ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, November 23, 2011

இரும்பை இலவம் பஞ்சு வளைக்குமா?


வளையா இரும்பை
இலவம் பஞ்சு வளைக்குமா?
துளைக்குமா..?
இவ்வுலகில் நடவாத ஒன்றை
கேட்கிறாயே அறிவிலி...
என்று எனை எல்லோரும்
ஏளனம் செய்கிறார்கள்..!
நீ என் மார்பில் சாய்ந்த போது
இது அத்தனையும்
நடந்ததை யாரறிவார்..?




Monday, November 21, 2011

கூடலும்... ஊடலும்..!


கூடல்தான் காதலெனும் போது
அதில் ஊடல் வருவது இயல்பல்லவா..?
ஊடலை ஊதிப் பெரிதாக்கி
எனை உதறித் தள்ளுவதேனடி..?

நீ அருகிலிருந்தால் அன்பில்லை
தொலைவில் இருந்தால் தொல்லையில்லை
என்று சொன்ன உன் நாவை
என்ன சொல்லி வெட்டி எறிய வேண்டுமடி..?

தேனுண்ட வண்டைப் போல்
உன் காதலையுண்டு மகிழ்ந்திருந்த எனக்கு
அலைபேசியில் நீ பேசிய வார்த்தைகள்
அமிலமாய் கொட்டியதடி.!

என்னை இன்னும் நீ
புரிந்து கொள்ளவில்லையே
அது ஏனென்று கேட்டு
என் மனம் உன்னை திட்டித் தீர்த்ததடி..!

முத்தில்லா சிப்பி போல...
மருந்தில்லா குப்பி போல...
நீயின்றி வெறுமையாய் கிடக்கிறேன்
எப்போது வருவாய்... ஊடலை கூடலாக்குவாய்..!




Wednesday, October 12, 2011

உனை வெல்ல..!


உன்னழகை வெல்ல வேண்டி
கவிச் சொல்லெடுத்து வந்தேன்...
நீயோ இமைகளெனும்
வில்லெடுத்தாய்...
நானும் அதற்கிணையாய்
வில்லேந்தி வந்தால்
நீயோ விழிகளெனும்
வேலேந்தி வந்தாய்...
நானும் அதற்கிணையாய்
வேலேந்தி வந்தால்
நீயோ காதலேந்தி வருகிறாய்...
உனை வெல்ல மோதலோடு வந்த நான்
உன் காதலால் தோற்றபடி
உன்னிடம் காதல் கைதியானேன்!




Friday, October 7, 2011

கலியுகத்து அர்ஜுனனோ?



அந்தி மாலை நேரத்தில்...
ஆராவார சாலையில்...
இரு சக்கரத் தேரிலேறி
எங்களது வீதியிலே
நீ வீதி உலா வருகையில்...
உன் விழிகளெனும் வில்லேந்தி
ஓரப்பார்வை எனும் அம்பால்
என் மனதிற்குள் போர்தொடுத்தவனே...
நீதான் என் கலியுகத்து அர்ஜுனனோ?




Saturday, October 1, 2011

வாயில் பூத்த பூ..!


என் மகளுக்கு இன்று
பிறந்தநாள்...
தாயும் சேயும் வெளியே
சென்றிருக்க
என் மகளின் புகைப்படைத்தை
பார்த்துக் கொண்டிருந்தேன்...
என் மகளின் கடைசி பிறந்த
நாளன்று எடுத்த புகைப்படம் அது..!

அழகாய் என் மகள்
சிரித்திருக்க
அவள் தலை மேல்
சூட்டிய மலரும் சிரித்திருந்தது
அதனழகைப் பார்த்து
நானும் சிரிக்கலானேன்...

அந்நேரம் பார்த்து
என்னவளும் என் மகளும்
உள்ளே நுழைய...
என் சிரிப்பை கண்டு
என்னருகே வந்த
என்னில்லாள்
சிரித்த காரணம் வினவினாள்...

சிரித்த காரணம் சொன்னேன்
அதுவே சிலாகிக்கும்
கவிதையாய் ஆனது என்றாள்.

நம் மகள் தலையில் சூடிய பூ
நம் வீட்டு செடியில் பூத்த பூ..!
என் மகளின் புன்னகையோ
அவள் வாயில் பூத்த பூ...
என் மகளோ குழவியாய் இருக்கையில்
உன் வயிற்றில் பூத்த பூ...
அதைக் கண்டே என் இதழில்
புன்னகை பூத்தது என்றேன்!




Monday, September 12, 2011

நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்..!



நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்
நேற்று வரை
தங்கத்தின் விலையை மட்டுமே
கவனித்துக் கொண்டிருந்தவள்
இன்று பெட்ரோல் விலையை
மட்டும் கவனிக்கிறேன்..!
நேற்று வரை 
ஆடை விளம்பரங்களை மட்டுமே
ரசித்துக் கொண்டிருந்தவள்
இன்று இருசக்கர வாகன
விளம்பரங்களை மட்டும் ரசிக்கிறேன்..!
நேற்று வரை...
விமானத்தில் மட்டுமே பயணம்
செய்ய விரும்பியவள்...
இன்று உன் இரு சக்கர வாகனத்தில்
மட்டும் பயணம் செய்ய விரும்புகிறேன்...
என்னுள் ஏன் இத்தனை மாற்றங்கள்..
உன் காந்தக் கரம் பட்ட வாகனம்
என் இரும்பு இதயத்தை ஈர்த்ததாலா..?
இல்லை.. நீ எனக்கே எனக்கென
வாங்கிய இரு சக்கர
இரும்புப் பறவையாலா..?