ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label Birthday poems. Show all posts
Showing posts with label Birthday poems. Show all posts

Monday, September 21, 2020

பிறந்தநாள் வாழ்த்து கவிதை வேண்டுமா?

 


இந்த பிறந்தநாள் வாழ்த்து கவிதை எனது அண்ணனுக்காக நான் எழுதியது... 

இந்த நிழற்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள கவிதையின் வரிகளில் 1,3,5,7,9 ஆகிய வரிகளின் முதல் எழுத்துகளை மேலிருந்து கீழாகப் படித்தால்... பிறந்தநாள் கொண்டாடும் எனது அண்ணனின் பெயர் வரும்...

உங்களுக்கும், உங்களது அன்பில் நிறைந்தவர்களுக்கும் இதுபோன்று அவர்களது பெயரைக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கவிதை வேண்டுமென்றால்... தாராளமாக 9600045295 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்க... கவிதைக்கும்... வடிவமைப்புக்கும் கட்டணம் உண்டு...

இப்படி ஒரு வாழ்த்தினை உங்களின் அன்பானவர்களுக்கு கொடுக்க விரும்பினால் என்னை அணுகலாம்... சுயதொழில் செய்ய விரும்பும் எனக்கு இப்படியும் நீங்கள் எனக்கு பணி வழங்கலாம்...

மிக்க அன்புடன்

மோகனன்
moganan@gmail.com


எழுத்து வடிவில் இதே அந்தக் கவிதை

மோனத்தில் உழலும் இப்பூவுலகில் இந்நாள் ஓர்

மறவாத திருநாளனது நம்முடைய குடும்பத்திற்கு!

வேலும் மயிலும் துணையான வள்ளியம்மைக்கும்

வீரத்தின் வித்தான மோகன் ராஜிக்கும் பிறந்து

லுலுலுவாயென தாலாட்டுப் பாட வைத்தாய்!

தளிர் நடை பயின்று பெற்றோரை மகிழவைத்தாய்!

ளமளவென வளர்ந்து தச்சுப் பணியில் சிறந்து

குடும்பம் குழவியென சமூகத்தில் உயர்ந்தாய்!

ணிலவினைப்போல  உன் வாழ்வில் துன்பம் தேய்ந்து

நன்மைகள் வளர நீ பிறந்த இந்நாளில் வாழ்த்துகிறோம்!





Friday, September 9, 2016

விடிவெள்ளியாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை!


உலக உருண்டையை
வயிற்றுக்குள் வைத்திருக்கும்
பிரபஞ்சத்தைப் போல…
எனது உலகத்தையே
வயிற்றுக்குள் வைத்திருந்தாள்
உன் அன்னை!
திங்கள் நிகர் உன் அன்னை
திங்களாய் உனை சுமந்து
விடிவெள்ளியாய் உனை பெற்றெடுத்தாள்!
இன்னும் நினைவிலிருக்கிறது
அந்த வெள்ளிக்கிழமை
நீ கொடுத்த முதல் மழலைக் குரலால்!
அடங்காத காளை, கோவக்காரன், முரடன்,
திமிர் பிடித்தவன் என பட்டம் பெற்ற எனக்கு
அப்பா எனும் பட்டம் கொடுத்த மழலை!
கன்னியாய் இருந்தவளுக்கு
அம்மா எனும் ஒப்பற்ற பதவி கொடுத்த
எங்களின் முதல் இளவரசன்!
இருண்டு கிடந்த எம் வாழ்வில்
சூரியனாய் உதித்ததால்
ஆதித்தனென்று பெயர் சூட்டினோம்!
கல்வி, கேள்வி, கலைகளில்
சிறந்து விளங்கிய ஆதித்த கரிகாலனைப்போல
ஆதவனாய் வரவே அப்பெயர் தீட்டினோம்!
என்றும் எங்கள் ஆதவனே
மோகனன் வீட்டு இளவரசனே
தாய்க்குத் தலை மகனே!
இன்றோடு நீ பிறந்து
ஆயிற்று ஆண்டுகள் பதினொன்று
வாழ்க ஆண்டுகள் பலநூறு!
எல்லா கலைகளும் கைவரப் பெற
தந்தையை விஞ்சும் தனையனாக மலர

இயற்கையோடு இணைந்து வாழ்த்துகிறேன் மகனே!

(இன்று 11-வது பிறந்தநாள் காணும் எனது முதல் மகன் ஆதித்தனுக்காய் இந்த கவிதை..!)




Wednesday, September 9, 2015

ஆண் நிலவே..! – பிறந்தநாள் வாழ்த்து கவிதை!




எங்கள் அன்பினில்
உதித்த உயிரே…
திங்கள் முகம்தனை
வடித்த உறவே…
சிங்கம் நிகர்த்த
என் மகவே…
தங்கம் இழைத்த
ஆண் நிலவே..!

உன் தாயின்
கருவறையில்…
முத்துப்போல்
துயில் கொண்டு…
பத்துத் திங்கள்
நீங்கக் கண்டு…
நிலவைப் போலின்று
கால் பதித்தாய்..!

இப்புவியில் நீ கால்பதித்து
இன்றோடு ஆயிற்று
ஆண்டுகளும் பத்து..!
முத்தமிழின் முதல் தமிழாம்
இயற்றமிழில் உள்ள
நூல்களுளொன்று பதிற்றுப் பத்து..!
தாய்த் தமிழின் மணிமுடியில்
அந்நூலும் ஒரு முத்து..!

என் தாய்த்தமிழின் வீரமும்
குன்றா வளமையும்
உனக்கு வாய்க்கட்டும்..!
உனது எண்ணம் போல்
அறிவியல் துறையில்
உன் மேதமை வாய்க்கட்டும்..!
இன்று போல் என்று வாழ்க
எங்கள் தலைமகனே..!

(இன்று எனது முதல் மகனான க.ஆதித்தனுக்கு 10-ஆவது பிறந்தநாள். அவருக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை இது...)




Wednesday, July 15, 2015

கல்வி தந்த ஐயா..! - பிறந்தநாள் கவிதை!




கல்வி தந்த ஐயா!
எங்கள் காமராசர் ஐயா! - நீங்கள்
கல்வித் தந்தை ஐயா
எங்கள் காமராசர் ஐயா!

களத்து மேட்டில் கிடந்தவனை
கல்வி கற்க வைத்தவர்!
ஆடு மாடு மேய்த்தவனை
ஏடெடுக்க வைத்தவர்! 
                    
பாடுபடும் ஏழைகளுக்கென்று
பள்ளிக்கூடம் திறந்தவர்!
பசியில் படிக்கும் பிள்ளை கண்டு
உணவு திட்டம் தந்தவர்!                     
(கல்வி தந்த…)

கல்வி எனும் செல்வம் தன்னை
தமிழ்ச் சந்ததிக்கு தந்தவர்
மதிய உணவுத் திட்டத்தினை
உலகினுக்கே ஈந்தவர்!

தமிழ்நாடு செழிக்க தரணி போற்றும்
தொழிற் பேட்டைகளை திறந்தவர்
ஏழை விவசாயிகள் ஏற்றம் பெற
பல நீரணைகள் கட்டியவர்!                   
(கல்வி தந்த…)

ஏழைகளுக்காய் திட்டம் தீட்டி
ஏழைப் பங்காளர் ஆனவர்
காரியங்களை கணக்காய் தீட்டி
கர்ம வீரர் ஆனவர்! 
           
இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை
வேண்டாமென மறுத்தவர்
லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கி
நாட்டின் ‘கிங் மேக்கர்’ ஆனவர்!          
(கல்வி தந்த…)

பெருமை கொள்ளும் தலைமையேற்று
பெருந்தலைவர் ஆனவர்
கதராடையுடன் போராடியதால்
‘காலா காந்தி’ ஆனவர்!

தமிழகத்தை ஆட்சி செய்து
அதை பொற்காலமாய் மாற்றியவர்
வரலாற்றுப் பக்கங்களில் மறத்தமிழனாய்
வாகை சூடி நிற்பவர்!                     
(கல்வி தந்த…)




Thursday, June 4, 2015

எங்கள் உலகின் வானவில்லாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை



காய்ந்து கிடக்கும் பூமிக்கு
வளத்தைத்தரும் வான மகள்
மழை தரும்போது
முறுவலிக்கும் வானவில்லின்
நிறங்களுமிங்கே ஏழு!

நாம் வாழும் பூமியை
கடலைத் தவிர்த்து
நிலப்பரப்பின் அடிப்படையில்
பிரிக்கப்பட்ட கண்டங்களின்
எண்ணிக்கையுமது ஏழு!

பூமியில் இயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
மனிதன் செயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
இங்கே ஏழு!

காலச் சக்கரத்தின் வேகத்தை
கட்டுக்குள் கொண்டுவர
காலத்தை கணக்காய்
வகைப்படுத்திய போது
வாரத்தின் நாட்களுமிங்கே ஏழு!

உலகின் மூத்த மொழியாம்

முத்தமிழின் முத்தான இலக்கியங்கள்
வகைப்படுத்திய
பிள்ளைப் பருவங்களின்

எண்ணிக்கையது ஏழு!

மழலையாய் இருந்த போது
நீ அழுகையில்
உனை அமைதிப்படுத்த
உன் அன்னை பாடிய தாலாட்டிசையின்
சுரங்களின் எண்ணிக்கையும் ஏழு!

எங்கள் உலகின் வானவில்லாய்
பெருமழையாய், பேரிசையாய்
அதிசயமாய், அழகிய இளவலாய்
இந்நாளில் பிறந்தாயே என் அகிலா…
இன்றோடு உன் அகவை ஏழு!


(இன்று எனது இளைய மகன் க. அகிலனின் ஏழாவது பிறந்தநாள். உன் அன்னை மட்டுமல்ல அகிலமே பெருமைப்படும்படி எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும். நிச்சயம் நீ சாதிக்கப் பிறந்தவன்.அன்பு, மதி, செல்வம் அனைத்தையும் நீ ஆண்டு, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க மகனே..!)




Tuesday, March 24, 2015

இன்னுமொரு இளவலாய்..! - பிறந்தநாள் வாழ்த்து


ந்தனத்து வாசமும் சங்கத்தமிழ் நேசமும்
       வந்தனம் பாடும் வேளையில் வந்துதித்தாய்!

ந்திரன் பிறந்தானென்று நம் பெற்றோருனக்கு
      மலேயாவில் தமிழையும் உனக்கூட்டி வளர்த்தனர்!

தி
ரைகடலோடி திரவியம் தேடிய எம்குலத்தின்
     இன்னுமொரு இளவலாய் நீ பிறந்த தினமின்று!
களையாய் நீ குறும்பு செய்த காலங்களில்
      உன்னோடு நான் இல்லாமல் போய்விட்டேன்!
ன்று போல் என்றும் நீ மலர் போல் சிரித்தபடி
      பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்கவே!


(1,3,5,7,9 வரிகளின் முதல் எழுத்துகளை மேலிருந்து படித்தால்... இன்று பிறந்தநாள் காணும் எனது தம்பியின் பெயர் கிடைக்கும்... புகைப்படத்தில் தனது மகனுடன் எனது தம்பி)






Saturday, October 25, 2014

யாழிசையும் குழலிசையும்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை!



யாழிசையும் குழலிசையும் உன் மழலைக் குரலுக்கு
      முன்னால் மண்டியிடுகிறது எங்கள் சந்திர மகவே!
வமிருந்து பெற்ற தமிழகத்தின் தனிப்பெரும் சொத்தே!
      சந்திரனுக்கும் சங்கீதாவிற்கும் நீ விலைமதியா முத்தே!
ங்காளம் தாண்டி சிங்காசனமிட்ட எங்கள் வம்ச வித்தே!
      செந்தமிழ் கொண்டுனக்கு எழுதுகிறேன் பிறந்தநாள் வாழ்த்தே!
ன்று போலென்றும் மகிழ்வோடு மாநிலம் போற்ற வாழ்க!
      புவனம் போற்ற வளர்க எந்தன் மகவே உனக்கு என் வாழ்த்து! 



(இன்று பிறந்தநாள் காணும் எனது தம்பி சந்திரனின் மகனுக்காக நான் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை... இக்கவிதையின் 1,3,5,7 வது வரிகளில் உள்ள முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாக வரிசைப்படி படித்தால், பிறந்த நாள் கொண்டாடும் மழலையின் பெயர் கிடைக்கும். கிடைச்சுதா.. சொல்லுங்க...!)




Tuesday, September 9, 2014

நீ அளித்த பிச்சைதான்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை



ஆதவனைப் போல் உதித்த என் மலரே..!
மேகத்தைப் போல் தவழ்ந்த என் மகவே..!
அம்புலியைப் போல் வளர்ந்த என் அழகே..!
விண்மீனினைப் போல் சிரித்த என் இதழே..!

முயலினைப் போல் குதித்த என் நிலவே
..!
மானினைப் போல் ஓடிய என் நதியே..!
யானையைப் போல் சிந்தித்த என் மதியே..!
சிங்கத்தைப் போல் ஒலித்த என் குரலே..!

நீ பிறந்து இன்றோடு ஆண்டுகள் ஒன்பது
..!
நீ அளித்த பிச்சைதான் நான் தந்தை என்பது..!
வாழ்வில் எமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது?
நீ பிறந்த இந்நாள்தான் என உலகம் சொல்வது..!

வாழ்க என் மகனே… வளர்க என் மகனே
..!
தாழ்க உன் மனமே... ஏழைக்கு தாழ்க உன் மனமே..!

(எங்கள் வீட்டு பட்டத்து இளவரசர் க. ஆதித்தனுக்கு இன்று ஒன்பதாவது பிறந்தநாள். அவருக்காக நானெழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை)




Wednesday, June 4, 2014

ஆறுபோல் அறிவைப் பெருக்கி! - பிறந்தநாள் வாழ்த்து!




ஆறு -
இந்த சொல்லுக்கும்
எண்ணிக்கைக்கும்தான்
இப்பூவுலகில்
எத்துனைச் சிறப்பு!
எத்துனை செழிப்பு!

புவிதனில்
மனித நாகரிகத்தை
முதன் முதலில்
வளர்த்து விட்டது
ஆறு!

உலகில் உள்ள
உயிரினங்களில்
மனித இனத்துக்கு
உள்ள அறிவு
ஆறு!

உணவின் சுவைகளில்
ஒன்றல்ல இரண்டல்ல
தமிழன் பகுத்து
வைத்த சுவைகள்
ஆறு!

இப்படி
இன்று நான் ஆறை
ஆராயக் காரணம் உண்டு
என் இளைய மகவே
இன்றோடு உன் அகவை
ஆறு!

ஆறுபோல்
அறிவைப் பெருக்கி
அதன் வேகத்தைப் போல்
பொருளையீட்டி
புவியிலுள்ளோரெல்லாம்
உய்யும்படி வாழ்கவென் அகிலா!


(எனது இளைய மகனுக்கு ஆறாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )