ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு. Show all posts
Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு. Show all posts

Saturday, April 13, 2013

விஜயமே வருக..! - தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவிதை!




நனிமகள் நந்தனாண்டு நடை தளர்ந்தாள்
பனிமகள் தளிர்நடை வளர்ந்தாள் - பறக்கும்
சித்திரைத் தேரிலேறும் தமிழ் விசயாண்டே
முத்திரை பதிக்க வருக!

************(இஃது ஒரு வெண்பா முயற்சி)**************


ஆண்டாண்டு காலமாய்
அழுது புலம்பினாலும்
மாண்ட காலம் மீள்வதில்லை
ஆயினும்
எம் தமிழ்ப் புத்தாண்டுப்
பெண்ணோ
ஆண்டாண்டு காலமாய்
மீண்டு கொண்டிருக்கிறாள்
எனைப் போன்ற
தமிழ்ப் பித்தன்களை
மீட்டுக் கொண்டிருக்கிறாள்...

குழவியாய்
நடைபயின்ற
நந்தன ஆண்டு
இன்றோடு
விடை பெறுகிறது
கிழவியாய்..!
அவள் பெற்ற குழவி போல்
அடுத்து நடைபயில
வருகிறது
விஜய ஆண்டு...
வரவேண்டும் விஜயமே
வளம் பல வேண்டும்
தினமுமே..!

வருக வருக
விஜயமே வருக
தருக தருக
நலம் பலவே தருக
பருக பருக
தமிழ் அமுதே பருக
பெருக பெருக
தமிழ் புகழே பெருக
எழுக எழுக
தமிழர் வாழ்வே எழுக
வெல்க வெல்க
தாய்த் தமிழே வெல்க
வளர்க வளர்க
மனத நேயமே வளர்க
பொழிக பொழிக
மாதம் மும்மாரி பொழிக
வாழ்க வாழ்க
தமிழ்புத்தாண்டே வாழ்க..!

(எனது அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது முன்கூட்டிய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
ஏற்றத்தாழ்விலா சமுதாயம் மலர வேண்டும்

என வேண்டும்
உங்கள்
மோகனன்)




Tuesday, April 12, 2011

எல்லோர்க்கும் எல்லாமும்..! - தமிழ்ப்புத்தாண்டு தின சிறப்புக் கவிதை!




சூரியனை அணைக்கத்தான் முடியுமா?
நிலவினை மறைக்கத்தான் முடியுமா?
நட்சத்திரங்களை ஒழிக்கத்தான் முடியுமா?
அதுபோல் தான் தமிழ்ப்பெண்ணே
உன் பிறப்பை மாற்றத்தான் முடியுமா?
சித்திரை மாதத்தில் பிறக்கும் என்
பத்தரை மாற்றுத் தமிழ் தங்கமே...
உன் வரவை யார் தடுப்பார்..?
உலகத்து தமிழர்க்கெல்லாம் 
திருநாளது... பெருநாளது... புதுநாளது...
எதுவெனில் எம்தமிழே 
நீ பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டு நாளதுதான்..!
எல்லோர்க்கும் எல்லாமும் அருள்வாய் தாயே..!
எளியோர்க்கு வலிமைதனை வழங்குவாய் நீயே..!
தரணியிலே தமிழர்களை தழைக்கச் செய் தாயே..!
வறுமைதனை அடியோடு அகற்றிடுவாய் நீயே..!
உன்மடியில் எப்போதும் நான் பிறக்க வரமருள்வாயே..!
என் தாயே... தமிழே... உன் திருத்தாழ் சரணம்..!

(அன்பிற்கினிய வாசக நண்பர்கள் அனைவருக்கும், எனது முன்கூட்டிய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


வாழ்த்தும் அன்பு நெஞ்சம்


உங்கள்
மோகனன்)




Wednesday, April 14, 2010

தமிழ் மேல் தீராக் காதல்..! - தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவிதை..!


ஆமென்று சொன்னாலும் போமென்று சொன்னாலும் - தமிழ்ப்
பொல்லாக் காதல் போமோ..? பொல்லாக் காதல் போமோ..?
சர்ரென்று விட்டாலும் விர்ரென்று விட்டாலும் – உன்
அம்பிற்கு  இணையாகுமோ? தமிழ் அம்பிற்கு  இணையாகுமோ?
பசியென்று வந்தாலும்… புசித்து விட்டு வந்தாலும் – உனை
உண்ணாமலிருக்கத் தோணுமோ..? உண்ணாமலிருக்கத் தோணுமோ..?

முகில் நிறை முக்கூடல் நகரான… அகில் நிறை தமிழ்க்கூடல் நகரான
மா மதுரை எனை அழைக்குதோ..? கோ மதுரை எனை அழைக்குதோ..?
ஒரேயொரு பார்வை போதுமே… ஓரேயொருமுறை தரிசனம் போதுமே…
என நான் எண்ணுவது சரியாமோ..? நான் எண்ணுவது சரியாமோ..?
சாஸ்திரங்களற்றவன் நான்… ஆஸ்திகளற்றவன் நானென்று தெரிந்தும்
கனிவாய் அன்பு வைத்ததேனோ..? என்மேல்  அன்பு வைத்ததேனோ..?

கதவடைத்த வீடிற்குள் காற்றானாய்… மதகடைத்த அணைக்குள் நீரானாய்
கதவினை திறப்பது யாராமோ..? தமிழணையினை திறப்பது யாராமோ..?
சங்கம் வளர்த்த தமிழென்றாலும்... சிங்கம் நிகர்த்த தமிழென்றாலும்...
மதுரைத் தமிழுடன் இணையாமோ..? மூதுரைத் தமிழுடன் இணையாமோ..?
பேகன் வளர்த்த முத்தமிழன்றி... மோகனனும் வளர்க்கின்றான்…
பேதை அதில் மூழ்கிப் போகாமோ..? கோதையவள் மூழ்கிப் போகாமோ..?
தீம்பாவை நெஞ்சினிலே வாழும்… பூம்பாவை நெஞ்சினிலே வீழும்…
அத்திருநாளும் விரைந்து வாராதோ..? அத்தமிழன்புக்கு இரையாகாதோ..?



(தமிழின் பால் பேரன்பு கொண்ட உங்களனைவருக்கும்... இச்சிறியவனின் உள்ளம் கனிந்த...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

தமிழின் பால் அன்பு கொண்டு... அவளுக்காக நான் வடித்த தமிழ்க் காதல் கவிதை... பிழையிருப்பின் பொறுத்தருள்வீர்..!)