ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, December 8, 2009

ஒரே ஒரு நொடியில்..!


அருவமாய் இருந்த எனக்கு
கருவில் உருவம்
கொடுத்தாளென் தாய்…
அதற்குப் பத்து மாதங்கள் ஆனது..!
கிள்ளையாய் இருந்த என்னை
நல்ல பெண் பிள்ளையாய்
மாற்றினார் என் தந்தை…
அதற்குச் சில ஆண்டுகள் ஆனது..!
களி மண்ணாய் இருந்த என்னை
சிறந்த கல்விமானாக
மாற்றினாள் என் ஆசிரியை…
அதற்குப் பல ஆண்டுகள் ஆனது..!
என்ன மாயம் செய்தாயடா..?
ஒரே ஒரு நொடியில்
நான் உந்தன் காதலியாகி விட்டேன்..!
                                    
                                                 - மலர்விழி மோகனன்




Monday, December 7, 2009

ஒரே ஒரு ஒற்றை வார்த்தைக்காக..!



எதற்க்கும் அடி பணியாதவன்...
உன் அன்பிற்கு அடிமையானேன்..!
எவற்றுக்கும் அஞ்சாதவன்...
உன் பார்வைக்கு அஞ்சினேன்..!
அடிதடிக்கே பழக்கப்பட்டவன்...
உன் அன்பு கண்டு அண்ணலானேன்..!
பகட்டாகத் திரிந்து கொண்டிருந்தவன்...
உன் எளிமை கண்டு ஏழையானேன்..!
என்னுள் ஏற்பட்ட இத்தனை மாற்றமும்
நீ உதிர்க்கும் அந்த ஒரே ஒரு
ஒற்றை வார்த்தைக்காக
அன்பே எனைக் காதலி..!

(இதற்குச் சரியான படம் கிடைக்க வில்லை என்பதால்... பொதுவாய் இப்படி... ஹி...ஹி...நான் எடுத்த புகைப்படம் என்பதாலும் இப்படி..!)



Friday, December 4, 2009

நீ இல்லாத இரவுகளனைத்தும்..!



குளிர்ச்சியான மார்கழி இரவு..!
வெண்பனி போர்த்திய
வெள்ளை நிலவு..!
நீல வானக் கானகத்தில்
பூத்துச் சிரிக்கும்
நட்சத்திரக் கூட்டங்கள்..!
உரசிச் செல்லும்
வெண் மேகக் குவியல்கள்..!
இரவில் மலரும்
அல்லி மலர்கள்… - என
எத்தனையோ ரசிப்பதற்கு
இருந்தாலும்..?
நீ இல்லாத இரவுகளனைத்தும்
எனக்கு கோடை வெயிலாகத்தான்
தோன்றுகிறது..!



Thursday, December 3, 2009

திறந்து மூடாதே..?



அன்பிற்கினியவளே...
உன் இமைகளை
படபடவென்று திறந்து மூடாதே..?
பட்டாம் பூச்சியோ
எனப் பிடிக்க வருகிறேன்..!
உன் செவ்விழ் அதரங்களைத்
திறந்து மூடாதே..?
கொவ்வைப் பழமோ என
கடிக்க வருகிறேன்..!
உன் இதய வாசலை மட்டும் திறந்து மூடு..!
உள்ளே நானிருக்கிறேன் என்று
இந்த உலகிற்கு தெரியட்டும்..!   



Wednesday, December 2, 2009

உன் மூடிய இமைக்குள்..!



உன் மூடிய இமைக்குள்
கருவிழியாய் நான்..!
கார்மேகக் கூந்தலில்
மணக்கும் மல்லிகையாய் நான்..!
தந்தங்கள் இழைத்த உன் கன்னத்தில்
விழும் குழியாய் நான்..!
உன் சந்திர வடிவ நெற்றியில்
சூரியக் குங்குமமாய் நான்..!

உன் வெண்சங்குக் கழுத்தில்
பொன் மஞ்சள் நாணலாய் நான்..!
மூடி மறைத்த உன்
மார்புகளுக்கிடையில்
இறங்கும் வியர்வைத் துளிகளாய் நான்..!
உன் பூந்தளிர்க் கரங்களில்
ஒலிக்கும் வளையல்களாய் நான்..!

கொழுத்த உன் வயிற்றினில்
கொப்பூழாய் நான்..!
உன் வாழைத் தண்டு கால்களில்
ஒலிக்கும் கொலுசொலிகளாய் நான்..!
மெல்லிய உன் கால் விரல்களில்
ஒளிரும் மெட்டியாய் நான்..!

இப்படி உன்னுள் அனைத்தும்
நானாக விரும்புகிறேன்..!
உன்னுள்ளும் உணர்ச்சிகள்
உண்டென்பதை நானறிவேன்..!
வாழ்க்கைக்காக நீ காத்திருந்தது
போதும் கண்ணே..!
உனக்காக ஒரு வாழ்க்கையே
இங்கு காத்திருக்கிறது..!

நீ விதவையெனில் உனை
நான் காதலிக்கலாகாதோ..!
சகியே… சமூகம் ஒரு குப்பையடி
அது சாத்திரங்களின் நாற்றமடி..!
போதும் உனது பொய் வாழ்க்கையடி..!

உன் விதவைக் கோலத்தைத் துறந்திடடி..!
உன் பழைய வாழ்வை மறந்திடடி..!
என் உணர்வுகளை நீயும் மதித்திடடி..!
என்னுள் இரண்டறக் கலந்திடடி..!



Tuesday, December 1, 2009

உலக எயிட்ஸ் தினம் - விழிப்புணர்வுக் கவிதைகள்



நீர்க்குமிழிகள்...

வழிதவறி உருவான
நீர்க்குமிழிகள்...
இலக்கில்லாமல்
ஆற்றின் நீரோட்டத்தில்
மிதந்து செல்கின்றன...
விரைவில்
பட்டுடைந்து போக...
மனித சமுதாயத்திலும்
நீர்க்குமிழிகளாய்
எயிட்ஸ் நோய்க் குழந்தைகள்...

கற்றுக் கொள்...

ஒருவனுக்கு ஒருத்தியென
வாழக் கற்றுக் கொள்...
ஏனென்றால் எமன் ஒன்றும்
எருமையில் வரவில்லை அப்பனே
மெதுவாக வருவதற்கு...
எயிட்ஸ் மூலம் வந்து கொண்டிருக்கிறான்
ஏவுகணை போல்...

எயிட்ஸ் - குறுங்கவிதை

கலியுக எமதர்மனின்
நவயுக எம வாகனம்
ஏப்பு நோயெனும் எயிட்ஸ்

(இன்று உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம்... அதற்கான சிறப்பு கவிதைகள் இங்கே... முன்பே இவைகளெல்லாம் எழுதப்பட்டவை என்றாலும்... இன்றைய தினத்திற்கு சரியாக இருக்குமென்பதால் மீள்பதிவாய் இங்கே...)