ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label சிறப்புக் கவிதைகள். Show all posts
Showing posts with label சிறப்புக் கவிதைகள். Show all posts

Saturday, April 13, 2013

விஜயமே வருக..! - தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவிதை!




நனிமகள் நந்தனாண்டு நடை தளர்ந்தாள்
பனிமகள் தளிர்நடை வளர்ந்தாள் - பறக்கும்
சித்திரைத் தேரிலேறும் தமிழ் விசயாண்டே
முத்திரை பதிக்க வருக!

************(இஃது ஒரு வெண்பா முயற்சி)**************


ஆண்டாண்டு காலமாய்
அழுது புலம்பினாலும்
மாண்ட காலம் மீள்வதில்லை
ஆயினும்
எம் தமிழ்ப் புத்தாண்டுப்
பெண்ணோ
ஆண்டாண்டு காலமாய்
மீண்டு கொண்டிருக்கிறாள்
எனைப் போன்ற
தமிழ்ப் பித்தன்களை
மீட்டுக் கொண்டிருக்கிறாள்...

குழவியாய்
நடைபயின்ற
நந்தன ஆண்டு
இன்றோடு
விடை பெறுகிறது
கிழவியாய்..!
அவள் பெற்ற குழவி போல்
அடுத்து நடைபயில
வருகிறது
விஜய ஆண்டு...
வரவேண்டும் விஜயமே
வளம் பல வேண்டும்
தினமுமே..!

வருக வருக
விஜயமே வருக
தருக தருக
நலம் பலவே தருக
பருக பருக
தமிழ் அமுதே பருக
பெருக பெருக
தமிழ் புகழே பெருக
எழுக எழுக
தமிழர் வாழ்வே எழுக
வெல்க வெல்க
தாய்த் தமிழே வெல்க
வளர்க வளர்க
மனத நேயமே வளர்க
பொழிக பொழிக
மாதம் மும்மாரி பொழிக
வாழ்க வாழ்க
தமிழ்புத்தாண்டே வாழ்க..!

(எனது அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது முன்கூட்டிய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
ஏற்றத்தாழ்விலா சமுதாயம் மலர வேண்டும்

என வேண்டும்
உங்கள்
மோகனன்)




Friday, September 9, 2011

ஆற்றலுடன் பிறந்தவனே..! - பிறந்தநாள் கவிதை


ஆற்றலுடன் பிறந்தவனே ஆதித்தா...
இன்றோடு நீ பிறந்து ஆண்டு ஆறு..!
ஊர் போற்றலுடன் வாழுகின்ற ஆதித்தா...
பேர் புகழோடு வாழ வேண்டும் ஆண்டு நூறு!

எமக்கு முதல் மகவாய் பிறந்ததினால்
என் வாழ்விற்கு அர்த்தம் தந்'தாய்'..!
உன் அன்பான அன்னையில் வாழ்விற்கு
தென்றல் போல் வசந்தம் தந்'தாய்'..!

உனக்கு துணையாய் அகிலத்தை கொடுத்தோம்
எமக்கு துணையாய் பொறுப்பைக் கொடுத்'தாய்'
உனக்கு உயிரும் உடலும் நாங்கள் தந்தோம்..!
எம்மிருவருக்கும் நீயே தந்தையும் தாயுமானாய்..!

இந்நாள் போல் எந்நாளும் உனக்கு மகிழ்ச்சி பொங்க
உலகின் குன்றாத கல்விச் செல்வம் உன்னோடு தங்க
உன் வளர்ச்சியில் எங்களுக்கு பெருமிதம் பொங்க...
நீ...  பன்நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவே..!




Tuesday, April 12, 2011

எல்லோர்க்கும் எல்லாமும்..! - தமிழ்ப்புத்தாண்டு தின சிறப்புக் கவிதை!




சூரியனை அணைக்கத்தான் முடியுமா?
நிலவினை மறைக்கத்தான் முடியுமா?
நட்சத்திரங்களை ஒழிக்கத்தான் முடியுமா?
அதுபோல் தான் தமிழ்ப்பெண்ணே
உன் பிறப்பை மாற்றத்தான் முடியுமா?
சித்திரை மாதத்தில் பிறக்கும் என்
பத்தரை மாற்றுத் தமிழ் தங்கமே...
உன் வரவை யார் தடுப்பார்..?
உலகத்து தமிழர்க்கெல்லாம் 
திருநாளது... பெருநாளது... புதுநாளது...
எதுவெனில் எம்தமிழே 
நீ பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டு நாளதுதான்..!
எல்லோர்க்கும் எல்லாமும் அருள்வாய் தாயே..!
எளியோர்க்கு வலிமைதனை வழங்குவாய் நீயே..!
தரணியிலே தமிழர்களை தழைக்கச் செய் தாயே..!
வறுமைதனை அடியோடு அகற்றிடுவாய் நீயே..!
உன்மடியில் எப்போதும் நான் பிறக்க வரமருள்வாயே..!
என் தாயே... தமிழே... உன் திருத்தாழ் சரணம்..!

(அன்பிற்கினிய வாசக நண்பர்கள் அனைவருக்கும், எனது முன்கூட்டிய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


வாழ்த்தும் அன்பு நெஞ்சம்


உங்கள்
மோகனன்)




Wednesday, March 30, 2011

‘நட்பு’ எனும் பூ..! - நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை


இப்பூவுலகில் பூக்கும்
பூக்களெல்லாம்
ஒருநாளில் வாடிவிடும்..!
ஆனால் ‘நட்பு’ எனும் பூ
என்றென்றும் வாடாமல் வாசம் தரும்
என்பதை எனக்கு உணர்த்திய
உன்னத நண்பன் நீ..!

நான் வேலை தேடியலைந்த போதெல்லாம்
என் வேதனையைத் துடைத்து...
நான் நம்பிக்கையிழக்கும் போதெல்லாம்
என்னுள் நம்பிக்கையை அடைத்து...
பாழும் நகரத்தில் பரிதவித்து நின்ற போதெல்லாம்
பதறாதே நானிருக்கிறேன் என்று
பரிவோடு நம்பிக்கை மொழி நவின்றவின் நீ..!

என் சுமையினை சுமப்பதற்கு
உன்னிரு தோள்களைக் கொடுத்து...
அடியற்ற மரம் போல
அதலத்தில் வீழும் போதெல்லாம்
பிரதிபலன் பாராமல்
விழுதாய் தாங்கிப் பிடித்தவன் நீ..!

‘இடுக்கண் களைவதாம் நட்பு’
என்ற வள்ளுவனின் வாக்கிற்கு
இலக்கணம் கற்பித்து
என்னுடைய கர்ணன் என
கனிவாய் நிரூபித்தவன் நீ..!

துன்பநிலை வருகையில்தான்
தூய நட்பு வெளியில் வரும்
என்பதை அறியச் செய்த
அன்பு நிறை நண்பா...
இன்றுனக்கு பிறந்த நாள்..!
இனிமை பொங்கும் வளநாள்...
உனைப் பெற்றதால்
உன் பெற்றோர்க்கு மட்டுமல்ல
உனை நண்பனாகப்
பெற்ற எனக்கும் பெருமகிழ்ச்சியே...

எந்நாளும் உனைத் தேடி
வசந்தங்கள் வந்து விழ...
மகிழ்ச்சிக் கடலலை உன்
வாழ்வில் பொங்கியெழ...
என்றென்றும் வாழ்க நீ நட்பே...
பல்லாண்டு... பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு வாழ்கவே..!

(என் இனிய நண்பன் அ. பிரேம் சந்திரனுக்கு இன்று பிறந்த நாள்... அவனுக்காக நானெழுதிய பிறந்த நாள் கவிதை..!)




Wednesday, March 23, 2011

வீரத்தைக் கற்றுக் கொடுத்த..! - தியாகிகள் தின சிறப்புக் கவிதை!

துப்பாக்கிகளைக் கண்டஞ்சாமல்
தூயவளாம் பாரத மாதாவின்
விடுதலைக்காக
துணிவைத் துணையாக்கி
தூக்குக் கயிற்றை
துணிச்சலோடு முத்தமிட்ட
மூன்று மறவர்களின்  தினமின்று..!
முன்னூறு ஆண்டுகளாய்
இருண்டிருந்த இத்தேசம்
மூன்று மாவீரர்களின்
வீரமரணத்திற்குப் பிறகு
வெகு வேகமாய்
விழித்தெழத் தொடங்கியது..!
இந்தியாவின் மூலை முடுக்கெங்கும்
இந்தியர்களின் மூளை முடுக்கெங்கும்
வேண்டும் சுதந்திரம்
என்ற வேட்கை கொழுந்து
விட்டு எரிந்தது...
வந்தே மாதரமென்பது
அனைவரின் தாரக மந்திரமானது..!
வீரத்தை தம் சந்ததிகளுக்கு மட்டும்
கற்றுக் கொடுத்தவர்களிடையே
அன்று சரித்திரத்திற்கே வீரத்தைக்
கற்றுக் கொடுத்த
இம்மாவீரர்களின் தியாகத் தினத்தில்
வீர வணக்கம் செய்கிறேன்..!
அவர்களின் உயிர்த்தியாகத்தை
நினைத்து உருகுகிறேன்..!
நீங்கள் வாழ்ந்த தேசத்தில்
நானும் வாழ்கிறேன்..!
சுதந்திரமாய் நானும் வாழ
வழிசெய்த மாவீரர்களே
உங்கள் திருத்தாழடி சரணம்..!
என்றும் என் நாவினில்
வந்தேமாதரம் ஜனனம்..!

(இன்று தியாகிகள் தினமாகும். மார்ச் 23, 1931 அன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோருடன் சேர்த்து தூக்கிலிடப்பட்ட தினம். அதன் நினைவாகவே இந்த தினம் கடைபிடிக்கப் படுகிறது.)




Friday, February 18, 2011

சிங்கத் தமிழனை..! - தமிழக மீனவர்களுக்காக புரட்சிக் கவிதை..!



வங்காள விரிக் கடலில்
சிங்கத் தமிழனை 
சீண்டிக் கொண்டே இருக்கும்
கொழுப்பெடுத்த 
சிங்களப் படையினை
எம் தமிழ் மீனவர்களால் 
சிறை பிடிக்க நிமிட நேரமாகாது...

இங்கிருப்பது கரி பரிப் படை...
அங்கிருப்பது குள்ள நரிப் படை...
இனியும் பொறுக்கோம்...
சிங்களப் படையினை நையப்புடை..!
சட்டென்று அவன் மென்னியை உடை..!
இல்லையேல் இந்தியன்
என்ற சொல்லை செய்திடு தடை..!

மத்தியில் இருக்கும்
'கை'யாலாகாதவர்களுக்கு
மாநிலத்தில் இருக்கும்
'கை'க் கூலிகளே...
'கை' விரித்த கூலிகளே...
மானம் காத்த தமிழனின்
இன்னுயிர் அங்கே வங்கக் கடலில் 
போய்க் கொண்டிருக்க...
கண்டவனுக்கு கடிதம் போட்டு
கண்டனம் போட்டு என்ன பலன்...

சுயநல அரசியல் பகடையாட
பரதவக் குடிமக்களின்
குரல் வளையை அறுக்கலாமா?
குற்றுயுரும் குலையுயிருமாய்
அவர்களை ஆக்கலாமா..?
எகிப்திய பூமியாய்
இந்தியா மாறுவதற்குள்
இதற்கொரு தீர்வு காண்பீர்..!

ஆசையை ஓழிக்கச் சொன்ன
புத்தனின் வழியை
பின்பற்றுவதாகச் சொல்லும்
சிங்களப் பித்தர்களின்
வெறியாட்ட ஆசை ஏன்..?
அவர்களை வெறியாட
வைக்கின்ற ஆசையினை
உண்டாக்கி வைத்தவன் எவன்..?

தன்மானத் தமிழனை
வம்புக்கு இழுக்கிறான்
சிங்களவன்...
வலியவே வந்து வம்பினை
இழைக்கிறான்...
பொறுத்தது போதும் 
என் தமிழினமே...

துட்டர்களின் கொட்டமடங்க
துள்ளியெழு... 
பித்தர்களின் பித்தமடங்க
பீறிட்டு எழு...
நம்மை நாமே காத்துக் கொள்ள
நரம்பதிர எழு..!

வம்புச் சண்டைக்குப் போகாதே
வந்த சண்டையை விடாதே...
அப்படி விட்டால்
நம் தமிழ்த்தாய்
ஊட்டி வளர்த்த வீரம் 
ஊனமாகிவிடும்...
உறைந்து போய்விடும்..!

அன்றங்கே தமிழனின்
தலை நிமிர்ந்திருந்தால்
இன்றிங்கே நம் தமிழனின்
தலை வாங்கப் பட்டிருக்குமா?
கண் கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரமா..?
பொறுக்கோம் இனி ஒரு கணம்..!

உயிருக்கு உயிர்...
உடலுக்கு உடல்...
ஒரு வெறியனையாவது
வீழ்த்திக் காட்டினால்தான்
சிங்கத்தின் கோபம்
சிறு நரிக்குத் தெரிய வரும்...
புலியின் கோபம்
புல்லர்களுக்குத் தெரியவரும்...

தரணியாண்ட தமிழனைக் காக்க
தமிழினமே ஒன்று படு...
தமிழர்களின் தன்மானத்தைக் காக்க
தமிழகமே எழுந்து விடு...
தமிழினத்தின் உயிர்களைக் காக்க
தமிழ் உறவுகளே
கிளர்ந்தெழு... சினந்தெழு..!

இனி ஒரு உயிர் போனாலும்
சிங்களப் படையினில்
பல உயிர் போக வைப்போம்...
உலகப் போர் மூண்டாலும் சரி
அந்த மூடர்களை முடக்கி வைப்போம்...
தமிழனை தலை நிமிர வைப்போம்..!

- அடங்கா கோபத்துடன்

மோகனன் (எ) மோ. கணேசன்

(சோழிங்க நல்லூர் சாலை சந்திப்பில், நாளை (19.02.2011) கணிப்பொறி வல்லுனர்களின் கூட்டமைப்பினரால், தமிழக மீனவர்கள் படுகொலையினை கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. அப்போரட்டத்தில் கலந்து கொள்ள நண்பர் திரு. க. ராமலிங்கம் அழைப்பு விடுத்திருந்தார். அப்போராட்டத்திற்காக எழுதப்பட்ட கவிதை இது..)




Monday, February 14, 2011

கனவோடு விளையாட..! - காதலர் தின சிறப்புக் கவிதை


உயிரோடு உறவாட
ஒரு உறவு வேண்டுமே..?
கனவோடு விளையாட
ஒரு கவிதை போதுமே..?
அக்கவிதை நீயானால்
என் ஆயுள் நீளுமே..!
எனக்கான புது உலகம்
இங்கு புதிதாய் பூக்குமே..!
அவ்வுலகில் காதல்தான்
ஆட்சி அமைக்குமே..!

(இப்பூவுலகில் அன்பை சுமக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த மோகனனின்
இனிய
காதலர் தின வாழ்த்துக்கள்...
)




Tuesday, January 25, 2011

உன்னோடு என் நினைவுகள்..! - 250 வது கவிதைப் பதிவு


பத்து மாதங்கள் சுமந்து
பெற்றெடுப்பது மட்டுமல்ல
பத்து வினாடிகள்
மனதில் சுமந்து 
பெற்றெடுப்பது கூட குழந்தைதான்..!

என் கவிதைகளைத்தான்
குழந்தை என்று சொல்கிறேன்..!
அதிலும் அக்குழந்தை...
எனக்குப் பிறந்த
குழந்தை என்பைதை விட
நமக்குப் பிறந்த குழந்தை என்றுதான்
சொல்(ல விரும்பு)கிறேன்..!

அதெப்படியடா
அறிவாளி
நம் குழந்தையாகும்..? -
என்று நீ கேட்கலாம்...

ஆணும் பெண்ணும் 
உடலளவில் சேர்வதால்
கண் நிறைந்த குழந்தை பிறக்கிறது..!
உன்னோடு என் நினைவுகள் சேர்வதால்
கவிதையெனும் குழந்தை பிறக்குதடி..!

கண் நிறைந்த குழந்தைக்கு
காரணம் யார் என்று
தாய் சொன்னால்தான்
தந்தை யாரென்று தெரியவரும்..!

என் கவிக்குழந்தைக்கோ...
தந்தை சொன்னால்தான்
இக்குழந்தைக்கு
தாய் நீ என்று தெரிய வரும்..!

கருவைச் சுமப்பதால் நீ தாயாகிறாய்...
உன்னையும் உன் உணர்வுகளையும்
நம் கவிக்குழந்தைகளையும்
சுமப்பதால் நான் எல்லாமுமாகிறேன்..!

(இது என்னுடைய 250-வது கவி(க்குழந்)தைப் பதிவு... இதனை எனது அன்பிற்கினியவளுக்கும், இவ்வுலகில் அன்பைச் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்..!

தொடரும் உங்களது மேலான ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்)




Friday, January 14, 2011

தையலெனும் தைமகள் வருகிறாள்..!


மதி நிறை மார்கழித் திங்கள்
மறையத் துவங்க...
தையலெனும் தைமகள்
தலை நிமிர்ந்து வருகிறாள்...
தமிழர்களின் உளம் மகிழ வருகிறாள்...

தமிழர்த் திருநாள் போற்ற வருகிறாள்..!

வரவேண்டும்...
வர(ம்)வேண்டும் தமிழ்ப்பெண்ணே
உமை வேண்டி பாடுகிறேன்
தமிழ்ப்பண்ணே..!

நூறு கிலோ அரிசி மூட்டையைச்

சுமப்பவனால்
நல்ல அரிசி ஒரு கிலோ
வாங்கிச் சாப்பிட வழியில்லை..!
ஒரு கிலோ நல்லரிசி வாங்கி
உண்பவனால்
நூறு கிலோ அரிசி மூட்டையைச்
சுமக்க வக்கில்லை..!

பட்டாடை நெய்கின்ற நெசவாளரால்

சிறுபட்டாடை வாங்கியணிய வசதியில்லை
பட்டு வாங்கும் பணக்காரர்களுக்கு
நெசவாளர் நலனறியப் போவதில்லை..!

போதுமிந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்

எல்லோரும் எல்லாமும் பெற
வறியோர்கள் உடையோர்கள் எனும்
ஏற்றத் தாழ்வு மறைய... 
தமிழான தைமகளே தயை புரி..!

ஈழத்து மண்ணில் எம்மக்கள்

இருக்கின்ற இரும்புச்சிறையினை
இருக்குமிடமில்லாமல் செய்..!
உலகத்து தமிழரெல்லாம்
ஒன்றுபட்டு நிற்கும் நிலையினை
இப்புவிதனில் மலரச் செய்..!

அனைவரின் நெஞ்சிலும்

அன்பை விதைத்து...
தீவிரவாதத்தை தீயிட்டழித்து
உயிர் வதையினை உருத்தெரியமலழித்து
உலகெங்கும் அமைதியை பரவச் செய்..!

வியர்வையை உடலில் வரைபடமாக்கி

உழைக்கின்ற பாட்டாளி வர்க்கமும்
வியர்வையை நிலத்தில் நெல்மணியாக்கும்
உயர்ந்த என்னுழவர் வர்க்கமும்
வாழ்வாங்கு வாழ தைமகளே வழி செய்..!

(என் அன்பிற்கினிய வாசக நெஞ்சங்களுக்கு, அடியவனின் இனிய திமழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...

என்றென்றும் அன்பு
'டன்'


உங்கள்
மோகனன்)




Wednesday, December 1, 2010

புதிய திருக்குறளில் எயிட்ஸ் விழிப்புணர்வு...

தியை விடுத்து பரத்தையிடம் சித்தமாயின்
பத்திடுமே பாழும் ஏப்பு

ஐந்து நிமிட சுகத்திற்கலைந்தால் ஏப்பான

விந்தேயுனை வீழ்த்தி விடும்

கலவிக்கும் கற்புண்டு காணீர் தவறின்

விலையாகும் உமது உயிர்

உயிரான உறவோடி ராமல் வெளிசெல்லின்

உயிர்க்கொல்லி உடலில் சேரும்

உறையுள்ள தென்று முறையற்று நடப்பின்

குறைகொள் குழவி பிறக்கும்

தெளியாத குருதியை தேகத்தில் ஏற்றினால்

எளிதில் வருமாம் ஏப்பு

உமதில் லாளை ஏய்த்தால் காத்திருக்கிறது

எமனின் வாகனம் ஏப்பு

உனைநம் பியுள்ளோரை ஏமாற்றினால் வீணே

வினையாகும் உமது குலம்

பெற்றோரீந்த உடலை ஏப்புக் கிரையாக்கின்

கற்றோனாயினும் இழி கழுதையே

குலம்காக்க உனை ஈன்றால் - உடல்திமிரால்

மலத்தினும் கீழானாய் மனிதா

------------------------------------------------------------------------
ஃ எதுக்கும் அறிஞ்சொற்பொருள் கொடுத்திடறேன்

தி = மனைவி, பரத்தை= விலைமாதர் , விலைமாதன் , ஏப்பு = எயிட்ஸ், உறை = காண்டம், குறைகொள் = எயிட்ஸ் நோய் பாதிப்பு, குழவி = குழந்தை, தெளியாத குருதி = பரிசோதனை செய்யப்படாத ரத்தம், இல்லாள் = மனைவி, வினையாகும் = அழிந்து விடும்.

(நமக்கு அய்யன் திருவள்ளுவர் அளவுக்கெல்லாம் தமிழ் தெரியாதுங்க... எதோ எனக்கு தோணிணத குறள் வடிவத்துல எழுதியிருக்கேன்... குறையிருந்தால் சுட்டுங்க... ஒழுக்கமா வாழ உறுதியெடுப்போம்... ஏப்பு என்கிற எயிட்ஸை ஒழிப்போம்...

என்றென்றும் அன்புடன்

மோகனன்
)

இது குறித்து நானெழுதிய பிற கவிதைகளைப் படிக்க வேண்டுமா..?
உலக எயிட்ஸ் தினம் - விழிப்புணர்வுக் கவிதைகள்



Friday, November 26, 2010

மும்பை தாக்குதல் - இரண்டாமாண்டு நினைவு மரபுக்கவிதாஞ்சலி

 

தொம்பையி னாறிய தீயவர் திமிரோடு
மும்பையில் துட்டக் கால் வைத்தனர் – மேலும்
தும்பைப் பூ போன்ற உயிர்களை வதைத்தனர்
வம்பையும் விலைக்கு வாங்கினர்.

வேதனைக் குரல்கள் நாற்புறம் ஓலிக்க
கோதனைக் காக்கிளம் பியதரி மாப்படை
சோதனைத் தீர்க்க தம்மின்னுயிரை ஈந்து
சாதனை படைத்தவ்வெஞ் சமர்.

ஆயிற்றத் துன்பம் நிகழ்ந் தாண் டிரண்டு
போயிற்றோ நம்மனக் கவலைகள் - மாவீரர்களே..?
தீயிட்டழிக்கும் கொடும் தீவிரவாதி களையவ்
வாயிலினில் வைத்தே வதைத்திடும்.

                                                             
                                                                    - மோகனன்

(மும்பைத் தாக்குதல் நடைபெற்று...இன்றுடன் இரண்டாமாண்டு நிறைவு ஆகிறது... அவ்வெஞ்சமிரில் இன்னுயிரை ஈந்து பிற உயிர்களைக் காத்த மாவீரர்களுக்கு உங்களனைவரின் சார்பிலும் இந்த மரபுக்கவிதையினை கண்ணீர் அஞ்சலியுடன் சமர்ப்பிக்கிறேன்... இனியும் இதுபோன்ற துன்பியல்கள் இந்தியாவில் நடைபெறக்கூடாது என்ற நற்சிந்தனைகளுடன் உங்களிடம் இதைப் படையலிடுகிறேன்...)




Wednesday, July 28, 2010

நான் மறைந்து போனாலும்..! - 200வது கவிதைப் பதிவு



என் கண் வழியே உனை நுழைத்து…
என் மனதினிலே உனை நினைத்து…
என் கவிதையிலே வடித்து வைத்தேன்..!
இப்புவியிலிருந்து நான் மறைந்து
போனாலும்
அன்பே...
உன் மேல் நான் கொண்ட காதல்…
என் கவி உள்ள வரை
இப்புவியில் நிலைத்திருக்கும்

என்பதை மறவாதே அன்பே..!
நானாவது உனை மறந்து போவதாவது..?    
நாவிருக்கிறது என்பதற்காக
நறுக்குத் தெரிக்கும் வார்த்தைகளை
வீசியெறியாதே பெண்ணே...
வீழ்ந்து விடுவேன் நிரந்தரமாக..! 

(இது என்னுடைய 200-வது கவிதைப் பதிவு ஆகும்... இந்நேரத்தில் எனைப் படைத்த என் பெற்றோர்களுக்கும்... என் கவித்திறனை வளர்த்து விட்ட என் தாய்த்தமிழுக்கும்... இக்கவிதைகளின் ஊற்றான என்னவளுக்கும்... ஆதரவுக் கரம் நீட்டி வரும்... எனது அன்பு வாசகர்களாகிய உங்களுக்கும்.. எனது மனமார்ந்த நன்றிகள்...

தொடரட்டும் உங்கள் ஆதரவு..!

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்


மோகனன்)




Saturday, April 10, 2010

மந்தகாசப் புன்னகை..! - 150வது கவிதைப் பதிவு..!


வெள்ளி நிலவு
அழகாய்
வானத்தில் வீற்றிருக்க…
அதன் அழகை
மறைக்க நினைத்த
தென்னங்கீற்று…
தன் கீற்றுக் கரங்களை
விரித்தபடி
நிலவை மறைத்தது..!
அக்கீற்றினூடே
தெரிந்த அந்நிலவு
முன்பை விட
மிக அழகாக சுடர் விட்டு
பிரகாசித்தது மட்டுமின்றி...
மனதை மயககும்படியானதொரு
மந்தகாசப் புன்னகையொன்றையும்
உதிர்த்தது..!
அது போலத்தான்
உன் நிலவு முகத்தை
உன் கற்றை முடி மறைப்பதும்...
அதனூடே நீ மந்தகாசப்
புன்னகை புரிவதும்..!

(இது என்னுடைய 150-வது பதிவு ஆகும்... எனைப் படைத்த என் பெற்றோர்களுக்கும்... என் கவித்திறனை வளர்த்து விட்ட என் தாய்த்தமிழுக்கும்... இக்கவிதைகளின் ஊற்றான என்னவளுக்கும்... ஆதரவுக் கரம் நீட்டி வரும்... எனது அன்பு வாசகர்களாகிய உங்களுக்கும்.. எனது மனமார்ந்த நன்றிகள்...

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்

மோகனன்)



Tuesday, January 12, 2010

மலருக்காக மலரிடம் நான் விட்ட தூது..! - நூறாவது கவிதைப் பதிவு

உன் கார்மேகக் கூந்தலில்
பூச்சூடுவதற்க்காக
நான் வாங்கிய
ரோஜாமலரிடம் சொன்னேன்...


‘மெல்லிய மலரே...
உன்னை விட மென்மையானவளிடம்
உன்னைச் சூடக் கொடுக்கிறேன்...
அவள் கார் மேகக் கூந்தலில்
அழுத்தமாய் உட்காராதே
அவளுக்கு காயம் பட்டுவிடும்...’ என்று...

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது

'அவளைப் பார்த்ததும்
அழகாய் ஒரு புன்னகையை
வீசி விட்டு...
அப் பெண்மையிடம்
என் காதலை மென்மையாய்ச் சொல்...' என்றேன்

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!


'என்னவளின் மனசு போல
உன் நிறமிருக்கிறது
என்று பெருமை கொள்ளாதே..?
என்னவளின் மனது...
வெண்ணிலவை விட
வெண்மையானது...
வெண் பனியை விடத்
தூய்மையானது...' என்றேன்..!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது..!

'உனக்கு வாசமில்லை
என்று வருந்தாதே...
அவளுக்கு வாசமுண்டு...
அவள் வாசத்தை
நீ சுவாசித்தால்...
நீயும் மணக்கும் மலராவாய்...
மல்லிகைப் பூவாவாய்...
நீ மணந்தால் மட்டும் போதாது
அவள் வாசத்தை வாங்கி
என்னிடம் அனுப்பு
நானும் அதை சுவாசிக்க வேண்டும்...' என்றேன்!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...
அப்படியே செய்கிறேன்’ என்றது..!

'என்னன்பையும்
என் காதலையும்
அவளிடம் அன்பாய்ச் சொல்...
அவள் நினைவில்தான் வாழுகிறேன்...
நிஜத்தில் அவளின்று வாடுகிறேன்'
என்றும் சொல்லென்றேன்..!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!

சொல்லி விடுமென்று காத்திருந்தேன்..?
அந்த மலரோ...
உன் கார்மேகக் கூந்தலில்
ஏறிய மயக்கத்தில்
அத்தனையும் மறந்துவிட்டு
அசடு வழிந்தபடி சிரித்தது..!
அதுவும் என்னைப் போலவே..!


(இது என்னுடைய நூறாவது பதிவு என்பதில் எனக்கு பெரு மகிழச்சி, இந்த வலைக் குடிலுக்கு ஆதரவு தந்து வரும் எனது அன்பு இணைய வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்...

இக்கவிதைகளை எனக்குள் ஊற்றெடுக்கச் செய்த தாய்த்தமிழுக்கும், என்னவளுக்கும் அன்பு கலந்த முத்தங்களை பரிசளிக்கிறேன்...

தொடரும் உங்கள் ஆதரவுக்கு என்றும் எனது அன்பு கலந்த நன்றிகள்..!

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்

மோகனன்)




Tuesday, October 27, 2009

நீரின்றி..!

நீரின்றி மீன்கள்
வாழுமா பெண்ணே..?
வாழமுடியாதடா என்றாய்
பிறகெப்படி..?
நீரே இல்லாமல்
உன் கண்களுக்குள்
இரண்டு கெண்டை மீன்கள்
துள்ளி விளையாடுகின்றன..?



(இது என்னுடைய 50-வது பதிவு... இந்நேரத்தில் என் தாய், தந்தைக்கும், தாய்த்தமிழுக்கும், அன்பு நண்பர்களுக்கும், எனை எழுதத் தூண்டிய என்னவளுக்கும் எனது நன்றிகள் சமர்ப்பணம்..)