ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label Special post. Show all posts
Showing posts with label Special post. Show all posts

Tuesday, March 22, 2016

நீரில் மிதக்கும் பூமிப்பந்து - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை!



ஓர் வகையில்
பார்த்தால்

இவ்வுலகும்
மனிதனும்  ஒன்றே!
அறிந்து சொல்வேன் இன்றே!
அது எதுவென்று
ஆராய்ந்து பார்ப்பின்
நீர் வகையில்
இரண்டும் ஒன்றே!
அறிந்திடுவீர் நீர் இதை நன்றே!

உலகில்
எழுபது சதவீதமும்
உடலில்
எழுபது சதவீதமும்
நிறைந்திருப்பது
உயிர் நீரே!
நம் உடலில் நீரும்
வற்றிவிட்டால்
உயிரும் காற்றாய் பறந்திடுமே
கடலில் நீரும் வற்றிவிட்டால்
உலக உயிரினங்ள்
சாம்பலாகிப் பறந்திடுமே!

யானை, புலி, சிங்கமெல்லாம்
தாகம் தணிக்க மட்டுமே
நீர் பருகும்
மனிதனெனும் மிருகம் மட்டுமே
தன் தேவைகள்
அனைத்திற்கும் நீர் உறிஞ்சும்!

தாவரம் வாழ
நீர் வேண்டும்
விலங்குகள் வாழ
நீர் வேண்டும்
உயிரினம் வாழ
நீர் வேண்டும்!

உணவைப் படைக்க
நீர் வேண்டும்
உயிரைப் படைக்க
நீர் வேண்டும்
உயிரைச் சுமக்க
நீர் வேண்டும்!


உணவுச் சங்கிலி உயிர்ப்போடிருக்க

உலகில் மறையா நீர் வேண்டும்
நீ, நானின்றி உலகிருக்கும்
நீரின்றி உலகிருக்காது
நம்மைக் காக்க
நீர் இருக்க…
நீரைக் காக்க யார் வருவார்?
நம்மை நாமே
காப்பதுபோல்
நீரை நாமும் காத்திடுவோம்!


நீரில் மிதக்கும் பூமிப்பந்தினை
வெப்பக்காடாய் மாற்றாமல்
பசுமைக்காடாய் மாற்றிடுவோம்!
மரங்களை புவியில் வளர்த்து
மண்ணில் நீரை சேமித்திடுவோம்
நீரை மாசு செய்யாமல்
நிதமும் சேகரம் செய்திடுவோம்!
அடுத்து வரும் தலைமுறைகளுக்கு
கானல் நீரைத் தாராமல்
நன்னீரையே பரிசளிப்போம்!


(இன்று உலக தண்ணீர் தினம்)

(நான் கௌரவ விருந்தினராக கலந்த கொண்ட நிகழ்ச்சி குறித்த தொகுப்பு இங்கே..: 'ஆசிரியர் வைபவம்' நிகழ்ச்சியில் அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!)




Thursday, June 4, 2015

எங்கள் உலகின் வானவில்லாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை



காய்ந்து கிடக்கும் பூமிக்கு
வளத்தைத்தரும் வான மகள்
மழை தரும்போது
முறுவலிக்கும் வானவில்லின்
நிறங்களுமிங்கே ஏழு!

நாம் வாழும் பூமியை
கடலைத் தவிர்த்து
நிலப்பரப்பின் அடிப்படையில்
பிரிக்கப்பட்ட கண்டங்களின்
எண்ணிக்கையுமது ஏழு!

பூமியில் இயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
மனிதன் செயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
இங்கே ஏழு!

காலச் சக்கரத்தின் வேகத்தை
கட்டுக்குள் கொண்டுவர
காலத்தை கணக்காய்
வகைப்படுத்திய போது
வாரத்தின் நாட்களுமிங்கே ஏழு!

உலகின் மூத்த மொழியாம்

முத்தமிழின் முத்தான இலக்கியங்கள்
வகைப்படுத்திய
பிள்ளைப் பருவங்களின்

எண்ணிக்கையது ஏழு!

மழலையாய் இருந்த போது
நீ அழுகையில்
உனை அமைதிப்படுத்த
உன் அன்னை பாடிய தாலாட்டிசையின்
சுரங்களின் எண்ணிக்கையும் ஏழு!

எங்கள் உலகின் வானவில்லாய்
பெருமழையாய், பேரிசையாய்
அதிசயமாய், அழகிய இளவலாய்
இந்நாளில் பிறந்தாயே என் அகிலா…
இன்றோடு உன் அகவை ஏழு!


(இன்று எனது இளைய மகன் க. அகிலனின் ஏழாவது பிறந்தநாள். உன் அன்னை மட்டுமல்ல அகிலமே பெருமைப்படும்படி எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும். நிச்சயம் நீ சாதிக்கப் பிறந்தவன்.அன்பு, மதி, செல்வம் அனைத்தையும் நீ ஆண்டு, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க மகனே..!)




Friday, January 9, 2015

காணாத நோய்..! - 400வது கவிதைப் பதிவு


கதிர்க் காதலனை காணாததால்
பசலை நோய் கண்ட
நிலா காதலி
தினமும் உடல் மெலிந்து
தேய்வதுபோல்
எனைக் காணாத
நோய் கண்டு
தேய்ந்து போகிறாள்
என் கலாபக் காதலி!
"இது தொலைவு தரும் தொல்லையா?
நினைவு தரும் தொல்லையா?"
என்று வினா தொடுத்தாள்...
விடை உன்னுள்ளே இருக்குதடி
உடலிங்கு திரிந்தாலும்
என்னுயிர் உன்னுள்ளே உலவுவதால்
இந்நோய் கண்டிருக்கும் என்றேன்
"பேச்சிலும் சரி மூச்சிலும் சரி
கவி வீச்சிலும் சரி
நீ வில்லாதி வில்லன்
எனைக் கவர்ந்த கள்வன்"
என்று சிணுங்கினாள்...
அந்த நொடியிலிருந்து நான்
தேயத் துவங்கினேன்..!

(இது எனது 400-வது கவிதைப் பதிவு... எனை நேசிக்கும் கவிதைக்கும்... காதலை சுவாசிக்கும் உலக காதலர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்..!

இந்த 400-வது பதிவு வரை எனக்கு ஆதரவு தரும் என்னன்பு வாசக நண்பர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!

அன்புடன்
மோகனன்)




Wednesday, June 4, 2014

ஆறுபோல் அறிவைப் பெருக்கி! - பிறந்தநாள் வாழ்த்து!




ஆறு -
இந்த சொல்லுக்கும்
எண்ணிக்கைக்கும்தான்
இப்பூவுலகில்
எத்துனைச் சிறப்பு!
எத்துனை செழிப்பு!

புவிதனில்
மனித நாகரிகத்தை
முதன் முதலில்
வளர்த்து விட்டது
ஆறு!

உலகில் உள்ள
உயிரினங்களில்
மனித இனத்துக்கு
உள்ள அறிவு
ஆறு!

உணவின் சுவைகளில்
ஒன்றல்ல இரண்டல்ல
தமிழன் பகுத்து
வைத்த சுவைகள்
ஆறு!

இப்படி
இன்று நான் ஆறை
ஆராயக் காரணம் உண்டு
என் இளைய மகவே
இன்றோடு உன் அகவை
ஆறு!

ஆறுபோல்
அறிவைப் பெருக்கி
அதன் வேகத்தைப் போல்
பொருளையீட்டி
புவியிலுள்ளோரெல்லாம்
உய்யும்படி வாழ்கவென் அகிலா!


(எனது இளைய மகனுக்கு ஆறாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )




Tuesday, June 4, 2013

அன்பால் அணைக்கும் அகிலா..! - பிறந்தநாள் கவிதை


ஒரு மகவு போதுமென தந்தை யான்
   உன்னத முடிவெடுத்திருந்தேன் - உன் தாயோ
மற்றொரு மகவு எனக்கு வேண்டுமென
  சன்னதம் செய்து உனைப் பெற்றெடுத்தாள்
முதல் மகவின் துணைக்குத் துணையாக
  இணைக்கு இணையாக உனை ஈன்றெடுத்தாள்

மருந்தென உனை நினைத்து வாழ்வில்
   வேண்டாமென நினைத்திருந்தேன்
விருந்தென வந்து விழுந்தாய் - மடியில்
  விழுதெனப் பற்றி விட்டாய் அகிலா..!
குறுகுறு மழலைப் பார்வைகள் மறைந்து
  துறு துறு  பருவத்தை  எட்டி விட்டாய்

மரணத்தை அலற வைத்து இம்மண்ணில்
  மழலையென நீ மலர்ந்தாய் - பிறந்த பின்
காலனைக் கதற  வைத்து  இக்கலி
  யுகத்தில் கம்பீரமாய் கால் பதித்தாய்!
அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம்

கதிர் கண்ட பனிபோல் மறைந்து போயின!

இன்றோடு நீ பிறந்து ஆண்டு ஐந்து ஆயிற்று
  உனைப் பிடித்த துன்பங்கள் காற்றோடு போயிற்று
அகிலத்தை அன்பால் அணைக்கும் அகிலா 
    இனி இன்பங்கள் உனை விட்டு அகலா..
வான்முகிலும் இனி உன் பிறப்பை பாடும்
  வரலாறும் தன் ஏட்டில் உன் புகழைச் சூடும்!



(எனது இளைய மகனின் ஐந்தாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )




Friday, March 22, 2013

ஒரு துளி அமுது..! - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை



ஒரு துளி அமுது
தேனீக்களுக்கு முக்கியம்
இரு துளி மருந்து
போலியோ ஒழிப்பிற்கு முக்கியம்
மூன்று துளி உயிரணு
உயிர்ப் பெருக்கத்திற்கு முக்கியம்
நான்கு துளி பன்னீர்
விழா வரவேற்பிற்கு முக்கியம்
ஐந்து துளி கண்ணீர்
தூய அன்பிற்கு முக்கியம்
ஆறு துளி விடம்
பாம்பின் பாதுகாப்பிற்கு முக்கியம்
இப்படி இயற்கையோடு
இயைந்து போன துளிகளின்
ஆதியும் அந்தமும் நீரே...
உலகில் வாழும் மனிதனிலும்
மனிதன் வாழும் உலகினிலும்
உள்ளடங்கியிருப்பது எழுபத சதம் நீரே
ஒவ்வொரு துளியும் நமக்கினி உயிர் நீரே...
உலகிலுள்ளோர் இதை உணர்வீரே...
உயிர் நீரை சேமித்திடுவீரே...
வரும் தலைமுறைக்கு 'நீர் வழி' காட்டிடுவீரே..!

*************

இன்று உலக தண்ணீர் தினம்.. அதற்காக எழுதிய கவிதை... கீழே சில குறுங்கவிதைகளைக் கொடுத்திருக்கிறேன்... அதுவும் 'தண்ணீர்' என்பதால்...

*************

குடிநீரை வீணாக்காதீர்
'டாஸ்மாக்' கடையில்
அரசின் வாசகம்..!

*************

குடிமக்களுக்காக குடிநீரை
காய்ச்சித் தராத அரசு
குடிமகன்களுக்காக
லிட்டர் கணக்கில் காய்ச்சித் தருகிறது
டாஸ்மாக்கில்..!

*************

குடிநீரில் சாக்கடை நீர்
கலந்து விற்றாலும்
கண்டு கொள்ளா
அரசு அதிகாரிகள்
டாஸ்மாக் சரக்கில்
நீர் கலந்து விற்றால்
கதகளி ஆடிடுவார்
கை விலங்கை பூட்டிடுவார்
இதுவல்லவோ
'குடிமக்கள்' ஆட்சி..!

*************

இதையும் படிங்க...:  உயிர் தாகத்திற்கு..!




Wednesday, March 20, 2013

குருவிகளைக் காணோம்?



அதிகாலை வேளையில்
சிட்டுக்குருவியின் சிருங்காரக் குரல்கள்
எழுப்பிய காலம் போய்
இன்று செல்போன் குரல்கள்
நமை எழுப்புகின்றன..!
நகரம் நரகமாகிப் போய்விட்டதே
என்று கிராமத்தை
நோக்கிப் பறந்தால் - அங்கும்
அலைபேசி கோபுரங்கள்
அகோரப்பசியுடன்
கூறு போடக் காத்திருக்கின்றன
வானம்பாடியாய்த் திரிந்து
கானம் பாடிய
குருவிகளைக் காணோம்..?

தன் குலம் வாழ
குருவிகளைக் கொன்று
லேகியம் தின்றதொரு கூட்டம்
செயற்கை உரங்களையிட்டு
குருவிகளின் உணவுச்சங்கிலியை
அறுத்ததொரு கூட்டம்
உலகெங்கும் அளவளாவதற்கு
அலைக் கதிர்களைக் கொண்டு
குருவிகளை மலடாக்கியதொரு கூட்டம்
ஓங்கியுயர் மரங்களை அழித்து
குருவிகளின் வீடுகளை
உருத்தெரியாமல் அழித்ததொரு கூட்டம்
எதிர்காலச் சந்ததிக்கு
இனியில்லை இப்படியொரு
குருவிக் கூட்டம்!

(இன்று உலக சிட்டுக் குருவி தினம்... என் கவிதை கேட்டுக்கொண்டதற்காகவும் சிட்டுக்குருவியின் தீவிர ரசிகன் என்பதாலும் இக்கவிதையை எழுதியிருக்கிறேன்)




Monday, February 25, 2013

முகவரியில்லாதோருக்கு முகவரி! - பாராட்டுக் கவிதை


முகமில்லாமல் போன எத்தனையோ முகங்களுக்கு
            முகம் கொடுத்த சேவையமைப்புகளில் முத்தாய்ப்பாய் நீ!
ல்விச் செல்வம் பெறுவதற்கு பொருட் செல்வமற்ற
             கள்ளமில்லா உள்ளங்களுக்கு 'கற்பகத் தரு'வாய் நீ!
லிகளைக் கூட வலிந்து சென்று ஏற்றுக் கொண்டு
             கற்போர் முகங்களில் மகிழ்ச்சியைத்  தரும் மந்திரமாய் நீ!
ரிதமோ, இசையோ, பொருளோ தராத ஞானத்தைத் 
             தரும் கல்விக்கே முகவரி கொடுத்த முகவரியாய் நீ..!


(வறுமைக் கோட்டிலிருக்கும் திறன்மிகு கிராமப்புற மாணவர்களின் உயர் கல்விக்குத் தேவையான நிதி உதவிகளை கொடையாளர்களிடமிருந்து பெற்று, அவற்றை அம்மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் சேவை அமைப்பிற்காக நானெழுதிய கவிதை இது. முதல் வரிகளில் உள்ள தடித்த முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்தால் அந்த அமைப்பின் பெயர் உங்களுக்கு புலப்படும். புலப்படுகிறதா?

நீங்களும் இந்த அமைப்பிற்கு உதவ விரும்பினால்:  http://www.mugavarifoundation.org

சென்னை, வேளச்சேரியில் உள்ள இந்த சேவை அமைப்பை எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் நடத்தி வரும் திரு. ரமேஷ் அவர்களுக்கும், எதிர்காலத்தில் நட்சத்திரங்களாய் மின்னப்போகும் இந்த அமைப்பின் மாணவர்களுக்கும் இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்)




Saturday, February 9, 2013

எங்களின் செல்பேசி..! - 350 வது கவிதைப் பதிவு



கடந்த இரு நாட்களாய்
என் மெல்லியாளைக்
காணவில்லை...
எங்கு சென்றாள்...
என்ன ஆனாள் என 
இருதலைக் கொள்ளி எறும்பாய்
ஏங்கித் தவித்தேன்...
அமாவைசை நிலவாய்
தேங்கித் தவித்தேன்...

வாழிடத்தைப் பொருத்த வரை
நான் ஒரு தேசம்
அவள் ஒரு தேசமென்றாலும்
எங்களின்
சுவாசம் என்றும்
ஒன்றாய்த்தானிருந்தது...
செல்பேசி வழியே
நேசம் என்றும்
நன்றாய்த்தானிருந்தது...

நாங்கள் போகுமிடம்
தூரமோ அருகாமையோ
சொல்லாமல் போனதில்லை
இருவரும்... 
சொன்ன சொல்லை
மீறியதில்லை
இருவரும்...

எங்களின் செல்பேசி இரண்டும்
இருவரின்
உதட்டுச் சொற்களை உயிர்ப்பித்து
செவி வழியே
உடல் செல்களுக்கு உயிர் கொடுக்கும்...
கண் வழியே
மகிழ்ச்சிக் கடல் ஊற்றெடுக்கும்...
நேர கால தேசாபிமானங்களை
எங்களின் செல்பேசி
தோற்கடிக்கும்...
எங்களின் உணர்ச்சிகளுக்கு
உயிர் கொடுக்கும்...
எங்கள் காதலுக்கு உரமிட்டு
பயிர் வளர்க்கும்...

அவள் அழைக்கும் போது
மட்டும் என் செல்பேசி
சிலாகித்து சிணுங்கல் போடும்...
'சீக்கிரம் எனை எடுத்து
அணை'யென முனகல் போடும்...

தொட்டணைத்து எடுத்தால்
தேவதையின் குரல்
தேனாய் என் செவியினைத் தீண்டும்...
என் பிறவிப் பயனைத் தூண்டும்...

இப்படி அனுதினமும்
இன்பம் தந்தவளிடமிருந்து
இருநாளாய் 
அழைப்பில்லை...
இணைய வழி ஏதுமில்லை
அவள் அழைப்பின்றி
என் செல்பேசி செத்துக் கிடந்தது
உணர்ச்சியற்று உறைந்து கிடந்தது

அவளின்றி
என் செய்வேன்?
ஏது செய்வேன்?
எங்கே சென்றாள்?
ஏது செய்கிறாள்?
காணாமல் போனாளோ..?
காற்றாய்க் கரைந்தாளோ..?
என்னுடைய கேள்வி கணைகள்
எனையே பதம் பார்த்தன...

காற்றாய் மாறும்
சக்தி கிடைக்குமா?
சிட்டாய்ப் பறக்கும்
யுக்தி கிடைக்குமா?
அவளை நேரே பார்க்கும்
முக்தி கிடைக்குமா?
என  பலவிதப்  போராட்டங்கள்
என் மனதில்...
சொல்லாமல் போய் விட்ட அவளுக்கு
எவ்வளவு மன 'தில்?'

அவளின்றி இங்கே
நான் கடத்திய
ஒவ்வொரு கணமும்
ஒரு யுகத்தின் கனமானது...
மனத்தின் ஒவ்வொரு பாகமும்
ரணமானது...
மௌனங்கள் அனைத்தும்
என்னிடம்
காட்டுக் கூச்சல் போட்டது...

அவள் அழைத்து பேசட்டும்
செவிட்டில் அறைகிறேன்...
குழைந்து பேசட்டும்
குமட்டில் அறைகிறேன்...
மறுத்து பேசட்டும்
மண்டையில் அறைகிறேன்...
என்று கொந்தளிப்பில் இருந்தேன்
இரு நாட்களுக்குப் பிறகு
அழைத்தாள்...
செவி மடுத்தேன்...
செவி வழியே
அவள் அன்பின் தேன் வழிய
வழக்கம் போல்
அவளன்பில் கரைந்தேன்...
மொழிந்தேன்..!
காதல் மொழி 'தேன்..!'

--------------@----------------

(2009 ஆகஸ்டில் துவங்கிய இந்த வலைப்பூவில் 300- ஆவது கவிதை எழுதும் போது 2011 -ஆம் ஆண்டு நடப்பிலிருந்தது. இது எனது 350-வது கவிதைப் பதிவு.  இந்த 50 கவிதைகளை எழுத கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளா என்றால். அது காரணமில்லை. 

பணிச்சூழலும் பொருளாதாரச் சூழலும் இடம் தராமல் போனதால் ஏற்பட்ட தொய்வு இது. இனி இந்த தொய்வு இருக்காது என நம்புகிறேன். இந்த 350-வது கவிதையை எனை நேசித்துக் கொண்டிருக்கும் எனது கவிதைக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த 350-வது பதிவு வரை எனக்கு ஆதரவு தரும் என்னன்பு வாசக நண்பர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!

என்றென்றும் அன்புடன்
உங்கள் 
மோகனன்)




Saturday, January 12, 2013

தைப்பொங்கல் வருகுதடி தோழி..! - பொங்கல் தின சிறப்புக் கவிதை



தமிழர் திருநாளாம்
தைப்பொங்கல்
வருகுதடி தோழி...
தமிழனின் புகழை
தரணியெலாம்
பாட வருகுதடி தோழி...

நெற்தங்கத்தை
கொட்டிக் கொடுத்த
தமிழ் மண்ணிற்கும்
கதிரவனின் கருணைக்கும்
எருதின் உழைப்பிற்கும்
நன்றி செலுத்தும் நாளிதடி தோழி...

நாள் முழுக்க
உழுது களைத்த காளை...
வயலில் உழவன்
சிந்திய வேர்வை...
நெல்மணியான காலம்
போய்விட்டதடி தோழி...

இன்றோ கழனியெல்லாம்
கட்டடமாய் மாறி விட
காய்கறி விளைவித்த மண்ணெல்லாம்
கூறு போட்டு விற்கும் மனையாகி விட
பச்சை பசுமை மறைந்து
பாழ் பட்ட மண்ணாகி விட்டதடி தோழி...

யானை கட்டி நெற் போராடித்த
காலம் போய்
அண்டை தேசத்திடம்
நெல்மணிக்கு
கையேந்தும் காலம் வரப்
போகுதடி தோழி...

கழனியில்
உழைப்பதற்கு இளைஞர்
கூட்டம் சேர்ந்த காலம் போய்
ஊனை சோம்பி வளர்க்க
மதுக்கடையில்
நிரம்பி வழியுதடி தோழி...

சுறுசுறுப்பாய் இருக்க வேண்டிய மக்களோ
அதிகாலை வேளையில்
அரசின் நூறு ரூபாய் பணத்திற்கும்
ஒருகிலோ அரிசி, வெல்லத்திற்கும்
ஒரு கிலோ மீட்டர் தூரம்
வரிசையாய் நிற்கிறார்களடி தோழி...

நகரமயமாக்கலும்
நரக மயமாக்கலும்
நம் பண்பாட்டை மட்டுமின்றி
நம் முன்னோர்
பட்ட பாட்டையும்
சிதைத்து விட்டதடி தோழி

என் செய்வேன் தோழி...
இக்கொடுமைகளைக் காணுகையில்
உள்ளம் குமுறுகிறது - அவர்கள்
உழைத்தறியா மக்களல்ல தோழி
உழைக்கின்ற வர்க்கத்தை - அரசு
பிச்சைக்காரக்களாக்கி விட்டதடி தோழி...

அத்தனையும் மாற்றுகின்ற
சக்தி வேண்டும் தோழி
சரித்திரத்தில் தமிழினத்தை
தலைநிமிர்த்தும் நாள் வேண்டும் தோழி
வேதனையோடு வருகுதடி
தைப்பொங்கல் தோழி...

மாற்றம் தேடி புறப்படுவோம்
வாடி என் தோழி...
தமிழ் மரபை காத்திடுவோம்
வாடி என் தோழி...
வலையுலக நண்பர்களுக்கு
பொங்கல் வாழ்த்து சொல்வோம் வாடி என் தோழி...!

(இப்பூவலகில் காற்றைப் போல் நீக்கமற நிறைந்திருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் என் சார்பிலும், என்னவள் சார்பிலும், எனது குடும்பத்தார் சார்பிலும், எனது நட்புகள் சார்பிலும் இனிய தமிழர் திருநாள், தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..!

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்

மோகனன்)













Wednesday, January 9, 2013

வெகுண்டெழு தேசமே..!



வெகுண்டெழு தேசமே…
வெகுண்டெழு…
வேங்கையைப் போல
வெகுண்டெழு…
தினவெடுத்த தோள்களே
வெகுண்டெழுக...
திமிறும் காளைகளே
வெகுண்டெழுக...

எல்லைப் பகுதியில்
உதை வாங்கி
ஊளையிட்ட ஓநாய் இன்று
நம் இந்திய வீரர்களை
எல்லை தாண்டி
கழுத்தை அறுத்திருக்கிறது…

எல்லை காத்த எம்மாவீரர்களின்
சிரம் அறுபட்ட ஈரம்
காய்வதற்குள்
இப்பாதகச் செயலை செய்த
பாகிஸ்தான் பன்றிகளின்
ஈரக்குலையினை அறுத்தெறிவோம்…

செந்நீரை சிந்தினாலும்
கண்ணீர் சிந்தா எம் காவல் மறவர்களின்
உயிர் காட்டுமிராண்டித் தனமாய்
பறிக்கப்பட்டிருக்கிறது
போர் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறது
போக்கத்த பன்றிகளுக்கு
ஏது போர் முறை..?
போர் விதிமுறை..?

யார் கொடுத்த தைரியமடா இது
எவன் கொடுத்த தைரியமடா…
ஈனப் பன்றிகளே..?
பொறுக்கோம்.. பொறுக்கோம்…
இனியும் பொறுக்கோம்…
எம் இராணுவ வீரர்களின் தலையை
வாங்கிய ஈனப் பன்றிகளை
இவ்வுலகத்திலிருந்தே அழித்தெடுப்போம்…

போரே மூண்டாலும் சரி
மூடர்களின் மூர்க்கத்தனத்திற்கு
முடிவு கட்டுவோம்..
ஏ… இந்திய மக்களே
எல்லையில் உயிர் விட்டது
நம்மில் ஒரு சகோதரன்
நம்மில் ஒரு நண்பன்
நம்மில் ஒரு தந்தை…

துடித்தெழுங்கள்…
இழிவைத் தின்னும்
பன்றிகளை இல்லாமல் செய்ய
துள்ளி எழுங்கள்…
போர் முரசம் ஒலிக்கட்டும்
போக்கத்த நாய்களுக்கு
நமது பலம் புரியட்டும்…
எல்லையில் வாலாட்டும் பன்றிகளுக்கு
பாடம் புகட்ட இதுவே
வாய்ப்பாக அமையட்டும்…

இனியும் எம் மண்ணில்
இப்படியொரு கோரம் வேண்டாம்
அரசுத் தரப்பில் இருந்து
கண்டனம் வேண்டாம்…
தலைமைப் பொறுப்பின் நீலிக்கண்ணீர் வேண்டாம்…

அடங்கியிருக்கும் வரைதான் கடலலை
ஆர்ப்பரித்தால் சுனாமி அலை
அமைதி காக்கும் வரைதான் வெறும் மலை
வெடித்தெழுந்து விட்டால் எரிமலை
பொறுத்தது போதும் பொங்கியெழுவோம்
பொல்லா நாய்களை ஓழித்துக் கட்டுவோம்…!



(காஷ்மீரிலுள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் அத்துமீறிய பன்றிகளை எதிர்த்து நடைபெற்ற சண்டையில் 'லேன்ஸ் நாயக்' ஹேமராஜ், 'லான்ஸ் நாயக்' சுதாகர் சிங் ஆகிய இரு வீரமறவர்களை பாகிஸ்தானிய பன்றிகள் கொன்று விட்டு, தலையை வெட்டி எடுத்துச் சென்றுள்ளன. இதைக் கேட்டதிலிருந்து என்மனம் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் எம்மினம் அழிக்கப்பட்ட போது, மௌனம் காத்தது போல் இதிலும் இந்தியா மௌனம் காத்தால் பறிபோவது நமது உயிர் மட்டுமல்ல… உயிரினும் மேலான நமது மானமும்தான்…

‘‘நெஞ்சு பொறுக்குதிலையே…
என் நெஞ்சு பொறுக்குதிலையே…’’

கண்ணீருடன்…
உங்கள்
மோகனன்

இந்த நிமிடம் வரை எந்த ஒரு தமிழ் ஊடங்களும் இந்த செய்தியை வெளியிடவில்லை என்பதை எண்ணுகையில் பத்திரிகையாளன் என்ற முறையில் தலை குனிகிறேன்...)




Thursday, December 13, 2012

நவநீதன் மகனே..! - சிறப்புக் கவிதை




இருளைக் கிழித்துப் பிறந்த
நவநீதன் மகனே…
வளர்பிறையில் வளரும்
என் மருமகனே…
உன் வரவால்
என்னுள்ளம் துள்ளுதடா
உன்னாலென்
நண்பன் தந்தையானான்
என்ற மகிழ்வை விட
நானுந்தன் மாமனானேன்
என்பது கண்டு மகிழ்ந்தேனடா
நீ எங்களின் ‘மகிழ்’ தேனடா…

உன்னாலிங்கு
உன் அத்தை உள்ளம் பூரித்து
சிரிக்கிறாள் – உவகையால்
கவிதையாய் வடிக்கிறாள்..!
எத்தனை முறை அவள்
எழுதிப் பார்த்தும்
உனைப் போலொரு உயிர்க்கவிதையை
வடிக்க முடியாதென
உனை வாழ்த்தி மகிழ்கிறாள்
வருக எங்களின் இளவலே...
வளர்க நீயும் புவியிலே...
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!


(இன்று எனது ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணன் - கவிதா தம்பதிக்கு ஆண்மகவு பிறந்திருக்கிறது. அம்மகவின் வரவிற்க்காக இக்கவிதை..!)




Monday, June 4, 2012

அன்பே அகிலா..! - பிறந்தநாள் கவிதை



அன்பே அகிலா- நீ
தத்தித் தத்தி நடைபயின்ற
காலங்கள் கரைந்து போயின..
தடம்பதித்து விளையாடும்
நதியைப் போல்
நான்காவது அகவையில்
நீ இன்று காலடி எடுத்து வைக்கிறாய்...
நல்லவற்றை உன்னோடு
கொண்டு சென்று
உயர்வு எனும் கடலில் கலப்பாய்...
உலகத்தை உய்விப்பாய் அகிலா...
உந்தையின் அவா இதிலா...
உமக்கென் பிறந்தநாள் வாழ்த்துக்களடா...

*******************

அன்பே அகிலா - நீ
அழகிய வான் முகிலா?
நீ வாலுவின் வாண்டு
என் மனதை வருடும் வண்டு
நீ பெயர்ச்சொல் குறும்பு- இனி
என் பெயர் சொல்ல விரும்பு..!

- அம்மு கணேசன்

*******************




Tuesday, March 6, 2012

வற்றாத அன்பொன்றே..! - என் ஆருயிர் நண்பனுக்கு திருமண வாழ்த்து கவிதை


என் ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணனனுக்கு மார்ச் 5, 2012 அன்று திருமணம் நடைபெற்றது... இவன், என் பள்ளிப் பருவ நண்பன்... என் வாழ்வில் என்னோடு தோள் கொடுத்து வரும் நண்பன்...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த திருமண வாழ்த்துக் கவி இதோ...



நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

என்ற குறளின் இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டு என் நண்பன் நவநீ என்கிற நவநீத கிருஷ்ணன்...

என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!

(இப்படத்தில் உள்ள கவிதையின் முதல் (தடித்த) எழுத்துக்களை மேலிருந்து படித்துப் பாருங்கள்..! இல் வாழ்க்கையில் இணைந்துள்ள, வசந்த காலப் பறவைகளின் பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?)




Friday, October 7, 2011

கலியுகத்து அர்ஜுனனோ?



அந்தி மாலை நேரத்தில்...
ஆராவார சாலையில்...
இரு சக்கரத் தேரிலேறி
எங்களது வீதியிலே
நீ வீதி உலா வருகையில்...
உன் விழிகளெனும் வில்லேந்தி
ஓரப்பார்வை எனும் அம்பால்
என் மனதிற்குள் போர்தொடுத்தவனே...
நீதான் என் கலியுகத்து அர்ஜுனனோ?




Saturday, October 1, 2011

வாயில் பூத்த பூ..!


என் மகளுக்கு இன்று
பிறந்தநாள்...
தாயும் சேயும் வெளியே
சென்றிருக்க
என் மகளின் புகைப்படைத்தை
பார்த்துக் கொண்டிருந்தேன்...
என் மகளின் கடைசி பிறந்த
நாளன்று எடுத்த புகைப்படம் அது..!

அழகாய் என் மகள்
சிரித்திருக்க
அவள் தலை மேல்
சூட்டிய மலரும் சிரித்திருந்தது
அதனழகைப் பார்த்து
நானும் சிரிக்கலானேன்...

அந்நேரம் பார்த்து
என்னவளும் என் மகளும்
உள்ளே நுழைய...
என் சிரிப்பை கண்டு
என்னருகே வந்த
என்னில்லாள்
சிரித்த காரணம் வினவினாள்...

சிரித்த காரணம் சொன்னேன்
அதுவே சிலாகிக்கும்
கவிதையாய் ஆனது என்றாள்.

நம் மகள் தலையில் சூடிய பூ
நம் வீட்டு செடியில் பூத்த பூ..!
என் மகளின் புன்னகையோ
அவள் வாயில் பூத்த பூ...
என் மகளோ குழவியாய் இருக்கையில்
உன் வயிற்றில் பூத்த பூ...
அதைக் கண்டே என் இதழில்
புன்னகை பூத்தது என்றேன்!




Monday, September 12, 2011

நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்..!



நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்
நேற்று வரை
தங்கத்தின் விலையை மட்டுமே
கவனித்துக் கொண்டிருந்தவள்
இன்று பெட்ரோல் விலையை
மட்டும் கவனிக்கிறேன்..!
நேற்று வரை 
ஆடை விளம்பரங்களை மட்டுமே
ரசித்துக் கொண்டிருந்தவள்
இன்று இருசக்கர வாகன
விளம்பரங்களை மட்டும் ரசிக்கிறேன்..!
நேற்று வரை...
விமானத்தில் மட்டுமே பயணம்
செய்ய விரும்பியவள்...
இன்று உன் இரு சக்கர வாகனத்தில்
மட்டும் பயணம் செய்ய விரும்புகிறேன்...
என்னுள் ஏன் இத்தனை மாற்றங்கள்..
உன் காந்தக் கரம் பட்ட வாகனம்
என் இரும்பு இதயத்தை ஈர்த்ததாலா..?
இல்லை.. நீ எனக்கே எனக்கென
வாங்கிய இரு சக்கர
இரும்புப் பறவையாலா..?




Wednesday, May 25, 2011

வெகு சீக்கிரத்தில்..!



நீ எனைப் பிரிந்து இருக்கும்
நாட்களில் எல்லாம்
வெகு சீக்கிரத்தில்
தூங்கப் போய்விடுகிறேன்..!
ஏனெனில்...
கனவினில் உன்னோடு
சேர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக..!

(உங்களுக்கு காதலி மட்டும் இருந்தால் இக்கவிதை பொருந்தும்...)
-----------------------------------------------------------------------------------------------------
(உங்கள் காதலிக்கு, ஒரு தங்கையும் இருந்தால் கீழே வரும் கவிதை பொருந்தும்...)

நீ எனைப் பிரிந்து இருக்கும்
நாட்களில் எல்லாம்
வெகு சீக்கிரத்தில் 
தூங்கப் போய்விடுகிறேன்..!
ஏனெனில்...
கனவினில் உன்னோடு
சேர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக..!
ஆனாலெனை அங்கும் வந்து
இம்சிக்கிறாள்
உன்னழகுத் தங்கை..!
அவளை நான் என்ன செய்ய..?

(ஐயோ... அடிக்காதீங்க.... அடிக்காதீங்க..!)


(பின்குறிப்பு: உங்கள் காதலிக்கு அழகான தங்கை இல்லையெனில், அவளது தோழியை இங்கே சுட்டலாம்..! உங்கள் காதலிக்கு தங்கையும், தோழியும் இருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல...!)
--------------------------------------------------------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 2)





Monday, May 23, 2011

நம்பிக்கை அற்று இருப்பவனுக்கு..! - 300வது கவிதைப் பதிவு


நம்பிக்கை அற்று இருப்பவனுக்கு
நம்பிக்கை கொடுப்பதும்
நம்பி 'கை' கொடுப்பதும் நட்பே..!

பசியால் கிடந்து துடிப்பவனுக்கு
அன்னை போல் அமுது கொடுப்பதும்
அன்பைக் கொடுப்பதும் நட்பே..!

தனக்கு சரி சமமான இடத்தை
சபையில் கொடுப்பதும்
சரித்திரத்தில் கொடுப்பதும் நட்பே..!

இக்கட்டான சூழலில் மதி தடுமாறும் போது
மதி மந்திரியாய் செயல்படுவதும்
மந்திராலோசனை சொல்வதும் நட்பே..!

உடன் பிறந்த உறவுகள் கைவிட்டாலும்
உரியவள் கை விட்டாலும்
என்றும் கைதாங்கி நிற்பதென் நட்பே..!

நம் வாழ்வில் திடீரென்று நடக்கின்ற
இன்பத்தில் இணைந்திருப்பதும்
துயரத்தில் துணை நிற்பதும் தூய நட்பே..!

பிரதிபலன் எதிர்பார்க்கும் உறவுகளில்
எதையும் எதிர்பார்க்காமலும்
எதையும் விட்டுத் தரும் உறவே நட்பு..!

சுயநலம் மிக்க உறவுகள் இடையே
நட்பின் நலம் கருதுவதும்
நலிந்தால் நல் உழைப்பைத் தருவதும் நட்பே..!

தம் பெற்றோர் மற்றும் உறவினரிடையே
நமை விட்டுக் கொடுக்காமலிருப்பதும்
நம் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருப்பதும் நட்பே..!

காதல், அன்பு, பாசம் ஆகிய மூன்றெழுத்து
மந்திரங்களின் மொத்த உருவமாக இருப்பதும்
மனத்துயர்களை நீக்குவதும் நட்பே..!

உயிரெடுக்கும் எமனே வரினும் அவனை எதிர் கொள்ள
என்னோடு தன்னிரு தோள் தட்டி நிற்பதும்
நான் துவளுகையில் தோள் தாங்கி நிற்பதும் நட்பே..!

(இன்னும் எத்தனையோ எந்நட்பில் இருக்கின்றன. இக்கவிதைப் படையலை என் அன்புக்குரிய நண்பர்கள் அனைவருக்கும், உலகத்திலுள்ள அத்தனை நண்பர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.


நட்பு மட்டும் என் வாழ்வில் இல்லையென்றால், என்றோ நான் வீழ்ந்திருப்பேன்... நான் வளர வேண்டும் என்று துடிக்கின்ற நட்புகளால்தான், நான் இங்கே துடிப்புடன் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.


இந்த 300-வது பதிவு வரை எனக்கு ஆதரவு தரும் என்னன்பு வாசக நண்பர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!


என்றென்றும் அன்புடன்


உங்கள் மோகனன்)
------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 2)





Saturday, April 30, 2011

உலகத்தை இயங்க வைக்கும்..! - மே தின சிறப்புக் கவிதை


உடலினை இயந்திரமாக்கி...
உழைப்பினை உரமாக்கி...
உலகத்தை இயங்க வைக்கும்
உன்னத தோழனே...
உன்னுடைய நாளில்
உனை நான் வணங்குகிறேன்..!

உழைக்கும் வர்க்கம்
ஆட்டுமந்தைகளைப் போல்
இருப்பதால்தான்
‘மே’யில்  வருகிறது
உழைப்பாளர் தினம்
என்றான் ஒரு கவிஞன்..!

உண்மை அதுவல்ல தோழா...
உழைப்பதில்
நீ ஒப்பற்ற மழை
‘மே’கம் போன்றவன் என்பதால்தான்
‘மே’ மாதத்தில் இத்தினம்
கொண்டாடப்படுகிறது..!

உலக வரைபடத்தை
உன் வியர்வைக் கோடுகளால்
உடலெங்கும் வரைந்த தோழனே...
உன் உழைப்பால்தான் உலகமே
அன்று வரைபடமானது...
வளமான பூமியானது..!

உழைத்துக் களைத்தறியா
விவசாயத் தோழனே...
உன்னுழைப்பால் உலகமே
பசியாறுகிறது...
உன்னுழைப்பால் உலகமே
ஆடை அணிகிறது...

நீ மட்டும் உழைப்பாளியல்ல தோழா
உன் குருதியில் இருக்கும்
ஒவ்வொரு வெள்ளை அணுவும் உழைப்பாளியே..!
அவ்வணு உனக்காக உழைக்க...
நீயோ உலகிற்காக உழைக்கிறாய்..!
நீ உழைக்காம்ல் போனால்
உலகமே துன்பத்தில் உழன்றுவிடும்...
உறைந்து போய் நின்று விடும்...

உன்னுழைப்பிற்கு பெயரளவில்
மரியாதை தருவதை விட
பொருளாதார அளவில் என்று
மரியாதை தரப்படுகிறதோ
அன்றுதான் உன் வர்க்கம் உயர்வடையும்..!
என்று உன் வர்க்கம் உயர்வடைகிறதோ
அன்றுதான் உலகில் சமத்துவம் மலரும்..!

(உலகில் ஏதேனும் ஒரு வகையில் உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளிகளுக்கும் அடியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்... பணிவான மே தின வாழ்த்துக்களும் உரித்ததாகட்டும்..!


என்றென்றும் அன்புடன்


உங்கள்
மோகனன்)