ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, June 29, 2010

சொல் தேவி சொல்..?

உன் நிழல் சிறிது தடுமாறினாலும்...
என் நிஜம் தடுமாறுகிறது...
உன் குரல் சிறிது தடுமாறினாலும்...
என் சித்தம் தடுமாறுகிறது...
உன் கண்களில் சிறிது நீர் கோர்த்தாலும்...
என் கண்களில் குருதி கோர்க்கிறது...
ஒற்றையாளாய் நீ அங்கே துவளும்போது
கற்றையாய் நான் இங்கே வீழ்ந்து போகிறேன்...

நீ படும் துயரங்களை எல்லாம்
செல்பேசியில் என்னிடம் சொல்லும் போது...
என் உடலின் செல்களனைத்தும்
செத்து விடத் துடிக்கின்றன..!
உன் துன்பத்தை தடுக்க முடியாமல் போனால்
மாண்டு விடுவதே மேலென்று
மண்டியிட்டு கதறுகின்றன..!
உன்னோடு நானிருக்கையில்
துன்பப்படலாமா..? நீ துயரப்படலாமா..!
சொல் தேவி சொல்..?



Monday, June 28, 2010

இன்றைய அரசுப்பணி..?

லஞ்ச ஒழிப்புத் துறையில்
பணிக்கு ஆள் எடுக்கிறார்கள்
என்றறிந்து மனுப் போட்டேன்..!
'எழுத்துத் தேர்வு எழுது..?' என்றனர்
எழுதி முடித்தேன்..!
'உடல் தேர்வில் தேறு..?' என்றனர்
தேறி முடித்தேன்..!
முடிவாய்...
நேர்முகத் தேர்விற்கு
நேர்மையான சான்றிதழ்களோடு
வா என்றனர்..!
என் சான்றிதழ்களின்
நேர்மையை ஆய்வு செய்த பின்
நேராய்க் கேட்டார்கள்
'இப்பணியில் சேரவேண்டுமெனில்...
இவ்வளவு லஞ்சம் தரவேண்டும்..!
நீ எவ்வளவு தருவாய்..?'



Friday, June 25, 2010

பூவைத் தமிழாள்..! - மரபுக் கவிதை

பூவைத் தமிழாள் பன்மொழி யுருவெடுத் தாளிங்(கே)
கோவைத் தமிழ், நெல்லை தமிழ் - சேலத் தமிழ்
மங்கா மதுரைத் தமிழ், மயக்கும் ஈழத் தமிழ்
செங்கதிர்ச் சென்னைத் தமிழ்.

                                                            - மோகனன்




Thursday, June 24, 2010

கொங்கு நாட்டில்..! - மரபுக் கவிதை


நனித்தமிழ் முகிழ்த்தெழும் கொங்கு நாட்டில்
தனித்தமிழ் தமிழர் களனைவ  - றொன்றூடி
சத்தமி ழுக்குர மேற்றியு ரூட்டவே
இத்தமிழ் தரணியா ளும்.
                                                         - மோகனன்




Wednesday, June 23, 2010

வாழிய செம்மொழித்தமிழ்..!


செந்தமிழ் நாட்டினில் பிறந்ததெனக்குப் பெருமை
பைந்தமிழே தாய்மொழி யானதெனக்குப் பெருமை
தீந்தமிழில் கவி சமைப்பதெனக்குப் பெருமை
பூந்தமிழே நீ பெருமைக்கே பெருமை..!

*********

சங்கம் வளர்த்த தமிழுக்கு இன்று
கொங்கு மண்டலத்தில் திருவிழா..!
தங்கத் தமிழின் பிள்ளைகள் எல்லாம்
மங்காத் தமிழுக்கு எடுக்கும்
பொங்கு தமிழ்த் திருவிழா..!
தாயின் வளத்தை பெருக்கவே
அதன் கிள்ளைகளனைவரும்
ஒன்று சேரும் பெருவிழா..!

*********

எங்களால் நீ வாழவில்லை தமிழ்த்தாயே
உம்மால் நாங்களனைவரும்
வாழ்கிறோம் வளமோடு..!
ஆண்டுகள் செல்லச் செல்ல
வயது கூடி கிழப்பருவம்
எய்வதுதானே இயற்கை..!
இங்கே நீ மட்டும் எப்படி
இயற்கைக்கு எதிர்மறையானாய்..?
உன் கிள்ளைகள் நாங்கள்
கிழப்பருவம் எய்தினாலும்…
எங்களைப் பெற்ற தாயே
நீ மட்டும் எப்படி குன்றா இளமையோடு
குன்றென நிற்கிறாய்..?
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
தாயே உனக்கு இளமைதான்
கூடுகிறதே தவிர…
முதுமை அல்ல…

*********

எங்களின் முதல் மறை நீ..!
எங்களின் மூச்சு நீ..!
எங்களின் சுவாசம் நீ..!
எங்களின் அடையாளம் நீ..!
எங்களின் கலாச்சாரம் நீ..!
எங்களின் பண்பாடு நீ..!
எனக்கு அனைத்தும் நீ..!

உன்னை வாழ்த்த எனக்கு
வயதில்லை என்றாலும்
பெற்ற தாயை பிள்ளை வாழ்த்துவது
பிழையாகாது என்ற நோக்கில்
நீ வாழ்வாங்கு வாழ வேண்டும்..
உம்மோடு சேர்ந்து நாங்களும்..!

வாழிய பைந்தமிழ்…
வாழிய தீந்தமிழ்…
வாழிய பூந்தமிழ்…
வாழிய செந்தமிழ்…
வாழிய செம்மொழித்தமிழ்..!

*********

(இதையும் படிங்க... நான் எழுதியதுதான்....)

செம்மொழிக்கான தகுதிகள் - ஒரு விளக்கம்

தமிழுக்கும் பதினாறு பேறு..!



Tuesday, June 22, 2010

அழகான ராட்சஸி..!

உன்னுடைய அழகால்
என்னைத் தின்றது
மட்டுமின்றி...
என் பசியை...
என் உணர்வுகளை...
என் தூக்கத்தை...
என் துயரங்களை எல்லாம்
தின்று விட்டாய்..!
ஆதலால் உன்னை
அழகான ராட்சஸி
என்றழைப்பதில்
தவறேதுமிருப்பதாகத்
தோன்றவில்லையடி..!