ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 20, 2015

காதலில் நாணயம்..?


"எனை நேசிப்பதில்
நாணயமாக
இருப்பாயா..?" என்று
என்னவள்
என்னிடம் கேட்டாள்..!

"அன்பு காட்டுவதில்
இருந்து
அரவணைப்பது வரை
எல்லாவற்றிலும்
நாணயமாய் இருப்பேனடி"
என்று அவள் தலையலடித்து
சத்தியம் செய்தேன்...

"உன்னால் அப்படி
நாணயமாக 
இருக்க முடியாது
சோதித்து பார்க்கலாமா..?"
என்று சவால் விட்டாள்!

"காதலில்
என் நாணயத்திற்கு
சோதனையா..?
சோதித்துப் பார்..!"
என்று எதிர் சவால்
விட்டேன்

"அப்படியா..?
அதையும் பார்க்கலாம்...
எங்கே எனக்கு
சத்தமில்லாமல்
ஒரு முத்தம் தா..!"
என்றாள்

தீராக் காதலால்
ஓராயிரம்
முத்தச் சந்தம்
தந்தேன்..!
எனையறியாமல்
நாணயம் இழந்து
நின்றேன்..!




Wednesday, November 18, 2015

'தண்ணி'யும் அரசும்..!



அன்று –
ஊரெல்லாம்
‘தண்ணி’ என்று
‘குடி’மக்களிடம் சொன்னது அரசு…
‘குடி’ மக்கள் அதை
கண்டுகொண்டனர்…
கொண்டாடியது அரசு..!

இன்று –
ஊரெல்லாம்
தண்ணி என்று
அரசிடம் சொன்னது
பொதுமக்கள்…
கண்டு கொள்ளவில்லை அரசு
திண்டாடினர் மக்கள்..!

(தீபாவளியை ஒட்டிய ஒரு வார டாஸ்மாக் வருமானம் ரூ. 500 கோடிக்கும் மேல்... தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புக்கு அரசு ஒதுக்கீடு ரூ. 500 கோடி மட்டும்)




Monday, November 16, 2015

மழை தேவையில்லை..?



குளிரூட்டி இன்றி
ஊரெங்குமுள்ள
ஏழைகளின் வீடுகளில்
ஏசி காற்றை
வீசிச் செல்கிறது
இந்த பருவமழை..!
மின்சாரத் தேவையில்லை
அறைகளை மூடத் தேவையில்லை!

ஊரெங்கும் நிறுவப்பட்டிருக்கும்
உத்தமர் சிலைகளுக்கு
உள்ளூர கொண்டாட்டம்
கடும் மழையில் குளித்தும்
கரையாமல்
கம்பீரமாய் நிற்கிறோமென்று…
நீரிங்கு வீணில்லை..!
காக்கை எச்சங்கள் நிலைப்பதில்லை!

பூமிப்பெண்ணிற்கு
மனிதன் ஏற்படுத்திய
மாசுகளை
பெருமழை எனும் பெயரால்
வானமகன் வாரி வீசி
கழுவுகின்றான்…
சோப்பு இங்கு தேவையில்லை
துவட்டத் துண்டு தேவையில்லை!

தண்ணியின்றி தவிக்கும்
தாவரங்களுக்கு
தாங்காத மகிழ்ச்சி..!
நீர் குடிக்க
ஆழ வேர் பரப்பி
மண்ணோடு உறவாடுகின்றன..!
வான்மழை தன்னை
வாஞ்சையோடு தழுவுகின்றன!
செயற்கை உரம் தேவையில்லை
செயற்கை நீர் தேவையில்லை..!

ஆனால் -
ஏரி குளங்களை
ஆக்கிரமிக்கும் ஜந்துகளுக்கும்
பிளாஸ்டிக் குப்பைகளை
உருவாக்கும் மாக்களுக்கும்
பெருமழை தேவையில்லை
அடைமழை தேவையில்லை
அழிவினை செய்யும்
அரக்கர்களுக்கு எதுவுமே தேவையில்லை…

தேவையில்லை என்பதால்தான்
எல்லாவற்றையும்
அழித்தெடுத்துச் செல்கிறது
அடைமழையால் உருவான பெருவெள்ளம்!
புரட்டி எடுத்துச் செல்கிறது
பெரும் புயல் வெள்ளம்!
மூழ்க வைத்துக் கொள்கிறது
சிறு மழைத்துளிகளால்
உருவான மா வெள்ளம்…
இயற்கையை நேசி…
அதுவே நம்மை காப்பாற்றும்..!




Friday, November 13, 2015

முதன்முதலாய் கோபம்..!


எப்போது நான் உனை
பார்த்தாலும்
புன்னகை பூக்கும்
உன் முகத்தில்
முதன் முதலாய்
கோபத்தைப்
பார்த்த போதுதான்
எனக்கு கோபத்தின் மீதே
முதன் முதலாய்
கோபம் வந்தது...
அவளே என் உலகமென்று
நானிருக்கும்போது
உன் கோப ரேகைகளால்
என்னவள் முகத்தில்
உலகத்தை
வரைந்து விட்டாயே என்று...




Thursday, November 12, 2015

ஆனால் நமக்குத்தான்..?




தன்னில் மறுபாதி
இருண்டுவிடுமே
என்று நினைத்து
பூமித்தாய் என்றும்
சுழல்வதை நிறுத்துவதில்லை
விரைவில் விடிந்துவிடும்
என்ற நம்பிக்கையில்..!

தன்னுள் இருக்கும்
நீரெல்லாம் ஆவியாகுமே
என்று நினைத்து
கடலன்னை என்றும்
தன் ஆவியைக் கரைப்பதை
நிறுத்துவதில்லை
மழையாய் தன்னிடம்
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்!

தன் உடல், பொருள்
ஆவியெல்லாம்
குழவி எடுத்துக்கொள்ளுமே
என்று நினைத்து
நம் அன்னை நம்மை
வளர்த்தெடுப்பதை நிறுத்தவதில்லை
மானுடத்திற்கு நாம்
பயனுறுவோம் எனும் நம்பிக்கையால்…!

உலகிலுள்ள அனைத்து
அன்னைகளுக்கும்
என்றுமே நம் மீது
அசைக்க முடியா
நம்பிக்கைகளுண்டு…
ஆனால் நமக்குத்தான்..?




Wednesday, November 11, 2015

அடி நிலவே..!




கார் குழல்
வேய்ங் குழல்
கரும் பூங்குழல்
சேர்ந்ததுன் குழல்..!

வேல்விழி
கயல்
விழி
மான்
விழி
சேர்ந்ததுன்
விழி..!

செவ்விதழ்
செங்காந்தள் இதழ்
செந்தாமரை இதழ்
சேர்ந்ததுன் இதழ்..!

மணி மொழி
மடல்
மொழி
தேன்
மொழி
சேர்ந்ததுன்
மொழி..!

குறுநகை
மகிழ்நகை
நறுமுகை
சேர்ந்ததுன்
நகை..!

மலர் அழகு
மாங்கனி அழகு
முயல் அழகு
சேர்ந்ததுன் மேலழகு..!

கொடி இடை
பிடி இடை
தளிர் இடை
சேர்ந்ததுன் இடை..!

புள்ளி மான் நடை
துள்ளும் மீன் நடை
சங்கத் தமிழ் நடை
சேர்ந்ததுன் நடை..!

பொன்னுடல்
பூவுடல்
தேனுடல்
சேர்ந்ததுன்
உடல்..!

அடி நிலவே
உனைப்
பார்த்ததும்
வீழ்ந்து விட்டேன்
நீ
அழகின் மொத்த நிரல்..!