ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, March 30, 2011

‘நட்பு’ எனும் பூ..! - நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை


இப்பூவுலகில் பூக்கும்
பூக்களெல்லாம்
ஒருநாளில் வாடிவிடும்..!
ஆனால் ‘நட்பு’ எனும் பூ
என்றென்றும் வாடாமல் வாசம் தரும்
என்பதை எனக்கு உணர்த்திய
உன்னத நண்பன் நீ..!

நான் வேலை தேடியலைந்த போதெல்லாம்
என் வேதனையைத் துடைத்து...
நான் நம்பிக்கையிழக்கும் போதெல்லாம்
என்னுள் நம்பிக்கையை அடைத்து...
பாழும் நகரத்தில் பரிதவித்து நின்ற போதெல்லாம்
பதறாதே நானிருக்கிறேன் என்று
பரிவோடு நம்பிக்கை மொழி நவின்றவின் நீ..!

என் சுமையினை சுமப்பதற்கு
உன்னிரு தோள்களைக் கொடுத்து...
அடியற்ற மரம் போல
அதலத்தில் வீழும் போதெல்லாம்
பிரதிபலன் பாராமல்
விழுதாய் தாங்கிப் பிடித்தவன் நீ..!

‘இடுக்கண் களைவதாம் நட்பு’
என்ற வள்ளுவனின் வாக்கிற்கு
இலக்கணம் கற்பித்து
என்னுடைய கர்ணன் என
கனிவாய் நிரூபித்தவன் நீ..!

துன்பநிலை வருகையில்தான்
தூய நட்பு வெளியில் வரும்
என்பதை அறியச் செய்த
அன்பு நிறை நண்பா...
இன்றுனக்கு பிறந்த நாள்..!
இனிமை பொங்கும் வளநாள்...
உனைப் பெற்றதால்
உன் பெற்றோர்க்கு மட்டுமல்ல
உனை நண்பனாகப்
பெற்ற எனக்கும் பெருமகிழ்ச்சியே...

எந்நாளும் உனைத் தேடி
வசந்தங்கள் வந்து விழ...
மகிழ்ச்சிக் கடலலை உன்
வாழ்வில் பொங்கியெழ...
என்றென்றும் வாழ்க நீ நட்பே...
பல்லாண்டு... பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு வாழ்கவே..!

(என் இனிய நண்பன் அ. பிரேம் சந்திரனுக்கு இன்று பிறந்த நாள்... அவனுக்காக நானெழுதிய பிறந்த நாள் கவிதை..!)
Tuesday, March 29, 2011

தோற்றுப் போவதையே விரும்புகிறேன்..!


நீ என்னுடன்
போட்டி போடும் போதெல்லாம்
நான் தோற்றுப் போவதையே
விரும்புகிறேன்..!
ஏனெனில்?
நீ எப்போதும்
தோற்கக் கூடாது
என்பது மட்டுமல்ல
எப்போதும் நீ சிரித்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்பதற்க்காக..!
Friday, March 25, 2011

ஏன் மனிதா..?ஏன் மனிதா... ஏன்..?
அன்பிலார்ந்த வாழ்க்கையில்
ஆணவத்திற்கு இடமேன்
ஆதிக்க மனப்பான்மை ஏன்..?
இன்பத்தை பங்கு வைக்குமிடத்தில்
ஈகோவிற்கு இடமேன்
இழிவான பேச்சுக்கள் ஏன்..?
உன் பேச்சை மட்டுமே
எல்லோரும் கேட்க நினைக்கும் நீ
மற்றவர் பேச்சை
கேட்க மறுப்பது ஏன்?
மற்றவர்க்குப் பிடித்ததை அவர்கள்
செய்ய நினைத்தால்
எதையும் செய்யாதே
என அடக்கி வைப்பது ஏன்..?
அவர்களை அடக்கிட நினைப்பது ஏன்..?
உன்னைப் போல மற்றவர்க்கும்
மனதுண்டு, வாக்குண்டு
என்பதை அறியாமல் போவதற்கு
அறியாத பிள்ளையா நீ..?
அகங்காரத்தை கைவிடு...
அன்பினைக் கையிலெடு...
அப்போதுதான் உணர்வுகள் சிலிர்க்கும்...
உன் உறவுகள் உன் கைபிடிக்கும்..!
Thursday, March 24, 2011

கடற்கரையில்..! - சிரிப்புக் கவிதைஅன்பே... என் ஆருயிரே...
உனக்காக
கடற்கரையில்
காத்திருப்பது கூட
சுகம்தான்...
சுனாமி வரும் வரை..?!
Wednesday, March 23, 2011

வீரத்தைக் கற்றுக் கொடுத்த..! - தியாகிகள் தின சிறப்புக் கவிதை!

துப்பாக்கிகளைக் கண்டஞ்சாமல்
தூயவளாம் பாரத மாதாவின்
விடுதலைக்காக
துணிவைத் துணையாக்கி
தூக்குக் கயிற்றை
துணிச்சலோடு முத்தமிட்ட
மூன்று மறவர்களின்  தினமின்று..!
முன்னூறு ஆண்டுகளாய்
இருண்டிருந்த இத்தேசம்
மூன்று மாவீரர்களின்
வீரமரணத்திற்குப் பிறகு
வெகு வேகமாய்
விழித்தெழத் தொடங்கியது..!
இந்தியாவின் மூலை முடுக்கெங்கும்
இந்தியர்களின் மூளை முடுக்கெங்கும்
வேண்டும் சுதந்திரம்
என்ற வேட்கை கொழுந்து
விட்டு எரிந்தது...
வந்தே மாதரமென்பது
அனைவரின் தாரக மந்திரமானது..!
வீரத்தை தம் சந்ததிகளுக்கு மட்டும்
கற்றுக் கொடுத்தவர்களிடையே
அன்று சரித்திரத்திற்கே வீரத்தைக்
கற்றுக் கொடுத்த
இம்மாவீரர்களின் தியாகத் தினத்தில்
வீர வணக்கம் செய்கிறேன்..!
அவர்களின் உயிர்த்தியாகத்தை
நினைத்து உருகுகிறேன்..!
நீங்கள் வாழ்ந்த தேசத்தில்
நானும் வாழ்கிறேன்..!
சுதந்திரமாய் நானும் வாழ
வழிசெய்த மாவீரர்களே
உங்கள் திருத்தாழடி சரணம்..!
என்றும் என் நாவினில்
வந்தேமாதரம் ஜனனம்..!

(இன்று தியாகிகள் தினமாகும். மார்ச் 23, 1931 அன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோருடன் சேர்த்து தூக்கிலிடப்பட்ட தினம். அதன் நினைவாகவே இந்த தினம் கடைபிடிக்கப் படுகிறது.)
Tuesday, March 22, 2011

உயிர்த் தாகத்திற்கு..! - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை..!வெண்மேகத்தின் விழுதானாய்..!
பூமிக்கே நீ அமுதானாய்..!
விளை நிலங்களுக்கு வித்தானாய்..!
விவசாயிகளின் முத்தானாய்..!
உயிரினங்களிக்கெல்லாம் உயிரானாய்..!
உலகெங்கும் உறைபனியானாய்..!
தாய் வயிற்றில் பனிக்குடமானாய்..!
தாய் மார்பில் பாலானாய்..!
உலகில் நீ நதிகளின் ஊற்றானாய்..!
உயிர்த் தாகத்திற்கு மருந்தானாய்..!
எவரெஸ்ட்டில் பனிக்குன்றானாய்..!
எழில் சூழ்கடலில் சுனாமியானாய்..!
எல்லாவற்றிலும் நீயானாய்..!
எங்கெங்கும் நீக்கமற நீரானாய்..!

இனி வருங்காலத்தில்
உனை வீணாக உருக்குலைத்தால்
உயிர்களுக்கு உலையாவாய்..!
உனை உளமாற சேமித்தால்
உலகிற்கே நீ வளமாவாய்..!
உன் தன்னமலற்ற தனிப்பண்பால்
நின் திருத்தாழ் பணிகிறேன்
நீரே என் ரெம்பாவாய்..!

(மார்ச் 22 - அ(இ)ன்று உலக தண்ணீர் தினம். ஆதால்தான் இந்த தண்ணீர் பற்றிய சிறப்புக் கவிதை. நீரை சேமிப்போம்... உலகைக் காப்போம்)
Monday, March 21, 2011

உன் பிரிவில் என் தனிமை..!


மலர்ந்த காம்பை விட்டு
மலர் சென்றால்...
தனித்தழும்
மலர்க் காம்பைப் போல...
அமாவாசையன்று
நிலவைக் காணாமல்
மலராத அல்லியைப் போல...
தன் இணையது
பிரிந்து விட்டால்
ஏதுமருந்தாமல்
தனித்திருக்கும்
அன்றில் பறவை போல...
உன் பிரிவால் நானுமிங்கே
தவித்துப் போகிறேன்...!
தனிமையில் சாகிறேன்..!
சீக்கிரம் வந்து விடு
என் தனிமையைக் கொன்று விடு..!
Friday, March 18, 2011

உன் மெல்லிய தீண்டலில்..!அனிச்சம் பூ மோதியதா..?
அழகான அன்னமெனை மோதியதா..?
மகிழம் பூ மோதியதா..?
அழகான மயிலிறகெனை மோதியதா..?
முல்லைப் பூ மோதியதா..?
அழகான முயலெனை மோதியதா..?
தாழம்பூ மோதியதா..?
அழகான தங்கரதமெனை மோதியதா..?
குவளைப் பூ மோதியதா..?
அழகான குழந்தையெனை மோதியதா..?
ஆம்பல் பூ மோதியதா..?
அழகான ஆடல்மயிலெனை மோதியதா..?
செங்காந்தள் பூ மோதியதா..?
அழகான செந்தமிழெனை மோதியதா..?
வஞ்சிப் பூமோதியதா..?
அழகான வஞ்சியெனை மோதியதா..?
வாகைப் பூ மோதியதா..?
அழகான வானமெனை மோதியதா..?
குறிஞ்சிப் பூ மோதியதா..?
அழகான குலமங்கையெனை மோதியதா..?
என பலவிதமான கேள்விப்
பூங்கணைகள் எனைத் துளைத்தெடுக்க
ஒரு நொடியில் குழம்பிப் போனேன்
உன் மெல்லிய தீண்டலில்..!
Wednesday, March 16, 2011

உனக்காக காத்திருக்கிறேன்..!


என் ஊனோடும் உயிரோடும்
கலந்திருந்தவளே...
இமைப் பொழுதும்
எனை விட்டு
பிரியாமிலிருப்பேன்
என்றவளே...
சட்டென்று இதழ் திறந்து
பணி நிமித்தமென்றாய்...
கடல் கடந்து போகிறேன் என்றாய்...

நீரின்றி அமையா உலகம் போல
நீயின்றி இவ்வுலகம்
எனக்கமையாதடி...
வானின்றி அமையா நிலவு போல
நீயின்றி என்னுலகம்
இருளாகுமேடி...

உனை விண்ணிலவு என்றேன்
அதனால்தான்
விண்ணில் பறந்து செல்கிறேன்
என்கிறாயோ?
உனை அன்னப் பறவை என்றேன்
அதனால்தான் 
அலுமினியப் பறவையில்
பறந்து செல்கிறேன்
என்கிறாயோ?

முழுமதியைக் கண்டால்தான்
அல்லியவள் அகமகிழ்வாள்..!
அன்னமுன்னை காணாமல்
அகமுடைந்து போவேனே...
உந்தன் குரல் கேட்காமல்
உருக்குலைந்து போவேனே...
எனை என்ன செய்யப் போகிறாய்...
எனக்கென்ன பதில் சொல்லப் போகிறாய்..?

(இது ஒரு புகைப்படக் கவிதை...)
Friday, March 11, 2011

பிச்சிப் பூ..!


யார் வரவிற்காக
இப்படி ஒற்றைக் காலில்
தவம் செய்கிறாய்
பிச்சிப் பூவே..!
எங்கோ ஓரிடத்தில்
பிறந்து, வளர்ந்து,
மலர்ந்து நின்றாலும்
என்னவள் கூந்தலில்
பூச்சூடத்தான்
இந்த ஒற்றைக் கால் தவமோ..?

மல்லிகையின் மற்றொரு நகல்
நீ என்கிறார்கள்..?!
நறுமணத்தின் நனி பிறவி
நீ என்கிறார்கள்..?!
உன் மணத்தால் அரவம்
வருமென்கிறார்கள்..?!
அத்துனையும் உண்மையா?
பிச்சிப் பூவே..!

உன்னைப் போல்
என்னவளும்
ஒரு பிச்சிப் பூதான்..!
உன் உடல் நிறம்தான்
என்னவளுக்கும்...
உன் இதழ் நிறம்தான்
என்னவள் இதயத்திற்கும்...
உன் மெல்லுடல் வடிவம்தான்
என்னவள் உடலிற்கும்...
உன் சிரிப்பினைப் போல்தான்
என்னவளின் புன்னகையும்...

உன்னுடைய எல்லா குணங்களிலும்
ஒன்றாய்ப் போகும் என்னவள்
உன்னிடமிருந்து மணத்தில்
மட்டும் வேறுபட்டிருக்கிறாள்..!
உன் மணத்திற்கு அரவம்
வருமென்கிறார்கள்...
என்னவள் மணத்திற்கு
என் அன்பும் அரவணைப்பும் வரும்..!

(எனை நேசிக்கும் இனிய கவிதை ஒன்று 'பிச்சிப் பூ' என்ற தலைப்பில் கவிதை கேட்டது... அதன் பலனாக இக்கவிதைப் புனைவு..!)
Monday, March 7, 2011

எது எனக்குப் போதும்..?தென்றல் வேண்டுமெனில்
உன் மூச்செனக்குப் போதும்..!
திங்கள் வேண்டுமெனில்
உன் சிரிப்பெனக்குப் போதும்..!
நிலவு வேண்டுமெனில்
உன் முகமெனக்குப் போதும்..!
கார்மேகம் வேண்டுமெனில்
உன் கூந்தலெனக்குப் போதும்..!
காந்தம் வேண்டுமெனில்
உன் கண்களெனக்குப் போதும்..!
வசந்தம் வேண்டுமெனில்
உன் வருகை எனக்குப் போதும்..!
வாழ்க்கை வேண்டுமெனில்
உன் காதல் எனக்குப் போதும்..!
Friday, March 4, 2011

உன் நினைவின் தாலாட்டுகளோ..?ஒரு தாயின் தாலாட்டோ
குழந்தையைத் தூங்க வைக்கும்..!
இசையின் தாலாட்டோ
தனிமையைத் தூங்க வைக்கும்..!
உன் நினைவின் தாலாட்டுகளோ
என் தூக்கத்தை கெடுப்பது
மட்டுமின்றி
நொடிப்பொழுதும்
உன்னையே நினைக்க வைக்குதடி..!
Wednesday, March 2, 2011

அதிகாலைப் பனியில்..!


அதிகாலைப் பனியில்
அழகாய்க் குளித்த
ரோஜா மலர் போல
என் முன்னே நீ வந்தாய்...
அந்தியில் வரும் மயக்கம்
எனக்கு அதி காலையில் வந்து விட...
அலுவலக பரபரப்பு
எனை அடித்துத் தள்ள...
உன்னழகை என் கண்ணில்
நிறைத்த படி...
உனைப் பிரிய மனமில்லாமல்
அரை குறை மனதோடு
கிளம்பிச் செல்கிறேன்
அலுவலகத்திற்கு...
Tuesday, March 1, 2011

எல்லாமே நீயானாய்..!என்னுடைய இரவும் நீ..! பகலும் நீ..!
என்னுடைய இன்பமும் நீ..! துன்பமும் நீ..!
என்னுடைய நோயும் நீ..! மருந்தும் நீ..!
என்னுடைய கோபமும் நீ..! சாந்தமும் நீ..!
என்னுடைய சக்தியும் நீ..!  விரக்தியும் நீ..!
என்னுடைய பலமும் நீ..! பலவீனமும் நீ..!
என்னுடைய வெற்றியும் நீ..! தோல்வியும் நீ..!
இப்படி என்னுள் எல்லாமே நீயானாய்...
நான் உன்(னால்) காதல் தீயானேன்..!