ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, June 4, 2013

அன்பால் அணைக்கும் அகிலா..! - பிறந்தநாள் கவிதை


ஒரு மகவு போதுமென தந்தை யான்
   உன்னத முடிவெடுத்திருந்தேன் - உன் தாயோ
மற்றொரு மகவு எனக்கு வேண்டுமென
  சன்னதம் செய்து உனைப் பெற்றெடுத்தாள்
முதல் மகவின் துணைக்குத் துணையாக
  இணைக்கு இணையாக உனை ஈன்றெடுத்தாள்

மருந்தென உனை நினைத்து வாழ்வில்
   வேண்டாமென நினைத்திருந்தேன்
விருந்தென வந்து விழுந்தாய் - மடியில்
  விழுதெனப் பற்றி விட்டாய் அகிலா..!
குறுகுறு மழலைப் பார்வைகள் மறைந்து
  துறு துறு  பருவத்தை  எட்டி விட்டாய்

மரணத்தை அலற வைத்து இம்மண்ணில்
  மழலையென நீ மலர்ந்தாய் - பிறந்த பின்
காலனைக் கதற  வைத்து  இக்கலி
  யுகத்தில் கம்பீரமாய் கால் பதித்தாய்!
அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம்

கதிர் கண்ட பனிபோல் மறைந்து போயின!

இன்றோடு நீ பிறந்து ஆண்டு ஐந்து ஆயிற்று
  உனைப் பிடித்த துன்பங்கள் காற்றோடு போயிற்று
அகிலத்தை அன்பால் அணைக்கும் அகிலா 
    இனி இன்பங்கள் உனை விட்டு அகலா..
வான்முகிலும் இனி உன் பிறப்பை பாடும்
  வரலாறும் தன் ஏட்டில் உன் புகழைச் சூடும்!(எனது இளைய மகனின் ஐந்தாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )