னே வந்து நின்று
எனைத் திக்கு முக்காட வைக்கிறாயே..!Friday, December 17, 2010

யார் பெண்ணே நீ..?


கார்மேகத்தினைப் போலிருக்கும்
உனது கருங்கூந்தல்...
அதில் மூன்றாம் பிறை நிலவு
போலிருக்கும்
உன்னுடைய அழகு நெற்றி…
அதன்கீழே
கரிய நிறம் கொண்ட
வானவில்லைப் போலிருக்கும்
உனது அழகு புருவங்கள்…
வெட்டித் தெறிக்கும் மின்னலைப்
போலிருக்கும் உன்னிரு மின் விழிகள்..
பூத்துச் சிரிக்கும்
நட்சத்திரங்களைப் போலிருக்கும்
உனது புன்சிரிப்பு…
மாலை நேரத்து செங்கதிரோனை
அளவாக வெட்டியெடுத்தது
போலிருக்கும் உனது செவ்விதழ்...
வெண்மேகப் பட்டாடை போலிருக்கும்
உனது பட்டாடை...
எதைச் சொல்ல... எதை விட...
இத்தனையும் உன்னொருத்திக்கே
ஒரு சேரப் பொருந்துகிறதே
யார் பெண்ணே நீ..?

அணு அணுவாய் உனை
ரசித்தபிறகுதானடி தெரிகிறது
என் மன வானத்தின்
காதல் தேவதை நீயென்று..!
(அதை வார்த்தைகளில் வடிக்கும்
கவிஞன் நானென்று..!)
Monday, December 13, 2010

உடனே பேசு...?


பெண்ணே...
உன் மௌனத்தால்
இங்கு கரைவது
வினாடிகள் மட்டுமல்ல...
என் உயிர்நாடியும்தான்...
உடனே பேசு...?!


(அலைபேசியில் உரையாடும் போது எனக்கும் என்னவளுக்குமிடையே,  சண்டை வந்து விட... என்னவளிடமிருந்து பலத்த மௌனம்... பேசு பெண்ணே என்றால் பேசவில்லை... அப்போது தோன்றிய கவிதைதான் இது...)Saturday, December 11, 2010

கவியாயுதமேந்தியது யார்..?நம்மில் சாதிகளில்லை என்றவன் யார்..?

மூடத்தனங்களை ஒழிக்கச் சொன்னது யார்..?
சாத்திரங்கள் பொய்யென்றவன் யார்..?
பெண்ணியத்தை போற்றச் சொன்னது யார்..?

நம் தமிழினத்தை தட்டியெழுப்பியது யார்..?
வீரிய எழுத்தால் வீரத்தை ஊட்டியது யார்..?
பாமரனையும் பாய்ந்தெழச் செய்தது யார்..?
வெள்ளையனை விரட்ட கவியாயுதமேந்தியது யார்..?

யார்..? யார்..? அவன்தான் மகாகவி பாரதியார்?
தன் பாட்டுத் திறத்தாலே ‘எங்களை அடிமையாக்க
வெள்ளையனே நீ யாரெ’ன்று வினவியவன்..!
விடுதலைக்காக பேனாவையே ஆயுதமாக்கியவன்..!

பாரதி யார்? என்று பரங்கியனை கேட்க செய்தவனே...
மங்கிப் போயிருந்தபோது மதியென முளைத்தவனே...
பலமிழந்து கிடந்த போது பரிதி போல் முளைத்தவனே...
துவண்டு கிடந்த போது தோள் கொடுத்தவனே...

எங்களின் சுந்தரத் தமிழனே... தேன் தமிழ்க் கவிஞனே...
என் போன்ற ஏழைகளுக்கு ஏந்தலாய் இருந்தவனே...
நீ பிறந்த இந்நாளினை தேசியக் கவி நாளாக
கொண்டாடுகிறேன்... பண்பாடுகிறேன்.. வாழ்க நீ எம்மான்..!

(இன்று தேசியக் கவி பாரதியாரின் 129 வது பிறந்த நாள் விழா... அந்த மாபெரும் கவிஞனுக்கு... இந்த சிறுவன் கிறுக்கிய பிறந்த நாள் கவிதை...)


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் வித்து
இனிய தமிழ்க் கவிதைகளின் தனிப்பெரும் சொத்து
இந்திய விடுதலை வேள்வியை மூட்டிய முத்து
ஆதலால் அவன் மேல் கொண்டேன் பித்து..!
            
                                                                            - மோகனன்
பாரதி குறித்து நானெழுதிய பிற கவிதைகளைப் படிக்க வேண்டுமா..?
அக்கினிக் குஞ்சொன்று பிறந்தது பார் ..! (பிறந்த நாள் கவிதை)

மகாகவி பாரதிக்கு மரபுக் கவிதாஞ்சலி (நினைவு நாள் மரபுக்கவிதை)

Wednesday, December 1, 2010

புதிய திருக்குறளில் எயிட்ஸ் விழிப்புணர்வு...

தியை விடுத்து பரத்தையிடம் சித்தமாயின்
பத்திடுமே பாழும் ஏப்பு

ஐந்து நிமிட சுகத்திற்கலைந்தால் ஏப்பான

விந்தேயுனை வீழ்த்தி விடும்

கலவிக்கும் கற்புண்டு காணீர் தவறின்

விலையாகும் உமது உயிர்

உயிரான உறவோடி ராமல் வெளிசெல்லின்

உயிர்க்கொல்லி உடலில் சேரும்

உறையுள்ள தென்று முறையற்று நடப்பின்

குறைகொள் குழவி பிறக்கும்

தெளியாத குருதியை தேகத்தில் ஏற்றினால்

எளிதில் வருமாம் ஏப்பு

உமதில் லாளை ஏய்த்தால் காத்திருக்கிறது

எமனின் வாகனம் ஏப்பு

உனைநம் பியுள்ளோரை ஏமாற்றினால் வீணே

வினையாகும் உமது குலம்

பெற்றோரீந்த உடலை ஏப்புக் கிரையாக்கின்

கற்றோனாயினும் இழி கழுதையே

குலம்காக்க உனை ஈன்றால் - உடல்திமிரால்

மலத்தினும் கீழானாய் மனிதா

------------------------------------------------------------------------
ஃ எதுக்கும் அறிஞ்சொற்பொருள் கொடுத்திடறேன்

தி = மனைவி, பரத்தை= விலைமாதர் , விலைமாதன் , ஏப்பு = எயிட்ஸ், உறை = காண்டம், குறைகொள் = எயிட்ஸ் நோய் பாதிப்பு, குழவி = குழந்தை, தெளியாத குருதி = பரிசோதனை செய்யப்படாத ரத்தம், இல்லாள் = மனைவி, வினையாகும் = அழிந்து விடும்.

(நமக்கு அய்யன் திருவள்ளுவர் அளவுக்கெல்லாம் தமிழ் தெரியாதுங்க... எதோ எனக்கு தோணிணத குறள் வடிவத்துல எழுதியிருக்கேன்... குறையிருந்தால் சுட்டுங்க... ஒழுக்கமா வாழ உறுதியெடுப்போம்... ஏப்பு என்கிற எயிட்ஸை ஒழிப்போம்...

என்றென்றும் அன்புடன்

மோகனன்
)

இது குறித்து நானெழுதிய பிற கவிதைகளைப் படிக்க வேண்டுமா..?
உலக எயிட்ஸ் தினம் - விழிப்புணர்வுக் கவிதைகள்Tuesday, November 30, 2010

என் இதய சிம்மாசனத்தில்...

நட்சத்திரக் கூட்டத்தின்
நடுவே வட்ட நிலா
கொலு வீற்றிருப்பதைப் போல
என் இதய சிம்மாசனத்தில்
நீதான் அன்பே கொலு வீற்றிருக்கிறாய்..!

நீ கொலு வீற்றிருப்பதை
உன் உள்மனதிடம் மட்டுமல்ல
உன் உறவுக் கூட்டத்திடம்
போய்ச் சொல்...
உனக்கான இளவல் இங்கே
காத்துக் கொண்டிருக்கிறான் என்று..!Friday, November 26, 2010

மும்பைக்கு வாய்த்த பொல்லாத ஓர் இரவு..! - மும்பை தாக்குதல் இரண்டாமாண்டு நினைவுக் கவியாஞ்சலி

பொல்லாத ஓர் இரவில்
பொல்லாங்கு செய்பவர்கள்
பல்லாக்கு தூக்கிகள் போல்
பதுங்கிய படி வந்திட்டார்…
பாகிஸ்தானிலிருந்து
பயங்கர ஆயுதங்களுடன்
மும்பையில் நுழைந்திட்டார்

அவர்களெண்ணத்தில்
அவல எண்ணங்கள் உதித்திருக்க
அதுவரை உதித்திருந்த
கதிரவனோ…
பயங்கர இரவைக் காணச்
சகியாமால்…
சட்டென்று மறைந்து போனான்…

சட சடவென்று
துப்பாக்கியால் சுட்டபடி
தீயவர்கள்
திகில் கொடுக்க…
மும்பை மாநகரம்
திடுக்கிட்டு விழித்தது…
திகிலில் உறைந்தது…

விட்டில் பூச்சிகளிடம்
வீரத்தைக் காட்டிய
ஈனப்பிறவிகள்…
ரயில் நிலையத்தில்
ரணகளத்தை காட்டிவிட்டு
நட்சத்திர விடுதிக்குள்
நரிகளைப் போல் நுழைந்தன…
கண்ணில் பட்டோரை
சடுதியில் கொன்றன…

உலகத்தின் பார்வை அனைத்தும்
இங்கு குவிந்திருக்க…
வெண்ணிலவும் இந்நிகழ்வை
வேதனையோடு பார்த்திருக்க
வெறியாட்டம் போட்ட
ஈனப் பன்றிகள்…
குதியாட்டம் போட்டன…

அப்பன்றிகளை வேட்டையாட
வேங்கைக் கூட்டமொன்று
புயலெனக் கிளம்பிற்று…
உயிரை துச்சமெனக் கருதி
கடமையை உயிரெனக் கருதி
பிற உயிர்களின் நலன்களைக் கருதி
அவ்வேங்கைகள் பாய்ந்து வந்தன…

ஊழல்வாதிகள் செய்த வினை
ஊடகங்கள் செய்த வினை
அத்தீயவர்களுக்கு
திட்டமாக…
வேங்கையின் தாக்குதல்கள்
விபரீதமாயிற்று…
வீரம் காட்டிய வேங்கைகள்
வீரமரணம் எய்தின…

இறுதியில்…
இன்னுயிர்களை ஈந்து
ஈனப்பன்றிகளை
அழித்தன…
இந்தியர் அனைவரும்
அமைதிப் பெருமூச்செய்தினர்…

உயிரினை இழந்தோர் பலர்...
அங்கே உறவுகளை
இழந்தோர் பலர்…
இறந்தவர்
பல மதத்தினராயினும்
அவர்களைக் காத்தது
இந்தியரன்றோ…

ஒற்றுமை காட்டிடும்
இத்தேசத்தில்
பிற நாட்டு
தே… மகன்களுக்கு
ஒற்று வேலை செய்தலாகுமோ…
நம் தேசத்தை
கூறு போட நினைப்பது தகுமோ…

இதற்குப் பின்னேனும்
விழிக்க வேண்டாமோ நாம்…
வீணர்களை விரட்ட
வேண்டாமோ நாம்…
இத்துன்ப நிகழ்வு நிகழ்ந்து
இன்றோடு ஆண்டிரண்டு...

அழுது கரைந்தாலும்
உருண்டு புரண்டாலும்
உயிர்கள் மீளாது…
நம் உள்ளங்களோ கண்ணீர்
உகுக்காமலிருக்காது…
உயிர் நீத்த உள்ளங்களுக்கும்
மானம் காத்த மாவீரர்களுக்கும்
கண்ணீர் கவியாஞ்சலி செலுத்துகிறேன்
காணிக்கையாக்குகிறேன்…

போனவரை போகட்டும்
இனியொமொரு
தாக்குதலை…
இம் மண்ணில் நடத்த
விடமாட்டோம்…
மீறி நடக்க வைக்க முயல்பவர்களை
நசுக்கியெறிவோம்…

எச்சமர் வரினும்
அவனியில் அஞ்சாமாட்டோம்
அசகாய சூரனென்றாலும்
அடியோடு
அழித்தெடுப்போம்…

இது…
நம்நாடு…
நம்தேசம்...
நம் மக்கள்…
நாமனைவரும் இந்தியர்கள்…
என்ற எண்ணம் காப்போம்...
என்றும் இந்தியனாய் இருப்போம்...

(இன்றோடு இத்தயரச்சம்பவம் நிகழ்ந்து இரண்டாண்டுகள் நிறைவடைகிறது... இச்சமரில் இன்னுயிரை நீத்த எம் மக்களுக்கும், என் வீரமறவ ராணுவ வீரர்களுக்கும் கண்ணீரோடு என் கவியாஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்... முதலாமாண்டு எழுதிய கவிதையை இங்கே சிறு மாற்றத்துடன் மீள்பதிவிலிட்டிருக்கிறேன்...)மும்பை தாக்குதல் - இரண்டாமாண்டு நினைவு மரபுக்கவிதாஞ்சலி

 

தொம்பையி னாறிய தீயவர் திமிரோடு
மும்பையில் துட்டக் கால் வைத்தனர் – மேலும்
தும்பைப் பூ போன்ற உயிர்களை வதைத்தனர்
வம்பையும் விலைக்கு வாங்கினர்.

வேதனைக் குரல்கள் நாற்புறம் ஓலிக்க
கோதனைக் காக்கிளம் பியதரி மாப்படை
சோதனைத் தீர்க்க தம்மின்னுயிரை ஈந்து
சாதனை படைத்தவ்வெஞ் சமர்.

ஆயிற்றத் துன்பம் நிகழ்ந் தாண் டிரண்டு
போயிற்றோ நம்மனக் கவலைகள் - மாவீரர்களே..?
தீயிட்டழிக்கும் கொடும் தீவிரவாதி களையவ்
வாயிலினில் வைத்தே வதைத்திடும்.

                                                             
                                                                    - மோகனன்

(மும்பைத் தாக்குதல் நடைபெற்று...இன்றுடன் இரண்டாமாண்டு நிறைவு ஆகிறது... அவ்வெஞ்சமிரில் இன்னுயிரை ஈந்து பிற உயிர்களைக் காத்த மாவீரர்களுக்கு உங்களனைவரின் சார்பிலும் இந்த மரபுக்கவிதையினை கண்ணீர் அஞ்சலியுடன் சமர்ப்பிக்கிறேன்... இனியும் இதுபோன்ற துன்பியல்கள் இந்தியாவில் நடைபெறக்கூடாது என்ற நற்சிந்தனைகளுடன் உங்களிடம் இதைப் படையலிடுகிறேன்...)
Wednesday, November 24, 2010

உன் கெண்டை விழிகளை..!

உன் கெண்டை விழிக் கண்ணாலே
எனை சுண்டி இழுத்தது
போதும் பெண்ணே..!
சற்றேனும் உன் கெண்டை
விழிகளை தூங்கச் சொல்...
உனைப் பார்த்ததிலிருந்து
என் விழிகள் இமைக்க
மறுக்கிறது..!
இதயமும் இயங்க மறுக்கிறது..!Monday, November 22, 2010

காத்துக் கொண்டிருக்கிறேன்..!

அன்பே..!
நீ இருக்கும் ஊர்...
எனக்கு கோவிலானது..!
நீ இருக்கும் திசை...
எனக்கு சூரியன் உதிக்கும்
திசையானது..!
நீ வரும் பேருந்து...
எனக்கு திருவிழா தேரானது..!
கடவுளின் தரிசனத்திற்கு
காத்திருக்கும் பக்தனைப் போல்
உன் தரிசனத்திற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறேன்..!
சீக்கிரம் வந்து எனக்கு
காதல் அருள் பாலிப்பாயா..?Friday, November 19, 2010

உன்னழகில் சுகப்'பட்டு..!'

யார் நெய்த பட்டடி அது...
உன் கைப்பட்டு...
உன்னுடல் பட்டு...
உன் இடை பட்டு...
உன் கால் பட்டு...
தன் அழகை தொலைத்துவிட்டு
உன்னழகில் சுகப்பட்டு
என் மனதை சுழற்றிய பட்டுதான்
இன்று நீ காட்டியிருந்த
காஞ்சிப் பட்டு..!

நெய்தவனுக்கு
கை வலித்ததோ இல்லையோ..?
உன் பட்டணிந்த அழகைப் பார்த்து
என் மனது வலித்தது...
நான் அந்த பட்டாக இல்லையே என்று..!

(என்னவளை பட்டுப்புடவையில் முதன் முதலில் தரிசித்தபோது எழுதிய கவிதை இது..!)Wednesday, November 17, 2010

உன் வரவிற்காக காத்திருப்பது..!

உலகில் என்னால்
பொறுத்துக் கொள்ள முடியாதது
ஒன்று உண்டெனில்
அது காத்திருப்பதுதான்..!
அதைப் போலொரு
கொடுமை வேறில்லையடி..!
ஆனால் உன் வரவிற்காக
நான் காத்திருப்பது மட்டும்
மிகவும் சுகமாக இருக்கிறதே..!
அதெப்படி..?Friday, November 12, 2010

நட்பிற்கு திருமணம் - புரட்சித் திருமண வாழ்த்துக் கவி..!

என் அன்பில் நிறைந்த நண்பன் ராஜேந்திர பிரசாத்திற்கு இன்று திருமணம்... என்னுடைய பட்டமேற்படிப்பு படிக்கும் காலத்தில், நான் துவண்டு போயிருந்த போதெல்லாம் எனக்கு ஊக்கத்தையும், உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும் அளித்த எனது அன்பு நண்பனுக்கு நவம்பர் 12, 2010 அன்று திருமணம்...

'உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' - குறள்

என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாக இருந்தவன் இந்த ராஜேந்திர பிரசாத்...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த புரட்சித் திருமண வாழ்த்துக் கவி இதோ...

இந்த படத்தை சொடுக்கினால் படம் பெரிதாய் விரியும்... வாழ்த்துக் கவியும் படிக்கக் கிடைக்கும்... கவிதையின் முதல் வரிகளிலுள்ள தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... இல்வாழ்வில் இணையவிருக்கும் இதயங்களின் இயற்பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..? சரியாய் படிக்கத் தெரியவில்லை எனில்... கவியை கீழே கொடுத்திருக்கிறேன் படியுங்கள்...
 

பி
றக்கும் போது நீயறியாய் இவள் உன்னவள் என்று..?
 அவளுமறியாள் நீ அவளுடையவன்தான் என்று...?
விவர்மன் ஓவியத்தை சந்திப்பது போல்  இருவரும்
 பல்கலையில் சந்தித்தீர்! சிலாகித்தீர்! சித்தம் ஒன்றானீர்!
சாதி, மதம் பாராமல் இருமனத்தின் சம்மதத்தை தேடினீர்..!
 இசைந்தது மனது; இனிதே திருமணமும் முடிவானது..!
த்தரணியில் இப்படியொரு புரட்சி மணம் பாரீரென
  புவி முழக்கம் செய்த என் அன்புத் தோழமைகளே..!

சோலையில் இணை பிரியாமல் வாழ்ந்திடும் அன்றில்
 பறவைகள் போல் இல்வாழ்வில் வாழ்ந்திட வேண்டும்..!
பிறப்பெனில் இன்பமுண்டு, துன்பமுண்டு என்றுணர்ந்து
 ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்திட வேண்டும்..!
யார் பார்த்தாலும் உங்களைப் போலொரு உத்தமத்
 தம்பதிகளில்லை என ஊர், உலகம் போற்றிட வேண்டும்..!

என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!


மணமக்கள்: தி. ராஜேந்திர பிரசாத், சோபியா
இணைந்த நாள் : 12.11.2010
இணைந்த இடம்: திருமயிலை காபாலீஸ்வரர் கோயில்


வாழ்த்தும் அன்பு நண்பர்கள்


அ. பிரேம் சந்திரன்
மோ. கணேசன்
வ. நவநீத கிருஷ்ணன்
நீ. விஜயகுமார்
ச. சுரேஷ் குமார்

(இது போல என் வேறு சில நண்பர்களுக்கு நான் எழுதிய கவிதைகளை வாசிக்க வேண்டுமா..? கீழே உள்ள இணைப்புகளை உயிர்ப்பிக்கவும்...)
Tuesday, November 9, 2010

உன்னுடன் மட்டும்...

பிற பெண்களுடன் பேசும்போது
கிடைக்காத இன்பம்...
உன்னுடன் பேசும் போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
பிற பெண்களின் அழகை ரசிக்கும் போது
கிடைக்காத இன்பம்...
உன்னழகை ரசிக்கும்போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
பிற பெண்களின் நடையழகைப்
பார்க்கும் போது
கிடைக்காத இன்பம்...
உன் நடையழகைப்
பார்க்கும் போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
இவைகளெல்லாம்
உன்னுடன் இருக்கும் போது மட்டும்
கிடைக்கிறதே... அது எப்படி..?
இவைகளெல்லாம் என் வாழ்நாள்
முழுக்க கிடைப்பது எப்போ(த)டி..?
Thursday, November 4, 2010

உனை சந்திக்கும் ஒவ்வொரு நாளும்..!

நெருப்பில் பூக்கும்
மத்தாப்பூ...
படபடவென வெடிக்கும்
பட்டாசு என
இங்கோ ஆண்டிற்கு
ஒரு முறைதான் தீபாவளி..!
எனக்கோ உனை
சந்திக்கும் ஒவ்வொரு நாளும்
தித்திக்கும் தீபாவளிதான்...
உன் மத்தாப்பூ சிரிப்பும்...
படபடவென பேசும்
உன் கண்ணிமைகளும்
இவனுக்கு அனு தினமும்
தீபாவளியைக் காட்டுகின்றன தேவி..!

(என் அன்பிற்கினிய வாசகர்களுக்கு என் சார்பிலும் என்னவளின் சார்பிலும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!)Monday, November 1, 2010

மேகங்களின் மின்னல் பூக்களோ..!

மழைத்துளியின்
சாரல் பூக்கள்...
மழலையின்
சிரிப்பைக் காட்டுகிறது..!
மேகங்களின்
மின்னல் பூக்களோ
உன் சிரிப்பைக் காட்டுகிறது..!
சாரல் பூக்களை ரசித்தால்
என் துக்கத்திற்கு ஆபத்து
என்பதைக் கண்டேன்..!
மின்னலை ரசித்தால்
அது என் கண்ணுக்கு
ஆபத்து என்பதை
உனைக் கண்டதும்(தான்)
கண்டு கொண்டேன்..!Wednesday, October 27, 2010

என்ன நோயடி இது..?

எங்கு திரும்பினாலும்
எதிரில் நீயாகவே தெரிகிறாய்..!
யாருடன் பேசினாலும்
எதிரில் நீ பேசுவதாகவே தெரிகிறாய்..!
நான் எங்கு சென்றாலும்
நிழல் போல் என்னுடன்
நீயும் வருவதாகவே தெரிகிறாய்..!
என்ன நோயடி இது..?
உலகமே மறந்து போய்
உன் நினைவுகள் மட்டுமே
எனக்கு உலகமாகி இருக்கிறது..!Monday, October 25, 2010

அடங்காக் காதல் மழை..!

நீ எனைச் சந்தித்தால்
எனக்குள் இன்ப மழை..!
நீ எனைப் பார்த்துச் சிரித்தால்
எனக்குள் மின்னல் மழை..!
நீ எனைப் பற்றி பேசினால்
எனக்குள் கவிதை மழை..!
நீ எனைக் கட்டியணைத்தால்
நமக்குள் (அடங்காக்) காதல் மழை..!Wednesday, October 20, 2010

மொத்தத்தில் நீ இல்லாவிட்டால் ..!

உன் அருகாமை…
என்னை மலர வைக்கிறது..!
உன் கொஞ்சல்…
என்னை உளற வைக்கிறது..!
உன் பார்வை…
என்னை கிறங்க வைக்கிறது..!
உன் புன்னகை…
என்னை மயங்க வைக்கிறது..!
உன் தீண்டல்
என்னை உறைய வைக்கிறது..!
மொத்தத்தில்
நீ இல்லாவிட்டால்
என் இதயம் இயங்க மறுக்கிறது..!
Thursday, October 14, 2010

வாழ்க நம் காதல் ..!மொழியின் இன்பம் கவிதை
கவிதையின் இன்பம் ஊடல்
ஊடலின் இன்பம் கூடல்
கூடலின் இன்பம் காதல்
காதலின் இன்பம் காதலி
காதலியின் இன்பம் காதலன்
காதலனின் இன்பம் காதலி..!
இருவரின் இன்பம் இணைந்து வாழல்
-ஆக வாழ்க நம் காதல் ..!

Tuesday, September 14, 2010

அழகிய திருடியே...!

என் விடியலை...
என் தூக்கத்தை…
என் பசியை…
என் கனவுகளைத் திருடிய
அழகிய திருடியே...!
இவைகளைத் திருடிய உனக்கு
என்னையே பரிசளிக்கிறேன்…
ஏற்றுக் கொள்வாயா..?Wednesday, September 8, 2010

மலர் வனமெங்கும்..!


மலர்வனத்தில் உள்ள மலர்கள்
எல்லாம் மொட்டவிழ்ந்த பிறகுதான்
நறுமணத்தைப் பரப்புகின்றன..!
ஆனால்... மலர் வனத்தில்
நீ  காலடி வைத்த மறுகணமே
உன் நறுமணம்
மலர்வனமெங்கும் வீசுதடி..!
உன் நறுமணத்தினால்
அம்மலர்கள்
தங்களின் (சு)வாசத்தை மறந்து
உன் வாசத்தில் மயங்கி நிற்கின்றனடி..!

 (என் அன்பான தோழமைகளுக்கு... நான் தற்போது தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்... படிப்பு: எம்.ஏ., இதழியல், வயது 30, தினமணி, ஆனந்த விகடன் குழுமங்களில் பணியாற்றிய அனுபவங்களுடன் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். இருப்பிடம்: சென்னை. வேலை தேடுவதும் சென்னையில்... தங்களுக்குத் தெரிந்து ஏதேனும் தமிழ் ஊடகம் சார்ந்த. சாராத பணிகள் இருப்பின் தயவு செய்து தகவல் அளிக்கவும். நன்றி..!

எனது மின்னஞ்சல் முகவரி: moganan@gmail.com 
எனது கைப்பேசி எண்: 9444296929..!)Monday, September 6, 2010

அனுதினமும் உன்னையே..!


சூரியன் மேல் கொண்ட காதலால்
அவனையே சுற்றிச் சுற்றி
வருகிறது பூமி..!
பூமியின் மேல் கொண்ட காதலால்
அதையே சுற்றிச் சுற்றி
வருகிறது வெண்ணிலவு..!
உன் மேல் நான் கொண்ட காதலால்
அனுதினமும் உன்னையே சுற்றியபடி...

 (என் அன்பான தோழமைகளுக்கு... நான் தற்போது தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்... படிப்பு: எம்.ஏ., இதழியல், வயது 30, தினமணி, ஆனந்த விகடன் குழுமங்களில் பணியாற்றிய அனுபவங்களுடன் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். இருப்பிடம்: சென்னை. வேலை தேடுவதும் சென்னையில்... தங்களுக்குத் தெரிந்து ஏதேனும் தமிழ் ஊடகம் சார்ந்த. சாராத பணிகள் இருப்பின் தயவு செய்து தகவல் அளிக்கவும். நன்றி..!

எனது மின்னஞ்சல் முகவரி: moganan@gmail.com 
எனது கைப்பேசி எண்: 9444296929..!)Thursday, August 26, 2010

உன் நடையினிலே ..!

உன் அழகினிலே
அன்னப் பறவையை
அசரவைத்து...
உன் நடையினிலே
புள்ளி மானை
மிரளவைத்து...
உன் நளினத்திலே
கோலமயிலை
கோபப் படவைத்தபடி
கோதை நீ வருகிறாய்..!
எனைக் கொள்ளையிட வருகிறாய்..!Monday, August 23, 2010

அணு அணுவாய் உன்னழகில்..!

இரு புருவமும் ஒரு சேர
மேலே தூக்கிக் காட்டி...
என்னவென்று எனை நோக்கி
உன் கண்ணாலே வினவுகிறாய்..?
கன்னி உன்றன் அழகைப்பார்த்து
என் கண்ணிமைகள்
அசையவில்லை...
அனிச்சை செயலை மறந்தபடி
அணு அணுவாய்
உன்னழகில் ஆழ்ந்து போகிறேனே...
அதை நீ அறியாயோ பெண்ணே..?Friday, August 20, 2010

ஒத்துக் கொள்கிறேன்..!

எப்போதும்
சமூகத்தைப் பற்றியே
சிந்தித்துக் கொண்டிருந்த என்னை...
சதா சர்வ நேரமும்
உனைப் பற்றியே
சிந்திக்க வைத்து விட்டாய்..!
இதனால் என்னை
உன் காதலனாக்கினாயோ
இல்லையோ..?
உனைப் பற்றியே எழுதும்
காதல் கவிஞனாக்கி விட்டாய்..!
ஒத்துக் கொள்கிறேன்
கொள்கைப் பிடிப்போடு இருந்த
என்னைக்கூட
உன் கொள்ளை அழகால்
மாற்ற முடியும் என்பதை..!Thursday, August 19, 2010

மறந்து போதல்..!

உன் கூந்தல் வாசம்
பிடித்ததால்…
என் சுவாசத்தை நானும்
மறந்து போனேன்..!
உன் இதழில்
கவிதையைப் படித்ததால்...
என் கவிதையை நானும்
மறந்து போனேன்..!
என் உயிராய் நீயும்
ஆனதினால்...
என் உறவுகளை நானும்
மறந்து போனேன்..!Tuesday, August 17, 2010

நீ என்னிடம் அப்படி..?

உன் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன்
காதினிக்கப் பேசுகிறாய்..!
அவர்களின் கன்னங்களைக் கிள்ளியபடி
கொஞ்சி மகிழ்கிறாய்..!
இவற்றையெல்லாம் பார்க்கும் போது
பொறாமைதான் மிஞ்சுகிறது..!
நீ என்னிடம் அப்படி
கொஞ்சிப் பேச வில்லையே என்று..?Friday, August 13, 2010

உனைப் பார்த்த வினாடியிலிருந்து..!

நீ யார்..?
என்ன உன் பேர்..?
ஏது உந்தன் ஊர்..?
இவைகளை நான்றியேன்…
ஆனால்…
உனைப் பார்த்த வினாடியிலிருந்து
இனி நீதான் நான்…
உன் பேர்தான் இனி என் பேர்…
உன் ஊர்தான் இனி என் ஊர்..!Wednesday, August 11, 2010

உன்னிடத்தில் நானும்..!

'நீ எனக்கு வேண்டவே
வேண்டாமென்று...
சொல்லிய பின்பும்
ஏனடா என்னையே
சுற்றிச் சுற்றி
வருகிறாய்' என்றாய்..!
மலர் வேண்டாமென்று
சொன்னால் மட்டும்
வண்டு விட்டு விடுமா என்ன..?
தேனிருக்கும் இடத்தைச்
சுற்றித்தானே
அதுவும் சுற்றி வரும்..!
அது போலத்தான் பெண்ணே
உன்னிடத்தில் நானும்..!Monday, August 9, 2010

நிலவைப்பிரிந்து என்றும்..!


நான் துவண்டு கிடக்கும் வேளையில்
உன் மலரினும் மெல்லிய
மடியினில் எனைக் கிடத்தி...
என் தலையைக் கோதி தேற்றுவாய்..!
நான் வீழ்ந்து கிடக்கும் வேளையில்
எனை உன் வீணை மார்பில் சாய்த்து...
என் விம்மலைத் தணிப்பாய்..!
நான் கோபித்துக் கிடக்கும் வேளையில்
கொவ்வை இதழ் முத்தம் தந்து...
என் கோபத்தை உடைத்தெறிவாய்..!
இத்தனையும் எனக்குச் செய்யும்
பனி நிறை பவழ மலரவளே..!
என் இன்பத்தில் மட்டுமின்றி...
என் துன்பத்திலும் இருந்தவளே...
இருளில் நான் இருந்தபோது
நிலவாய் வெளிச்சம் தந்தவளே..!
உன்னை நானும் மறப்பேனா..?
உன் நினைவைத் துறந்து இருப்பேனா..?
மறந்தும் உயிரோடிருப்பேனா..?
நிலவைப்பிரிந்து என்றும் நீலவானம் இராது..!
அதுபோலத்தான் பெண்ணே நானும்..!

(ஓர் நாள் என்னவள் என்னிடம் கேட்டாள்.. ''என்ன மறந்துடுவியா..? என்ன விட்டு போயிடுவியா..?'' என்று... அவளுக்கு இக்கவிதை மூலமாக என் பதிலைத் தந்தேன்..!)Saturday, August 7, 2010

கொலுசுச் சத்தங்களை..!

கொலுசுச் சத்தங்களைக்
கேட்கும் போதெல்லாம் நீதான்
வந்துவிட்டாயோ என
ஆவலோடு திரும்பிப் பார்க்கிறேன்..?
அப்படி திரும்பித் திரும்பிப்
பார்த்ததில் என் கழுத்து
வலிக்கிறதோ இல்லையோ..?
நீ இன்னும் வரவில்லை என்பதால்
என் மனசு வலிக்கிறது..!Friday, August 6, 2010

உன் மலர் முகத்தை..!

நிலவைக் கண்டு மலரும்
அல்லி மலர் போல...
உன் மலர் முகத்தைக்
கண்டால்தான்...
என் மனசு மலருவேன் என்கிறது..!
என் இதய நிலவே...
அதற்காகவேனும் விரைந்து வா..!Thursday, August 5, 2010

என்ன கொடுத்தாலும்..!

பத்து மாதம் சுமந்து
பாலூட்டி சீராட்டி வளர்த்த
என் அன்னையின் அன்பையே
மிஞ்சச் செய்த
உன் அன்பிற்கு என்ன
கொடுத்தாலும் ஈடாகா..!
என்னையே கொடுத்தாலும்..!Wednesday, August 4, 2010

நான் வாழ்வதை விட..!

இந்த உலகத்தில்
நான் வாழ்வதை விட...
உனக்கே
நான் உலகமாய்
வாழ ஆசைப்படுகிறேன்..!
இதற்கு நீ என்ன
சொல்கிறாய் பெண்ணே..!Tuesday, August 3, 2010

எது எப்படி மாறினாலும்..!

அன்றோ புறா விடு தூது…
மயில் விடு தூது...
மான் விடு தூது...
அன்னம் விடு தூது...
அழகிய லிகித விடு தூது என
இயற்கை வழிகளில் காதலை வளர்த்தனர்…
நீயோ இணைய விடுதூது மூலம்
காதலை வளர்க்கிறாய்..!
எது எப்படி மாறினாலும்
காதல் என்றும் மாறுவதில்லை…
நான் உன் மேல் கொண்டிருக்கும்
மாறா மையலைப் போல..!Monday, August 2, 2010

கண்டு பிடித்துக் கொடு..!

உன்னுடைய சீண்டல்கள்
என் நினைவுகளில்
நீங்கா இடம் பிடித்து விட்டன..!
உன்னுடைய காதல் பார்வைகள்
என்னுள் தணியாத தாகத்தை
ஏற்படுத்தி விட்டன..!
உன்னுடைய மெய்த் தீண்டல்கள்
என்னுள் மறையாத பரவசத்தை
பரப்பி விட்டன..!
இவைகளால்...
பொம்மையைத்
தொலைத்துவிட்டு நிற்கும்
குழந்தையைப் போல…
இரவில் தூக்கத்தைத்
தொலைத்து விட்டு நிற்கிறேனடி..!
என் தூக்கத்தை எனக்குக்
கண்டு பிடித்துக் கொடு..!Friday, July 30, 2010

அந்தச் சூரியன் கூட..!

மாலை வேளையில்
உன்னழகைக் கண்டதால்தானோ
என்னவோ..!
அந்தச் சூரியன் கூட
வெட்கத்தால் சிவந்து
மேகத்தினுள் மறைந்து விட்டான்..!Thursday, July 29, 2010

நீ காணும் கனவில்..!

மேகங்களை மெத்தையாக்கி...
நட்சத்திரங்களை தலையணையாக்கி...
அந்த வெண்ணிலவை
உன் அறை விளக்காக்கி...
என்னன்புக் கவி மலரே
உனைத் தூங்க வைப்பேன்..!
அப்போது..?
நீ காணும் கனவில்
உன்னோடு நான் கலந்திருப்பேன்..!Wednesday, July 28, 2010

நான் மறைந்து போனாலும்..! - 200வது கவிதைப் பதிவுஎன் கண் வழியே உனை நுழைத்து…
என் மனதினிலே உனை நினைத்து…
என் கவிதையிலே வடித்து வைத்தேன்..!
இப்புவியிலிருந்து நான் மறைந்து
போனாலும்
அன்பே...
உன் மேல் நான் கொண்ட காதல்…
என் கவி உள்ள வரை
இப்புவியில் நிலைத்திருக்கும்

என்பதை மறவாதே அன்பே..!
நானாவது உனை மறந்து போவதாவது..?    
நாவிருக்கிறது என்பதற்காக
நறுக்குத் தெரிக்கும் வார்த்தைகளை
வீசியெறியாதே பெண்ணே...
வீழ்ந்து விடுவேன் நிரந்தரமாக..! 

(இது என்னுடைய 200-வது கவிதைப் பதிவு ஆகும்... இந்நேரத்தில் எனைப் படைத்த என் பெற்றோர்களுக்கும்... என் கவித்திறனை வளர்த்து விட்ட என் தாய்த்தமிழுக்கும்... இக்கவிதைகளின் ஊற்றான என்னவளுக்கும்... ஆதரவுக் கரம் நீட்டி வரும்... எனது அன்பு வாசகர்களாகிய உங்களுக்கும்.. எனது மனமார்ந்த நன்றிகள்...

தொடரட்டும் உங்கள் ஆதரவு..!

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்


மோகனன்)
Tuesday, July 27, 2010

மூடும் கதவுகளுக்குள்..!

இருபுறமும் நகர்ந்து
மூடும் கதவுகளுக்குள்
காதலா என்ன..?
அவைகளும் நம்மைப் போலவே
உதட்டோடு உதடு
சேர்த்து உறவாடுகின்றனவே..!  Monday, July 26, 2010

உன்னால் கரையாத..!

நிலாப் பெண்ணும் உறங்குவதாகத்
தெரியவில்லை..!
இரவுப் பொழுதும் கரைவதாகத்
தெரியவில்லை..!
விளக்குகளும் அணைவதாகத்
தெரியவில்லை..!
கண்களும் இமை மூடுவதாகத்
தெரியவில்லை..!
ஆயினும் என் அன்பே...
உன்னால் கரையாத இந்த இரவு கூட...
உன்னைப் போலவே
இன்பத்தைத் தருகிறதடி..!Friday, July 23, 2010

மலருக்கே தெரியாமல்..!

மலருக்கே தெரியாமல்
மகரந்தத்திலுள்ள
தேனைக் கவரும் தேனீ போல…
எனக்கே தெரியாமல்
என் மனதைக்
கவர்ந்த தேனீ நீ..!
என் காதல் ராஜ்ஜியத்தின்
ராணித் தேனீ நீ..!Thursday, July 22, 2010

இரட்டைப் பிறவிகளா..?

உன் கொலுசும்...
புன்னகையும்...
இரட்டைப் பிறவிகளா
அன்பே..?
இரண்டும்
கலகலவென்று
சிரிக்கின்றனவே..!Wednesday, July 21, 2010

நீ ஒரு நடமாடும்..!

கருவைரக் கண்கள்…
கோமேதகக் கன்னங்கள்…
செம்பவழ உதடுகள்…
வெண் முத்துப் பற்கள்…
மரகதச் சிரிப்புகள்...
என நீ ஒரு நடமாடும்
நவரத்தின பெண்
'நகை'க் கூடம்..!
அதில் என் கவிதைகள்
நாட்டியமாடும்..!Tuesday, July 20, 2010

நீ தீட்டிய மையினால்...

அஞ்சன மை தீட்டிய
அழகு தேவதையே…
நீ தீட்டிய மையினால்
உன் கண் மயங்கியதோ..?
இல்லையோ..?
நான் மயங்கி விட்டேன்..!