ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, December 5, 2012

சுவாச அறைக்குள்..!



இங்கிருக்கும் தென்றலே
என்னவனை தீண்டிவிட்டு
எனை வந்து சேர்வாயா..?
என்று என்னவள்
தீந்தென்றலை தூது விட்டாள்..!
அவளின்றி அணு உலையாய்
கொதித்துக் கொண்டிருந்த
என் தேகத்தில்
அவளைத் தீண்டிய தென்றல்
குளிர் காற்றாய் எனை மோதியது..!
குளிர வைத்த தென்றலை
அவளிடம் திருப்பி அனுப்ப மனமில்லை…
அவள் வாசத்தை
அது சுமந்து வந்திருந்ததால்…
அதை என் சுவாச அறைக்குள்
சிறை பிடித்தேன்…
என் கனவறையில்
அவளுக்குள் சிறைப்பட்டேன்..!

******

பூந்தென்றல் எனக்காக
தீந்தென்றலை தூது விட்டது
அவளைத் தீண்டிய தென்றலை
திருப்பி அனுப்ப மனமின்றி
சுவாச அறைக்குள் சிறைபிடித்து
உயிர் நிறைத்தேன்..!
அது உயிர் நிறை தேன்..!

******




Friday, November 30, 2012

விடியல்..!



அதிகாலை நேரத்தில்
கிராமத்தில்
சேவல் கூவினால்
அது விடியல்..!
அதுவே நகரத்தில்
கூவினால்
அது சமையல்...
நீங்கள்
நகரத்தினர்களே ஆயினும்
கிராமத்து சேவலாகவே
விழியுங்கள்...
உங்களுக்காக மட்டுமின்றி
உலகிற்கான விடியலை
தட்டி எழுப்பலாம்..!




Friday, November 23, 2012

யார் செல்வந்தன்?



உழைத்துக் களைத்த
உடலுக்கு...
உறக்கம் வந்தால்
இடமென்ன...
பொருளென்ன..
அசந்து உறங்க
ஆறடி இடமும்
ஆங்காங்கே கிழிந்த
கந்தல் துணி கூட போதும்!
ஆனால்
அவ்வுழைப்பாளிகளின்
இரத்ததினை உறிஞ்சிக் குடிக்கும்
பணக்கார ஓநாய்களுக்கு
பட்டுமெத்தை இருப்பினும்
பறிகொடுத்து தவிக்கிறான்
தூக்கத்தை…
இதில் யார் செல்வந்தன்?




Wednesday, November 21, 2012

குழந்தையின் தூக்கம்!



தேக்குமரத் தொட்டிலிலே
சந்தனத் தைலமிட்டு
பனிக்குளிர் காற்றை பரவவிட்டு
பணக்கார வீட்டுப் குழந்தையை
பதமாக தொட்டிலாட்டினாலும்
தூங்குவதற்கு நேரம் பிடிக்கிறது
இந்த பாழும் நகரத்திலே…

வேப்பமர நிழலினிலே
ஒரு சேலை முடிச்சிற்குள்
தூளி கட்டி போட்ட
பாட்டாளியின் குழந்தை...
தன் தாயின் வாசத்தை
சேலையில் சுவாசித்தபடி
சுகமாய் தூங்கிப்போகிறது
நான் வாழும் கிராமத்திலே…!

++++++++++++++++++++++++++++++++++++++

அன்பான நட்பு வட்டங்களுக்கு...

கவிதை எழுதி நெடுநாட்களாகி விட்டது. நேரமின்மையும் வேலைப்பளுவும் இதற்கு காரணம். தற்போது அச்சூழல்கள் எனை விட்டு சற்று விலகி இருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. மீண்டும் அதே உத்வேகத்துடன் உங்களை இனி சந்திக்கிறேன் என் கவிதைகளோடு... மீண்டும் உங்களின் விமர்சனக் கணைகளால் எனை அரவணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

என்றென்றும் அன்புடன்
உங்கள்
மோகனன்




Monday, August 20, 2012

உற்பத்தி செய்யும் விவசாயிக்கு...



அன்றோ…
விவசாயப் புரட்சி
எனும் பெயரில்
வீரிய உரங்களை கொடுத்து
விளைநிலங்களை பாழாக்கினார்கள்...
அன்றோ…
தொழிற்புரட்சி
எனும் பெயரில்
பெரும் தொழிற்சாலைகளைப் புகுத்தி
குறுநிலங்களை கூழாக்கினார்கள்…
இன்றோ…
ரியல் எஸ்டேட் எனும் பெயரில்
வளர்நிலங்களை வளைத்துப் போட்டு
கான்கிரீட் கூடுகளாக்கி வருகிறார்கள்…
இப்படி அன்னை மடியை
அனைவரும் கூறு போட்டால்
உலகுக்கே உணவுப்பொருளை
உற்பத்தி செய்யும் விவசாயிக்கு
அவனது அரைக்கோவணம் தவிர…
அரைக்காணி நிலம் கூட மிஞ்சாது..!

+++++++++++++++++++++++++++++
______________________________________

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்:விடமாட்டேன் உன்னை..!: திகில் தொடர்கதை - 10)





Thursday, July 5, 2012

என்னோடு சேராமல்..!



இப்பிறவியில்
என்னோடு சேராமல்
போனதால்
மறுபிறவியாலாவது
என்னை கரம்பிடிப்பாயாவென்று
என் கன்னியவள் கேட்டாள்…
கேட்டதும் என் கண்ணில்
அருவி வழியச் சொன்னேன்...
இங்கே இருப்பது வெறும்
உடல் கூடுதான்...
அப்படி ஒன்று இருந்தால்
அது உன்னோடுதான்…
இல்லையேல்
நான் என்றும் புதைக்கப்பட்ட
மண்மேடுதான்…
நம் காதல் என்றென்றும்
கலந்திருக்கும்
விண்ணோடுதான்..!
______________________________________


(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்:விடமாட்டேன் உன்னை..!: திகில் தொடர்கதை - 9)