ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label ஈழத் தமிழர். Show all posts
Showing posts with label ஈழத் தமிழர். Show all posts

Thursday, April 28, 2011

எம்மீழத்தமிழன் அங்கே தலை தூக்க..! - ஈழத் தமிழ்க் கவிதை!


பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள
ஆஸ்திரேலியாவில் ஓர் இந்தியன்
தாக்கப்பட்டான் என்றதும்
துடிதுடித்து எழுந்த இந்திய அரசு
கைக்கெட்டும் தூரத்தில் உள்ள ஈழத்தில்
எம்மீழத்தமிழன் கொல்லப்பட்டதற்கு
துடித்து எழாமல் தூங்கிப் போனது ஏன்..?

லிபியாவில் கலவரம் என்றதும்
லிகிதம் எழுதாமல்
வானூர்தி அனுப்பிய இந்திய அரசு
எம்மீழத்தமிழன் பிரச்சினையில்
மாற்றி மாற்றி லிகிதம் அனுப்பியது ஏன்?
எகிப்து எரிகிறது என்றதும்
இங்கிருந்து சீறும் ஏவுகணையாய்
செயல்பட்ட இந்திய அரசு
எம் தமிழீழம் பற்றி எரிந்த போது
எதுவும் செய்யாதிருந்தது ஏன்?

இந்திய விடுதலைக்காக
நேதாஜியும், பகத் சிங்கும் செய்தது
விடுதலைப் போராட்டம் என்றால்
எம்மீழத்தமிழன் செய்தது
எந்தப் போராட்டத்தினைச் சாரும்..?
எம்மீழப் புலிகள் செய்தது
விடுதலைப் போராட்டம் இல்லையா?

தமிழன் என்பவன் இந்தியனில்லையா?
தமிழினம் என்பது இந்திய இனமில்லையா?
ஏ இந்திய அரசே...
தொப்புள் கொடி உறவென்று
உனை மனதில் நினைத்த பாவத்திற்கு
எம்மீழத்தமிழன் அங்கே
மண்ணோடு மண்ணாகிப் போனதுதான் மிச்சம்..!

இந்திய அரசே...
அம்மக்கள் எம்மக்களே என்று
அன்று நீ துடித்து எழுந்திருந்தால்
பல்லாயிரக் கணக்கான
ஈழத்தமிழ் மக்கள்
உயிரோடு உலவியிருப்பார்கள்
உற்சாகமாய் சுதந்திரத்தை சுவாசித்திருப்பார்கள்..!

அன்று நீ சாட்டையை சுழற்றியிருந்தால்
சிங்களன் அன்றே சுருண்டிருப்பான்...
இன்று அந்த சாட்டையை
ஐ.நா. சுழற்ற ஆரம்பித்திருக்கிறது...
உதவி செய்ய வேண்டாம் நீ
அதற்கு நீ உபத்திரவம் செய்யாதே...
சிங்களனுக்கு சிகை பல்லக்கு தூக்காதே...
எம்மீழத்தமிழன் அங்கே தலை தூக்க வேண்டும்..!
எம்மீழப் புலிக் கூட்டம் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்..!

(தமிழனாய் பிறந்தமைக்கு தலை நிமிர்ந்து நிற்கவா? இந்தியாவில் பிறந்ததற்கு
தலை குனிந்து நிற்கவா..? - எம்போன்ற உண்மைத் தமிழனின் மனக்குமுறல் என்று அடங்குமெனில் எம்மீழத் தமிழனின் வாழ்வு, அங்கே சுதந்திரமாய் தலை தூக்கும் போதுதான்..! தலை தூக்கும் வரை ஓயமாட்டேன்... யாரையும் ஓய விட மாட்டேன்..!


அடங்கா கோபத்துடன்

உங்கள்

மோகனன்)




Wednesday, April 27, 2011

பெரிதினும் பெரிது கேள் ஐ.நா.வே..! - ஈழத் தமிழ்க் கவிதை!



சிங்கள ராணுவத்தினரால்
அப்பாவித் தமிழர்கள்
நாற்பதாயிரம் பேர்
உருத்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள்
என்று அதிகாரப் பூர்வமாய்
ஐ.நா. தனது நாவினை
தற்போதுதான் திறந்திருக்கிறது..!

அன்று கொன்றழிக்கப்பட்ட
கொடும் சரித்திரம் இன்றுதான்
அதிகார பூர்வமாய்
உலகத்தின் பார்வைக்கு வந்திருக்கிறது...
போர்க்குற்றம் புரிந்தான் சிங்களன்
என்று உலகமே தற்போது
சிலுப்பிக் கொண்டிருக்கிறது..!

அன்றே எம்மீழத்தமிழன்
இங்கொடுஞ்செயல்களுக்கான
ஆதரங்களைக் காட்டினான்...
அப்பாவிகளை காக்கும்படி
அண்டை நாடுள்பட
அனைத்து நாடுகளிடம் முறையிட்டான்
அம்மக்களைக் காத்திட
அவனாவியை ஈந்தான்..!

வீரத்தின் விளை நிலங்களில்
எம்மீழத் தமிழனின் வீரம்
பரிசோதிக்கப்பட்டது...
அச்சோதனையில்
கொடும் படைக்கஞ்சா புலிகள் என்று
எம்புலிகள் வீரச் சமர் புரிந்தனர்
வீரமாய் மரணத்தை தழுவினர்..!

அங்கே வீழ்ந்தது ஒவ்வொன்றும்
ஈழத்தமிழனின் சிதையல்ல...
ஈழத்தமிழ் விடுதலையின் விதை...
வீரப் புலிகளின் விடுதலைக் கதை...
தன் தமிழினம் காக்க...
தன் தமிழ்க்குலம் காக்க...
தன் தமிழ் மக்களைக் காக்க...
மரணத்தைத் தழுவிய வீர மறவர்களின் கதை...

பெரிதினும் பெரிது கேள் ஐ.நா.வே..!
எம்மீழத்தமிழ் மக்களின் உயிர்த்தியாகத்திற்கு
உற்ற பலன் கிடைக்க வேண்டும்..!
போர்க்குற்றம் புரிந்த புல்லர்களுக்கு
சரியான புத்தி புகட்டிட வேண்டும்..!
புலிகளின் தன்னலமற்ற தியாகத்திற்கு
ஈழத்தமிழ் மண் கிடைத்திட வேண்டும்..!
எம் தமிழ் மக்கள் அங்கே சுதந்திரமாய்
வாழ வழிவகை செய்திடல் வேண்டும்..!
இதை அத்தனையும் பெரிதாய்க் கேள் ஐ.நா.வே..!
இவைகளத்தனையும் என்று கிடைக்குதோ
அன்றுதான் எம் புலிகளின் ஆன்மா
அமைதி பெறும்... தியாகம் சுடர் விடும்..!




Friday, January 7, 2011

ஈழத்தமிழ் மண்ணுக்கே..!


இன்னுயிர் தமிழ் மறவா
ஈழத்தமிழர் இலங்கையில்
சுதந்திரப் போரை நடத்தினர்..!

மாவீரன் பிரபாகரன்
தலைமையில் ஒன்றிணைந்து
தனிநாடு கேட்டு நின்றனர்..!

எதிரிகளோ எம்தமிழரை
எள்ளி நகையாடினர்
எங்கும் துன்பத்தை இழைத்தனர்

திகதி தோறும் நல்பொழுது
விடியாதா என விழித்திருந்தோரை
அகதியாக்கி விரட்டினர்..!

பொறுத்தது போதுமென்று
வீர மறவப் புலிகள்
போர் முரசம் கொட்டினர்..!

வெங்குருதி பெருகினாலும்
செங்குருதி மருகினாலும்
சுதந்திரம் வேண்டி போரிட்டனர்!

செஞ்சோற்றுக் கடனாற்ற
செந்தமிழர் வருவானென்று
ஈழத்தமிழர் எதிர் நோக்கவில்லை!

எதிரிகளைச் சிதறடிக்க
எமதிரு தோள்கள் போதுமென்று
பொருதிப் பார்த்தனர்!

உலகெங்கும் உள்ள
பொல்லாத ஓநாய்களுடன்
கை கோர்தது எதிரிப்படை..!

எப்படை வரினும்
எத்துயர் வரினும்
எம்தமிழர் அசரவில்லை!

இறுதி மூச்சு உள்ளவரை
ஈழத்தமிழ் மண்ணுக்கேயென
இன்னுயிரை ஈந்தனர்..!

அவ்வெஞ்சமரில் பாழாய்ப்போன
வஞ்சகர்களின் சதியால் - பல
இசைப்பிரியாக்கள் அழிந்தனர்..!

பல மாவீரர்கள் தங்கள்
மதிப்பற்ற உயிர்களை - ஈழத் தமிழ்
மண்ணுக்கீந்தனர்..!

எம் தமிழ் தலைவர்
அப்போரில் வீர மரணம் எய்து
இறவாப் புகழடைந்தார்..!

ஈழம் அழிந்ததென்று
எதிரிகள் எக்காளமிட்டனர் - உலகமதிர
போர்குற்றங்கள் புரிந்தனர்..!

வேதனைகள் அரங்கேறுவதை
உலகமே வேடிக்கைதான் பார்த்தது...
தடுப்பார் யாருமில்லை..!

ஏ... ஈனங் கெட்ட எதிரிகளே...
போர்முறை தெரியாப் புல்லர்களே
புழுவினும் கீழானவர்களே..!

நாங்கள் மண்ணில் புதையவில்லை
ஒவ்வொருவரும்
விதைக்கப் பட்டிருக்கிறோம்..!

பீனீக்ஸ் பறவை போல்
மீண்டெழுவோம்...
தமிழரை நிலை நாட்டுவோம்..!

(இசைப் பிரியா கொடுராமாக கொலை செய்யப்பட்டது முதலே மனதில் வலி இருந்து கொண்டே இருந்தது... அதை மிகத் தாமதாகப் பதிவு செய்திருக்கிறேன்...  ஈழத்தில் பிறந்திருந்தால். என்னுயிரைக் கொடுத்து ஈழத்தை மீட்டிருப்பேன்... தமிழகத்தில் பிறந்து தொலைத்ததால், ஈழத் தமிழனுக்கு உதவாத ஈனப்பிறவியாகி விட்டேன்... ஈழத் தமிழர்களே எனை மன்னியுங்கள்...)