ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label குறுங்கவிதைகள். Show all posts
Showing posts with label குறுங்கவிதைகள். Show all posts

Friday, June 18, 2010

எரிமலையின் உள்ளே..! - காதல் குறுங்கவிதைகள்


எரிமலையின் உள்ளே
நான் எரிந்து கொண்டிருந்தாலும்
பெண்ணே..!
உன் காதல் பார்வை
பட்டால் போதும்…
பனியாய் நான் குளிர்ந்து போவேன்..!

**+**

கோவைப் பழ இதழுடையாள்…
கொஞ்சிப் பேசும் தமிழுடையாள்…
கொடியான இடையுடையாள்…
புள்ளிமான் நடையுடையாள்…
மோகனச் சிரிப்புடையாள்…
நீதான் என் காதலியாள்..!   

**+**


என் உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்தவளே…
என் கவிதைகளுக்கு
உயிர் கொடுத்தவளே…
இவைகளுக்கு  கொடுத்தது போல்
என் காதலுக்கு எப்போது
உயிர் கொடுக்கப்போகிறாய்..?
காத்திருக்கிறேன்..!   

**+**
காலன் என்னருகில்
வந்ததற்குக் கூட
கவலைப்படவில்லை அன்பே..!
காதலியான நீ இன்னும்
என்னருகில் வரவில்லையே
என்றுதான் கவலைப் படுகிறேன்..!

**+**

'நீரின்றி அமையாது உலகு' என்பது
வள்ளுவன் வாக்கு..!
'நீயின்றி அமையாது என் உலகு'
இது உன் காதலன் வாக்கு..!

**+**



Tuesday, April 13, 2010

உன் மீன் விழிகளை..! - குறுங்கவிதைகள்


என்னை மட்டுமல்ல
என் நினைவுகளையும் சேர்த்து
வசியம் செய்திருக்கிறாய்
என்பதை…
நீ என்னருகே
இல்லாத போதுதான்
உணர்ந்து கொண்டேன்..!

                    *** + ***

பெண்ணே…
உன் மீன் விழிகளை
மூடிக் கொள்..!
மீனவன் வலையுடன்
வந்து கொண்டிருக்கிறான்..!

                    *** + ***
அழகின் சிகரம் நீ…
அறிவின் சிகரம் நீ…
பெண்மையின் சிகரம் நீ…
பேரழகின் சிகரம் நீ…
பொறுமையின் சிகரம் நீ…
பொய்மையின் சிகரம்..?
வேறு யார்… நான்தான்..!

                    *** + ***

நடமாடும் நூலகத்தைக்
கண்டேன்
நடமாடும் வங்கியைக்
கண்டேன்
நடமாடும் கவிதையைக்
கண்டேன் என்றால்
அது நீதான் அன்பே..!

                    *** + ***

வீணை இசைக்காமலேயே
நாதம் எழுகிறதடி
உன் குதுகலப் பேச்சில்..!


                    *** + ***




Monday, December 28, 2009

கடைசி வரை உனக்காகவே..! - காதல் குறுங்கவிதைகள்


உலகிலேயே மிகவும்
அழகான கவிதை ஒன்று
சொல் என்றார்கள்..!
நான் உன் பெயரை மட்டும்தான்
சொன்னேன்..!
அதற்கே அசந்து விட்டார்கள்..!

                     *** + ***

குற்றமென்ன செய்தேன் கொடிமலரே
உன் இதயமெனும் சிறையில்
எனை அடைத்து வைத்திருக்கிறாய்..!
ஓ… உன் இதயத்தைத் திருடிய
குற்றத்திற்கான தண்டனையா அது.?   

                     *** + ***

அன்பே…
நீ ஒரு பெண் பிரம்மா..!
எப்படி என்கிறாயோ..?
கல்வி வாசமே இல்லாத
என்னைக் கூட
கவிஞனாக்கிவிட்டாயே..!   

                     *** + ***

காய்ந்து கிடந்த என் மனதில்
காதலை விதைத்து விட்டுச் சென்றவளே
எப்போது வந்து அதை
அறுவடை செய்யப்போகிறாய்
உனக்காக காத்திருக்கிறேன்..!

                     *** + ***

உன் புன்னகைக்குத்தான்
எவ்வளவு வலிமை..?
இரும்பான என் இதயத்தைக்கூட
எளிதில் உடைத்து விட்டதே..!
உன் மௌனத்திற்க்குத்தான்
எவ்வளவு வலிமை..?
பேச்சாளனான என்னைக் கூட
மௌனியாக்கி விட்டதே..!
அட.. இதற்குப் பெயர்தான் காதலா..?

                     *** + ***

காத்திருந்து கரம் பிடிப்பதுதான்
காதல் என்றாய்..!
ஆதலால்தான் அன்பே
கடைசி வரை உனக்காகவே
காத்திருக்கிறேன்..!

                     *** + ***



Sunday, December 20, 2009

நீ இந்த உலகத்தில்..! - காதல் குறுங்கவிதைகள்



நீ என்னருகில் இருக்கும் வரை
உலகத்தையே மறந்திருக்கிறேன்..!
நீ என்னை விட்டு்ப் பிரிந்து சென்றால்
இந்த உலகமே என்னை மறக்கும்படி
செய்து கொள்கிறேன்..!
ஏனடா எனக்கிந்த காதல் வேதனை..?

                        *** + ***
என் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பாத
என் மனது..?
உன் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பி விடுகிறது..!
 
                        *** + ***

கடற்கரையின் மணற்பரப்பில்
கவலையின்றி பேசிக் கொண்டிருக்கும்
காதலர்களைப் பர்க்கும் போதெல்லாம்
எனக்குள்ளும் அந்த ஆசை பிறக்குமடா..?
உன்னுடன் நானும்
இதுபோல் எப்போது
அமர்ந்து பேசப் போகிறேன் என்று..?

                               *** + ***
அன்பே..!
நீ இந்த உலகத்தில்
யாரோவாக இருக்கலாம்..!
ஆனால்
நீதான் எனக்கு
உலகமே..!   

                              *** + ***
காதலென்பது
பொதுவுடமை என்கிறார்களே..?
அது உண்மைதானடா..!
நீ என்பது நானானேன்…
நானென்பது நீயானாய்…
நம் இருவரும் சேர்ந்து 'நாம்' ஆனோம்..!
இதுதானே பொதுவுடமை..!

                             *** + ***
உயிரே..!
உன்னுடைய பிறந்த நாளை
என்னுடைய பிறந்தநாளாக நினைத்து
அனைவருக்கும் இனிப்பு
கொடுத்து மகிழ்கிறேன்..!
ஏனெனில்…
நீ எனக்காகப் பிறந்தவனாயிற்றே..!

                                        - மலர்விழி மோகனன்
                              *** + ***                           




Thursday, November 19, 2009

கண்கள் பேசுமா..? - காதல் குறுங்கவிதைகள்..!


கண்கள் பேசுவதை
எங்கும் நான்
கண்டதில்லை பெண்ணே..!
உன் கண்களை
நான் சந்திக்கும் வரை..!

* * * * *


நான் உற்சாகம் இழந்து
வீழும் போதெல்லாம்
உன்னை நினைத்தாலே போதும் கண்ணே..!
எனக்குள் உற்சாகம்
தானாக வந்துவிடும்..!
என் உடலுக்குள் புது வேகம்
பிறந்து விடும்..!

* * * * *

பூமி தன்னைத்தானே
சுற்றியபடி
சூரியனையும் சுற்றிக்
கொண்டிருப்பது போல…
என் உடல் இங்கே சுற்றினாலும்
என் மனசு எப்பொழுதும்
உன்னைத்தான்
சுற்றிக் கொண்டிருக்கிறது..!

* * * * *

உன் நாவில்
தேனூறுகிறதா என்ன..?
நீ பேசுவதைக் கேட்டாலே
என் காதுகளிரண்டும்
இனிக்கின்றனவே..!

* * * * *

உன் பெற்றோர்களே உனை
ஒரு ஓவியமாய் தீட்டியிருக்கும் போது..!
கவிஞனான நான் உன்னைப் பற்றி
என் மனதிற்குள் பெருங்காவியமே
தீட்டி வைத்திருக்கிறேன்...
நீ வந்து படித்துப் பார்ப்பாய் என..!

* * * * *

ஒரு பூக்கூடையே
பூ வாங்க வருவது
போலிருக்கிறது..!
நீ... பூ வாங்க
வரும் அழகு..!

* * * * *




Thursday, October 29, 2009

குறுங்கவிதைகள்: கல்வி..!




இன்றைய கல்வி

சரஸ்வதியைக் காண
லட்சுமியைத்
தேட வேண்டியிருக்கிறது..!

*_*_*_*_*_*_*_*_*_*_*_*

பள்ளி

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி..!
பெயர் மட்டும்
'ஔவையார் அகாடமி'

*_*_*_*_*_*_*_*_*_*_*_*

கற்பின் விலை

கல்வித்தாயினுடைய
கற்பின் விலை
டொனேஷன்..!

*_*_*_*_*_*_*_*_*_*_*_*



Monday, October 5, 2009

தாஜ்மஹால்


இரு பறவைகளின்
இல்லற இன்பத்தில்
ஒரு பறவை இறந்துவிட...
மறு பறவை கட்டிய
வெண் பளிங்கு
வெள்ளைக் கூடு..!



Thursday, October 1, 2009

விதவை..!?


--*--*--*--*--*--*--*--
பிறருக்கு வெளிச்சம்
கொடுப்பதற்காக
தன்னையே அழித்துக் கொள்ளும்
மெழுகுவர்த்தி..!

--*--*--*--*--*--*--*--



Wednesday, September 30, 2009

ஹைக்கூ அல்ல குறுங்கவிதை..!

மூன்று அல்லது நான்கு வரிகளில் எழுதப்படும் கவிதைகளை... 'ஹைக்கூ கவிதைகள்' என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியான நம் தமிழ்க்குடியின் முதுபெரும் மூத்த புலவரான திருவள்ளுவர் எழுதிய குறள் வடிவம்தான் இந்த ஜப்பானிய வடிவமாக இருக்கும் 'ஹைக்கூ'. வித்தியாசம் என்னவெனில், அவர் இலக்கணச் சுத்தமாக, மரபு நடையில், இரண்டே அடிகளில் ஐயந்திரிபர சொல்லிவிடுவார். அந்த இரண்டு வரிகளில் முதல் வரியை இரண்டாக மடித்து எழுதினால் குறள் மூன்று வரிகளாகிவிடும். அதைத்தான் 'ஹைக்கூ' வும் செய்கிறது. ஆனால் புதுக்கவிதை நடையில்...

நமக்குதான் தமிழிலேயே அனைத்தும் இருக்கிறதே பிறகு ஏன் 'ஹைக்கூ' கவிதை என்கிறீர்கள். முத்து, முத்தாய் மூன்றே வரிகளில் எழுதுவதை, நறுக்குத் தெரித்தாற்ப் போல் நான்கே வரிகளில் எழுதுவதை இனி குறுங்கவிதைகள் என்ற அழைக்கலாமே..!  இதுநாள்வரை நான் அப்படித்தான் அழைத்திருக்கிறேன். அழைத்துக் கொண்டே இருப்பேன். மாற்றுக் கருத்து இருப்பின் பின்னூட்டத்தில் விவாதிப்போம்...

இனி எனது குறுங் கவிதைகள்...





--0--0--0--0--0--0--0--

தண்ணீர்க்குடம்

எத்தனை முறை தூக்கிலிட்டாலும்
உயிர் பிரியாமல் உறவாடும்
உலோக உயிரி..!

--0--0--0--0--0--0--0--

பிச்சைக்காரன்

நிகழ்கால சோகந்தன்னை
எதிர்காலம் வென்றிடவே
ஏந்துகிறான் திருவோடை..!

--0--0--0--0--0--0--0--

வேண்டுதல்

குந்த குடிசை வேணும்
கடவுளே..?
வேண்டுதல்
அரச மரத்துப் பிள்ளையாரிடம்..!

--0--0--0--0--0--0--0--

எயிட்ஸ்

நவயுக
எமதர்மனின்
கலியுக
எமவாகனம்..!

--0--0--0--0--0--0--0--

கடியாரம்

கால தேவனை
நொடிக்குள் அடக்கும்
எந்திரக்குருவி..!

--0--0--0--0--0--0--0--

கருமி

எதிர்காலம் சிறக்க
நிகழ்கால வாழ்வை
சிதைக்கும் கிருமி..!

--0--0--0--0--0--0--0--

அகிம்சை

அண்ணலின் ஆயுதமாம்
அகிம்சை..!
இங்கேயும் 'ஆயுதம்'..!

--0--0--0--0--0--0--0--

எரிமலை

பூமித்தாயின்
சிவப்பு
எச்சில்..!

--0--0--0--0--0--0--0--

இயந்திர மனிதர்கள் (ரோபோக்கள்)

கலியுக பிரம்மாக்கள்
படைத்த
நவயுக மானி(ட்)டர்கள்..!

--0--0--0--0--0--0--0--

குளோனிங் முறை

மெய் ஞானம் கொண்ட
விஞ்ஞான மனிதர்களின்
அஞ்ஞான முயற்சி..!

--0--0--0--0--0--0--0--

முதுமை

மானுட காவியத்தின்
கடைசி
அத்தியாயம்..!

--0--0--0--0--0--0--0--

மரணம்

மனிதமெனும் சரித்திரத்தில்
கடைசி வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி..!

--0--0--0--0--0--0--0--

திருக்குறள்

தருமி எனும் தமிழ்மக்களுக்கு
தெய்வப்புலவன் தந்த
பொற்கிழி..!

--0--0--0--0--0--0--0--

பள்ளி...

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி - பெயர் மட்டும்
ஔவையார் அகாடமி..!

--0--0--0--0--0--0--0--