ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label பிறந்தநாள் கவிதை. Show all posts
Showing posts with label பிறந்தநாள் கவிதை. Show all posts

Friday, September 9, 2016

விடிவெள்ளியாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை!


உலக உருண்டையை
வயிற்றுக்குள் வைத்திருக்கும்
பிரபஞ்சத்தைப் போல…
எனது உலகத்தையே
வயிற்றுக்குள் வைத்திருந்தாள்
உன் அன்னை!
திங்கள் நிகர் உன் அன்னை
திங்களாய் உனை சுமந்து
விடிவெள்ளியாய் உனை பெற்றெடுத்தாள்!
இன்னும் நினைவிலிருக்கிறது
அந்த வெள்ளிக்கிழமை
நீ கொடுத்த முதல் மழலைக் குரலால்!
அடங்காத காளை, கோவக்காரன், முரடன்,
திமிர் பிடித்தவன் என பட்டம் பெற்ற எனக்கு
அப்பா எனும் பட்டம் கொடுத்த மழலை!
கன்னியாய் இருந்தவளுக்கு
அம்மா எனும் ஒப்பற்ற பதவி கொடுத்த
எங்களின் முதல் இளவரசன்!
இருண்டு கிடந்த எம் வாழ்வில்
சூரியனாய் உதித்ததால்
ஆதித்தனென்று பெயர் சூட்டினோம்!
கல்வி, கேள்வி, கலைகளில்
சிறந்து விளங்கிய ஆதித்த கரிகாலனைப்போல
ஆதவனாய் வரவே அப்பெயர் தீட்டினோம்!
என்றும் எங்கள் ஆதவனே
மோகனன் வீட்டு இளவரசனே
தாய்க்குத் தலை மகனே!
இன்றோடு நீ பிறந்து
ஆயிற்று ஆண்டுகள் பதினொன்று
வாழ்க ஆண்டுகள் பலநூறு!
எல்லா கலைகளும் கைவரப் பெற
தந்தையை விஞ்சும் தனையனாக மலர

இயற்கையோடு இணைந்து வாழ்த்துகிறேன் மகனே!

(இன்று 11-வது பிறந்தநாள் காணும் எனது முதல் மகன் ஆதித்தனுக்காய் இந்த கவிதை..!)




Wednesday, July 15, 2015

கல்வி தந்த ஐயா..! - பிறந்தநாள் கவிதை!




கல்வி தந்த ஐயா!
எங்கள் காமராசர் ஐயா! - நீங்கள்
கல்வித் தந்தை ஐயா
எங்கள் காமராசர் ஐயா!

களத்து மேட்டில் கிடந்தவனை
கல்வி கற்க வைத்தவர்!
ஆடு மாடு மேய்த்தவனை
ஏடெடுக்க வைத்தவர்! 
                    
பாடுபடும் ஏழைகளுக்கென்று
பள்ளிக்கூடம் திறந்தவர்!
பசியில் படிக்கும் பிள்ளை கண்டு
உணவு திட்டம் தந்தவர்!                     
(கல்வி தந்த…)

கல்வி எனும் செல்வம் தன்னை
தமிழ்ச் சந்ததிக்கு தந்தவர்
மதிய உணவுத் திட்டத்தினை
உலகினுக்கே ஈந்தவர்!

தமிழ்நாடு செழிக்க தரணி போற்றும்
தொழிற் பேட்டைகளை திறந்தவர்
ஏழை விவசாயிகள் ஏற்றம் பெற
பல நீரணைகள் கட்டியவர்!                   
(கல்வி தந்த…)

ஏழைகளுக்காய் திட்டம் தீட்டி
ஏழைப் பங்காளர் ஆனவர்
காரியங்களை கணக்காய் தீட்டி
கர்ம வீரர் ஆனவர்! 
           
இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை
வேண்டாமென மறுத்தவர்
லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கி
நாட்டின் ‘கிங் மேக்கர்’ ஆனவர்!          
(கல்வி தந்த…)

பெருமை கொள்ளும் தலைமையேற்று
பெருந்தலைவர் ஆனவர்
கதராடையுடன் போராடியதால்
‘காலா காந்தி’ ஆனவர்!

தமிழகத்தை ஆட்சி செய்து
அதை பொற்காலமாய் மாற்றியவர்
வரலாற்றுப் பக்கங்களில் மறத்தமிழனாய்
வாகை சூடி நிற்பவர்!                     
(கல்வி தந்த…)




Thursday, June 4, 2015

எங்கள் உலகின் வானவில்லாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை



காய்ந்து கிடக்கும் பூமிக்கு
வளத்தைத்தரும் வான மகள்
மழை தரும்போது
முறுவலிக்கும் வானவில்லின்
நிறங்களுமிங்கே ஏழு!

நாம் வாழும் பூமியை
கடலைத் தவிர்த்து
நிலப்பரப்பின் அடிப்படையில்
பிரிக்கப்பட்ட கண்டங்களின்
எண்ணிக்கையுமது ஏழு!

பூமியில் இயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
மனிதன் செயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
இங்கே ஏழு!

காலச் சக்கரத்தின் வேகத்தை
கட்டுக்குள் கொண்டுவர
காலத்தை கணக்காய்
வகைப்படுத்திய போது
வாரத்தின் நாட்களுமிங்கே ஏழு!

உலகின் மூத்த மொழியாம்

முத்தமிழின் முத்தான இலக்கியங்கள்
வகைப்படுத்திய
பிள்ளைப் பருவங்களின்

எண்ணிக்கையது ஏழு!

மழலையாய் இருந்த போது
நீ அழுகையில்
உனை அமைதிப்படுத்த
உன் அன்னை பாடிய தாலாட்டிசையின்
சுரங்களின் எண்ணிக்கையும் ஏழு!

எங்கள் உலகின் வானவில்லாய்
பெருமழையாய், பேரிசையாய்
அதிசயமாய், அழகிய இளவலாய்
இந்நாளில் பிறந்தாயே என் அகிலா…
இன்றோடு உன் அகவை ஏழு!


(இன்று எனது இளைய மகன் க. அகிலனின் ஏழாவது பிறந்தநாள். உன் அன்னை மட்டுமல்ல அகிலமே பெருமைப்படும்படி எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும். நிச்சயம் நீ சாதிக்கப் பிறந்தவன்.அன்பு, மதி, செல்வம் அனைத்தையும் நீ ஆண்டு, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க மகனே..!)




Wednesday, June 4, 2014

ஆறுபோல் அறிவைப் பெருக்கி! - பிறந்தநாள் வாழ்த்து!




ஆறு -
இந்த சொல்லுக்கும்
எண்ணிக்கைக்கும்தான்
இப்பூவுலகில்
எத்துனைச் சிறப்பு!
எத்துனை செழிப்பு!

புவிதனில்
மனித நாகரிகத்தை
முதன் முதலில்
வளர்த்து விட்டது
ஆறு!

உலகில் உள்ள
உயிரினங்களில்
மனித இனத்துக்கு
உள்ள அறிவு
ஆறு!

உணவின் சுவைகளில்
ஒன்றல்ல இரண்டல்ல
தமிழன் பகுத்து
வைத்த சுவைகள்
ஆறு!

இப்படி
இன்று நான் ஆறை
ஆராயக் காரணம் உண்டு
என் இளைய மகவே
இன்றோடு உன் அகவை
ஆறு!

ஆறுபோல்
அறிவைப் பெருக்கி
அதன் வேகத்தைப் போல்
பொருளையீட்டி
புவியிலுள்ளோரெல்லாம்
உய்யும்படி வாழ்கவென் அகிலா!


(எனது இளைய மகனுக்கு ஆறாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )




Wednesday, August 28, 2013

வலிந்து விரட்டு வலியை..! - தோழிக்கு பிறந்தநாள் கவிதை!

 

பல்லாண்டுகளுக்கு முன்
தாயின் கருவறையில்
ஆலம் வித்தானாய்...
உன் தந்தையின்
மன அறையில்
சிப்பிக்குள் முத்தானாய்..!
ஈன்றெடுத்த போது
இழைந்தோடும்
இசையானாய்..!
வளரும் போது
வருடி விடும்
தென்றலானாய்..!
பூச்சூடும் பருவத்தில்
மணம் வீசும்
பூஞ்சோலையானாய்..!
கல்லூரி பருவத்தில்
வானம் சுற்றும்
வானம்பாடியானாய்..!
விதியின் விளையாட்டில்
விளையாட்டு
பொம்மையானாய்..!
காலம் மாறிற்று
காட்சிகளும் மாறிற்று...
பொம்மை பெண்மையானது
உண்மை வண்மையானது
சுதந்திர உலகம் இனி உனக்கானது..!
வலியில் பிறப்பது வாழ்க்கை
வலிந்து விரட்டு வலியை
வசந்தம் இனி பின்பற்றும் உன் வழியை..!
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் நிலவுக்கு
முதல் பிறந்தநாள் இது..!
இன்னாள் போல் இனி என்னாளும்
வாழ்க நீயும் நலமோடு
வாழ்த்துகிறேன் நானும் மனதோடு!

(என் அன்புக்குரிய தோழி பொன். விமலாவிற்கு இன்று பிறந்தநாள்... அவருக்காக நான் எழுதிய கவிதை இது...

உலகின் எல்லா மகிழ்ச்சிகளும் உன் காலடியில் விழட்டும் விமலா...

என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!)




Tuesday, June 4, 2013

அன்பால் அணைக்கும் அகிலா..! - பிறந்தநாள் கவிதை


ஒரு மகவு போதுமென தந்தை யான்
   உன்னத முடிவெடுத்திருந்தேன் - உன் தாயோ
மற்றொரு மகவு எனக்கு வேண்டுமென
  சன்னதம் செய்து உனைப் பெற்றெடுத்தாள்
முதல் மகவின் துணைக்குத் துணையாக
  இணைக்கு இணையாக உனை ஈன்றெடுத்தாள்

மருந்தென உனை நினைத்து வாழ்வில்
   வேண்டாமென நினைத்திருந்தேன்
விருந்தென வந்து விழுந்தாய் - மடியில்
  விழுதெனப் பற்றி விட்டாய் அகிலா..!
குறுகுறு மழலைப் பார்வைகள் மறைந்து
  துறு துறு  பருவத்தை  எட்டி விட்டாய்

மரணத்தை அலற வைத்து இம்மண்ணில்
  மழலையென நீ மலர்ந்தாய் - பிறந்த பின்
காலனைக் கதற  வைத்து  இக்கலி
  யுகத்தில் கம்பீரமாய் கால் பதித்தாய்!
அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம்

கதிர் கண்ட பனிபோல் மறைந்து போயின!

இன்றோடு நீ பிறந்து ஆண்டு ஐந்து ஆயிற்று
  உனைப் பிடித்த துன்பங்கள் காற்றோடு போயிற்று
அகிலத்தை அன்பால் அணைக்கும் அகிலா 
    இனி இன்பங்கள் உனை விட்டு அகலா..
வான்முகிலும் இனி உன் பிறப்பை பாடும்
  வரலாறும் தன் ஏட்டில் உன் புகழைச் சூடும்!



(எனது இளைய மகனின் ஐந்தாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )




Friday, April 12, 2013

உன் பிறப்பால்..! - தோழிக்கு பிறந்தநாள் கவிதை

ண்டத்தில் சுற்றித் திரியும்
      துண்டங்களில் அழகினும் பேரழகிய
வெண்ணிலவாய் உருவெடுத்து
      பெண்ணிலவாய் பிறந்தாய் இன்று
னிலம், நீர், காற்று, வெளியென
      உன் பிறப்பால் களிப்பெய்திய நாளின்று
ஸ்வரமே நீ பிறந்த இந்நாள் மட்டும்
      இன்றி என்னாளும் உன்னாளாகட்டும்!


(என் அலுவலக தோழிக்கு நேற்று பிறந்த நாள். நான் அலுவலகத்தில் சோர்ந்திருக்கும் போதெல்லாம், எனை அன்போடு விசாரிப்பவர். நேற்றும் நான் அப்படி இருக்கவே, அவருக்கு நான் ஒருவாழ்த்து கூட சொல்லவில்லை. மாலையில் அவரே எனை அணுகி, ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டுதானே இருப்பீர்கள். அப்படி இருப்பதுதான் எங்களுக்குப் பிடிக்கும்  என்று, என்னை ஆசுவாசப்படுத்தினார்... அதன் பிறகே அவருக்கு வாழ்த்து சொல்ல விரும்பி, இக் கவிதை  மூலம் வாழ்த்தை சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ந்து போனார். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். 

இக்கவிதைகளின் ஒவ்வொரு வரிகளிலும் தடித்திருக்கும் முதல் எழுத்தை மேலிருந்து கீழாக படித்துப் பார்த்தால் என் தோழியின் பெயர் படிக்கக் கிடைக்கும்.)




Thursday, December 13, 2012

நவநீதன் மகனே..! - சிறப்புக் கவிதை




இருளைக் கிழித்துப் பிறந்த
நவநீதன் மகனே…
வளர்பிறையில் வளரும்
என் மருமகனே…
உன் வரவால்
என்னுள்ளம் துள்ளுதடா
உன்னாலென்
நண்பன் தந்தையானான்
என்ற மகிழ்வை விட
நானுந்தன் மாமனானேன்
என்பது கண்டு மகிழ்ந்தேனடா
நீ எங்களின் ‘மகிழ்’ தேனடா…

உன்னாலிங்கு
உன் அத்தை உள்ளம் பூரித்து
சிரிக்கிறாள் – உவகையால்
கவிதையாய் வடிக்கிறாள்..!
எத்தனை முறை அவள்
எழுதிப் பார்த்தும்
உனைப் போலொரு உயிர்க்கவிதையை
வடிக்க முடியாதென
உனை வாழ்த்தி மகிழ்கிறாள்
வருக எங்களின் இளவலே...
வளர்க நீயும் புவியிலே...
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!


(இன்று எனது ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணன் - கவிதா தம்பதிக்கு ஆண்மகவு பிறந்திருக்கிறது. அம்மகவின் வரவிற்க்காக இக்கவிதை..!)




Saturday, June 4, 2011

எம்மிளைய மகவாய்..! - பிறந்தநாள் கவிதை!


செந்தமிழ்த்தாய் வாழுகின்ற
இத் திருநாட்டில்
எம்மிளைய மகவாய்
பிறந்தாயே என்னகிலா..!

உன் பிறப்பால் நான் உவகை
கொண்டது போதாது!
மீறின் அது குல நலமாகிவிடும்..!
அதை யான் வேண்டேன்..!

இப்புவி உவகை கொள்ளும்படி
செய்து விடு பொன்னகிலா..!
அதுதான் உலக நலமாகும்!
உன் தாய் மனம் குதுகலமாகும்..!

எங்களின் புரட்சி மணத்தில் பூத்த
இரண்டாவது பூமலரே...
என் குடும்பமெனும் பூங்காவில்
முகிழ்த்திட்ட வாச மலரே..!

பிறப்பதுமிறப்பதும் ஓர் முறை...
இருக்கும் வரை இன்பத்தை
அனைவர்க்கும் வழங்கிடு...
அகிலத்தை அன்பால் வளைத்திடு..!

துணிச்சலை ஆயுதமாக்கி...
தூய அறிவை துணையாக்கி...
தமிழை அமுதாக்கி...
தடைகளனைத்தையும் உடைத்திடு..!

சமதர்ம உலகின் தலைவன்
நீதான் எனக் காட்ட
சரித்திரத்திதை மாற்றி எழுதிட
துணிந்து எழுந்திடு..!

இங்கே முத்தமிழும் மூன்று
முக்கனியும் மூன்று
உன் அகவையும் மூன்று
என் மகிழ்சிக்கு இதுவே சான்று! 

உலகிலுள்ள எல்லா நலங்களும்
வளங்களும் உன்னடி சேர
இந்த மூன்றாமாண்டில்
முத்துக் கவி பாடுகிறேன்..!

என் இளஞ்சேயே உன் வடிவில்
எந்தையைக் காணுகிறேன்
இன்று போல் என்றும் வாழ
உந்தை புதுக்கவி பாடுகிறேன்..!

வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!
இவ்வகிலம் இருக்கும் வரை
என்னகிலா நீ வாழ்கவே..!

(எனது இளைய மகனுக்கு மூன்றாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )