ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label child poems. Show all posts
Showing posts with label child poems. Show all posts

Monday, April 7, 2014

சிறை பிடிக்க முடியுமா?


மூச்சுக்காற்றை
சிறை பிடிக்க முடியுமா
என்று என்னிடம்
சவால் விட்டாள்!
எப்படி முயன்றும்
"என்னால் முடியவில்லை அன்பே"
என்று தோல்வி சிறையில்
அடைபட்டுக் கொண்டேன்!
சிரித்துக் கொண்டே
அவளுடைய மூச்சுக்காற்றை
காற்றடைக்கும் தலையணையில்
சிறை பிடித்தாள்
என் செல்ல மகள்!




Friday, July 19, 2013

நீ மகளாகப் பிறந்திருக்கிறாய்! - பிறந்தநாள் கவிதை


உன் அன்னைக்கு
நீ மகளாகப் பிறந்திருக்கிறாய்
என்பதை விட
என் அன்னையே
என் மகளாகப்
பிறந்திருக்கிறாள் என்பதே
உண்மை என
உணர வைத்த தாயே

எங்கள் உயிர் மகள் நீயே!

நீ பிறந்த இந்நாளில்
இதயம் முழுதும்
இன்பம் பொங்குதடா!
அப்பா என நீ
எனை அழைக்கும் போது
என் ஆயுள் கூடுதடா!
என் மகளே... எங்கள் உயிரே...
நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!

உன் அன்னையைப் போல்
கற்பூர மூளையடா உனக்கு
எனையும் குழந்தையாக்கும்
குதூகலக் குறும்படா உனக்கு
மயில் தோகையைப் போல்
படரும் கூந்தலடா உனக்கு
புள்ளி மானைப் போல்
துள்ளும் நடையடா உனக்கு
மலரும் தாமரையைப் போல்
மனம் நிறையும் சிரிப்படா உனக்கு
உனை மகளாய் பெற்றதில்
மகிழ்ச்சி உனக்கல்லடா எனக்கு!




Wednesday, November 21, 2012

குழந்தையின் தூக்கம்!



தேக்குமரத் தொட்டிலிலே
சந்தனத் தைலமிட்டு
பனிக்குளிர் காற்றை பரவவிட்டு
பணக்கார வீட்டுப் குழந்தையை
பதமாக தொட்டிலாட்டினாலும்
தூங்குவதற்கு நேரம் பிடிக்கிறது
இந்த பாழும் நகரத்திலே…

வேப்பமர நிழலினிலே
ஒரு சேலை முடிச்சிற்குள்
தூளி கட்டி போட்ட
பாட்டாளியின் குழந்தை...
தன் தாயின் வாசத்தை
சேலையில் சுவாசித்தபடி
சுகமாய் தூங்கிப்போகிறது
நான் வாழும் கிராமத்திலே…!

++++++++++++++++++++++++++++++++++++++

அன்பான நட்பு வட்டங்களுக்கு...

கவிதை எழுதி நெடுநாட்களாகி விட்டது. நேரமின்மையும் வேலைப்பளுவும் இதற்கு காரணம். தற்போது அச்சூழல்கள் எனை விட்டு சற்று விலகி இருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. மீண்டும் அதே உத்வேகத்துடன் உங்களை இனி சந்திக்கிறேன் என் கவிதைகளோடு... மீண்டும் உங்களின் விமர்சனக் கணைகளால் எனை அரவணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

என்றென்றும் அன்புடன்
உங்கள்
மோகனன்