ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, December 30, 2011

எப்போது நீ வருவாய்..?


நிலவின் தீண்டலுக்காக
மேக கூட்டங்கள் காத்திருப்பது போல...
பனித்துளியின் தீண்டலுக்காக
பூ கூட்டங்கள் காத்திருப்பது போல...
மழையின் தீண்டலுக்காக
கரிசல் காடு காத்திருப்பது போல...
பூந்தேனின் தீண்டலுக்காக
வண்டினங்கள் காத்திருப்பது போல...
ஒரு பெண் பூவிற்காக
என் புவனமே காத்திருகிறது
பூவினமே எப்போது நீ வருவாய்..?
Tuesday, December 27, 2011

இதழ் விரிந்தால்..!பூக்களின் இதழ்
விரிந்தால்
புன்னகை மலரும் ..!
பூவிலிருந்து மணம்
விரிந்தால்
முகமே மலரும்..!
பூவினமே உன் இதழ்
விரிந்தால்
என் வாழ்வே மலருமடி ...!
Tuesday, December 20, 2011

வலி அறிதல் - முல்லை பெரியாறு அணை சிறப்புக் கவிதை


'கொண்டான் கொடுத்தான்' என
விளங்கிய தமிழனும்
கேரளனும்
இன்று கொலைவெறியோடு
ஒருவரை ஒருவர்
கொளுத்தி விடப் பார்ப்பதேன்..?

வெள்ளை இனத்தில்
வெளிப்பட்ட
வெளிச்சக் கீற்றாய்
வந்த பென்னி குயிக்
தன் கடைசி 'பென்னி' வரை
செலவிட்டுக் கட்டிய
முல்லைப் பெரியாறால்
வந்த வினையா அது?

வெளிநாட்டில் பிறந்த
பென்னி குயிக்கிற்கு இருந்த
நாடுகடந்த நேசம்
நமக்கில்லாமல்  போனதேன்..!
இங்கேயே பிறந்து வளர்ந்த
தமிழனுக்கும்
கேரளனுக்கும் அந்த உணர்வு
இல்லாமல் போனதேன்..?

வேற்றுமையில் ஒற்றுமை
காணச் சொன்ன
நம் இந்தியாவில்
நம் ஒற்றுமையில் வேற்றுமையை
கிளப்பி விட்டவர்கள் யார்..?
அந்த கீழ்த்தர மூடர்கள் யாரென அறிக..?
அரசியல் ஆதாயம் தேடும்
பச்சோந்தி நாய்கள் எவையெனத் தெளிக..!
சிந்திக்கத்தானே ஆறாம் அறிவு..?
அதை சிந்தையிலிருந்தே
அகற்றி விட்டது ஏன்?

அதிகம் படிப்பறிவு பெற்ற
மக்கள் அங்கே மாக்களாய்
தமிழர்களிடம் நடந்து கொள்ள...
நாமும் அதே போல்
நடந்து கொள்ளல் நியாயமா?
வலி என்பது அனைவர்க்கும்
பொது என்றாலும்...
அதையே திருப்பி செய்வது
தமிழரின் மாண்பல்லவே..!

உங்கள் எதிர்ப்பை காட்ட
அமைதியையும் அகிம்சையும்
கையாளுங்கள்...
அமைதியாய் போனால்
அடங்கிப் போவது என்பதல்ல..?
அது அன்பின் வழி எனக் கொள்க..!
அன்னை தேசத்தின் மீதுள்ள
அபிமானம் எனக் கொள்க..!
அமைதியாய் பேசி தீர்த்துக் கொள்க..!

நம்மின் வலி அறிதலை
நையாண்டியாய் கேரளம் கொண்டால்
அவர்களை நையப்புடைக்க
வினாடி நேரம் ஆகாது...
விரைவில் நல் முடிவு வரும்..!
அது வரை கேரளத்து பொருட்களை
புறக்கணியுங்கள்..
கேரளத்து கடைகளை புறக்கணியுங்கள்
இங்கிருக்கும் கேரளர்களை புறக்கணியுங்கள்

நம் வலி(மை)யை
ஆதிகாலம் தொட்டே
அவர்களறிந்திருப்பர்...
சிறுநரி ஊளையிட்டு
சிறுத்தை ஓடாது என்பதை
கேரளனுக்குக் காட்ட
விரைவில் நமக்கு காலம் வரும்..!
அன்பால் கட்டுண்டோம்...
காத்திருப்போம்...
காலம் வரும் சாதிப்போம்..!

******************************

ஆர். சரண்யா என்பவர் 'மழையினை ரசிக்கும்' என்ற கவிதைக்கு பின்னூட்டமிடுகையில் 'வலி அறிதல்' என்ற தலைப்பில் கவிதை கேட்டார். அதை இன்றைய முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இணைத்து எழுதியிருக்கிறேன்... நன்றி..!

******************************


Anonymous Saranya R said...Very Nice!!!!!!!

I Need kavithai for the topic of Vali arithal!!!!!!

Saranya R
15 December 2011 12:44 PM
Tuesday, December 13, 2011

எவையெல்லாம் கவிதை..?


எவையெல்லாம் கவிதை
என சொல்வாய்..?
என்று என்னிடம் வினவுகிறாய்...
நீ உதடு பிரித்து படிப்பது
கூட கவிதைதானடி என்றேன்...
அழகாய் சிரித்து...
அழகாய் இருக்கிறது
உங்களது பொய் என்கிறாய்...
உன் சிரிப்புக்கு முன்பு
அவையெல்லாம் சாதரணமே
உன் சிரிப்பை காணா விடில்
என் மனம் சதா ரணமே...
என்றேன்
போய்யா போ..
என்று பொய்க்கோபம்
காட்டியே எனை மயக்குகிறாயடி..!
இந்த மயக்கத்தில்
என் சிந்தனைச் சிறகு
சிறகு விரிக்காமல் எப்படி இருக்கும்?
Saturday, December 10, 2011

மழையினை ரசிக்கும்..!எனை விடுத்து...
மழையினை ரசிக்கும்
என் மதி மலரே..!

மழை முகம் கண்டதும்...
உன் புன்னகையை மேகத்திடம்
காட்ட சென்றாயோ..?

உன் புன்னகை கண்டு
பூரித்த மழை மேகமோ
கண்ணை மின்னலாய் சிமிட்டியதோ..?

உன் கார் கூந்தலைக் கண்டு
பொறாமை கொண்ட வானமகள்
தன் மேகக் கூந்தலை மென்மேலும்
கருமையாக்கியாக்கினாளோ..?

இவை எதையும் நானறியேன்...
வான் நிலவை மறைத்த மேகம்
மழையாய்ப் பொழிவது போல்...
என் நிலவை குடையால்
மறைத்து காதலைப் பொழிவேனடி..!
Wednesday, December 7, 2011

இப்படிக்கு ராணுவ வீரன்..!


உனது கரு வானவில்
புருவங்களை உயர்த்திபடி
எனை பார்க்காதே...
உன் செந்தாமரை இதழ்களை
உனக்குள் சுழற்றியபடி
எனை பார்க்காதே...
கண்ணீர் புகை குண்டிற்கு கூட
மயங்காத நான்...
கன்னி உன் செய்கைகளால்
இங்கே மயங்கிக் கொண்டிருக்கிறேன்..!
Monday, December 5, 2011

நீ அறிவாயா..?


என் கவிதைகளனைத்தும்
அழகான கவிக்குழந்தைகள்
என்று சொல்கிறாயே பெண்ணே
அவர்களெல்லாம்
உனை பார்த்த பின்
பிறந்த கவிப் பிள்ளைகள்
என்பதை நீ அறிவாயா..?
Wednesday, November 23, 2011

இரும்பை இலவம் பஞ்சு வளைக்குமா?


வளையா இரும்பை
இலவம் பஞ்சு வளைக்குமா?
துளைக்குமா..?
இவ்வுலகில் நடவாத ஒன்றை
கேட்கிறாயே அறிவிலி...
என்று எனை எல்லோரும்
ஏளனம் செய்கிறார்கள்..!
நீ என் மார்பில் சாய்ந்த போது
இது அத்தனையும்
நடந்ததை யாரறிவார்..?
Monday, November 21, 2011

கூடலும்... ஊடலும்..!


கூடல்தான் காதலெனும் போது
அதில் ஊடல் வருவது இயல்பல்லவா..?
ஊடலை ஊதிப் பெரிதாக்கி
எனை உதறித் தள்ளுவதேனடி..?

நீ அருகிலிருந்தால் அன்பில்லை
தொலைவில் இருந்தால் தொல்லையில்லை
என்று சொன்ன உன் நாவை
என்ன சொல்லி வெட்டி எறிய வேண்டுமடி..?

தேனுண்ட வண்டைப் போல்
உன் காதலையுண்டு மகிழ்ந்திருந்த எனக்கு
அலைபேசியில் நீ பேசிய வார்த்தைகள்
அமிலமாய் கொட்டியதடி.!

என்னை இன்னும் நீ
புரிந்து கொள்ளவில்லையே
அது ஏனென்று கேட்டு
என் மனம் உன்னை திட்டித் தீர்த்ததடி..!

முத்தில்லா சிப்பி போல...
மருந்தில்லா குப்பி போல...
நீயின்றி வெறுமையாய் கிடக்கிறேன்
எப்போது வருவாய்... ஊடலை கூடலாக்குவாய்..!
Wednesday, October 12, 2011

உனை வெல்ல..!


உன்னழகை வெல்ல வேண்டி
கவிச் சொல்லெடுத்து வந்தேன்...
நீயோ இமைகளெனும்
வில்லெடுத்தாய்...
நானும் அதற்கிணையாய்
வில்லேந்தி வந்தால்
நீயோ விழிகளெனும்
வேலேந்தி வந்தாய்...
நானும் அதற்கிணையாய்
வேலேந்தி வந்தால்
நீயோ காதலேந்தி வருகிறாய்...
உனை வெல்ல மோதலோடு வந்த நான்
உன் காதலால் தோற்றபடி
உன்னிடம் காதல் கைதியானேன்!
Friday, October 7, 2011

கலியுகத்து அர்ஜுனனோ?அந்தி மாலை நேரத்தில்...
ஆராவார சாலையில்...
இரு சக்கரத் தேரிலேறி
எங்களது வீதியிலே
நீ வீதி உலா வருகையில்...
உன் விழிகளெனும் வில்லேந்தி
ஓரப்பார்வை எனும் அம்பால்
என் மனதிற்குள் போர்தொடுத்தவனே...
நீதான் என் கலியுகத்து அர்ஜுனனோ?
Saturday, October 1, 2011

வாயில் பூத்த பூ..!


என் மகளுக்கு இன்று
பிறந்தநாள்...
தாயும் சேயும் வெளியே
சென்றிருக்க
என் மகளின் புகைப்படைத்தை
பார்த்துக் கொண்டிருந்தேன்...
என் மகளின் கடைசி பிறந்த
நாளன்று எடுத்த புகைப்படம் அது..!

அழகாய் என் மகள்
சிரித்திருக்க
அவள் தலை மேல்
சூட்டிய மலரும் சிரித்திருந்தது
அதனழகைப் பார்த்து
நானும் சிரிக்கலானேன்...

அந்நேரம் பார்த்து
என்னவளும் என் மகளும்
உள்ளே நுழைய...
என் சிரிப்பை கண்டு
என்னருகே வந்த
என்னில்லாள்
சிரித்த காரணம் வினவினாள்...

சிரித்த காரணம் சொன்னேன்
அதுவே சிலாகிக்கும்
கவிதையாய் ஆனது என்றாள்.

நம் மகள் தலையில் சூடிய பூ
நம் வீட்டு செடியில் பூத்த பூ..!
என் மகளின் புன்னகையோ
அவள் வாயில் பூத்த பூ...
என் மகளோ குழவியாய் இருக்கையில்
உன் வயிற்றில் பூத்த பூ...
அதைக் கண்டே என் இதழில்
புன்னகை பூத்தது என்றேன்!
Monday, September 12, 2011

நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்..!நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்
நேற்று வரை
தங்கத்தின் விலையை மட்டுமே
கவனித்துக் கொண்டிருந்தவள்
இன்று பெட்ரோல் விலையை
மட்டும் கவனிக்கிறேன்..!
நேற்று வரை 
ஆடை விளம்பரங்களை மட்டுமே
ரசித்துக் கொண்டிருந்தவள்
இன்று இருசக்கர வாகன
விளம்பரங்களை மட்டும் ரசிக்கிறேன்..!
நேற்று வரை...
விமானத்தில் மட்டுமே பயணம்
செய்ய விரும்பியவள்...
இன்று உன் இரு சக்கர வாகனத்தில்
மட்டும் பயணம் செய்ய விரும்புகிறேன்...
என்னுள் ஏன் இத்தனை மாற்றங்கள்..
உன் காந்தக் கரம் பட்ட வாகனம்
என் இரும்பு இதயத்தை ஈர்த்ததாலா..?
இல்லை.. நீ எனக்கே எனக்கென
வாங்கிய இரு சக்கர
இரும்புப் பறவையாலா..?
Friday, September 9, 2011

ஆற்றலுடன் பிறந்தவனே..! - பிறந்தநாள் கவிதை


ஆற்றலுடன் பிறந்தவனே ஆதித்தா...
இன்றோடு நீ பிறந்து ஆண்டு ஆறு..!
ஊர் போற்றலுடன் வாழுகின்ற ஆதித்தா...
பேர் புகழோடு வாழ வேண்டும் ஆண்டு நூறு!

எமக்கு முதல் மகவாய் பிறந்ததினால்
என் வாழ்விற்கு அர்த்தம் தந்'தாய்'..!
உன் அன்பான அன்னையில் வாழ்விற்கு
தென்றல் போல் வசந்தம் தந்'தாய்'..!

உனக்கு துணையாய் அகிலத்தை கொடுத்தோம்
எமக்கு துணையாய் பொறுப்பைக் கொடுத்'தாய்'
உனக்கு உயிரும் உடலும் நாங்கள் தந்தோம்..!
எம்மிருவருக்கும் நீயே தந்தையும் தாயுமானாய்..!

இந்நாள் போல் எந்நாளும் உனக்கு மகிழ்ச்சி பொங்க
உலகின் குன்றாத கல்விச் செல்வம் உன்னோடு தங்க
உன் வளர்ச்சியில் எங்களுக்கு பெருமிதம் பொங்க...
நீ...  பன்நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவே..!
Tuesday, August 16, 2011

கட்டற்ற காதலுக்குள்..!


கட்டற்ற காதலுக்குள்
கட்டுப்பாடுகள்
விதித்துக் கொண்டோம்!
கண்ணியமாய் நடந்து கொள்ள
உணர்வுகளைப்
புதைத்துக்கொண்டோம்..!
உன் உயிரினை
நான் தொடும் போதும்
என் உயிரினை
நீ தொடும் போதும்
எட்ட நின்று
ஏக்கப் பெருமூச்சு கண்டோம்..!
காலம் தாழ்த்தி
சந்தித்தது ஏன் என்று
வினவியபடி...
நீ விதியைக் குறை சொன்னாய்
நான் மதியைக் குறை சொன்னேன்...
காலம் நமைப் பார்த்து சிரித்தது
அது நான் செய்த சதியென்று..!


------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 8 )
Wednesday, August 3, 2011

கொடுத்துப் பிரிந்தவள்..!


காத்திருக்கும் கண்களுக்கு
வியர்த்துப் போனால்
அது கண்ணீர்..!
காத்திருக்கும் கண்கள்
கவிதை பாடினால்
அது காதல்..!
இந்த இரண்டையும்
ஒரு சேரக் கொடுத்தவளும் நீ..!
கொடுத்துப் பிரிந்தவளும் நீ..!

Friday, July 29, 2011

கண்ணீர் காதல்..!


நீ என் கண்ணுக்குள்
இருப்பதால்
என்னுள் இருந்து
கண்ணீர் வருவதில்லை..!
என் கண்களிலிருந்து
கண்ணீர் வருகையில்
நீ என்னுள் இருப்பதில்லை..!


------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 )
Wednesday, July 27, 2011

பிரிவு எனும் மூன்றெழுத்து..!காதல் என்ற மூன்றெழுத்தின்
மந்திரமே அதில் பின்னியிருக்கும்
அன்பு எனும் மூன்றெழுத்துதான்..!

அதிலே பிரிவு எனும் மூன்றெழுத்து வரின்
தேகம் எனும் மூன்றெழுத்தில்
சோகம் எனும் மூன்றெழுத்து ஏறிவிடும்..!

மனம் எனும் மூன்றெழுத்து
ரணம் எனும் மூன்றெழுத்தில் மூழ்கி
குணம் காணா கூடாகி விடும்..!

பிரிவென்னும் மூன்றெழுத்து இனி எதற்கு...
இணைவு என்ற மூன்றெழுத்தில்
இணை பிரியாமலிருப்போம் தேவி..!
Wednesday, July 20, 2011

உன் காதலுக்கு..!கவிச்சக்கரவர்த்தி கம்பன்...
மகாகவி பாரதியார்...
புரட்சிக்கவி பாரதிதாசன்...

என மாபெரும் கவிஞர்களைப் போல
எனை ஆக்க விட்டாலும்
ஒரு குறுங் கவிஞனாக
மாற்றிய பெருமை
உன் காதலுக்கு உண்டு கண்ணே..!


------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 )
Tuesday, July 19, 2011

வளர் கூந்தல்..!கருங்கூந்தல் விளையாடும்
கடலலை போலே...
நீள்கூந்தல் அசைந்தாடும்
நிழலினைப் போலே...
கார்கூந்தல் விளையாடும்
கார்மேகம் போலே...
வளர் கூந்தல் வைத்திருக்கும்
வளர் மதியே...
நின் கூந்தல் வளரும்
கரு மதியே..!
------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 )
Tuesday, July 12, 2011

பூக்கள் மலரும் காலம்!


தாமரை மலரோ
உதயகாலத்தில் மலரும்..!
செண்பக மலரோ
காலையில் மலரும்..!
பவழ மல்லிகையோ
மாலையில் மலரும்..!
மயக்கும் மல்லிகையோ
இரவினில் மலரும்..!
அழகினிய அல்லியோ
நிலவின் உறவினில் மலரும்..!
என் இதய மலரோ
உனை நினைத்ததுமே மலருமடி!
Friday, July 8, 2011

உதாசீனப்படுத்தும் சொல் கூட..!ச்சீ…” என்று
உதாசீனப்படுத்தும் சொல் கூட
நீ வெட்கத்தில்
உதிர்க்கும் போது
மேலும் மேலும் உன்னோடு
உறவாடத்தான் தோன்றுகிறதே தவிர...
உனை விட்டுப் பிரியத் தோன்றவில்லை..!
Monday, July 4, 2011

தூரத்தில் தேவதையாய்..!

நள்ளிரவுப் பெண்ணோ
நைச்சியமாய்
ஒளிந்து கொள்ள முயற்சிக்க...
அதிகாலைச் சூரியனோ
அடித்துப் போட்டது
போல் உறங்கிக் கொண்டிருக்க...
உருண்டை வடிவ உலகமோ
விடியலுக்காக
கண்ணயர்ந்து காத்திருக்க...
கணமணி உன் வரவிற்காக
கண் விழித்துக் காத்திருந்தேன்
புவி முனையில்...

காத்திருந்து காத்திருந்து
கால்கள் ஓய்ந்து விட
கண்கள் சோர்ந்து விட
தூரத்தில் தேவதையாய்
நீ வருவதைக் கண்டேன்..!
நெடும்பயண களைப்பில்
நடை தளர்ந்து நீ வந்தாலும்
எனைக்கண்டதும்
ஒளிவீசும் வைரமானாய்..!
அவ்வொளி வெளிச்சம்
உனைக் கண்டதும்
என்னுள்ளும் பரவ...!

நம் கண்கள் நான்கும்
சந்தித்த வேளையில்...
அங்கே உதித்ததடி நம்
காதலின் உற்சாகச் சூரியன்...
அதனுடைய வெளிச்சத்தில்
இருந்த களைப்பு
இடம் தெரியாமல் போய்விட...
என் நிலவைக் கண்ட மகிழ்வில்
என்னிதயம் விண்ணிலடி
என்னழகே உன் அன்பு
என் கண்ணிலடி..! கண்ணிலடி..!
Friday, July 1, 2011

எனக்கு நேரமில்லை..!


என்னிடம் அதைப்படி
இதைப்படி என்று... 
எதை எதையோ
எடுத்துக் கொடுக்கிறாய் அன்பே!
எதையும் படிக்க
எனக்கு நேரமில்லை..!
காரணம்...
உன்னையும்
உன்னிதழையும்
படித்துக் கொண்டிருப்பதால்..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )
Wednesday, June 29, 2011

பொன் கிடைத்தாலும்..!பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காதென்பார்கள்...
ஊருக்குச் சென்ற என்னவள்
இப்புதனில் அதர வாய் திறந்தாள்...
'வரும் திங்கள்ன்று உனை
சந்திக்க வருகிறேன்' என்றாள்..!
புதன் புத்துணர்ச்சியில் போக
வியாழன் விறுவிறுவென மறைய
முளைக்கும் வெள்ளியோ
முகத்திரைய மூட...
சட்டென்று உதிக்கும்
சனியும் மறைய...
என் உள்ளம் மகிழவே
ஞாயிறு உதிக்கிறான்..!
என்னவள் கிளம்பும் நேரத்தில்
ஞாயிறு மறையும்...
திங்களின் காலையின்
என்றன் திங்கள் மலரும்..!
என் திடீர் சாபமும் நீங்கும்...
இன்றே அந்த திங்கள் நாளாகாதா?
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்
என் தேவியின் தரிசனத்திற்காக..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )
Tuesday, June 28, 2011

உதட்டினில் ஒன்று குவித்து..!


தொலைதூரத்தில் இருந்தாலும்
உன் உணர்வுகளை எல்லாம்
உதட்டினில் ஒன்று குவித்து
அலைபேசி வழியே அனுப்புகிறாய்
அன்பு முத்தமாக..!
அலைகடல் தாண்டி
அதிர்வலைகளின் வழியே
பயணித்து வரும் 
அம்முத்தம்
என் செவியினைத் தீண்டி
உன் அன்பைச் சொல்கிறது
சத்தமாய்... அதுவே எனக்கு சத்துமாய்..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )
Monday, June 27, 2011

வான் மகளாய் நீயிருக்க..!பூத்தாலும் நட்சத்திரமாய் பூக்கிறாய்..!
சிரித்தாலும் வெண்ணிலவாய் சிரிக்கிறாய்..!
தும்மினாலும் பனித்துளியாய் தும்முகிறாய்..!
பார்த்தாலும் மின்னலாய்ப் பார்க்கிறாய்..!
இறங்கினாலும் என்னுள் இடியென இறங்குகிறாய்..!
விரிந்தாலும் கார்மேகக் கூந்தாலாய் விரிகிறாய்..!
இப்படி வான் மகளாய் நீயிருக்க...
புவிமகனாய் காத்திருக்கிறேன்...
உன் காதலெனும் மழைப்பொழிவிற்கு..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )

Thursday, June 16, 2011

நான் மட்டும் இங்கே..!வைகாசி முழுநிலவு
வண்ணம் கலையாமலிருக்க...
ஊரு சனம் எல்லாம்
வண்டி கட்டி சென்றது
வைகையாற்றங்கரையில்
நிலாச் சோறு சாப்பிட...
நான் மட்டும் இங்கே
நீயின்றி நீட்டிப் படுத்திருக்கிறேன்
நம் வீட்டில் அமாவாசையாய்..!

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 5 )
Tuesday, June 14, 2011

வெட்கப் புன்னகையில்..!
செங்குருதி பாய்ந்தது போல்
வேலியில் பூத்த செங்காந்தள் மலர்தான்
இதுவரை அழகென்றிருந்தேன்..!
வெட்கத்தில் பூத்த மலர் கூட
இவ்வளவு அழகா என்று
உன் வெட்கப் புன்னகையைக் கண்டதும்
கண்டுகொண்டேன்..!

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 5 )
Thursday, June 9, 2011

சொல் எப்படி என்று..?என்னோடு பேசும் போது மட்டும்
உன் பூ முகத்தில்
ஆயிரம் புன்னகை பூக்கள்
ஓரே நேரத்தில்
பூக்கின்றனவே அதெப்படி..?

என்னோடு உரையாடும் போது மட்டும்
மண்ணென்றும் கல்லென்றும்
பாராமல் உன்
மென்தண்டுக் கால்கள்
தானாக கோலமிடுகிறதே அதெப்படி..?

என் கண்ணோடு பேசும் போது மட்டும்
உன் கண்களிரண்டும்
கருவண்டை மறைக்கும்
வண்ணத்துப் பூச்சி போல் 
மிக வேகமாக படபடக்கிறதே அதெப்படி..?

என்னோடு பேசும் போது மட்டும்
உன் முகம் மதி மயக்கும்
மாலை நேரத்து
அடிவானச் சூரியனாய்
சிவந்து போகிறதே அதெப்படி..?

எப்படி எப்படி என்று
உன்னிடத்தில் எதைக் கேட்டாலும்
குழந்தைச் சிரிப்பை
பதிலாகத் தருகிறாயே..?
அதையேனும் சொல் எப்படி என்று..?
--------------------------------------------------


(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 4  )

Saturday, June 4, 2011

எம்மிளைய மகவாய்..! - பிறந்தநாள் கவிதை!


செந்தமிழ்த்தாய் வாழுகின்ற
இத் திருநாட்டில்
எம்மிளைய மகவாய்
பிறந்தாயே என்னகிலா..!

உன் பிறப்பால் நான் உவகை
கொண்டது போதாது!
மீறின் அது குல நலமாகிவிடும்..!
அதை யான் வேண்டேன்..!

இப்புவி உவகை கொள்ளும்படி
செய்து விடு பொன்னகிலா..!
அதுதான் உலக நலமாகும்!
உன் தாய் மனம் குதுகலமாகும்..!

எங்களின் புரட்சி மணத்தில் பூத்த
இரண்டாவது பூமலரே...
என் குடும்பமெனும் பூங்காவில்
முகிழ்த்திட்ட வாச மலரே..!

பிறப்பதுமிறப்பதும் ஓர் முறை...
இருக்கும் வரை இன்பத்தை
அனைவர்க்கும் வழங்கிடு...
அகிலத்தை அன்பால் வளைத்திடு..!

துணிச்சலை ஆயுதமாக்கி...
தூய அறிவை துணையாக்கி...
தமிழை அமுதாக்கி...
தடைகளனைத்தையும் உடைத்திடு..!

சமதர்ம உலகின் தலைவன்
நீதான் எனக் காட்ட
சரித்திரத்திதை மாற்றி எழுதிட
துணிந்து எழுந்திடு..!

இங்கே முத்தமிழும் மூன்று
முக்கனியும் மூன்று
உன் அகவையும் மூன்று
என் மகிழ்சிக்கு இதுவே சான்று! 

உலகிலுள்ள எல்லா நலங்களும்
வளங்களும் உன்னடி சேர
இந்த மூன்றாமாண்டில்
முத்துக் கவி பாடுகிறேன்..!

என் இளஞ்சேயே உன் வடிவில்
எந்தையைக் காணுகிறேன்
இன்று போல் என்றும் வாழ
உந்தை புதுக்கவி பாடுகிறேன்..!

வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!
இவ்வகிலம் இருக்கும் வரை
என்னகிலா நீ வாழ்கவே..!

(எனது இளைய மகனுக்கு மூன்றாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )
Thursday, June 2, 2011

அகதிகளாய் நாம்..!


நம் கண்களிரண்டும்
ஒன்றாக கலந்த நாளிலிருந்து
உன்னிடத்தில் நானும்...
என்னிடத்தில் நீயுமாய்
வாழ்ந்து வருகிறோம்..!

என்ன சாப்பிட்டாய்...
ஏது செய்கிறாய்...
என்று இங்கிருந்து நான் வினவ
அங்கிருந்து நீ வினவியபடி...
நம் விசாரிப்புகளை நீட்டிக்கிறோம்..!

அருகருகே உள்ள வீடுகளில்
குடியிருந்தாலும்...
நம் பெற்றோர்கள் இட்ட
சண்டைகளினால்
அகதிகளாய் நாம்..!

(கிராமத்து காதலர்களுக்காக எழுதிய கவிதை இது..!)
----------------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 3)


(நானெழுதிய கானா பாடலை படிக்க : மலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..!)
Monday, May 30, 2011

விடிய வேண்டும்..!


விடிய வேண்டும்
என்பதற்காகத்தான்
இரவிலே வாங்கினோம்
சுதந்திரத்தை..!

மாற வேண்டும்
என்பதற்காகத்தான்
ஆட்சியில் கொண்டு வந்தோம்
மாற்றத்தை..!

இலவசங்களை அள்ளிக் கொடுத்து
இந்தியாவின் முதல்
பிச்சைக்காரனாக
தமிழனை மாற்றுவதற்கல்ல..!
--------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 3)

Wednesday, May 25, 2011

வெகு சீக்கிரத்தில்..!நீ எனைப் பிரிந்து இருக்கும்
நாட்களில் எல்லாம்
வெகு சீக்கிரத்தில்
தூங்கப் போய்விடுகிறேன்..!
ஏனெனில்...
கனவினில் உன்னோடு
சேர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக..!

(உங்களுக்கு காதலி மட்டும் இருந்தால் இக்கவிதை பொருந்தும்...)
-----------------------------------------------------------------------------------------------------
(உங்கள் காதலிக்கு, ஒரு தங்கையும் இருந்தால் கீழே வரும் கவிதை பொருந்தும்...)

நீ எனைப் பிரிந்து இருக்கும்
நாட்களில் எல்லாம்
வெகு சீக்கிரத்தில் 
தூங்கப் போய்விடுகிறேன்..!
ஏனெனில்...
கனவினில் உன்னோடு
சேர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக..!
ஆனாலெனை அங்கும் வந்து
இம்சிக்கிறாள்
உன்னழகுத் தங்கை..!
அவளை நான் என்ன செய்ய..?

(ஐயோ... அடிக்காதீங்க.... அடிக்காதீங்க..!)


(பின்குறிப்பு: உங்கள் காதலிக்கு அழகான தங்கை இல்லையெனில், அவளது தோழியை இங்கே சுட்டலாம்..! உங்கள் காதலிக்கு தங்கையும், தோழியும் இருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல...!)
--------------------------------------------------------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 2)

Monday, May 23, 2011

நம்பிக்கை அற்று இருப்பவனுக்கு..! - 300வது கவிதைப் பதிவு


நம்பிக்கை அற்று இருப்பவனுக்கு
நம்பிக்கை கொடுப்பதும்
நம்பி 'கை' கொடுப்பதும் நட்பே..!

பசியால் கிடந்து துடிப்பவனுக்கு
அன்னை போல் அமுது கொடுப்பதும்
அன்பைக் கொடுப்பதும் நட்பே..!

தனக்கு சரி சமமான இடத்தை
சபையில் கொடுப்பதும்
சரித்திரத்தில் கொடுப்பதும் நட்பே..!

இக்கட்டான சூழலில் மதி தடுமாறும் போது
மதி மந்திரியாய் செயல்படுவதும்
மந்திராலோசனை சொல்வதும் நட்பே..!

உடன் பிறந்த உறவுகள் கைவிட்டாலும்
உரியவள் கை விட்டாலும்
என்றும் கைதாங்கி நிற்பதென் நட்பே..!

நம் வாழ்வில் திடீரென்று நடக்கின்ற
இன்பத்தில் இணைந்திருப்பதும்
துயரத்தில் துணை நிற்பதும் தூய நட்பே..!

பிரதிபலன் எதிர்பார்க்கும் உறவுகளில்
எதையும் எதிர்பார்க்காமலும்
எதையும் விட்டுத் தரும் உறவே நட்பு..!

சுயநலம் மிக்க உறவுகள் இடையே
நட்பின் நலம் கருதுவதும்
நலிந்தால் நல் உழைப்பைத் தருவதும் நட்பே..!

தம் பெற்றோர் மற்றும் உறவினரிடையே
நமை விட்டுக் கொடுக்காமலிருப்பதும்
நம் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருப்பதும் நட்பே..!

காதல், அன்பு, பாசம் ஆகிய மூன்றெழுத்து
மந்திரங்களின் மொத்த உருவமாக இருப்பதும்
மனத்துயர்களை நீக்குவதும் நட்பே..!

உயிரெடுக்கும் எமனே வரினும் அவனை எதிர் கொள்ள
என்னோடு தன்னிரு தோள் தட்டி நிற்பதும்
நான் துவளுகையில் தோள் தாங்கி நிற்பதும் நட்பே..!

(இன்னும் எத்தனையோ எந்நட்பில் இருக்கின்றன. இக்கவிதைப் படையலை என் அன்புக்குரிய நண்பர்கள் அனைவருக்கும், உலகத்திலுள்ள அத்தனை நண்பர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.


நட்பு மட்டும் என் வாழ்வில் இல்லையென்றால், என்றோ நான் வீழ்ந்திருப்பேன்... நான் வளர வேண்டும் என்று துடிக்கின்ற நட்புகளால்தான், நான் இங்கே துடிப்புடன் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.


இந்த 300-வது பதிவு வரை எனக்கு ஆதரவு தரும் என்னன்பு வாசக நண்பர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!


என்றென்றும் அன்புடன்


உங்கள் மோகனன்)
------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 2)

Friday, May 20, 2011

நான் தரும் பரிசு..!


என்னை வலுக்கட்டாயமாக
நிர்வாணப்படுத்திப்
பார்த்த உன் கண்களுக்கு
நான் தரும் பரிசுதான்
கண்ணீர்..!
வெட்டுப் பட்டு
வீழும் போதும்
வீரமாய்ச் சொன்னது
வெங்காயம்..!

(அடுத்த கவிதைப் பதிவு - 300 வது கவிதைப் பதிவு... காத்திருங்கள்)
Thursday, May 19, 2011

உள்ளத்தின் வலிகளை..!


உள்ளத்தின் வலிகளை
உரியவளிடம் சொன்னால்...
வலியது மறையும்
என்றாய் பெண்ணே..!
என் உள்ளத்தின் வலியே
நீயென்றால் நான்
யாரிடம் போய்ச் சொல்ல..!
Wednesday, May 18, 2011

காதலுக்கு அனுமதி..?


ரோஜாவிடம் அனுமதி கேட்டு
பனித்துளி அதன்மேல் படர்வதில்லை..!
நிலவிடம் அனுமதி கேட்டு
அல்லி மலர் அழகாய்ப் பூப்பதில்லை...
பூவிடம் அனுமதி கேட்டு
தேனை வண்டு குடிப்பதில்லை..!
அதே போலத்தான்
யாரிடமும் அனுமதி கேட்டு
வருவதில்லை காதல்..!
அன்பொழுகும் அழகைக் கண்டால்
ஆர்ப்பரித்து வந்து விடும் காதல்..!
உன் மேல் நான் கொண்டதைப் போல..!

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை)
Tuesday, May 17, 2011

உன்னைச் சுற்றியே..!


அன்பை திகட்டத் திகட்டப்
புகட்டி விட்டு...
அலைகடல் தாண்டி
அயல்நாடு சென்று விட்டாய்..!
ஆறு நாட்களுக்கொரு முறை
அலைபேசியில் அழைத்து
மறந்தாயா என் அன்பே..?
என்ற கேள்வியை என்னிடம்
மறவாமல் கேட்கிறாய்..!
உன்னை மறந்தால் தானே
நான் நினைப்பதற்கு..!

அன்னையை மறந்தேன் எனில்
அகிலத்தை மறந்தவனாவேன்..!
அய்யனை மறந்தேன் எனில்
அறிவை மறந்தவனாவேன்..!
உன்னை மறந்தேன் எனில்
உயிரையே மறந்தவனாவேன்..!
என்னுடல் கூடு மட்டும்தானிங்கே...
என்னுயிரும் உறவும் நினைவும்
எக்கணமும் உன்னைச் சுற்றியே..!

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை)
Monday, May 16, 2011

செல்போனும் காதலியும்..!


செல்போனும் காதலியும்
இரட்டைப் பிறவிகள் போல..!
எப்போதும் நம் அரவணைப்பிலேயே
இருக்க விரும்புவார்கள்..!
அவர்களை கவனிக்கா விட்டால்
முதலில் சிணுங்குவார்கள்..!
சிணுங்கிய பிறகும் வாரி எடுத்து
அணைக்கா விட்டால்
அலறித் துடிப்பார்கள்..!
அதையும் கண்டு கொள்ளாமல்
விட்டு விட்டால்
கோபித்து ஊமையாவார்கள்..!
நாமாய் பார்த்து அவர்களிடம் பேசும் வரை
ஊமையாய்த்தான் இருப்பார்கள்..!

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை)

Wednesday, May 11, 2011

பீனிக்ஸ் பறவையாய்..!


சுதந்திரப் பறவையாய்
பறந்து கொண்டிருந்த நான்
உன்னால் பீனிக்ஸ் பறவையாய்
மாறிப் போனேனடி...
அதன் காரணம் ...
ஒவ்வொரு முறை
உனைக் காணும் போதும்
புதிதாய் நான் உயிர்த்தெழுகிறேனே..!


Tuesday, May 10, 2011

சூழ்நிலைக் கைதி?'உனைப் பார்த்துப் பேசியே
பலநாள் ஆகிறது தேவி...
எனைக் காண 
எப்போது வருவாய் தேவி..?'
என்றேன்..!

அவளோ...
'என் பெற்றோரிருக்கின்றனர்
என் உடன் பிறந்தோரிருக்கின்றனர்
உனை இப்போது காண வருவது
இயலாது கண்ணா...
நான் இங்கு கைதியாக இருக்கிறேன்
சூழ்நிலைக் கைதியாகவும்
இருக்கிறேன்' என்றாள்...

உனக்காகப் பிறந்த எனை
உன் காதலின் கைதியாக்கி விட்டு
நீயோ அங்கே கைதி என்கிறாய்...
இதற்கு நான் யார் மீது குற்றம் சொல்ல..?
Tuesday, May 3, 2011

எனைப் பிரிந்தது உன்..! - காதல் தோல்விக் கவிதைஎனை மறந்தது உன் மனமென்றால்
இறந்து போனது என் மனமன்றோ...
எனைப் பிரிந்தது உன் உறவென்றால்
பிரிந்து போனது என் உயிரன்றோ...
எனை துறந்தது உன் இதயமென்றால்
துடிக்க மறந்ததது என் இதயமன்றோ...
எனை தொலைத்தது உன் கண்களென்றால்
தொலைந்து போனது என் கண்களன்றோ...
ஒரு கணமும் உனைப் பிரியேன்...
உன் துணையாய் நானிருப்பேன்...
என்றாயே பெண்ணே..!
இன்றோ வேறொருவன் துணையாகி
உனக்கு பதில் எனக்கு
துன்பத்தை துணையாக்கி விட்டாயே..!
உன்னைப் போலென்னால்
மாற முடியவில்லையே...
வேறொருத்தியை துணையாக ஏற்க
என் மனதில் இடமுமில்லையே...
என் செய்வேன் பெண்ணே...
காலமெனை மாற்றும் என்றார்கள்
காலம்தான் மாறியது...
உன்னால் ஏற்பட்ட காயம்...
இன்னும்... இன்னும் என் மனதில்...
ஆறவில்லையடி...
அதை ஆற்றவும் நினைக்கவில்லையடி...
காயத்தை ஆற்றி விட்டால்
உன்மேல் நான் கொண்ட மெய்க்காதல்
பொய்யாகிவிடுமடி...
என் மெய் இடுகாடு போகும் வரை
என் காதல் மெய்யானதாகவே இருக்குமடி..!
Saturday, April 30, 2011

உலகத்தை இயங்க வைக்கும்..! - மே தின சிறப்புக் கவிதை


உடலினை இயந்திரமாக்கி...
உழைப்பினை உரமாக்கி...
உலகத்தை இயங்க வைக்கும்
உன்னத தோழனே...
உன்னுடைய நாளில்
உனை நான் வணங்குகிறேன்..!

உழைக்கும் வர்க்கம்
ஆட்டுமந்தைகளைப் போல்
இருப்பதால்தான்
‘மே’யில்  வருகிறது
உழைப்பாளர் தினம்
என்றான் ஒரு கவிஞன்..!

உண்மை அதுவல்ல தோழா...
உழைப்பதில்
நீ ஒப்பற்ற மழை
‘மே’கம் போன்றவன் என்பதால்தான்
‘மே’ மாதத்தில் இத்தினம்
கொண்டாடப்படுகிறது..!

உலக வரைபடத்தை
உன் வியர்வைக் கோடுகளால்
உடலெங்கும் வரைந்த தோழனே...
உன் உழைப்பால்தான் உலகமே
அன்று வரைபடமானது...
வளமான பூமியானது..!

உழைத்துக் களைத்தறியா
விவசாயத் தோழனே...
உன்னுழைப்பால் உலகமே
பசியாறுகிறது...
உன்னுழைப்பால் உலகமே
ஆடை அணிகிறது...

நீ மட்டும் உழைப்பாளியல்ல தோழா
உன் குருதியில் இருக்கும்
ஒவ்வொரு வெள்ளை அணுவும் உழைப்பாளியே..!
அவ்வணு உனக்காக உழைக்க...
நீயோ உலகிற்காக உழைக்கிறாய்..!
நீ உழைக்காம்ல் போனால்
உலகமே துன்பத்தில் உழன்றுவிடும்...
உறைந்து போய் நின்று விடும்...

உன்னுழைப்பிற்கு பெயரளவில்
மரியாதை தருவதை விட
பொருளாதார அளவில் என்று
மரியாதை தரப்படுகிறதோ
அன்றுதான் உன் வர்க்கம் உயர்வடையும்..!
என்று உன் வர்க்கம் உயர்வடைகிறதோ
அன்றுதான் உலகில் சமத்துவம் மலரும்..!

(உலகில் ஏதேனும் ஒரு வகையில் உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளிகளுக்கும் அடியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்... பணிவான மே தின வாழ்த்துக்களும் உரித்ததாகட்டும்..!


என்றென்றும் அன்புடன்


உங்கள்
மோகனன்)
Thursday, April 28, 2011

எம்மீழத்தமிழன் அங்கே தலை தூக்க..! - ஈழத் தமிழ்க் கவிதை!


பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள
ஆஸ்திரேலியாவில் ஓர் இந்தியன்
தாக்கப்பட்டான் என்றதும்
துடிதுடித்து எழுந்த இந்திய அரசு
கைக்கெட்டும் தூரத்தில் உள்ள ஈழத்தில்
எம்மீழத்தமிழன் கொல்லப்பட்டதற்கு
துடித்து எழாமல் தூங்கிப் போனது ஏன்..?

லிபியாவில் கலவரம் என்றதும்
லிகிதம் எழுதாமல்
வானூர்தி அனுப்பிய இந்திய அரசு
எம்மீழத்தமிழன் பிரச்சினையில்
மாற்றி மாற்றி லிகிதம் அனுப்பியது ஏன்?
எகிப்து எரிகிறது என்றதும்
இங்கிருந்து சீறும் ஏவுகணையாய்
செயல்பட்ட இந்திய அரசு
எம் தமிழீழம் பற்றி எரிந்த போது
எதுவும் செய்யாதிருந்தது ஏன்?

இந்திய விடுதலைக்காக
நேதாஜியும், பகத் சிங்கும் செய்தது
விடுதலைப் போராட்டம் என்றால்
எம்மீழத்தமிழன் செய்தது
எந்தப் போராட்டத்தினைச் சாரும்..?
எம்மீழப் புலிகள் செய்தது
விடுதலைப் போராட்டம் இல்லையா?

தமிழன் என்பவன் இந்தியனில்லையா?
தமிழினம் என்பது இந்திய இனமில்லையா?
ஏ இந்திய அரசே...
தொப்புள் கொடி உறவென்று
உனை மனதில் நினைத்த பாவத்திற்கு
எம்மீழத்தமிழன் அங்கே
மண்ணோடு மண்ணாகிப் போனதுதான் மிச்சம்..!

இந்திய அரசே...
அம்மக்கள் எம்மக்களே என்று
அன்று நீ துடித்து எழுந்திருந்தால்
பல்லாயிரக் கணக்கான
ஈழத்தமிழ் மக்கள்
உயிரோடு உலவியிருப்பார்கள்
உற்சாகமாய் சுதந்திரத்தை சுவாசித்திருப்பார்கள்..!

அன்று நீ சாட்டையை சுழற்றியிருந்தால்
சிங்களன் அன்றே சுருண்டிருப்பான்...
இன்று அந்த சாட்டையை
ஐ.நா. சுழற்ற ஆரம்பித்திருக்கிறது...
உதவி செய்ய வேண்டாம் நீ
அதற்கு நீ உபத்திரவம் செய்யாதே...
சிங்களனுக்கு சிகை பல்லக்கு தூக்காதே...
எம்மீழத்தமிழன் அங்கே தலை தூக்க வேண்டும்..!
எம்மீழப் புலிக் கூட்டம் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்..!

(தமிழனாய் பிறந்தமைக்கு தலை நிமிர்ந்து நிற்கவா? இந்தியாவில் பிறந்ததற்கு
தலை குனிந்து நிற்கவா..? - எம்போன்ற உண்மைத் தமிழனின் மனக்குமுறல் என்று அடங்குமெனில் எம்மீழத் தமிழனின் வாழ்வு, அங்கே சுதந்திரமாய் தலை தூக்கும் போதுதான்..! தலை தூக்கும் வரை ஓயமாட்டேன்... யாரையும் ஓய விட மாட்டேன்..!


அடங்கா கோபத்துடன்

உங்கள்

மோகனன்)
Wednesday, April 27, 2011

பெரிதினும் பெரிது கேள் ஐ.நா.வே..! - ஈழத் தமிழ்க் கவிதை!சிங்கள ராணுவத்தினரால்
அப்பாவித் தமிழர்கள்
நாற்பதாயிரம் பேர்
உருத்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள்
என்று அதிகாரப் பூர்வமாய்
ஐ.நா. தனது நாவினை
தற்போதுதான் திறந்திருக்கிறது..!

அன்று கொன்றழிக்கப்பட்ட
கொடும் சரித்திரம் இன்றுதான்
அதிகார பூர்வமாய்
உலகத்தின் பார்வைக்கு வந்திருக்கிறது...
போர்க்குற்றம் புரிந்தான் சிங்களன்
என்று உலகமே தற்போது
சிலுப்பிக் கொண்டிருக்கிறது..!

அன்றே எம்மீழத்தமிழன்
இங்கொடுஞ்செயல்களுக்கான
ஆதரங்களைக் காட்டினான்...
அப்பாவிகளை காக்கும்படி
அண்டை நாடுள்பட
அனைத்து நாடுகளிடம் முறையிட்டான்
அம்மக்களைக் காத்திட
அவனாவியை ஈந்தான்..!

வீரத்தின் விளை நிலங்களில்
எம்மீழத் தமிழனின் வீரம்
பரிசோதிக்கப்பட்டது...
அச்சோதனையில்
கொடும் படைக்கஞ்சா புலிகள் என்று
எம்புலிகள் வீரச் சமர் புரிந்தனர்
வீரமாய் மரணத்தை தழுவினர்..!

அங்கே வீழ்ந்தது ஒவ்வொன்றும்
ஈழத்தமிழனின் சிதையல்ல...
ஈழத்தமிழ் விடுதலையின் விதை...
வீரப் புலிகளின் விடுதலைக் கதை...
தன் தமிழினம் காக்க...
தன் தமிழ்க்குலம் காக்க...
தன் தமிழ் மக்களைக் காக்க...
மரணத்தைத் தழுவிய வீர மறவர்களின் கதை...

பெரிதினும் பெரிது கேள் ஐ.நா.வே..!
எம்மீழத்தமிழ் மக்களின் உயிர்த்தியாகத்திற்கு
உற்ற பலன் கிடைக்க வேண்டும்..!
போர்க்குற்றம் புரிந்த புல்லர்களுக்கு
சரியான புத்தி புகட்டிட வேண்டும்..!
புலிகளின் தன்னலமற்ற தியாகத்திற்கு
ஈழத்தமிழ் மண் கிடைத்திட வேண்டும்..!
எம் தமிழ் மக்கள் அங்கே சுதந்திரமாய்
வாழ வழிவகை செய்திடல் வேண்டும்..!
இதை அத்தனையும் பெரிதாய்க் கேள் ஐ.நா.வே..!
இவைகளத்தனையும் என்று கிடைக்குதோ
அன்றுதான் எம் புலிகளின் ஆன்மா
அமைதி பெறும்... தியாகம் சுடர் விடும்..!
Saturday, April 23, 2011

கோடை மழையின் சாரல் மழை..!


கொளுத்தும் வெயிலில்
கோடை மழையின்
சாரல் மழை
சரம் சரமாக வழிய...
அம்மழைச்சரங்கள்
பூமித்தாயின் உடலெங்கும்
முத்த மழை பொழிய
அவளோ புளங்காகித்தில்
மூச்சு விட்டாள்..!
நம் நாசியில் அவள்
மண் மணம் பரவ
நம் அனைவரின் உடலெங்கும்
புத்துணர்ச்சி பரவ...
நம் இதழ் நமையறியாமல்
புன்னகை பூக்கும்..!
கிராமத்து மண் மணத்தில்
கிறுகிறுத்துப் போகாதோர் யார்?
அவ்வாசனையை பாழும்
சென்னையில் எதிர்பார்த்தேன்
கிடைத்த்தென்னவோ
தார் சிமெண்டின் நாற்றமும்
நகரத்து குப்பைகளின் நாற்றமும்தான்..!
Monday, April 18, 2011

என் பெண்ணிலவே..! - பிறந்த நாள் கவிதை!


இப்புவியில் அழகான
வெண்ணிலவின் பிறந்த நாள்
ஒவ்வொரு மாதமும் வரும்..!
ஆனால் சித்திரையில்
பிறக்கும் வெண்ணிலவுக்கோ
ஆண்டுக்கொரு முறைதான்
பிறந்தநாள் வரும்..!
அது போலே
அச்சித்திரையில் பிறந்த
(வி)சித்திர நிலவே..!
காதல் முத்திரையால்
என் நித்திரையை கொள்ளையிடப்
பிறந்த என் பெண்ணிலவே..!
நீ பிறந்த இந்நாளில்
உனைப் பெற்றோர்க்கு
மகிழ்ச்சியோ இல்லையோ..?
எனக்காக நீ பிறந்திருக்கிறாய்
என்பதைக் கண்டு
எல்லையிலா மகிழ்ச்சி கொள்கிறேன்..!
உனைக் கொஞ்சி மகிழ்கிறேன்..!
இனியவளே உனக்கிந்த
யாழ்பித்தனின் பிரியமான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
Tuesday, April 12, 2011

எல்லோர்க்கும் எல்லாமும்..! - தமிழ்ப்புத்தாண்டு தின சிறப்புக் கவிதை!
சூரியனை அணைக்கத்தான் முடியுமா?
நிலவினை மறைக்கத்தான் முடியுமா?
நட்சத்திரங்களை ஒழிக்கத்தான் முடியுமா?
அதுபோல் தான் தமிழ்ப்பெண்ணே
உன் பிறப்பை மாற்றத்தான் முடியுமா?
சித்திரை மாதத்தில் பிறக்கும் என்
பத்தரை மாற்றுத் தமிழ் தங்கமே...
உன் வரவை யார் தடுப்பார்..?
உலகத்து தமிழர்க்கெல்லாம் 
திருநாளது... பெருநாளது... புதுநாளது...
எதுவெனில் எம்தமிழே 
நீ பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டு நாளதுதான்..!
எல்லோர்க்கும் எல்லாமும் அருள்வாய் தாயே..!
எளியோர்க்கு வலிமைதனை வழங்குவாய் நீயே..!
தரணியிலே தமிழர்களை தழைக்கச் செய் தாயே..!
வறுமைதனை அடியோடு அகற்றிடுவாய் நீயே..!
உன்மடியில் எப்போதும் நான் பிறக்க வரமருள்வாயே..!
என் தாயே... தமிழே... உன் திருத்தாழ் சரணம்..!

(அன்பிற்கினிய வாசக நண்பர்கள் அனைவருக்கும், எனது முன்கூட்டிய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


வாழ்த்தும் அன்பு நெஞ்சம்


உங்கள்
மோகனன்)