ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, July 28, 2015

எங்கள் அப்துல் கலாம் ஐயாவே..!

இந்திய தென்கோடி
மண்ணில் பிறந்து
விண்ணை ஆண்ட
எங்கள் அப்துல் கலாம் ஐயாவே
எங்களின் 120 கோடி இதயங்களை
துடிக்க விட்டு
உங்களின் இதயத் துடிப்பை
நிறுத்தியது ஏன்?

‘வல்லூறு நாடுகளுக்கிடையே
இந்தியாவை வல்லரசாக்க
வாருங்கள் மாணவர்களே..!’
என்றழைத்த எங்கள் ஆசானே
மண்ணிலுள்ள உங்கள்
மாணவர்களை துடிக்க விட்டு
விண்ணில் நட்சத்திரமாய்
மறைந்து போனது ஏன்?

அணுகுண்டு சோதனையில்
அணுவைப் போல்
அடக்கமாய் செயல்பட்டு
வினையில் விண்ணைத்தொட்ட
அறிவியல் ஐயனே…
உலக அரங்கில் தலை நிமிர்ந்த தமிழனே
உங்களின் சிம்மக் குரல்
மரணச் சிறைக்குள் அகப்பட்டது ஏன்?


ஏவுகணையின் நாயகனே
ஏழைகளின் தூயவனே
எளிமையின் இருப்பிடமே
தமிழகம் ஈன்றெடுத்த தங்கமே
உன் பிரிவாலின்று
குமரி முதல் இமயம் வரை உள்ள
240 கோடி கண்களும் அழுகிறதே
கண்ணீரைத் துடைக்க வராதது ஏன்?

‘கனவு காணுங்கள்
இந்தியைவை வல்லரசாக்க’
‘கேள்வி கேளுங்கள்
எதையும் பரிட்சித்துப் பார்க்க’
என்று எங்களுக்கு போதித்த புத்தனே
ஏன் எங்களை விட்டுச் சென்றாய்
என்று கேள்வி கேட்டு
கேவிக் கேவி அழுகிறோம்
அண்ணலே மீண்டு(ம்) வா..!

வாழ்ந்தது போதுமென்று
‘அக்னி சிறகுகள்’
கொண்டு பறந்து விட்டாயா
‘இந்தியா 2020’ முழக்கத்தை
மறந்து விடுவோம் என்று
நினைந்து விட்டாயா?
என்றென்றும் உம்

வழி நடப்போம் நாங்கள்
என்றும் அப்துல் கலாமின்
மாணவர்கள் நாங்கள்..!


(கண்ணீரோடு அழைக்கிறோம்.. மீண்டு வாருங்கள் ஐயா… எங்களின் கண்ணீரைத் துடைக்க வாருங்கள் ஐயா…)

அப்துல் கலாம் ஐயாவிற்காக 2007-இல் நான் எழுதிய சிறுவர்களுக்கான பாடல் இங்கே... நாமும் கலாம் ஆகலாம்
Wednesday, July 15, 2015

கல்வி தந்த ஐயா..! - பிறந்தநாள் கவிதை!
கல்வி தந்த ஐயா!
எங்கள் காமராசர் ஐயா! - நீங்கள்
கல்வித் தந்தை ஐயா
எங்கள் காமராசர் ஐயா!

களத்து மேட்டில் கிடந்தவனை
கல்வி கற்க வைத்தவர்!
ஆடு மாடு மேய்த்தவனை
ஏடெடுக்க வைத்தவர்! 
                    
பாடுபடும் ஏழைகளுக்கென்று
பள்ளிக்கூடம் திறந்தவர்!
பசியில் படிக்கும் பிள்ளை கண்டு
உணவு திட்டம் தந்தவர்!                     
(கல்வி தந்த…)

கல்வி எனும் செல்வம் தன்னை
தமிழ்ச் சந்ததிக்கு தந்தவர்
மதிய உணவுத் திட்டத்தினை
உலகினுக்கே ஈந்தவர்!

தமிழ்நாடு செழிக்க தரணி போற்றும்
தொழிற் பேட்டைகளை திறந்தவர்
ஏழை விவசாயிகள் ஏற்றம் பெற
பல நீரணைகள் கட்டியவர்!                   
(கல்வி தந்த…)

ஏழைகளுக்காய் திட்டம் தீட்டி
ஏழைப் பங்காளர் ஆனவர்
காரியங்களை கணக்காய் தீட்டி
கர்ம வீரர் ஆனவர்! 
           
இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை
வேண்டாமென மறுத்தவர்
லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கி
நாட்டின் ‘கிங் மேக்கர்’ ஆனவர்!          
(கல்வி தந்த…)

பெருமை கொள்ளும் தலைமையேற்று
பெருந்தலைவர் ஆனவர்
கதராடையுடன் போராடியதால்
‘காலா காந்தி’ ஆனவர்!

தமிழகத்தை ஆட்சி செய்து
அதை பொற்காலமாய் மாற்றியவர்
வரலாற்றுப் பக்கங்களில் மறத்தமிழனாய்
வாகை சூடி நிற்பவர்!                     
(கல்வி தந்த…)