ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

Tuesday, March 8, 2016

பெண்ணினமே நீ வாழி! - மகளிர் தின சிறப்புக் கவிதை!


இந்த உலகத்திற்கே
உயிர்களை
உருவாக்கிக் தரும்
உன்னதம்!- தாய்மை!

உலகத்தையே
அழகாக்கும்
திறன் கொண்ட
ரசவாதம்! - மலர்கள்!

தன்னுயிரை
பணயம் வைத்து
என்னுயிரை உருவாக்கிய
புனிதம்! - அம்மா!

அடம்பிடிக்கும்
என்னிடம்
அன்பைப் பொழியும்
அமுதம்! - அக்கா!

காட்டுத்தனமாய்
சுற்றித்திரியும்
இக்களிறை அடக்கும்
அங்குசம்! - காதலி!

என்னுயிரை
உள்வாங்கி
எனையே உயிர்ப்பிக்கும்
உத்தமம்! - மனைவி!

என்னுலகை
பொன்னுலகமாக்கி
எனக்கன்னையாய் மாறும்
வசந்தம் - மகள்!

எனக்கு மட்டுமல்ல
உலகிலுள்ள
எல்லா ஆண்களுக்கும்
இவையே நியதி!

எங்களைப் படைத்த
உன்னத மலர்களே
இன்றுங்களைப் போற்றும்
பொன்னான திகதி!

நீரின்றி உயிரில்லை
நீயின்றி அணுவில்லை
அணுவின்றி எவையுமில்லை
பெண்ணினமே நீ வாழி!


(உலகிலுள்ள அத்தனை மகளிருக்கும் என் இதயம் நிறைந்த இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!)

பொது அறிவு:உலகின் தற்போதைய பெண் தலைவர்கள்! - மகளிர் தின சிறப்புப் பதிவு!




Friday, March 7, 2014

ஒவ்வொரு பெண்ணும்..! - மகளிர் தின சிறப்புக் கவிதை!




பூமித்தாய் தன்னுள்
உயிர்ப்புடன்
விழுகின்ற
 எதனையும்
வேறுபாடு
காட்டாமல்
உயிரூட்டி
உரமேற்றி
வெளியுலகம்
காணவைப்பாள்!

உயிரற்று வீழ்பவற்றை
வேறுபாடு காட்டாமல்
தன்னுள்
அடக்கிக் கொள்வாள்!
பூமித்தாயைப் போலேதான்
இவ்வுலகில் உள்ள
ஒவ்வொரு பெண்ணும்
தன்னைச் சார்ந்தோரின்
நல் குணங்களை
வெளியுலகுக்கு எடுத்துக்காட்டி
தீயகுணங்களை தன்னுள் அடக்கி
அன்பு நிறை அன்னையாக
அடம்பிடிக்கும் சகோதரியாக
தோள் கொடுக்கும் தோழியாக
அறிவார்ந்த மனைவியாக
அழகு நிறை மகளாக
உருவெடுத்து வாழ்ந்து நிறைகிறாள்
ஆணினத்தை வாழவைத்து மறைகிறாள்!

(உலகிலுள்ள பெண்கள் அனைவருக்கும் எனது சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் மகளிரைப் போற்றுவோம்!)




Wednesday, February 26, 2014

ஓ… என் நீதி தேவதையே..! - பாலியல் வன்முறை எதிர்ப்புக் கவிதை!


ஓ… என் நீதி தேவதையே
பெண்கள் நாட்டின் கண்கள் என
இருந்த இந்நாட்டில்
இன்று அப்பெண்களின்
கண்கள் மட்டுமல்ல
உயிரினும் மேலான கற்பும்
அவர்களின் உயிர்களுமல்லவா
பறிக்கப்படுகிறது?

நீதியில் பாரபட்சம் கூடாது
பந்த பாசத்திற்கு இடம் தரக்கூடாது
என்றுதான் நீதிதேவனை நிறுத்தாமல்
நீதி தேவதையான உன்னை
நீதியை நிலை நாட்ட
நிறுத்தியிருக்கிறார்கள்..!
உன் இனத்திற்கு நேரும் கதியைப் பார்..!

தில்லியில் அன்று நிர்பயா…
சேலத்தில் நேற்று 5 வயது சிறுமி
சென்னையில் இன்று உமா…
எங்கே சென்று கொண்டிருக்கிறது
இந்தச் சமூகம்..?
ஆணினம் அழிவினத்தின்
உச்சமாகிக் கொண்டல்லவா போகிறது..?
அதை அடக்காமல் விடலாமா?

உன்னிடமுள்ள நீதியெனும் வாளை
கூர் தீட்டிக் கொள்…
காம வெறி பிடித்த கயர்களை
கூண்டிலேற்றிக் கொல்…
அவன் ஆண்டியாக இருந்தாலும்
ஆதிமுதல் பணக்காரனாக இருந்தாலும்
விடாதே… விடாதே கொல்..!

சிறுமியென்றும் பாராமல்
துவம்சம் செய்த அரக்கர்களை அழி
பெண்ணை ஒரு மனுஷியாகக்கூட பார்க்காத
அந்த பாதகர்களை ஒழி...
எவனையும் எக்காரணம்
கொண்டும் மன்னிக்காதே
உன்னினத்தை
நீயே காப்பாற்றவில்லையெனில்
இனத்துரோகி ஆகிவிடுவாய்..!

காம வெறி பிடித்து
கற்பழிப்பில் ஈடுபட்ட நாய்களின்
கழுத்தில் மாட்டு சுருக்கு…
இல்லையேல்
அவன் பிறப்புறுப்பை நறுக்கு
இல்லையேல்
நாட்டை விட்டு கடத்து..!
பெண்களை போகப் பொருளாக்கும்
பொல்லா நாய்களை
தீயில் போட்டு பொசுக்கு..!

தன்னை பெற்ற தாயும்
ஒரு பெண் என மறந்த நாய்களை
தன்னுடன் பிறந்த சகோதரியும்
ஒரு பெண் என்பதை மறந்த ஈனப்பன்றிகளை
அழித்தெடுக்க தண்டனைகளை கடுமையாக்கு
குடிதனை அமல்படுத்தியிருக்கும்
ஆட்சிக்கும் சவுக்கடியை நீட்டு
அப்போதுதான் மாறும் இந்நிலை..!




Monday, March 4, 2013

பாலியல் வன்முறையை?



தில்லி பாலியல்
சம்பவத்திற்கு பிறகுதான்
மக்களிடையே
மாநில அரசுகளிடையே
எத்தனை விழிப்புணர்வுகள்...
குற்றவாளிகளுக்கு
எத்தனை காவடி தூக்கல்கள்...
பெண்களின் மேல்தான்
எத்தனை வன்மொழிச் சாடல்கள்...
தினமும் அரங்கேறும்
வன்புணர்வுக் கொடூரங்கள்...

தலைநகரில்
தலைவிரித்தாடும்
வன்புணர் கொடூரங்கள்
பாரதத்தாயின்
மாண்பெனும் மார்பினை
அறுத்தெறிகின்றன....
தாய்மையைப் போற்றும் நாட்டில்
பெண்களின் பாதுகாப்பு
தலைதெறிக்கின்றன

கொள்ளையை மன்னிக்கலாம்
படுபாதகக் கொலையை?
வன்முறையை மன்னிக்கலாம்
பாலியல் வன்முறையை?
திருடர்களை மன்னிக்கலாம்
வன்புணர் கொடூரர்களை?
இவைகளையெல்லாம்
மன்னிக்கலாகுமா?
கொன்றொழிக்காமல் விட்டால்
அது தகுமா..?

காதலிக்க மறுத்தால்
ஆசிட் வீசு
காமத்திற்கிணைய மறுத்தால்
கொன்று வீசு
சிறுமியென்றும் பாராதே
பாட்டியென்றும் பாராதே
தேவையெனில் வன்புணர்வில்
எடுத்துக் கொள்...
எடுத்துக் கொண்ட பின் 'கொல்'
எனத் திரியும்
ஈனப்பிறவிகளுக்கு
இந்நாட்டில் இடம் கொடுக்கலாமா?
இல்லை மூன்று வேளை
உணவளித்து
சிறையிலிடலாமா?

மனித உரிமை அமைப்புகள்
இதற்கெல்லாம்
மவுனம் சாதிப்பதேன்..?
இவ்வுலகிலிருந்தே அழிக்கப்படவேண்டிய
ஈனப்பிறவிகளுக்கு
குரல் கொடுப்பதேன்...
அவர்'களை' எல்லாம்
களை எடுக்க வேண்டாமா?
மனிதாபிமானமற்ற
ஈனப்பன்றிகள் மீது
ஈட்டியைப் பாய்ச்ச வேண்டாமா?

நமைப் பெற்றவள் ஒரு பெண்
நமை பேணிக் காப்பவள் ஒரு பெண்
நம்மோடு துணையாய்
கடைசி வரை வருபவள் ஒரு பெண்
என பேதம் தெரியாத
நாய்களுக்கு எதற்கு சட்டப் பாதுகாப்பு
பெண்களைப் பாதுகாக்காமல்
பேடிகளைப் பாதுகாக்க
எதற்கு காவல் அமைப்பு...

குற்றம் நீருபிக்கப்பட்டால்
அவன் நாடாள்பவனே ஆயினும்
அப்பேடியை உடனே தூக்கு
மக்கள் மத்தியில் மாட்டிடு 'தூக்கு'
ஆசிட் வீசினால்
அந்நாய்களை ஆசிட் ஆலையில்
தூக்கி வீசு...
கண்ணுக்கு கண் வாங்கு
இல்லையேல் ஆட்சியை விட்டு நீங்கு

பெண்ணியம் வாழ்ந்திட வேண்டுமெனில்
ஆணினம் மாறிட வேண்டும்
பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில்
கடும் சட்டங்கள் தோன்றிட வேண்டும்
இவைகள் இன்னும்
நம் புத்தியில் ஏறா விட்டால்
மீண்டும் மீண்டும்
முளைத்திடும்
தில்லியில் பாலியல் பலாத்காரம்...
சூரியநெல்லி விவகாரம்
ஆசிட் வீச்சில் உயிர் போகும்...

(நாளிதழ்களைத் திறந்தால், நாடெங்கும் நிகழும் வன்புணர்ச்சிகள், ஆசிட் வீச்சு கொலைகள், பெண்ணியத்திற்கெதிரான கொடுமைகள் ... என என் மனதை அரித்துக் கொண்டே இருந்தன. இதனை வாசகர் ரமேஷ் அவர்களும் கோடிட்டுக் காட்டிக் கொண்டே இருந்தார்...

இக்கவிதை பலகொடூரங்களால் காற்றில் கரைந்து போன பெண்ணிய தீபங்களுக்கு சமர்ப்பணம்)




Monday, December 31, 2012

கருவறையில் இருப்பது..! - புத்தாண்டு சிறப்பு கவிதை!



தோள் கொடு தோழா…
தோள் கொடு..!
தாய்மையைக் காக்க தோள் கொடு!

வாள் எடு தோழா…
வாள் எடு..!
பெண்மையைக் காக்க வாள் எடு..!

கருவறையைத் தாங்குவது
கோவில் எனில்
ஒவ்வொரு தாயும் கோவிலடா..!

கருவறையில் இருப்பது
கடவுள் எனில்
ஒவ்வொரு மனிதரும் கடவுளடா..!

பெண்மையில் இருப்பது
தாய்மை எனில்
ஒவ்வொரு பெண்ணும் தாயடா..!

தாயைப் பழிக்கும் நாய்களை ஒழிக்கும்
தாய்த்திரு நாட்டில்
பாலியல் கொடுமை ஏனடா..?

பெண்மையை காப்பதே
ஆண்மை என்பதை
மறந்தவன் காமுகனடா…

காமவெறி கொண்டு அலையும்
காமுக நாய்களை
வேட்டையாடுவோம் வாடா..!

காமுக நாய்களை சிறையிலடைத்து
விருந்து கொடுக்கும்
சட்டங்கள் வேண்டாம் போடா..!

குற்றம் செய்தவன் கொற்றவனாயினும்
அவன் குடலை உருவி
சுடலைக்கு அனுப்புவோம் வாடா..!

பெண்ணியம் காக்கும் சட்டங்கள்
வேண்டுமென்று
வெடித்து முழங்குவோம் வாடா..!

கற்பினை பொதுவினில் நிறுத்தி
கண்களில் கண்ணியம் பொருத்தி
பெண்மையை காத்திட வாடா..!

(பாலியல் வன்முறைக்கு ஆளாகி, இருதினங்களுக்கு முன் இறந்து போன தில்லி மாணவிக்காக மட்டுமல்ல, இந்த வன்முறைக்கு இலக்காகி, இலக்கற்றுப் போன ஒவ்வொரு பெண்ணிற்கும் இக்கிறுக்கல் சமர்ப்பணம். 

நமை ஈன்ற அன்னையும் பெண்ணே. நம்முடன் பிறந்த சகோதரியும் பெண்ணே.. நமை திருமணம் செய்யும் மனைவியும் பெண்ணே.. நமை சரிசமமாய் நடத்தும் தோழியும் பெண்ணே... நமக்கு பிறக்கும் மகளும் பெண்ணே... பெண்களின்றி ஆண்களில்லை. 

இனியொரு பாலியல் வன்கொடுமை இந்தியாவில் மட்டுமல்ல, இப்புவியில் இல்லாமல் செய்ய ஒவ்வொரு ஆண்மகனும் உறுதி எடுப்போம். ஏனெனில் ஆணினத்தால்தான் பெண்ணினம் சிலுவையில் அறையப்படுகிறது.

இனி ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் பெண்மையைக் காப்போம். ஆண்மையுடன் வாழ்வோம்...

உங்களனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2013)




Saturday, October 1, 2011

வாயில் பூத்த பூ..!


என் மகளுக்கு இன்று
பிறந்தநாள்...
தாயும் சேயும் வெளியே
சென்றிருக்க
என் மகளின் புகைப்படைத்தை
பார்த்துக் கொண்டிருந்தேன்...
என் மகளின் கடைசி பிறந்த
நாளன்று எடுத்த புகைப்படம் அது..!

அழகாய் என் மகள்
சிரித்திருக்க
அவள் தலை மேல்
சூட்டிய மலரும் சிரித்திருந்தது
அதனழகைப் பார்த்து
நானும் சிரிக்கலானேன்...

அந்நேரம் பார்த்து
என்னவளும் என் மகளும்
உள்ளே நுழைய...
என் சிரிப்பை கண்டு
என்னருகே வந்த
என்னில்லாள்
சிரித்த காரணம் வினவினாள்...

சிரித்த காரணம் சொன்னேன்
அதுவே சிலாகிக்கும்
கவிதையாய் ஆனது என்றாள்.

நம் மகள் தலையில் சூடிய பூ
நம் வீட்டு செடியில் பூத்த பூ..!
என் மகளின் புன்னகையோ
அவள் வாயில் பூத்த பூ...
என் மகளோ குழவியாய் இருக்கையில்
உன் வயிற்றில் பூத்த பூ...
அதைக் கண்டே என் இதழில்
புன்னகை பூத்தது என்றேன்!




Monday, March 8, 2010

அன்பை உலகிற்கு அளிக்கும்..!


இம்மண்ணை தாய் மண்ணென்றழைத்த
நம் முன்னோர்க்கு வணக்கம்..!
தங்கத் தமிழை தாய்த்தமிழ்
என்றழைத்த தமிழனுக்கு
என் தலைவணக்கம்..!
இம்மண்ணிற்கு எனை
ஈன்றளித்த என்
அன்னைக்கு வணக்கம்..!
என் கண்ணிற்குள் நுழைந்து
கவிதையாய் மாறிய
என் காதலிக்கு வணக்கம்..!
என்றன் வாழ்வினையாய் மாறி
என்னுள் வாழ்கின்ற
துணைவிக்கு வணக்கம்..!
அன்பினைப் பொழியும் என்
அன்பு மகளுக்கு வணக்கம்..!
அன்பை உலகிற்கு அளிக்கும்
அகிலத்து மகளிர்க்கு வணக்கம்..!

******

அன்பில்லா வாழ்க்கையும் பாழ்
அன்னையில்லா அண்டமும் பாழ்..!

மண்ணில்லா மரமும் பாழ்
பெண்ணில்லா உறவும் பாழ்..!

உயிரற்ற இவ்வுடலும் பாழ்
பெண்ணற்ற ஆணும் பாழ்..!

 ******

என்னை இம்மண்ணில் உலவ விட்ட என் அன்னைக்கும், எனை நேசிக்கும் என் பெண் கவிதைக்கும், என் தோழிகளுக்கும், நாங்கள் ரசிக்கும் எங்களின் பெண் மகள்கள் உள்ளிட்ட அனைத்து உலக மகளிருக்கும் இச்சிறுவனின் இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!

வாழ்க நம் பெண்குலம்..!




Thursday, September 17, 2009

பெண் சிசுவின் கேள்வி..!


அம்மா...
நான் செய்த
தவறென்ன...

உணர்ச்சியால்
நீ செய்த
திரைமறைவு
தப்பிற்கு...

நானல்லவா
குப்பை தொட்டியில்
வீசப்பட்டிருக்கிறேன்..?




Friday, September 4, 2009

அன்னை தெரசா...


அன்பான தெரசா அன்னையே..!
அகிலம் போற்றுது உன்னையே..!
சேவையின் உருவான அன்னையே..!
போற்றுவோம் தினமும் உன்னையே..!

அல்பேனியாவில் நீ பிறந்தாய்..!
இந்தியாவில் சேவை செய்தாய்..!
சேரிகளின் உள்ளே நுழைந்தாய்..!
அம்மக்களுக்கென்றே நீ உழைத்தாய்..!

யாரும் அனாதைகளில்லை என்றாய்..!
யாவர்க்கும் அடைக்கலம் தந்தாய்..!
தொண்டுக்கே தொண்டென வாழ்ந்தாய்..!
தொழுநோயாளிகளைக் கூட காத்தாய்..!

பாழும் ஏழைகள் வாழ வழிவகுத்
தாய்..!
பாரில் அவர்கள் ஏற்றம் பெற கல்வி தந்தாய்..!
எளிமைக்கே இலக்கணமாய் வாழ்ந்தாய்..!
சேவைக்கு என்றென்றும் நீதான் தாய்..!

கருணை இல்லத்தை நீ படைத்
தாய்..!
கைவிடப்பட்டோரை வாழ வைத்தாய்..!
'கன்னி'யாய் இருப்பினும் நீதான் தாய்..!
என்றென்றும் எங்களுடன் வாழ்கின்ற தாய்..!

(செப்டம்பர் 5, அன்னை தெரசாவின் நினைவு தினம், அவரது நினைவாக எழுதிய கவிதை)




Tuesday, September 1, 2009

அன்னை



என்ற உயிரோடு
ம் என்ற மெய் சேரின்
என்ற உயிர்மெய் பிறக்கும்..!


(கவிதை வரிகளின் முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படிக்கவும்... நீங்கள் மழலையாய் இருந்த போது உங்கள் நாவில் பிறந்த 'உயிர்மெய்', இப்பொழுதும் பிறக்கும்...)