ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, July 5, 2012

என்னோடு சேராமல்..!



இப்பிறவியில்
என்னோடு சேராமல்
போனதால்
மறுபிறவியாலாவது
என்னை கரம்பிடிப்பாயாவென்று
என் கன்னியவள் கேட்டாள்…
கேட்டதும் என் கண்ணில்
அருவி வழியச் சொன்னேன்...
இங்கே இருப்பது வெறும்
உடல் கூடுதான்...
அப்படி ஒன்று இருந்தால்
அது உன்னோடுதான்…
இல்லையேல்
நான் என்றும் புதைக்கப்பட்ட
மண்மேடுதான்…
நம் காதல் என்றென்றும்
கலந்திருக்கும்
விண்ணோடுதான்..!
______________________________________


(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்:விடமாட்டேன் உன்னை..!: திகில் தொடர்கதை - 9)







Thursday, June 28, 2012

உன்னுள் புதைபொருளாய்..!


உனைக் கண்டதும்
கட்டற்ற காட்டாற்று
வெள்ளமாய் நான்...
அதில் மூழ்கித் திளைக்கும்
மோகனச் சிலையாய் நீ...
பல்லாண்டுகளாக மனதில்
புதைத்து வைத்திருந்த காதலை
யார் முதலில் வெளிப்படுத்துவது
என்ற போட்டியில் நாம்…
உணர்ச்சிகளின் பிரவாகத்தில்
நம் உயிர்கள் கரைந்து போக
உடலியக்கம் அனைத்தும்
உற்சாக மிகுதியில் உறைந்து போக...
உன் காதலைச் சொன்னாய்..
எனை காற்றில் நிறைத்'தாய்'
முத்தான என் முத்‘தாரமே’
அந்நாளில் இரண்டாம் உலகம் தந்‘தாய்’
மீண்டும் நான் புதி'தாய்’
பிறந்தது போன்ற உணர்வினை தந்'தாய்’
அணைப்பில் அழியா ஒவியமானாய்
அன்பில் அன்னையின் காவியமானாய்…
அன்பே உன் அன்பில்
அகழ்ந்து புதைந்து போகிறேன்
உன்னுள் புதைபொருளாய்..!

______________________________________

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..!: திகில் தொடர்கதை - 9)





Monday, June 4, 2012

அன்பே அகிலா..! - பிறந்தநாள் கவிதை



அன்பே அகிலா- நீ
தத்தித் தத்தி நடைபயின்ற
காலங்கள் கரைந்து போயின..
தடம்பதித்து விளையாடும்
நதியைப் போல்
நான்காவது அகவையில்
நீ இன்று காலடி எடுத்து வைக்கிறாய்...
நல்லவற்றை உன்னோடு
கொண்டு சென்று
உயர்வு எனும் கடலில் கலப்பாய்...
உலகத்தை உய்விப்பாய் அகிலா...
உந்தையின் அவா இதிலா...
உமக்கென் பிறந்தநாள் வாழ்த்துக்களடா...

*******************

அன்பே அகிலா - நீ
அழகிய வான் முகிலா?
நீ வாலுவின் வாண்டு
என் மனதை வருடும் வண்டு
நீ பெயர்ச்சொல் குறும்பு- இனி
என் பெயர் சொல்ல விரும்பு..!

- அம்மு கணேசன்

*******************




Tuesday, March 6, 2012

வற்றாத அன்பொன்றே..! - என் ஆருயிர் நண்பனுக்கு திருமண வாழ்த்து கவிதை


என் ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணனனுக்கு மார்ச் 5, 2012 அன்று திருமணம் நடைபெற்றது... இவன், என் பள்ளிப் பருவ நண்பன்... என் வாழ்வில் என்னோடு தோள் கொடுத்து வரும் நண்பன்...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த திருமண வாழ்த்துக் கவி இதோ...



நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

என்ற குறளின் இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டு என் நண்பன் நவநீ என்கிற நவநீத கிருஷ்ணன்...

என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!

(இப்படத்தில் உள்ள கவிதையின் முதல் (தடித்த) எழுத்துக்களை மேலிருந்து படித்துப் பாருங்கள்..! இல் வாழ்க்கையில் இணைந்துள்ள, வசந்த காலப் பறவைகளின் பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?)




Saturday, January 14, 2012

பொட்டிட்ட புதுப்பானையில்..! - பொங்கல் வாழ்த்து கவிதை



பொட்டிட்ட புதுப்பானையில்
பொங்குகின்ற பொங்கல் போல்
தங்க மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்விலும்
தமிழ் நகை பொங்கட்டும்..!

பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின் வாழ்வில்
வெற்றிகள் குவியட்டும்..!

சூரியனார்க்கு நன்றி சொல்லும்
சுந்தரமான பொங்கல் பொல்
சூதில்லா மனம் கொண்ட
சுத்தமான தமிழர்களின் வாழ்வில்
சுகவாழ்வு பெருகட்டும்..!

தரணியை தழைக்கச் செய்யும்
தைமகள் பிறப்பிற்கும்
எருதின் உழைப்பிற்கும் நன்றி சொல்லும்
நல்மனம் கொண்ட தமிழர்களின் வாழ்வில்
நலம் பல திரளட்டும்...
நன்மைகளே விளையட்டும்..!

புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்
பொங்குக தமிழ்ப் பொங்கல்..!
பொங்குக எங்கும் மகிழ்ச்சிப் பொங்கல்..!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எனது அன்பு நண்பர்களாகிய உங்களனைவருக்கும் எனது இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

என்றென்றும் அன்புடன்

மோகனன்.




Friday, December 30, 2011

எப்போது நீ வருவாய்..?


நிலவின் தீண்டலுக்காக
மேக கூட்டங்கள் காத்திருப்பது போல...
பனித்துளியின் தீண்டலுக்காக
பூ கூட்டங்கள் காத்திருப்பது போல...
மழையின் தீண்டலுக்காக
கரிசல் காடு காத்திருப்பது போல...
பூந்தேனின் தீண்டலுக்காக
வண்டினங்கள் காத்திருப்பது போல...
ஒரு பெண் பூவிற்காக
என் புவனமே காத்திருகிறது
பூவினமே எப்போது நீ வருவாய்..?