ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, December 30, 2015

அழுதது மரம்..!


புவி தழைக்க
மழை வேண்டி
மரம் வளர்த்தது
ஒரு கூட்டம்...
மகிழ்ந்தது மரம்..!


மழை வேண்டி
யாகம் நடத்த
மரத்தை வெட்டியது
ஒரு கூட்டம்...
அழுதது மரம்..!

மரம் போல்
வளர்ந்திருக்கும்
மனிதர்களே...
இதில் நீங்கள்
எந்தக் கூட்டம்?




Monday, December 21, 2015

கடவுளைத் தேடும் மனிதர்களே...

மார்க்கத்தில்
கடவுளைத் தேடும்
மனிதர்களே...
மழையில் கரைந்த
மனிதங்களைத்
தேடுங்கள்...
மதங்களைக் கடந்த
மகத்தான
கடவுளாவீர்கள்..!

(மழை வெள்ளத்தில் பல்லுயிர்களைக் காத்த மாவீரர்களுக்கும், நிவாரணப் பணிகளில் களமாடிக்கொண்டிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...)




Friday, December 11, 2015

உன் கண்ணீரில் இங்கு..!



 
என் மீதுள்ள கோபத்தில்
எனை நீ கொலையே
செய்தாலும் கூட
கொம்பேறி மூக்கனாய்
ஏற்றுக் கொள்வேனடி..!
பெருங் கோபத்திற்கு பதிலாய்
உன் மை விழிகள்
கண்ணீர் உதிர்க்கிறதென்றால்
அதை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடி…
உன் கண்ணீரிலிங்கு
கரைவது என் மனம் மட்டுமல்ல
என்னுயிரும்தானடி..!




Saturday, November 28, 2015

தொலைந்து போ..?


நமக்கிடையே
நடக்கும்
அலைபேசி
உரையாடல்களில்
அதிகம் ஊடல்தான்
வெற்றி நடை போடும்..!
அதிலும் நீ
அடிக்கடி என்னிடம்
'தொலைந்து போ' என்று
சொல்லும் போது
என்னுள் தோன்றுவது
ஒன்றே ஒன்றுதான்-
'தேடுவது நீ எனில்
மீளா இடத்தில் கூட
தொலைந்து போகத் தயார்!'




Friday, November 27, 2015

அடிக்கடி கேட்கிறாய் நீ..!




‘எப்போதும்
மகிழ்வுடன் இருக்கிறாயே...
அதெப்படிடா’ என்று
என்னிடம் கேட்கும் போதெல்லாம்
இந்த இதழாளனின் இதழோரம்
ஒரு மெல்லிய புன்னகை  கசியும்..!
அந்த கசிவில் நீ கலந்திருப்பதை
அறிந்திருந்தாலும்
என் இதழால் அறிய
வேண்டுமென்பதற்காகவே
அடிக்கடி கேட்கிறாய் நீ..!
கேள்வி கேட்பவனையே
கேள்விக்குறியாக்கிய உனக்கு
இதெல்லாம்
சொல்லியா கொடுக்க வேண்டும்..!




Wednesday, November 25, 2015

நினைவுச் சுமைகளை..



‘உன் நினைவுகளை
மட்டுமே சுமக்க
னக்கு உரிமையுண்டு
என்று சொல்லிவிட்டு
எனது நினைவுகளை மட்டும்
எடுத்துச் செல்பவளே...
என்னையும் உன்னோடு
அழைத்து் செல்...
இல்லையேல் 
என் உயிரை எடுத்துக் 
கொண்டு செல்...
நீயின்றி இங்கே நான்
சடலமாய்த் திரிவதை விட
சாம்பலாய்க் கரைவது மேல்..!




Tuesday, November 24, 2015

வெள்ளத்தால் வீழ்ந்து சாகிறோம்


ஒற்றையாளாய்
ஊரின் எல்லையில்
கம்பீரமாய்  நின்று
ஊரைக்காக்கும்
எல்லைச்சாமி..!

ஊருலகம்
நீர் நிறைவாய் வாழ
ஒற்றைக் காலில்
தவம் கிடக்கும்
முனிவன்..!

கரும்பாசிகள்
கயல்கள்
கரு நண்டுகள்
என நீராதாரம் காக்கும்
கடவுள்..!

ஊருணி நிறைய
உழைக்கும்
விவசாயிகள் மகிழ
உயிர் நீர் காக்கும்
உத்தமன்!

ஆபத்து காலங்களில்
இரும்பென நின்று
இடர்தனை
நீக்கும்
பெரும் கரும்பன்..!

காவிரியே ஆனாலும்
கல்லணையே ஆனாலும்
கரும் வைரமாய்
தாங்கி நிற்கும்
கம்பீரன்

காகம், குருவிகளுக்கு
மட்டுமின்றி
மானிடத்திற்கும்
நன்மை பயக்கும்
அபயன்..!

இப்படி
எத்தனை வகையில்
எடுத்துச் சொல்லினும்
உன் சிறப்புகளை
வரிகளில் அடக்கமுடியவில்லை..!

கரைகளை கவ்விப்
பிடித்த உன் கருங்கரங்களை
கருணையின்றி
வெட்டி வீழ்த்தினோம்
கண்ட துண்டமாக்கினோம்

ஆக்கிரமிப்புகளால்
உனை அடியோடு வீழ்த்தினோம்…
இன்று வெள்ளத்தால்
வீழ்ந்து சாகிறோம்
பனை மரமே!





Monday, November 23, 2015

என் நிலையோ படுமோசம்..!




உனை நினைத்ததால்
ஊன் மறந்தேன்
உயிர் மறந்தேன்
உடல் மறந்தேன்
உடுத்தும் ஆடை மறந்தேன்
உறவின் முறை மறந்தேன்
இப்படி பலவற்றை மறந்து
உனையே சுற்றுகிறேன்
என்கிறாயடி…
நீயாவது எனை
சுற்றுகிறேன் என்றாய்
என் நிலையோ
இங்கு படுமோசம்
என் உலகமே
உனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது
இதற்கு நான் என்ன செய்ய..!?




Friday, November 20, 2015

காதலில் நாணயம்..?


"எனை நேசிப்பதில்
நாணயமாக
இருப்பாயா..?" என்று
என்னவள்
என்னிடம் கேட்டாள்..!

"அன்பு காட்டுவதில்
இருந்து
அரவணைப்பது வரை
எல்லாவற்றிலும்
நாணயமாய் இருப்பேனடி"
என்று அவள் தலையலடித்து
சத்தியம் செய்தேன்...

"உன்னால் அப்படி
நாணயமாக 
இருக்க முடியாது
சோதித்து பார்க்கலாமா..?"
என்று சவால் விட்டாள்!

"காதலில்
என் நாணயத்திற்கு
சோதனையா..?
சோதித்துப் பார்..!"
என்று எதிர் சவால்
விட்டேன்

"அப்படியா..?
அதையும் பார்க்கலாம்...
எங்கே எனக்கு
சத்தமில்லாமல்
ஒரு முத்தம் தா..!"
என்றாள்

தீராக் காதலால்
ஓராயிரம்
முத்தச் சந்தம்
தந்தேன்..!
எனையறியாமல்
நாணயம் இழந்து
நின்றேன்..!




Wednesday, November 18, 2015

'தண்ணி'யும் அரசும்..!



அன்று –
ஊரெல்லாம்
‘தண்ணி’ என்று
‘குடி’மக்களிடம் சொன்னது அரசு…
‘குடி’ மக்கள் அதை
கண்டுகொண்டனர்…
கொண்டாடியது அரசு..!

இன்று –
ஊரெல்லாம்
தண்ணி என்று
அரசிடம் சொன்னது
பொதுமக்கள்…
கண்டு கொள்ளவில்லை அரசு
திண்டாடினர் மக்கள்..!

(தீபாவளியை ஒட்டிய ஒரு வார டாஸ்மாக் வருமானம் ரூ. 500 கோடிக்கும் மேல்... தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புக்கு அரசு ஒதுக்கீடு ரூ. 500 கோடி மட்டும்)