ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label நினைவு நாள். Show all posts
Showing posts with label நினைவு நாள். Show all posts

Wednesday, July 27, 2016

மீண்டும் எழுந்து'வா..!’ - அப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை


இந்தியாவின்
கடைக்கோடியில்
பிறந்திருந்தாலும் எங்களை
தலைக்கோடியிலிருந்து
ஆண்ட எங்களின்
எளிமைத் தலை'வா…'
குறளுக்கு
இலக்கணமாய்
இருந்து
குமரித்தமிழ்
பரப்பிய
உண்மைத் தலை'வா…'
அணுவின் அசைவுகளை
நுணுக்கமாய் ஆராயும்
அமெரிக்காவின் கண்ணில்
மண்ணைத் தூவி
பொக்ரானில் அணுவைப் பிளந்த
விஞ்ஞானத் தலை'வா…'
மாணவர்கள் இதயத்தில்
சிம்மாசனமிட்ட
கறுப்புத் தமிழா…
உனை இந்நாளில்
இழந்து தவிக்கின்றோம்
நீ மீண்டும் எழுந்து'வா…'
தமிழ் உலகமே
அழுகின்றதே தலை'வா…'
மீண்டும்'வா…'
கண்ணீரில் கரைகின்றோம்
அன்புக் கரம் கொண்டு
துடைத்திட எழுந்து'வா…'
தலை…. வா…… தலை'வா..!'
****************************





Tuesday, July 28, 2015

எங்கள் அப்துல் கலாம் ஐயாவே..!





இந்திய தென்கோடி
மண்ணில் பிறந்து
விண்ணை ஆண்ட
எங்கள் அப்துல் கலாம் ஐயாவே
எங்களின் 120 கோடி இதயங்களை
துடிக்க விட்டு
உங்களின் இதயத் துடிப்பை
நிறுத்தியது ஏன்?

‘வல்லூறு நாடுகளுக்கிடையே
இந்தியாவை வல்லரசாக்க
வாருங்கள் மாணவர்களே..!’
என்றழைத்த எங்கள் ஆசானே
மண்ணிலுள்ள உங்கள்
மாணவர்களை துடிக்க விட்டு
விண்ணில் நட்சத்திரமாய்
மறைந்து போனது ஏன்?

அணுகுண்டு சோதனையில்
அணுவைப் போல்
அடக்கமாய் செயல்பட்டு
வினையில் விண்ணைத்தொட்ட
அறிவியல் ஐயனே…
உலக அரங்கில் தலை நிமிர்ந்த தமிழனே
உங்களின் சிம்மக் குரல்
மரணச் சிறைக்குள் அகப்பட்டது ஏன்?


ஏவுகணையின் நாயகனே
ஏழைகளின் தூயவனே
எளிமையின் இருப்பிடமே
தமிழகம் ஈன்றெடுத்த தங்கமே
உன் பிரிவாலின்று
குமரி முதல் இமயம் வரை உள்ள
240 கோடி கண்களும் அழுகிறதே
கண்ணீரைத் துடைக்க வராதது ஏன்?

‘கனவு காணுங்கள்
இந்தியைவை வல்லரசாக்க’
‘கேள்வி கேளுங்கள்
எதையும் பரிட்சித்துப் பார்க்க’
என்று எங்களுக்கு போதித்த புத்தனே
ஏன் எங்களை விட்டுச் சென்றாய்
என்று கேள்வி கேட்டு
கேவிக் கேவி அழுகிறோம்
அண்ணலே மீண்டு(ம்) வா..!

வாழ்ந்தது போதுமென்று
‘அக்னி சிறகுகள்’
கொண்டு பறந்து விட்டாயா
‘இந்தியா 2020’ முழக்கத்தை
மறந்து விடுவோம் என்று
நினைந்து விட்டாயா?
என்றென்றும் உம்

வழி நடப்போம் நாங்கள்
என்றும் அப்துல் கலாமின்
மாணவர்கள் நாங்கள்..!


(கண்ணீரோடு அழைக்கிறோம்.. மீண்டு வாருங்கள் ஐயா… எங்களின் கண்ணீரைத் துடைக்க வாருங்கள் ஐயா…)

அப்துல் கலாம் ஐயாவிற்காக 2007-இல் நான் எழுதிய சிறுவர்களுக்கான பாடல் இங்கே... நாமும் கலாம் ஆகலாம்




Friday, July 16, 2010

கோவில்களின் நகரமாம்..! - கண்ணீர்க் கவியாஞ்சலி





கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்..?
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது..!

அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...

கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்


ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?

அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?

உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?

பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?


அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்

அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?

உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இருமாப்பா...?

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...


உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?

'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...


'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…

அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...

சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...

(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து ஆறாமாண்டு நினைவு நாள் (16.07.2010) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர் அஞ்சலி...)




Thursday, December 24, 2009

எங்களின் இதயக்கனியே..! - எம்.ஜி.ஆர் நினைவு நாள் கவிதாஞ்சலி


பொன் மனச் செம்மலே!
எங்களின் அண்ணலே..!
புரட்சித் தலைவரே..!
புதுமைப் பித்தரே..!
இந்திரனின் உருவே..!
எங்களின் இதயக்கனியே..!
மக்கள் திலகமே..!
என்றும் மங்காத செல்வமே..!
ஏழைகளின் ஒளிவிளக்கே..!
எங்களின் மணிவிளக்கே..!
நீ மறைந்து இன்றோடு
ஆண்டுகள் இருபத்தி இரண்டு..!

ஆண்டாண்டு காலமாய்
அழுது புரண்டாலும்
மாண்டவர் மீள்வதில்லை..!
நீ மாண்டு போகவில்லை ஐயா
மக்களின் மனங்களில்
குடியிருந்த கோவிலாய்
வாழுகின்றாய்..!
ஒளிவிளக்காய் எங்களுக்கு
வழிகாட்டுகின்றாய்..!

மன்னாதி மன்னா...
நின் மலரடி பணிகின்றோம்..!
நாடோடி மன்னா...
நின் வழி நடக்கின்றோம்..!
மறைந்தும் மறையாத
செல்வமே..
நீ வாழி...
நின் புகழ் வாழி..
வாழி நீ எம்மான்..!



Thursday, November 26, 2009

பொல்லாத ஓர் இரவில்..! - மும்பை தாக்குதல் முதலாமாண்டு நினைவுக் கவியாஞ்சலி



பொல்லாத ஓர் இரவில்
பொல்லாங்கு செய்பவர்கள்
பல்லாக்கு தூக்கிகள் போல்
பதுங்கிய படி வந்திட்டார்…
பாகிஸ்தானிலிருந்து
பயங்கர ஆயுதங்களுடன்
மும்பையில் நுழைந்திட்டார்

அவர்களெண்ணத்தில்
அவல எண்ணங்கள் உதித்திருக்க
அதுவரை உதித்திருந்த
கதிரவனோ…
பயங்கர இரவைக் காணச்
சகியாமால்…
சட்டென்று மறைந்து போனான்…

சட சடவென்று
துப்பாக்கியால் சுட்டபடி
தீயவர்கள்
திகில் கொடுக்க…
மும்பை மாநகரம்
திடுக்கிட்டு விழித்தது…
திகிலில் உறைந்தது…

விட்டில் பூச்சிகளிடம்
வீரத்தைக் காட்டிய
ஈனப்பிறவிகள்…
ரயில் நிலையத்தில்
ரணகளத்தை காட்டிவிட்டு
நட்சத்திர விடுதிக்குள்
நரிகளைப் போல் நுழைந்தன…
கண்ணில் பட்டோரை
சடுதியில் கொன்றன…

உலகத்தின் பார்வை அனைத்தும்
இங்கு குவிந்திருக்க…
வெண்ணிலவும் இந்நிகழ்வை
வேதனையோடு பார்த்திருக்க
வெறியாட்டம் போட்ட
ஈனப் பன்றிகள்…
குதியாட்டம் போட்டன…

அப்பன்றிகளை வேட்டையாட
வேங்கைக் கூட்டமொன்று
புயலெனக் கிளம்பிற்று…
உயிரை துச்சமெனக் கருதி
கடமையை உயிரெனக் கருதி
பிற உயிர்களின் நலன்களைக் கருதி
அவ்வேங்கைகள் பாய்ந்து வந்தன…

ஊழல்வாதிகள் செய்த வினை
ஊடகங்கள் செய்த வினை
அத்தீயவர்களுக்கு
திட்டமாக…
வேங்கையின் தாக்குதல்கள்
விபரீதமாயிற்று…
வீரம் காட்டிய வேங்கைகள்
வீரமரணம் எய்தின…

இறுதியில்…
இன்னுயிர்களை ஈந்து
ஈனப்பன்றிகளை
அழித்தன…
இந்தியர் அனைவரும்
அமைதிப் பெருமூச்செய்தினர்…


உயிரினை இழந்தோர் பலர்...
அங்கே உறவுகளை
இழந்தோர் பலர்…
இறந்தவர்
பல மதத்தினராயினும்
அவர்களைக் காத்தது
இந்தியரன்றோ…

ஒற்றுமை காட்டிடும்
இத்தேசத்தில்
பிற நாட்டு
தே… மகன்களுக்கு
ஒற்று வேலை செய்தலாகுமோ…
நம் தேசத்தை
கூறு போட நினைப்பது தகுமோ…

இதற்குப் பின்னேனும்
விழிக்க வேண்டாமோ நாம்…
வீணர்களை விரட்ட
வேண்டாமோ நாம்…
இத்துன்ப நிகழ்வு நிகழ்ந்து
இன்றோடு ஆண்டொன்று

அழுது கரைந்தாலும்
உருண்டு புரண்டாலும்
உயிர்கள் மீளாது…
நம் உள்ளங்களோ கண்ணீர்
உகுக்காமலிருக்காது…
உயிர் நீத்த உள்ளங்களுக்கும்
மானம் காத்த மாவீரர்களுக்கும்
கண்ணீர் கவியாஞ்சலி செலுத்துகிறேன்
காணிக்கையாக்குகிறேன்…

போனவரை போகட்டும்
இனியொமொரு
தாக்குதலை…
இம் மண்ணில் நடத்த
விடமாட்டோம்…
மீறி நடக்க வைக்க முயல்பவர்களை
நசுக்கியெறிவோம்…

எச்சமர் வரினும்
அவனியில் அஞ்சாமாட்டோம்
அசகாய சூரனென்றாலும்
அடியோடு
அழித்தெடுப்போம்…

இது…
நம்நாடு…
நம்தேசம்...
நம் மக்கள்…
நாமனைவரும் இந்தியர்கள்…
என்ற எண்ணம் காப்போம்...
என்றும் இந்தியனாய் இருப்போம்...



மும்பை தாக்குதல் - முதலாமாண்டு நினைவு மரபுக்கவிதாஞ்சலி

 

தொம்பையி னாறிய தீயவர் திமிரோடு
மும்பையில் துட்டக் கால் வைத்தனர் – மேலும்
தும்பைப் பூ போன்ற உயிர்களை வதைத்தனர்
வம்பையும் விலைக்கு வாங்கினர்.

வேதனைக் குரல்கள் நாற்புறம் ஓலிக்க
கோதனைக் காக்கிளம் பியதரி மாப்படை
சோதனைத் தீர்க்க தம்மின்னுயிரை ஈந்து
சாதனை படைத்தவ்வெஞ் சமர்.

ஆயிற்றத் துன்பம் நிகழ்ந் தாண் டொன்று
போயிற்றோ நம்மனக் கவலைகள் - மாவீரர்களே..?
தீயிட்டழிக்கும் கொடும் தீவிரவாதி களையவ்
வாயிலினில் வைத்தே வதைத்திடும்.

                                                             
                                                                    - மோகனன்

(மும்பைத் தாக்குதல் நடைபெற்று...இன்றுடன் ஓராண்டு நிறைவு ஆகிறது... அவ்வெஞ்சமிரில் இன்னுயிரை ஈந்து பிற உயிர்களைக் காத்த மாவீரர்களுக்கு உங்களனைவரின் சார்பிலும் இந்த மரபுக்கவிதையினை கண்ணீர் அஞ்சலியுடன் சமர்ப்பிக்கிறேன்... இனியும் இதுபோன்ற துன்பியல்கள் இந்தியாவில் நடைபெறக்கூடாது என்ற நற்சிந்தனைகளுடன் உங்களிடம் இதைப் படையலிடுகிறேன்...)



Friday, September 11, 2009

மகாகவி பாரதிக்கு மரபுக் கவிதாஞ்சலி


ஆசுகவி படைத்தெம் தேசியக் கவியே
வீசுகின் றகாற்றில் கரைந்து போனதேன்
பூசுநறு மணந்தமிழ் கவிபடைத் ததமிழே
மாசுநிறை பூமியில் மறைந்ததேன்

ஆரியனை எரித்தது போல் பரங்கியனை
எரித்து நின்றாய்… எழுத்தாணி யெடுத்து
விரித்தெழு தினாய் சுதந் திரத்தை – தமிழ்கவிச்
சூரியனே நின்கவி சூழ்ந்’தேன்’.

உன்னுடைய கவிதை யெல்லாமெனக்கு உரம்
நின்னுடைய வரிகளெல்லாமெனக்கு வரம்
கன்னித் தமிழ்வார்த் தைகள் சரம் – பைந்தமிழ்
மன்னவ நின்கவி ஆலமரம்.

மண்ணை விட் டுமறைந் துவிட்டெம்மை
கண்ணீரில் ஆழ்த்தி விட்டாய் கவிஞனே
விண்ணில் நீ நட்சத் திரமாம் – தீந்தமிழ்ப்
பண்ணில் நீ கவிப் பகலவன்.

துயில்கொண் டெம்மைது யரத்திலாழ்த் திவிட்டாய்
குயில்போலெங் களுக்குக விசமைத் துக் கொடுத்து
நோயிற்குன் னுயிரைக் கொடுத்தாய் – செந்தமிழ்
பாயிரமே நின்னைப் பணிந்’தேன்’.

(மகா கவிக்கு மரபுக் கவிதையால் கவிதாஞ்சலி எழுதியுள்ளேன்... அவருடைய நினைவு நாளில் அவரது மலர்ப்பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறேன்... குறைகளிருப்பின் சுட்டுங்கள்..)



மகா கவி பாரதிக்கு கவிதாஞ்சலி




பெண்களை உயர்த்துவோம் பேதமை அகற்றுவேம்
சிந்தையில் நல்லெண்ணங்களைக் குவிப்போம்...
பாரதத் தாயின் விலங்கினை அறுப்போம்...
வெள்ளைப் பரங்கியனை நாடு கடத்துவோமென்றவன்..!

பேத நிறை சமூகம், பேய் நிறைக் கொடூரம்
கொண்ட மூடப் பழக்கங்களை கிழித்தெறிந்தவன்...
வேதங்கள் பொய்... வேள்விகள் பொய்...
சாதிகள் பொய்... சமத்துவமே மெய்யென்றவன்..!

வீறு கொண்டெழுவாய்... வேதனை துடைப்பாய்...
கொடுஞ் சாதிகளகற்றுவாய்... சரித்திரம் படைப்பாய்...
வீறு கொண்டெழுவாய்... விண்ணில் நடப்பாய் என
பத்திரிகை ஆசிரியனாய் பாமரனுக்கும் எழுதியவன்..!

பாமரரும் புரிந்து கொண்டு பகுத்தறிவு பெறவதற்கு
கேலிச்சித்திரத்தால் சமூக அவலத்தைக் காண்பித்தவன்
நமக்கு ஏவலர்கள் தேவையில்லை... - தேச
காவலர்கள் வேண்டுமென்ற நிலையைப் படைத்தவன்..!

பரங்கியரிடம் பணிந்திருந்த பாமர மக்களை
தன் புரட்சிப் பாக்களால் புத்துயிரூட்டியவன்
முண்டாசு கட்டியபடி, எழுத்தாணி தீட்டியபடி சமூக
முரண்பாடுகளை வேரறுக்க புறப்பட்டவன்..!

எட்டயபுரத்தில் பிறந்து எட்டு திக்கும்
செந்தமிழ்க்கவியால் சுதந்திரத்தை வளர்த்தவன்
எந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி..!
விந்தன் எந்தன் சுந்தரத் தமிழன் பாரதி..!

கடும் நோயால் விண்ணுலகம் சென்றாய் நீ
உன்பிரிவால்
தமிழன்னை கண்ணீர் உகுக்கிறாள்
உன் கவி முகம் காணாத நம்
தமிழுலகம்
சூரியனை இழந்த வானம் போல் இருண்டுவிட்டது

மண்ணில் நீ மறைந்தாலும் எம்மில் நீ

திண்ணமாய் நீக்கமற வாழுகின்றாய்...
நம் தமிழன்னை தேம்பித் தேம்பி அழுதாழும்
உன் தேன்கவி படித்து ஆறுதல் கொள்கிறாள்..!

தமிழகத்து வானில் ஓப்பற்ற கவிச்சூரியன் நீ..!
நீ நீங்கிய இந்நாள் தமிழகத்தின் துக்கநாள்...
வளரிளங்கவி தலைமுறையின் துயரநாள்...
நீ நீங்கினாலும் ஐயா... நின் கவி மறையாது..!

நின் புகழ் மறையாது... நீ புரட்சிக் கவி மட்டுமல்ல
எங்களின் தேசியக் கவி...
தீவிர தேன்தமிழ்க் கவி நீ...
உன்னடி தொழுதபடி கண்ணீரோடு காகித்திலிட்ட
என் கவிதாஞ்லி உன் திருவடியில் சமர்ப்பணம்..!

(11.09.2007அன்று எழுதியது, சிற்சில மாற்றங்களுடன்,
கண்ணீரோடு இங்கு பதிவிலிடுகிறேன் ..)